திருக்கதைகள்
தொடர்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 59

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

ராமாநுஜர் முகத்தில் அதுகாறும் கோபத்தையே கண்டிராத தஞ்சமாம்பாள், அப்போது அவர் கோபித்தது கண்டு அதிர்ந்து போனாள்.

உணர்ந்த மெய் ஞானியர் யோகந் தோறும் திருவாய் மொழியின்

மணம் தரும் இன்னிசை மன்னு மிடந்தோறும் மா மலராள்

புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தோறும் புக்கு நிற்கும்

குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குல கொழுந்தே

- இராமநுச நூற்றந்தாதி - 60

ராமாநுஜர் முகத்தில் அதுகாறும் கோபத்தையே கண்டிராத தஞ்சமாம்பாள், அப்போது அவர் கோபித்தது கண்டு அதிர்ந்து போனாள்.

வால் மிதிபட்ட நாகமானது சீற்றத்துடன் படம் விரித்து, தன்னை மிதித்தவனைக் கூர்மையாகப் பார்ப்பது போல் இருந்தது, அவரின் பார்வை. அவள் வரையில் அது ஒரு சிறு விஷயம். அதற்காக இப்படி ஒரு கோபமா’ என்பது அவள் கோணம். ஆனால், அதுதான் ஒரு நல்ல வைணவன் வாழ்வில் பெரு விஷயம்.

ரங்க ராஜ்ஜியம் - 59

ஒரு குருவின் நிழல் சொர்க்கம் என்றால், அவரின் எச்சில் அமுதம் அவரின் திருவடிகளே பரமபதம். திருக்கச்சி நம்பிகள், ஶ்ரீராமாநுஜர் வரையில் ஆத்ம குரு. அவரின் பக்தியும் ஞானமும் எல்லையில்லாதவை. அவற்றைப் பிறப்பெனும் சாதி கொண்டு பார்த்து அலட்சியம் செய்வது மகா பாவம் என்கிற கருத்தைக் கொண்டிருந்த ஶ்ரீராமாநுஜர், அவர் தன் வீட்டில் விருந்துண்ணும் நிலையில், அவர் சாப்பிட்ட இலையில் மீதமிருக் கும் எச்சிலுடன் தனக்கான உணவை உண்டிட விரும்பினார்.

`நான்' என்னும் செருக்கும், பேத உணர்வும், சகிப்பற்ற தன்மையும் உடைய ஒருவனின் ஞானத்தால் எந்தப் பயனும் இல்லை. அந்த ஞானம் அவனுக்குள் அகங்காரத்தை வளர்த்தால், அது ஞானத்துக்கு இழுக்கு. நல்ல ஞானியிடம் இந்தத் தன்மைகள் கூடாது, இவை நீங்க வேண்டும் என்பதாலேயே ‘போனகம் செய்த சேடம்’ எனும் குருவின் எச்சிலை உண்ணும் வழக்கம் அந்த நாளில் இருந்தது.

இந்த எச்சில் கிடைத்தற்கரியது. ஶ்ரீராமாநுஜர் வரையிலும்கூட அப்படித்தான் ஆயிற்று. ஶ்ரீராமாநுஜருடன் சேர்ந்து சென்றால், அவர் தன் எச்சில் இலையில் உண்ணக் கூடும். அது உயர்சாதியில் பிறந்த அவருக்கு அழகல்ல என்று கருதிய திருக்கச்சிநம்பிகள் ஒரு காரியம் செய்தார். ஶ்ரீராமாநுஜர் காஞ்சி வரதன் ஆலயத்தில் திருப்பணியில் மூழ்கியிருக்கையில், அவர் இல்லம் சென்று தஞ்சமாம்பாள் முன் நின்றார்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

தஞ்சமாம்பாள் அவர் அமுது செய்ய வந்து இருப்பதை உணர்ந்து, ஶ்ரீராமாநுஜரின் இருப்பைப் பற்றி எல்லாம் எண்ணாது, அவருக்குத் தன் வீட்டு முற்றத்தில் இலை இட்டு ஒருவகை விலகலுடன் உணவளித்தாள்.

திருக்கச்சி நம்பி அதைப் பொருட்படுத்தவில்லை. ஶ்ரீராமாநுஜரின் விருப்பத்தை ஈடேற்றும் வேண்டும். அதேநேரம், அவர் தன் பொருட்டு சிறுமைக்கு ஆளாகிவிடக்கூடாது என்று எண்ணியவர், தஞ்சமாம்பாளின் விலகலைப் பொருட்படுத்தவில்லை.

சாப்பிட்டு முடித்ததும், தஞ்சமாம்பாளை வாயார வாழ்த்திவிட்டுப் புறப்பட்டு விட்டார். அதன்பின் இல்லம் ஏகிய ஶ்ரீராமாநுஜர் நடந்ததை அறிந்து பெரிதும் அதிர்ந்தார்.

‘`நான் இல்லாத நிலையில் அவருக்கு நீ எப்படி அமுது செய்யலாம். எனக்காக காத்திருக் கக் கூடாதா. இல்லை, எனக்குத் தகவல் சொன்னால், ஓடோடி வந்திருப்பேனே’’ என்றார்.

தஞ்சமாம்பாள் இம்மட்டில் ஶ்ரீராமாநுஜரைப் பொருட் படுத்தவே இல்லை.

‘`உங்கள் குருவுக்கே உங்களோடு சாப்பிட பிரியமில்லை. இப்படி ஒருவருக்கு நான் அன்னம் இட்டதே பெரிது’’ என்று அவள் சொல்லவும், ஶ்ரீராமாநுஜரின் மனம் பெரிதும் வருந்தியது. அந்த வருத்தம் திருக்கச்சிநம்பியிடமும் எதிரொலித்தது.

‘`சுவாமி! இப்படி எதற்கு நான் அறியாவண்ணம் வந்து சென்றீர். உங்கள் எச்சில் எனக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதுதான் உங்கள் விருப்பமா’’ என்று கேட்கவும் வைத்தது.

‘`இளையாழ்வாரே அவ்வாறெல்லாம் தாங்கள் எண்ணிடக் கூடாது. நான் அகவையில் பெரியவனாக இருக்கலாம். அறிவினில் என்னிலும் பெரியவர் தாங்களே’’ என்றார்.

‘`அப்படி எதை நான் கண்டறிந்து விட்டேன் என்று இந்தப் புகழுரை’’ - ஶ்ரீராமாநுஜர் கேட்டார்.

‘`இந்த இளம் வயதிலேயே பேதங்களை உதிர்த்துவிட்டு அதை ஒரு தடையாகக் காண தெரிந்திருக்கிறது. குருவின் எச்சம் அமுத நிகர் என்பதும் புரிந்துள்ளது. இனிய இல்வாழ்வு வாழவேண்டிய பிராயத்தில் இந்த இன்பமெல்லாம் நிலையற்றது என்பதும் புரிந்துள்ளது.

எது சாசுவதமானது, இப்பிறப்பு எத்தகையது, இது எதற்கானது, இதில் எதைச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவும் திடமும் இருக்கின்றனவே... இந்த வயதில் இந்தக் காஞ்சியில் இப்படி ஒருவரை நான் கண்டதே இல்லை.’’

திருக்கச்சி நம்பிகளின் விளக்கம் ஶ்ரீராமாநுஜரை கட்டிப்போட்டுவிட்டது. மேலும் கேள்விகளை எழுப்பினால், நிச்சயம் அதற்கேற்ற பதில்களை அவர் அளித்துவிடுவார்; ஓர் இடைவெளி உருவாகிவிடும் என்று அஞ்சினார் ஶ்ரீராமாநுஜர்.

‘`சுவாமி, தங்களிடம் பேசி வெல்ல முடியாது என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர். நீங்கள் என்ன சொன்னாலும், என் மனம் சமாதானம் அடையாது. அம்மட்டில் தாங்கள் ஏதாவது ஒரு வகையில் என்னைச் சாந்தப் படுத்தியே தீர வேண்டும்’’ என்றார்.

‘`நான் என்ன செய்தால் தங்களுக்குச் சாந்தி கிட்டும்?''

``தாங்கள் அறிந்த வைணவ சித்தாந்தத்தை இலகுவாய் எனக்கு உபதேசிப்பீரா?''

‘`இவ்வளவு நாட்களாகவே அதைத்தானே செய்து கொண் டிருக்கிறேன்.’’

‘`என்னவோ தெரியவில்லை, சாப்பிட்டு எழுந்த நிலையில் திரும்ப பசிப்பது போன்று ஓர் அவஸ்தை... என்னுள்.’’

‘`ஞானாக்னி எரிந்திடும்போது இப்படி நிகழ்வது இயல்பே.’’

‘`பெரிய வார்த்தைகள் எதற்கு? தாங்கள் வரதனோடு ஆத்ம உரையாடல் நிகழ்த்துபவர். எங்களுக்கெல்லாம் உங்களைப் போன்றோர் குரு என்றால், உங்களுக்கு அந்த வரதனே குரு...’’

‘`நாராயண... நாராயண... என் பித்தம் தங்களுக்கு முதிர்ந்த முக்தியாகத் தெரிகிறது போலும்...''

‘`பித்தமா... நிச்சயமாகச் சொல்கிறேன்... தங்கள் சித்தம் நாராயணன் சித்தம்.’’

ரங்க ராஜ்ஜியம் - 59

‘`அதை என்னால் மறுக்க இயலாது.’’

‘`அப்படியானால் என் பொருட்டு அந்த வரதனிடம் கேட்டு என்னைத் தெளிவியுங்களேன்.’’

‘`இப்போது நீங்கள் தெளிவு இல்லாதவர் என்று யார் சொன்னது?’’

‘`நாராயணனே பூரணன் என்பதில் தெளிவு உண்டுதான். ஆயினும், அவன் திருவடிகளை இலகுவாக அடைந்துவிட என்ன செய்ய வேண்டும். தினமும் நீர் சுமந்து இந்தத் தேகத்தால் கைங்கர்யம் செய்தால் போதுமா?

இதையும் கடந்து பல காரியங்கள் இருப்பது போலவும் அவற்றைச் செய்து ஶ்ரீவைஷ்ணவம் உலகப் பொதுவாக்கிட வேண்டும் என்றும் பரபரக்கிறது மனது.

எல்லோரும் வைணவர் என்று ஆகிவிட்டால், சாதிகளுக்கு இடம் இல்லாது போய் விடும் அல்லவா? பெரியவர்-சின்னவர், மேல்-கீழ், இடது-வலது, கருப்பு - வெளுப்பு என்கிற பேதங்கள் எல்லாம் நீங்கிவிடுமே.’’

‘`ஒரு பெரும் கனவு உங்களுக்கு இருப்பது புரிகிறது. உங்கள் விருப்பப்படி அந்த வரதனிடம் இன்று பிரார்த்திப்பேன். தங்களின் பொருட்டு அவன் என்னுள் ஏதும் கருத்துகளைத் தோற்றுவித் தால் அதை அப்படியே வந்து சொல்வேன்.சரிதானே..?’’

‘`அது போதும்.... அது போதும் எனக்கு!’’

திருக்கச்சி நம்பியிடம் நிகழ்த்திய விவாதத்தின் பயனாக, அந்த வரதனும் திருக்கச்சி நம்பிகளுக்கு ஶ்ரீவைஷ்ணவத்தின் சாரமாக ஆறுவித கருத்துக்களைத் தோற்றுவித்தான்.

‘நானே பரம்பொருள்.

எனக்கும் என் படைப்பான உயிர்களுக்கும் வேற்றுமை உண்டு.

என்னை அடைய சரணாகதியே வழி.

உயிர் பிரியும் தருணம் என்னை நினைத்திடும் கட்டாயமில்லை. வாழ்நாளின் புண்ணிய காரியங்கள் போதுமானவை.

உடம்பை உதிர்த்தால் கிட்டுவதே மோட்ச வீடு.

ஆச்சார்ய சம்பந்தம் அனைத்தையும் வேகமாய் அருளிடும்' என்பவையே அவை.

அக்கருத்துக்களை திருக்கச்சி நம்பிகள் சற்று மாற்றி, ‘`திருமாலே பரம்பொருள். நமக்கும் அவனுக்கும் வேற்றுமை உண்டு. அவனை அடைந்து சரணாகதி புரிதல் வேண்டும். உயிர் பிரிகையில், நாமம் சொல்ல தேவையில்லை. உடம்பின் முடிவு வீடு. ஆச்சார்ய தொடர்பு அனுகூலம் அளித்திடும்’’ என்று ஶ்ரீராமாநுஜரிடம் கூறி முடித்தார் .

ஶ்ரீராமாநுஜரும் பூரித்தார். தனக்காக மட்டுமன்றி எல்லோருக்காகவுமே வரதன் அவ்வாறு கூறியதாகக் கருதினார். அரிய கருத்தை அறிந்த நிலையில், ஆறாம் கருத்தான ஆச்சார்ய அனுக்ரஹம் பொருட்டு திருக்கச்சி நம்பிகளையே தன் இஷ்ட குருவாகக் கொண்டார்.

ஆனால் திருக்கச்சிநம்பிகள், ‘`திருவரங்கத்து ஆளவந்தாரின் சீடரான பெரியநம்பியே உமக்கு உற்றவர். ஒரு குருபீடத்தின் வழிவந்தவரை இறுக்கமாகப் பற்றிக்கொள்வதே, உம் கனவுகளை நிறைவேற்ற வலு சேர்க்கும். நான் ஒரு தனி மனிதன். எந்த அமைப்பும் இல்லாதவன்’’ என்று கூறி மடைமாற்றம் செய்தார்.

அதற்கேற்ப, திருவரங்கத்தில் ஆளவந்தாரை அடுத்து அவர் இருப்பை நிறைவு செய்திட, அவரே பெரிதும் விரும்பிய ஶ்ரீராமாநுஜர், அதாவது இளையாழ்வாரே ஏற்றவர் என்னும் கருத்து பெரிய அளவில் உருவாகிவிட்டது.

அங்குள்ளோர் பெரிய நம்பியிடம், காஞ்சி சென்று முறையாக இளையாழ்வாரை அழைத்து வரப் பணித்தனர். அதன் நிமித்தம் பெரிய நம்பியும் புறப்பட்டார். தான் இருக்கும்போதே ஶ்ரீராமாநுஜர் எதற்கு என்று அவர் எண்ணவில்லை.

தன்னிடம் இல்லாத பல சிறப்புகள் ஶ்ரீராமாநுஜரிடம் இருந்ததை உணரப் போய்தான் ஆளவந்தார் அவரிடம் குரூபீடத்தை அளிக்கச் சித்தமானார் என்பதைப் புரிந்துகொண்டு, பெரியநம்பியானவர் பெயருக்கேற்ப பெரிதாகவே நடந்துகொள்ளத் தொடங்கினார்.

தன் மனைவியுடன் பெரியநம்பி காஞ்சிக்குப் புறப்பட்ட அதேவேளையில், ஶ்ரீராமாநுஜரும் பெரிய நம்பியை ஆசார்யனாக அடையும் நோக்கில் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.

ஒரே நேரத்தில் இரு திசைகளிலிருந்தும் பயணப்பாடு. இடையில் மதுராந்தகம்... இங்கே பெரிய நம்பியும் ஶ்ரீராமாநுஜரும் சந்தித்துக்கொண்டு அகமகிழ்ந்தனர்.

பெரிய நம்பி ஶ்ரீராமாநுஜரை ஆளவந்தாரின் இருப்பை நிறைவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

``அதற்கு முன்பாக நான் தங்கள் சீடனாகி இதோபதேசம் பெற விரும்புகிறேன்'' என்றார் ஶ்ரீராமாநுஜர் என்கிற இளையாழ்வார்.

அதைக் கேட்ட பெரியநம்பி சிலிர்த்தார்!

-தொடரும்...