திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 39

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

ஆயிரம் கேள்விகள் மனத்தில் எழுந்தாலும் அவை அனைத்தையும் தனக்குள் ஒரு மூலையில் வைத்துக்கொண்டு, ஒரு கேள்வியை மட்டும் நம்மாழ்வாரிடம் கேட்டார் மதுரகவி.

‘கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணிய பெருமாயன், என்னப்பனில்

நண்ணித் தென் குருகூர் நம்பி யென்றக்கால்

அண்ணிக்கும் அமுதூறுமென் நாவுக்கே!’

- மதுரகவியாழ்வார்.

யிரம் கேள்விகள் மனத்தில் எழுந்தாலும் அவை அனைத்தையும் தனக்குள் ஒரு மூலையில் வைத்துக்கொண்டு, ஒரு கேள்வியை மட்டும் நம்மாழ்வாரிடம் கேட்டார் மதுரகவி.

“ஒளி வடிவானவரே! ஒரே ஒரு கேள்விதான். அதற்கு எனக்கு விடை தெரிந்தால் போதும்.

கங்கைக்கரையில் பல ஞானியர் களிடமும், புலவர்களிடமும், சாஸ்திர வல்லுநர்களிடமும் கேட்டேன். எவரும் நிறைவாகப் பதில் கூறவில்லை. தாங்கள் கூறி என்னைத் தெளிவடையச் செய்ய வேண்டும்” என்றவர் அந்தக் கேள்வியைக் கேட்டார்...

“செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”

துளியும் தாமதமின்றி தயக்கமின்றி பதில் வந்தது, யோகி சடகோபனிடமிருந்து...

“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்

அத்தைத் தின்று அங்கே கிடக்கும்

அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”

- என்று பிரமாணத்துக்காக உள்ள மூன்று முறையைக்கொண்டு மூன்று முறை கூறினார்.

மதுரகவியாருக்குப் பொறி தட்டிற்று. சிலிர்த்துப் போனது உடல். எவ்வளவு எளிய... அதேநேரம் சரியான விடை. அப்படியே கண்ணீர் பெருக, ‘குருவே...’ என்றபடி சாஷ்டாங்கமாக விழுந்தார்.

சடகோபன் பேசிவிட்ட விஷயம், ஊர் எங்கும் பரவிற்று. பொன்காரியும் உடையநங்கையும் ஓடிவந்தனர்.

“பிள்ளாய் பேசிவிட்டாயா? இந்த நாளுக்கே நாங்கள் காத்திருந்தோம். எங்களைத் தெரிகிறதா...

நான் உன் தாய்; இவர் உன் தந்தை” என்றாள் உடையநங்கை. சிரித்த சடகோபன் எழுந்து நின்று, திருச்சந்நிதியை நோக்கிக் கை காட்டி ‘நம் அனைவருக்கும் தாயும் தந்தையும் அவன் மட்டுமே...’ என்றார்.

இந்தப் பதிலிலேயே நம்மாழ்வார் பிறந்து விட்டார். அவருக்கான யோக வாழ்வும் ஒரு முடிவுக்கு வந்து, திருக்குறுகூரை விடுத்து திருமாலின் திருத்தலங்களுக்குச் சென்று பக்தியோடு பாடத் தொடங்கிவிட்டார். அனைத்தும் சாகாவரம் பெற்ற பாடல்கள்!

இந்தப் பாடல்களைப் படி எடுப்பதுதான் மதுரகவியாழ்வாரின் வேலை.

அப்படி அவர் படி எடுத்த பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1,296.

இதில் திருவிருத்தம் என்னும் கட்டமைப்பில் பாடியது 100 பாடல்கள்; திருவாசிரியம் என்னும் கட்டமைப்பில் பாடியது 7; பெரிய திருவந்தாதி - 87; திருவாய்மொழி - 1,102. ஆக மொத்தம் 1,296.

ரங்க ராஜ்ஜியம் - 39

அந்த நாளில் சங்க புலவர்களின் ஆளுமை மற்றும் உயர்ந்த நெறிபாடுகள் காரணமாக மொழியறிவும் சரி, அதன் புலமையும் சரி மிகவும் உயரத்தில் இருந்தன. பாடல்களைத் தாங்கி நிற்கும் பனை ஏடுகளையும் அதைத் தரும் பனை மரத்தையும் ஒரு புலவன் தெய்வமாகவே கருதினான். அதன் நிழலைக் காலால் மிதிப்பது கூட பாவம் என்னுமளவுக்கு பனையின்மீது புலவர்களுக்குப் பக்தியும் ஈடுபாடும் இருந்தன.

ஏடுகளும் எழுத்தாணிகளும் கண்களில் ஒற்றிக்கொள்ளப்பட்ட பிறகே பயன்படுத்தப் பட்டன. அப்படி, அவற்றைப் பயன்படுத்தி எழுதுகின்ற எழுத்தையெல்லாம் சான்றோர்கள் ஏற்றுக்கொண்டுவிடவில்லை.

எழுதப்படும் பாடல்களில் இலக்கணமும் பொருளும் இயைந்து காணப்பட்டால்தான் அதை ஏற்றனர். அந்த வரிசையில், மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் நெஞ்சில் உதித்த திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கும் நான்கு வேதங்களாகவே கருதப்பட்டன.

வேத வடிவான நாரணன், மாறன் சடகோபனாய் மானுட அவதாரம் எடுத்து வந்து வேதம் நான்கை யும் தமிழ்ப்படுத்த விரும்பினாற்போல், இந்த நால்வகைக் கட்டமைப்பில் பாடல்களைப் பாடியதாக வைணவச் சான்றோர்கள் கூறுவார்கள். அதை மறுப்பதற்கில்லை.

அதனாலேயே பின்னாளில் இந்தப் பாடல் களைத் திராவிட வேதம் என்றும் பரிந்துரைத்தனர். குறிப்பாக, திருவாய்மொழி எனும் கட்டமைப்பில் பாடப்பட்ட 1,102 பாடல்களில் ஒன்று, பானை சோற்றுப் பதம் போல் வியக்கவைக்கிறது.

நம்மை வியக்கவைத்தால் போதுமா?! சில பொய்கள்கூட மெய்போல் தோன்றி நமக்கு வியப்பேற்படுத்தும் ஆபத்து கவிதைகளில் உண்டு. அதனாலேயே கவிதைக்குப் பொய்யை அழகுடை யதாக ஆக்கி, கவிதைக்குப் பொய்யழகு என்ற தகுதிப்பாட்டையே அதற்கு அளித்திருந்தனர்.

ஆக, அந்த நாளில் ஒரு பாடலின் சத்ய ஒளியை தெய்வத்தன்மையோடு பரிசோதிக்கும் வழக்கம் இருந்தது. அதில் ஒரு விதம்தான், சங்கம் வளர்த்த மாமதுரையில் - பொற்றாமரைக் குளத்துச் சங்கப் பலகையில் எழுதியதை வைப்பது என்பது.

சங்கப்பலகை ஒரு பாடலை ஏற்றுக்கொண்டு விட்டால், அது இறையனார் ஒப்புதல் பெற்றது என்பது பொருள். அதற்கு மேல் ஒரு விமர்சனமோ சிபாரிசோ தேவையில்லை. அந்த வகையில் மாறன் சடகோபனின் திருவாய்மொழிப் பாடல்களில் ஒரு பாசுரத்தை மட்டும் பலகையில் வைத்திட, அப்பாடலைச் சங்கப்பலகை ஏற்றது.

`கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!'

- என்பதே அப்பாசுரம்! அதாவது, நாமங்களில் நாராயண நாமமே உயர்ந்தது. சாலச்சிறந்தது, அழிவற்றது, சாசுவதமானது, முக்தி தரவல்லது என்று அதற்கு எல்லா பொருளையும் கூறலாம்.

இதைச் சங்கப்பலகையும் அப்படியே ஏற்றது. நம்மாழ்வாரின் புகழும் பெருமையும் திக்கெட் டும் பரவியது. அவரை குருவாககொண்ட மதுரகவி, தன் பங்குக்கென்று பெரிதாய் பாசுரங் களைப் பாடவில்லை. தன் பாடல்கள் குருவின் பாடல்களோடு ஒப்புநோக்கப்பட்டு, யாராவது ஒருவர் தன் பாடலை புகழ்ந்தாலும், அது தன் குரு பக்திக்கு இழுக்கு என்று மதுரகவியார் கருதியதே காரணம். ஆயினும், ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனத் தொடங்கும் பாசுரங்களோடு 11 பாசுரங்களை அவர் பாடியருளியுள்ளார். அவற்றில் தன் குருவான நம்மாழ்வாரைப் பெரிதும் போற்றி வியக்கிறார்.

ரங்க ராஜ்ஜியம் - 39

நம்மாழ்வாரும் இவரும் திருவரங்கம் வந்த சான்று கோயிலொழுகுவில் காணக்கிடைக்கிறது. ஒரு மார்கழி மாதத்து சுக்லபட்ச தசமியில், மாறன் சடகோபனும் மதுரகவியாழ்வாரும் ஸ்ரீரங்கம் வந்தனர். அவ்விருவரையும் திருமங்கையாழ்வார் எதிர்கொண்டு ஆழ்வாரையும் சேவித்து, பின் திருச்சந்நிதிக்கு அவர்களோடு சேர்ந்து சென்று... ஒன்றுக்கு மூன்று ஆழ்வார்கள் இந்தத் தசமி நாளில் திருவரங்கனை தரிசித்து மெய்சிலிர்த்தனர்.

அந்தத் தருணத்தில்தான் பெரியபெருமாளும் மாறன் சடகோபனைப் பற்றி ‘நம்மாழ்வார்’ என்கிற திருநாமம் சாற்றியதாகக் கோயிலொழுகுவில் காணப்படுகிறது.

அதன்பின், திருக்குறளப்பன் சந்நிதியில் நம்மாழ்வாரைத் தங்கச்செய்து, மறுநாள் காலை அத்யயன உற்சவம் ஆரம்பித்து, இரவு `அழகிய மணவாளன்' மண்டபத்தில் மதுரகவிகளுடன் நம்மாழ்வாரும் அர்ச்சை வடிவில் எழுந்தருளியிருக்கும் நிலையில், பெரிய பெருமாள் ‘அருளப்பாடு திருவாய் மொழி விண்ணப்பம் செய்வார்’ என்று திருவாய் மலர்ந்தார்.

அதன்பின் மதுரகவியாழ்வார் திருவாய் மொழியைத் தொடங்கி தேவகானத்துடன் அபிநயத்துடன் சேவித்து, பின்னர் பத்தாம் திருநாளில் வேதங்கள் சொல்லி முடித்தார். இதுவே மார்கழி மாதங்களில் நம்மாழ்வார் காலத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. நம்மாழ்வாரின் இடத்தில் அவரின் விக்கிரகம் இருத்தப்பட்டு, வழக்கமான நடைமுறைகள் அரங்கேறின. ஒவ்வொரு வருடமும் நம்மாழ்வார் விக்கிரகம், ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கத்துக்கு எழுந்தருளும். பிறகே ராப்பத்து உற்சவம் தொடங்கும்.

பிற்காலத்தில், இயற்கை உத்பாதம், கள்வர் வழிப்பறி, மிலேச்சர் ஆதிக்கம் போன்றவற்றால் இந்த நடைமுறை நின்றுபோனது. அதனால், எம்பெருமானார் கருட மண்டபத்தில் தென்மேற்குப் பகுதியில் நம்மாழ்வாருடைய அர்ச்சா ரூபத்தைப் பிரதிஷ்டை செய்து உற்சவம் தொடர்ந்தது.

ரங்கனின் ராஜ்ஜியத்தில் பிற்காலச் சோழர் பரம்பரை கி.பி 1070-ல் தொடங்குகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழன், அவனைத் தொடர்ந்து விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன் என்று கி.பி 1218 வரை தொடர்ந்தது சோழர் பரம்பரை.

இதில் இரண்டாம் குலோத்துங்கன் காலம் வைணவத்துக்கே சோதனையான காலம். தில்லை திருச்சித்திரக்கூடத்தில் எழுந்தருளியிருந்த கோவிந்தராஜப்பெருமாள் கடலில் எறியப்பட்டார். பின், இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் திருச்சித்திரக்கூடத்து கோவிந்தராஜர் திருக்கோயில் மதில்கள் இடிக்கப்பட்டு, சிதம்பர ஆலயம் விரிவுபடுத்தப்பட்டது.

இரண்டாம் குலோத்துங்கன் தன் சைவப் பற்றைப் பறைசாற்ற, வைணவத்தை இழிவு செய்வது என்பதை ஒருவழியாக வைத்திருந்தான். எம்பெருமானும் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் நடுவில் நிர்குணனாக விளங்கி, குலோத்துங்கனின் அறியாமையை சரித்தான்.

காலங்கள் உருண்டன. கி.பி 1146 முதல் 1173 வரை ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜன், குலோத்துங்கன்போல் மூர்க்கனாக இல்லை. அவன், திருவரங்கத்தில் வாழ்ந்த ஸ்ரீபராசர பட்டருடைய காலத்தில், திருவரங்க ஆலயத்துக்கு யானை ஒன்றை பெரிய பெருமாள் கைங்கர்யத்துக்காக தானமாக அளித்தான்.

பின்னர் ஹொய்சளர்களில் பலர் திருவரங் கத்தைத் தேடிவந்து பக்தி செலுத்தினர். இவர்களில் ஒருவன்தான் பிரதாப சக்கரவர்த்தி. இவன் திருவரங்கம் வந்து எம்பெருமானை தரிசித்து இரவு தங்கியபோது, கடும் வயிற்றுவலிக்கு ஆட்பட்டான். வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் உபாதை தீரவில்லை. பிரதாப சக்கரவர்த்திக்கு, காவிரி ஆற்றில் குதித்து உயிரை விட்டுவிடத் தோன்றியது. முன்னதாக அரங்க தரிசனம் செய்யச் சென்றவன் சந்நிதியில் கண்ணீர் சிந்தினான். அப்போது அசரீரியாக ஒலித்த ஒரு குரல், தன்வந்தரி சந்நிதிக்குச் சென்று துளசி தீர்த்தம் சாப்பிடச் சொன்னது.

திருவரங்கத்து உபசந்நிதிகளில் ஒன்று தன்வந்தரி சந்நிதி. பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வில், மகாலட்சுமியோடுகூடி, அமிர்த பாத்திரத்துடன் வெளிப்பட்ட விஷ்ணு அம்சமே தன்வந்தரியாவார். நோய்நொடிகளுக்கு மந்திர பூர்வமாகவும், தாவர மூலிகைகள் மூலமாகவும் மருந்தை அருளும் ஒருவராக தன்வந்தரி திகழ்ந்தார்.

அப்படிப்பட்டவரின் சந்நிதியை அடைந்தான் பிரதாப சக்கரவர்த்தி. அங்கே, பச்சைக் கற்பூரம், ஏலம், துளசி ஆகியவற்றோடு சிறிது மஞ்சளும் சேர்த்த தீர்த்தம் மருந்தாகவும் விநியோகிக்கப்பட்டது. அதை அருந்திய நிலையில், பிரதாப சக்கரவர்த்திக்கு பூரண குணம் ஏற்பட்டது. தான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெற விரும்பிய இம்மன்னன் அங்கேயே ஒரு மருத்துவச்சாலையை நிர்மாணித்து, அதன் நிர்வாகத்தை உத்தம நம்பி என்பார் வசம் ஒப்படைத்தான். இவர் வம்சத்தில் வந்தவரே கருடவாகன பண்டிதர்!

இவரே `திவ்யசூரி சரிதம்' எனும் பெயரில், ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் வைபவத்தினை எடுத்துரைத்தவர். இவர் வேறு; கருட வாகன பண்டிதர் வேறு என்கிற ஒரு கருத்தும் உள்ளது. இதற்கான கல்வெட்டினைச் சந்திர புஷ்கரிணி பகுதியிலிருந்து ஐந்து குழி மூன்று வாசலுக்குச் செல்லும் நடைபாதையில் இன்றும் காணலாம்.

இந்த `ஐந்து குழி மூன்று வாசல்' திருவரங்கம் ஆலயத்தின் பிரதான அடையாளங்களில் ஒன்று. நடைபாதையில் கற்பூக்கோலம் ஒன்றின் நடுவில் காணப்படும் இந்த ஐந்து குழிகளில்... அதை தரிசிப்பவர், தங்கள் விரல்களை வைத்துப் பார்த்து இன்புறுவது என்பது அன்றாட நிகழ்வாகும்.

இப்படியான அனுபவங்கள், ஆலய தரிசனத் தையும் மனத்தில் அழியாதபடி நிலைநிறுத்தி விடுகிறது. எத்தனை ஆண்டுகளும் ஆனாலும் இந்த ஐந்து குழி மூன்று வாசலை ஒருவர் மனம் மறந்துவிடாது.

எதற்காக இந்த ஐந்து குழிகள்?

இது பற்றி பலவித கருத்துகள் கூறப்படுகின்றன.சுருக்கமாகக் கூறுவதானால், இது மோட்சத்தை அடைவதற்கான தத்துவத்தை உடைய ஒன்று என்பர். மூன்று வாசல்கள் சித், அசித், ஈஸ்வரன் அல்லது பரம்பொருள் என்னும் தத்துவங்களைக் குறிப்பதாம். ஐந்து குழிகள் அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதாம்.

இந்தக் குழிகளை ஒட்டியுள்ள பாதக் கல்வெட்டு மேல் நின்று குனிந்து, வலக்கையின் ஐந்து விரல்களைக் குழிக்குள் பதித்து, அப்படியே கோபுரத்தின் வழியாக எட்டிப்பார்த்தால், பரமபத வாசல் தெரியும். இப்படிச் செய்கையில் முழங்கால் மடங்கக் கூடாது என்பது முக்கியம்.

இவ்வாறு பார்ப்பவர்களுக்கு மோட்சம் எளிதில் ஸித்தியாகும் என்பர்!

- வளரும்...

வெற்றியின் ரகசியம்...

ஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு ஆஞ்சநேயரோடு சொக்கட்டான் விளையாட ஆசை! எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்ச நேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார். ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார். ''நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனவே, தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது!'' என்றார். பக்தரும் சம்மதித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 39

இருவரும் விளையாட ஆரம்பித்தனர். பக்தர், ஒவ்வொரு முறையும் 'ஜெய் அனுமான்' என்றபடியே காய்களை உருட்டினார். ஆஞ்ச நேயர், 'ஜெய்ராம்' என்றபடி காய்களை உருட்டினார்.

ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றான். 'இதனால் மனம் வருந்திய ஆஞ்ச நேயர், 'ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா?!' என்று ராமரிடம் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ராமன், 'ஆஞ்சநேயா... நீ, என் பக்தன் ஆதலால், உன்னிடம் என் சக்தி இணைந்துள்ளது. அவனோ உனது பக்தன். ஆதலால், அவனது சக்தியுடன் நம் இருவரது சக்தியும் இணைந்து விடுகிறது. இதுவே அவனது வெற்றிக்கு காரணம்!'' என்றார்.

(கர்ண பரம்பரைக் கதை)

- காயத்ரி பிரசன்னா, சென்னை - 5