மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 58

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் ( ரங்க ராஜ்ஜியம் )

மூன்று மடங்கிய விரல்களும் மூன்று செய்தியைச் சொல்கின்றன. முதல் செய்தி சாதி வேற்றுமையில்லாத சமத்துவமான சமுதாயம்.

பூமன்னுமாது பொருந்தியமார்பன், புகழ்மலிந்த

பாமன்னுமாறன் அடிபணிந்துய்ந்தவன், பல்கலையோர்

தாம்மன்னவந்த இராமானுசன் சரணாரவிந்தம்

நாம்மன்னிவாழ, நெஞ்சே! சொல்லுவோம்அவன்நாமங்களே!

- இராமாநுச நூற்றந்தாதி

திருவரங்கத்தை அடைந்த ஸ்ரீராமாநுஜருக்கும் பெரிய நம்பிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்ரீஆளவந்தார் திருநாடு அலங்கரித்திருந்தார். செய்தியறிந்து பெரிய நம்பி மூர்ச்சையடைந்தார். ஸ்ரீராமாநுஜர் கண்ணீர் பெருக்கலானார்.

`தனக்கும் உற்ற குருவுக்கும் பிராப்தமே இல்லையோ, தன்னால் வேதத்தைக் கசடறக் கற்க இயலாதோ...’ என்றெல்லாம் மனம் எழுப்பிய கேள்விகளோடு, அவர் ஸ்ரீஆளவந்தாரின் திருமேனியின் முன்வந்து நின்றபோது, ஸ்ரீஆளவந்தாரின் ஆசிகூறும் கரத்தில் மூன்று விரல்கள் மடங்கியிருக்க மீதமுள்ள இரண்டு விரல்கள் நீண்டிருந்தன. அது ஏதோவொரு செய்தியைச் சொல்லாமல் சொல்வதாக இருந்தது.

ஸ்ரீராமாநுஜர் மடங்கியிருந்த அந்த விரல்களையே பார்த்தவண்ணம் இருந்தார். அவருக்குள் பற்பல எண்ணவோட்டங்கள். அதேவேளை, பெரியநம்பி மூர்ச்சை தெளிவிக்கப்பெற்று எழுந்து நின்றார். அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. வாய்விட்டு அழ முற்பட்டவர், “ஆசார்யனே… இப்படி என்னைத் தனியே தவிக்கவிட்டுச் செல்லலாமா? இனி நாங்கள் நடைபிணங்களே… எங்களைக் கடைத்தேற்ற எவரோ உள்ளார்?” என்று புலம்பி அழுதார்.

அந்த அழுகை ஸ்ரீராமாநுஜரை நெகிழ்த்தியது. அருகே சென்று அவரின் கரங்களை இதமாகப் பற்றி “ஆளவந்தாரின் அத்யந்த சீடரே... எனக்கும் குருவின் ஸ்தானத்தில் இருப்பவரே… நான் இப்போது சொல்லப்போவதைக் கேட்டு என்னைத் தவறாகக் கருதிவிடக் கூடாது. என் மனத்தில் இவ்வேளை இங்கே பட்டதையே நான் கூறப்போகிறேன்.

ரங்க ராஜ்ஜியம் - 58

ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு மரணம் என்கிற ஒன்று உண்டா என்ன... காஞ்சியிலிருந்து நான் திருவரங்கம் வந்திருப்பதுபோல, ஆளவந்தார் என்கிற நம் ஆசார்யனும் திருவரங்கம்விட்டு ஸ்ரீவைகுண்டம் சென்றிருக்கிறார். எம்பெருமான், தன்பொருட்டு அவரை அங்கே அழைத்திருக் கிறான்.

இது மரணமல்ல… மாற்றம். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் வரையிலும் அவன் இறப்பதேயில்லை. பூத உடலையே துறக்கிறான். மற்றபடி அவனுக்கு முதல்தான் ஏது... முடிவுதான் ஏது...”

என்று ஆறுதல் கூறினார்.

அதைக்கேட்டு, சுற்றியிருந்த சீடர்களில் பலரின் முகத்தில் ஓர் ஆச்சர்ய அதிர்வு. அதில் ஒருவர் வேகமாக முன்வந்து “சுவாமி, தாங்கள் யார் என அறியலாமா...” என்று மிகப் பணிவாய்க் கேட்டார்.

“நானா… இன்னமும் என்னை முழுமையாகத் தெரிந்திராத நிலையில் என்னைப் பற்றிக் கூற பெரிதாய் ஏதுமில்லை. ஆயினும், ராமாநுஜன் என்பது என் நாமம்…” என்றார் ஸ்ரீராமாநுஜர்.

“தாங்களா… தாங்கள்தானா ராமாநுஜர்… தங்கள் வருகையை எதிர்நோக்கிய வண்ணமே இருந்தார் எம் ஆசார்யர். ஓர் ஆச்சர்யம் பாருங்கள்... தன் இறுதி சுவாசம் அடங்குமுன் எம் ஆசார்யன் உதிர்த்ததும் நீர் சொன்ன அதே கருத்தைத் தான்!”

“அப்படியா? அப்படியென்ன பெரிய கருத்தை நான் கூறிவிட்டேன்?”

“ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இறப்பதில்லை… அவனுக்கு முடிவு தான் ஏது... முதல்தான் ஏது என்றீர்கள் அல்லவா...”

“ஏதோ மனத்தில் பட்டதைக் கூறினேன்…”

“அதுதான் எங்கள் வியப்புக்குக் காரணம். எம் ஆசார்யன் கூறிய அதே சொற்கள்... அதே கருத்து!”

“அது என் பாக்கியம். அதற்காக நான் அவராகிவிட மாட்டேன். அவரெங்கே… நானெங்கே...”

“இப்படிப் பேசுவது உங்கள் அடக்கத்தைக் காட்டுகிறது. ஆனால், ஆசார்யன் அவரின் வாரிசாக உங்களை அடையாளப்படுத்திவிட்டுப் போயிருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.”

“நான் அறிய வேண்டியவையே ஏராளமாக இருக்கின்றனவே...’’

ஸ்ரீராமாநுஜர் பேச முற்பட, அந்தச் சீடரோ இடைமறித்துப் பேசினார்.

“இதையும் அறிந்துகொள்ளும்… ஆசார்யனின் மடங்கிய மூன்று கை விரல்களைக் காண்கிறீர்கள்தானே...”

“காண்பது மட்டுமா? அவை தன்னுள் ஒரு பெரும் செய்தியைக் கொண்டிருப்பதாகவே என் ஆழ் மனது கருதுகிறது.”

``அருமை… அற்புதம்! அவை எதன் பொருட்டு அப்படியுள்ளன என்று அவர் அருகிலிருந்து அறிந்த நிலையில் நாங்கள் கூறுகின்றோம்”- என்றபடி ஒரு சீடர், ஆளவந்தாரின் பூத உடல் முன் வேகமாக வந்து நின்றார்.

தொடர்ந்து, “மூன்று மடங்கிய விரல்களும் மூன்று செய்தியைச் சொல்கின்றன. முதல் செய்தி சாதி வேற்றுமையில்லாத சமத்துவமான சமுதாயம். இரண்டாவது செய்தி ஸ்ரீவைஷ்ணவமே மாந்தர்க்கு எளிதானது - ஏற்றது; விரைந்து நற்கதி தரவல்லது. எனவே ஸ்ரீவைஷ்ணவ தர்மம் உலகு முழுக்கப் பரவ வேண்டும். மூன்றாவது விரல் சொல்லும் செய்தி, வேதப் புதையல்களில் ஒன்றான பிரம்ம சூத்திரத்துக்கு அனைவருக்கும் புரியும் வண்ணம் வியாக்யானம் எழுதுதல் வேண்டும்” என்று கூறி முடித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 58

“அடேயப்பா… ஆசார்யனுக்கு எவ்வளவு பெரிய மனது. அவர் விருப்பங்களும் துளியும் சுயநலமற்றதாக உலகுக்கானவையாக உள்ளன. அற்புதம்... அற்புதம்” என்றார் ஸ்ரீராமாநுஜர்.

“அற்புதம் என்று சொன்னால் மட்டும் போதாது. தாங்கள் இந்த மூன்று விருப்பங்களை ஈடேற்றிக் காட்டி, ஆசார்யனின் தனிப் பெரும் கருணைக்கும் ஆசிக்கும் பாத்திரமாக வேண்டும் என்று வேண்டுகிறோம்” என்றனர் சீடர்கள்.

“நான் இளையவன், புதியவன். ஆயினும் இப்பிறப்பில் ஏதாவது செய்வதே தீர வேண்டும் என்கிற வேட்கை உடையவன். எம்பெருமானின் கருணையும் அருளும் நம் அனைவருக்குமே நிரம்ப இருப்பதாகக் கருதுகிறேன். ஆசார்யனின் விருப்பமே இனி என் விருப்பம்… அதை ஈடேற்ற நிச்சயம் பாடுபடுவேன்” என்றார் ஸ்ரீராமாநுஜர்.

ஸ்ரீராமாநுஜர் இப்படி ஆளவந்தார் பூத உடல் முன்னால் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டதுபோல் உணர்ச்சிபூர்வமாகச் சொல்லி, அவரின் உடலுக்கு மீண்டுமொரு வந்தனம் புரிந்த நிலையில், ஆளவந்தாரின் அந்திம காரியங்களும் அதன்பின் ஈடேறி முடிந்தன.

பெரிய நம்பியின் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், ஆசார்ய திருநாட்டு வைபவமும் முற்றாய் முடிந்து, அதன்பின்னர் திருவரங்கப் பெருமானின் திருச்சந்நிதிக்குச் சென்று அங்கே நெடுநேரம் நின்று வணங்கிய ஸ்ரீராமாநுஜரின் மனத்தில் காஞ்சியின் நினைவும் குறிப்பாக மனைவி தஞ்சமாம்பாள் குறித்த எண்ணமும் ஒரு சேர எழுந்தன.

தஞ்சமாம்பாள் ஸ்ரீராமாநுஜர் போல் விசாலமானவள் இல்லை. குறுகிய பார்வையும், உயர்வு தாழ்வு மனப்பான்மையும், ஆடை ஆபரணப் பிரேமைகளும் கொண்டவளாக இருந்தாள். கணவன் என்பவன் கை நிறைய சம்பாதிப்பவனாக, சொத்துகள் வாங்கிப் போடுபவனாக, பிள்ளை குட்டி என்று பாசக்காரனாக இருக்க வேண்டும் என்பதெல்லாமும் தஞ்சமாம்பாளின் எண்ணம்.

ஸ்ரீராமாநுஜரோ சதா திருமஞ்சன கைங்ஙகர்யம், பக்தி பூர்வம், தியானம், பாராயணம் என்று திகழ்ந்ததில், அவள் வரையில் ஓர் இடைவெளியும் கோபதாபங்களும் நிறையவே ஏற்பட்டிருந்தன. பெரிய நம்பி திருவரங்கத்துக்கு அழைத்த நிலையில், ஸ்ரீராமாநுஜர் அதற்காகப் புறப்பட்டபோதே அவள் முகம் மாறிவிட்டது.

“இங்கே என்னை தனித்து விட்டுவிட்டுச் செல்லுதல் முறையா...” என்று கேட்டுப் புலம்பியிருந்தாள்.

“ஆட்சேபம் இல்லை, நீயும் என்னுடன் வா. ஆளவந்தார் என்கிற ஆசார்ய தரிசனமும் அனுக்கிரகமும் நமக்கு ஒருசேர வாய்க்கட்டும்” என்று அழைத்தபோதோ, “அதெல்லாம் உங்களோடு போகட்டும். ஆசார்யன், மடம், சத்சங்கத்துக் கெல்லாம் இதுவல்ல வயது” என்று வர மறுத்துவிட்டாள்.

ரங்க ராஜ்ஜியம் - 58

இவை யாவும் ஸ்ரீராமாநுஜருக்கு நினைவுக்கு வந்தன. ஒருபுறம் விதிவசத்தால் கிரகஸ்த வாழ்வும் மறுபுறம் அதே விதிவசத்தால் அதனுள் ஓர் ஆசார்ய வாழ்வும் வாழவேண்டிய போக்கு. என்ன செய்வது, எதைச் செய்வது, அதை எப்படிச் செய்வது... எதுவாயினும் அக்னி சாட்சியாகக் கைப்பற்றியவளைத் தவிக்கவிடுதல் பெரும் பாவம். அவள் விருப்பங்களையும் ஈடேற்ற வேண்டும் என்று எண்ணி, அதன் பொருட்டு காஞ்சி திரும்ப முடிவு செய்தார் ஸ்ரீராமாநுஜர்.

பெரிய நம்பியிடமும் இதர சீடர்களிடமும் அதுகுறித்துக் கூறவும், அவர்களிடமும் பெரிய தடை என்று ஏதுமில்லை. அவர்களுக்கும் கிரகஸ்தாஸ்ரம தர்மங்கள் தெரிந்ததிருந்ததே காரணம்.

“ஸ்வாமி! விரைந்து திரும்பி வாருங்கள். வரும்போது தங்களின் பத்தினியாரையும் அழைத்து வந்து விடவும். காஞ்சி மண் தங்களுக்குப் பூத உடலைத் தந்ததாக இருக்கட்டும். இத்திருவரங்கமே தங்களுக்குப் புகழுடம்பைத் தரப் போகிறது என்பது எங்கள் எண்ணம்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

காஞ்சிக்குத் திரும்பிய ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சமாம்பாள் ஒன்றும் மகிழ்ச்சியாக வரவேற்கவில்லை.

“அடடே… பரவாயில்லையே! சில வாரங்களிலேயே திரும்பி வந்துவிட்டீர்களே. தாங்கள் திரும்புவதற்கு வருடக் கணக்காகும் என்று கருதியிருந்தேன்” என்று தன் கருத்தை இடக்காகக் கூறினாள்.

“தஞ்சம்… நீ என்னிடம் தஞ்சமென வந்தவள். உன்னைத் தவிக்க விடுவதா என் விருப்பம். சந்தர்ப்பச் சூழல்கள் சில நேரங்களில் என் கைகளில் இல்லாமல் போய்விடுகின்றன. விரைந்து சென்றும் பயனில்லை. ஆசார்யனாகிய ஆளவந்தார், நான் அவரைக் காணுமுன் திருநாடு அலங்கரிக்கச் சென்றுவிட்டார்.”

“ஓஹோ... அதனால்தான் திரும்பி விட்டீரோ… ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால், வருவதற்கு வருடக்கணக்கு ஆகியிருக்குமோ...” தஞ்சமாம்பாளின் பேச்சு, ஸ்ரீராமாநுஜரை அதற்குமேல் பேசவிட வில்லை. இவளிடம் பேசுவது இனி வீண் என்கிற முடிவுக்கு வந்தவர், கொல்லைப்புரத்துக்குச் சென்று களைப்பு தீரக் குளித்தார். பன்னிரு திருமண் காப்பைப் பளிச்சென்று தரித்துக்கொண்டவர், வரதனை வணங்கப் புறப்பட்டுவிட்டார்.

தஞ்சமாம்பாள் தடுக்கலானாள்.

“எங்கேயோ கிளம்பிவிட்டீர் போல் தெரிகிறதே...”

“ஆம்! காஞ்சி அருளாளனை தரிசித்துப் பல நாள்களாகி விட்டனவே?”

“எப்போதும் கோயில் நினைப்பு தானா...”

“எப்போதும் எங்கே நினைத்தேன். குளிக்கையில்தான் நினைத்தேன். ஆனால், சதாசர்வ காலமும் அவன் நினைப்பாக இருக்கத்தான் இப்பிறப்பு அருளப்பட்டுள்ளது. ஆனால் நம்மால்தான் அப்படியெல்லாம் தீர்க்க மாக நினைக்க முடிவதில்லையே...”

தஞ்சமாம்பாள் இடக்காகக் கேட்ட கேள்விக்கு, பதில் இடக்கின்றி ஆதங்கமாய்ப் பதில் கூறிய ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம்மா சலிப்புடன் பார்த்தாள்.

“என்ன தஞ்சம்மா அப்படிப் பார்க்கிறாய்?”

“நான் ஒரு பொருளில் கூறினால், நீங்கள் ஒரு பொருளில் பதில் கூறுகிறீர்களே...”

“எனக்கு எதிலும் ஒரே பொருள்தான். அதிலும் இப்போது என்னுள் ஆசார்யனின் மூன்று கட்டளைகளே மனத்தைச் சுற்றிச் சுற்றி வலம் வருகின்றன. சாமான்யனான என்னை ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யனாகவே ஒரு கூட்டம் கருதுகிறது. அவர்கள் நம்பிக்கையின்படி செயல்படத் தீர்மானித்து விட்டேன். அதற்கு எனக்கு அதிகம் ஆத்மசக்தி வேண்டும். அதை அந்த வரதன்தான் அனுக்கிரகிக்க வேண்டும்.”

தஞ்சாமாம்பாளால் அதற்கு மேல் ஏதும் பேச முடியவில்லை. எப்படிப் பேசினாலும் அதன் பாதிப்பை ஒரு பொருட்டாகக் கருதாமல், தன் நிலையைச் சொல்லி நிற்பவரிடம் எப்படிப் பேச முடியும்.

ஸ்ரீராமாநுஜர் காஞ்சி அருளாளன் ஆலயம் நோக்கிப் புறப்படலானார். கச்சம் உடுத்தி, மார்பில் அங்கவஸ்திர விரிப்போடு பொலிந்த திருமண் காப்புடன், வீதியில் அவர் இறங்கி நடந்த போது, அந்த நடை ஒரு தனி அழகாகாத்தான் இருந்தது. எதிர் படுவோரில் சில முகங்களில் புன்னகை. பலருக்கும் அவர் திருவரங்கம் சென்றிருந்தது தெரிந்திருந்தது. அவர்களில் ஸ்ரீராமாநுஜர் பெரிதும் மதிக்கும் திருக்கச்சி நம்பியும் ஒருவர். அவர் அந்தணரில்லை. ஆயினும் அந்தணர் போல சத்சங்கம், பாராயணம், பரோபகாரம் எனத் திகழ்வார். அவர் மேனியிலும் பன்னிரு காப்பு. சற்றே கருத்த தேகமானதால், திருமண் காப்பு திவ்யமாகத் தெரிந்தது.

ஸ்ரீராமாநுஜரைக் கண்டதும் எதிரில் வந்து “அடடே, ராமாநுஜரா...” என்று வியந்த திருக்கச்சி நம்பியின் காலடியைப் பணிந்து, கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார் . அதைக் கண்டு சற்றே வியந்த திருக்கச்சி நம்பி, “ராமாநுஜரே என்ன இது... மதிப்பும் மரியாதையும் மனத்தில் இருந்தால் போதாதா...” என்று கேட்டார்.

ரங்க ராஜ்ஜியம் - 58

அதைக் கேட்டு திடுக்கிட்ட ஸ்ரீராமாநுஜர், “குருவே என்ன இது... எனக்கெற்குப் புதிதாக மரியாதை?”

“திருவரங்கத்து ஆளவந்தாராலேயே தேடப் பெற்ற எங்கள் காஞ்சியைச் சேர்ந்த பாக்கிய சாலியை இனியும் நான் ஒருமையில் அழைப்பது அழகல்லவே...”

“நான் பாக்கியசாலி! அதற்காக என்னை உயர வைத்து உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். தாங்களும்தானே ஆளவந்தவரின் சீடர்!”

“நான் என்றும் சீடனே... ஆனால், நீங்கள் சீலர்.”

“என்னவாயிற்று உங்களுக்கு... நான் என்றும் உங்கள் ராமாநுஜனே... நீர் என் குருவே..”

``நீர் சொல்வதைக் கேட்கக் காதுகளுக்கு இதமாகவே உள்ளது. ஆனால், நடைமுறை என்று உள்ளதே...”

“என்ன பெரிய நடைமுறை...”

“நான் உங்களின் அகத்தில் வேண்டுமானால் குருவாக ஆகலாம். ஆனால், அந்தணர் என்பதால் நீர்தான் அனைவருக்கும் குருவாக ஆகப் போகிறீர்.”

``ஓஹோ, நீங்கள் சாதியைப் பற்றிச் சிந்தித்து அதன்மேல் நின்று பேசுகின்றீர் போலும். ஆளவந்தாரின் பெரும் விருப்பமே சாதிபேதமற்ற வைணவ சமுதாயம்தான்!”

``அதைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறீரா...”

“நம்புவதா... என் வரையில் நான் தீர்மானமும் செய்துவிட்டேன். என் முன்னே எம்பெருமான் தாசர்கள் எச்சாதியினராக இருந்தாலும் சரி, அவர்கள் ஸ்ரீவைஷ்ணவன் என்னும் நெறியினரே. ஏன்... செட்டிமகனான நீர், என் வரையில் பரம வைஷ்ணவர் மாத்திரமே!”

“அவசரம் வேண்டாம். இது பல காலத்துப் பாதிப்பு. வழிப்பது கடினம். ஆனால், வழுக்குவது சுலபம்.”

“நான் இதில் வழுக்கி எல்லாம் விழுந்துவிட மாட்டேன் நம்பி அவர்களே. வழிக்கவும் துணிந்து விட்டேன். நாளையே நீர் என் பெருமதிப்பிற்குரிய விருந்தினர். உங்களை உபசரித்துப் பசியாற்றிய பிறகே நானும் என் மனைவியும் உண்போம்.”

“என்ன இது… எங்கோ தொடங்கிய பேச்சு இறுதியில் போஜனத்தில் வந்து முடிந்து விட்டதே…”

“எனக்கு அருள் கூர்ந்து அந்த பாக்கியத்தைத் தாருங்கள்…”

“கரும்பு தின்னக் கூலியா... ஆனால்...”

“புரிகிறது... எவரும் எதுவும் சொல்ல மாட் டார்கள். சொன்னால் அவர்களுக்குச் சொல்ல நம்மிடமும் விஷயம் உள்ளது. நாம் ஸ்ரீவைணவர்கள் மாத்திரமே. நம்மில் மேல்-கீழ் என்பது இல்லை; இடது - வலது இல்லை; பெரியவன் - சிறியவன் என்ற பேதமும் இல்லை. எல்லோரும் சமம். அதற்கான ஆரம்பமாக நீங்கள் இருப்பதே சரி.”

ஸ்ரீராமாநுஜர் ஆழமான பொருளுடன் பேசிய பேச்சு, திருக்கச்சி நம்பிகளைச் சம்மதிக்கச் செய்தது. அதன்பின் காஞ்சி அருளாளனை தரிசித்து முடித்தவராய் வீடு திரும்பிய ஸ்ரீராமாநுஜர், தஞ்சம்மாளிடம் திருக்கச்சி நம்பிகள் அமுதுண்ண வரும் விஷயத்தைக் கூறிய நொடி அவளிடம் பலத்த அதிர்ச்சி!

“என்ன தஞ்சம்மா… எதற்கு இந்த மௌனம்?”

“அவர் நம்மவரா?”

“அதிலென்ன சந்தேகம்... எம்பெருமானை வழிபடும் வைணவர்கள் அவ்வளவு பேருமே நம்மவர்களே!”

“நீங்கள் சொன்னால் ஆயிற்றா... ஊர் உலகம் ஒப்புக்கொள்ளுமா?”

“ஒப்புக்கொள்ள வைப்பதே இனி என் கடமை.”

“வேண்டாத வேலை. பாகை தலையில்தான் இருக்க வேண்டும். செருப்பு வெளியேதான் கிடக்க வேண்டும்.”

“ஜடத்துக்கான விதிகளை உயிர்த் துடிப்புள்ள மனிதர்களுக்குப் பொருத்திப் பார்க்காதே. நான் வாக்களித்து விட்டேன். அவர் நம் வீட்டில் உண்டே தீர வேண்டும்” எனக் கண்டிப்புடன் பேசிய ஸ்ரீராமாநுஜரின் முகத்தில், அதுவரை அவள் கண்டிராத கோபம்!

-தொடரும்...

அமானவன் காத்திருப்பார்!

வைகுண்டத்தில் துவாரபாலகர்களுக்கு சற்று முன்னால் அமானவன் ஒருவர் நின்றிருப்பார். `மானவன்' என்றால் மனிதன். `அமானவன்' என்றால் தேவபுருஷன்.

நற்குணங்கள் நிறைந்தோர், புண்ணியம் செய்தோர் மரணித்ததும், வைகுண்டம் செல்வார்கள். அங்கே, அவர்களைப் பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவரது பணி! இவருடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்கமாட்டார்கள். அதனால் ஸ்வாமி மணவாள மாமுனிகள், 'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார். அதாவது, `அமானவன் என்னைக் கைப்பிடித் துப் பெருமாளிடம் கொண்டு சேர்க்கவேண்டும்' என்கிறார்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்