திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 60

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

அவரது விருப்பப்படியே எல்லாம் இனிதே நடந்தபோதிலும், சிறிது கசப்பும் கொண்டதே வாழ்க்கை என்பது போல் ஸ்ரீராமாநுஜரின் பத்தினியான தஞ்சமாம்பாள் மூலம் சலனங்கள் ஏற்படத் தொடங்கின.

`பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த

பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல்கலையோர்

தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்

நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே!'

-இராமானுச நூற்றந்தாதி-1

எவ்வளவு தன்னடக்கம்... எவ்வளவு தேடல் கள், துளியும் விகல்பமின்றி எல்லோரையும் சம பார்வை பார்க்க முடிவது என்பது ஒரு பெரும் பக்குவம். அதை ஸ்ரீராமாநுஜரிடம் அன்று கண்ட பெரிய நம்பி, ஸ்ரீராமாநுஜரை அங்குள்ள ஆலயத்தின் மகிழ மரத்தடிக்கு அழைத்துச் சென்று, தனக்கு வலது புறமாக அமரவைத்தார்.

அதன்பின், தன் வலக் கரத்தை அவர் சென்னி மேலும், இடக் கரத்ததை அவர் நெஞ்சின் மேலும் வைத்து ஸ்பரிச தீட்சை அளிப்பவர் போல் தயாராகி, மனத்துக்குள் குருவும் ஆச்சார்யருமான ஆளவந்தாரின் திருவடிகளை தியானித்துக்கொண்டு, ஸ்ரீராமாநுஜருக்கு ‘ஸ்ரீமன் நாராயண சரணம்... சரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம’ என்ற மந்திரத்தை உபதேசித்து, பின் பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும்... தோள் இரண்டில் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்து, பின் பன்னிருத் திருமண் சாற்றி, புதிதாய் ஒரு தாஸ்ய நாமம் சூட்டும் சாக்கில், ஸ்ரீராமாநுஜர் என்கிற பெயரைச் சூட்டி திருமந்திர உபதேசம் செய்து, திருவாராதனம் செய்யும் முறைகளையும் உபதேசித்து முடித்தார்.

ஆக மொத்தத்தில், ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வானாக அவதரித்தவர், மதுராந் தகத்தில் குரு மூலமாக தாஸ்ய நாமமாய் ஸ்ரீராமாநுஜன் என்றாகிட, இந்த உலகம் ஸ்ரீராமாநுஜரை அடையப் பெற்றது இங்குதான்.

இத்தனையும் செய்து வைத்த பெரியநம்பி, தான் ஆளவந்தாரின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கருவியே. உண்மையில் ஆளவந்தாரே உங்களின் ‘பராபர குரு’ என்றும் கூறி பணிவில் உயர்ந்தார்.

பெரியநம்பியின் உயர்ந்த உள்ளத்தையும் தனக்குக் குருவாக இருந்து உபதேசித்ததையும் உத்தேசித்து, பெரிய நம்பியையும் அவரின் பத்தினியையும் காஞ்சியில் உள்ள தன் அகத்துக்கு அழைத்து, தம் இல்லத்திலேயே எழுந்தருளச் செய்து பலவிதமான பிரபந்தங்களையும் ஆளவந்தாரின் பிரத்தியேக சமயக் கருத்துகளையும் அறிந்து கொள்ள முற்பட்டார் ஸ்ரீராமாநுஜர்.

அவரது விருப்பப்படியே எல்லாம் இனிதே நடந்தபோதிலும், சிறிது கசப்பும் கொண்டதே வாழ்க்கை என்பது போல் ஸ்ரீராமாநுஜரின் பத்தினியான தஞ்சமாம்பாள் மூலம் சலனங்கள் ஏற்படத் தொடங்கின.

ஓர் அதிதி பிச்சை கேட்டு வந்து வாசலில் நின்ற நிலையில், ‘தம் அகத்தில் தற்போது மணி அரிசிகூட இல்லை நீ வேறு இடம் பார்’ என்று தஞ்சமாம்பாள் கூறியது, ஸ்ரீராமாநுஜரின் காதுகளி லும் விழுந்தது. பதைத்துப் போய் உள்ளே அரிசிப் பானையைப் பார்த்தபோது அது நிரம்பி இருந்தது.

ரங்க ராஜ்ஜியம் - 60

‘`தஞ்சமாம்பாள்! பானை நிறைய அரிசி இருக்க, எதற்காக மணி அரிசிகூட இல்லை என்றாய். இது பொய் மட்டுமல்ல, கருணையற்ற செயலும் கூட’’ என்று கடிந்துகொண்டார்.

ஆனால், தஞ்சமாம்பாள் அதை சட்டையே செய்யவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் கிணற்றடியில் பெரியநம்பியின் பத்தினிக்கும் தஞ்சமாம்பாளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டுவிட்டது. பெரியநம்பியின் பத்தினி நீரைக் குடத்தில் நிரப்பி, தன் பிரத்யேக தேவையின் பொருட்டு எடுத்துச் செல்கையில், அதன் ஒரு திவலை தழும்பி, தஞ்சமாம்பாள் குடத்து நீருடன் கலந்துவிட்டது. உடனேயே அவ்வளவு நீரையும் கீழே கொட்டி விட்டு, தஞ்சமாம்பாள் ஜாடையாக பெரியநம்பியின் பத்தினியை மனம் வருந்தும்விதமாய் திட்டி விட்டாள்.

அதன் எதிரொலியாக பெரியநம்பி மனைவியுடன் அந்த நொடியே காஞ்சியை விட்டுப் புறப்பட்டு விட்டார். இதை அறிந்த ஸ்ரீராமாநுஜர் பெரிதும் வருந்தினார். அந்த வருத்தத்தின் முடிவு, `போதும், இல்வாழ்வு இனி வேண்டாம். முழுமையான இறை வாழ்வே...' என்று எண்ணியவராக துறவு கொள்ள முடிவு செய்தார்.

அந்த முடிவினை தஞ்சமாம்பாளிடம் தெரிவித் தார். ‘`இனி, உனக்கும் எனக்கும் யாதொரு பந்தமும் இல்லை. நீ உன் பிறந்தகம் சென்று உன் எண்ணப்படி வாழ்வாயாக’’ என்று தன் வசம் உள்ள பொருள்களை எல்லாம் அவளுக்கே அளித்துவிட்டு, நேரே காஞ்சி பேரருளாளன் சந்நிதிக்குச் சென்று அவன் முன் நின்றார்.

கண்களில் நீர் பெருக்கெடுத்த நிலையில், ‘`பேரருளாளா, என்னால் இனி கிரகஸ்தனாகத் திகழ்ந்திட முடியாது. அதற்கான விதிப்பாடும் எனக்கில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். இனி, நான் முற்றும் துறந்து உன்னை அடைய பார்க்கும் ஒரு துறவி. என்னை ஆசீர்வதிப்பீராக’’ என்று வேண்டியவர், நேராக காஞ்சி ஆலய திருக் குளமான ‘அனந்தசரஸ்’ வந்து மூழ்கி எழுந்தார்.

பின் காவி தரித்து, திரிதண்டமும் பிடித்து துறவியானார். அவ்வேளை அவரைக் கண்ட ஆலய ஸ்தானிகர்கள், ``ராமாநுஜரே... ராமாநுஜ முனி என்றாகிவிட்டீரே...'' என்று அவருக்குப் புதிய நாமம் சாற்றினர். அப்போது, `முனி மட்டுமன்று; இவர் இனி முனிகளுக்கெல்லாம் முனி... அதாவது, யதிராசர்’ என்றொரு குரல் உள்ளிருந்து அசரீரியாக ஒலித்து அடங்கியது. ஸ்ரீராமாநுஜர், ராமாநுஜ முனியான இந்தத் தருணம், வரலாற்றின்படி கி.பி. 1049-ம் ஆண்டு ஆகும். அப்போது வயது 32.

அந்த வயதில் துறவியாகிய ஸ்ரீராமாநுஜரை, திருக்கச்சிநம்பி உள்ளிட்ட பெருமக்கள் பல்லக்கில் ஏற்றி, காஞ்சி மாநகர மடத்துக்கு அழைத்துச் சென்றனர். திருக்கச்சி நம்பிகள் இந்தத் தருணத்தில், ‘`இவ்வளவு சீக்கிரம் நீங்கள் துறவு மேற்கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை’’ என்றபோது, ‘`எல்லாம் அவன் செயல்’’ என்ற ஸ்ரீராமாநுஜர் ‘`இனி, என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீவைஷ்ணவம் வாழ்ந்திட நான் வாழப்போகும் நாள்கள் ஆகும்’’ என்றார்.

ஸ்ரீராமாநுஜரின் துறவுச் செய்தி காஞ்சியில் வேகமாய்ப் பரவியதோடு. அது பலரை ஆனந்த அதிர்வுக்கும் உள்ளாக்கியது.

இவ்வேளையில் காஞ்சிப் பேரருளாளன் ஸ்ரீராமாநுஜர் வரையில் ஒரு பெரும் காரியம் செய்தான். கூரேசன் என்கிற தன் பக்தனின் மனத்தில் ஸ்ரீராமாநுஜரை ஆச்சார்யனாகக் கொள்ள பணித்தான். `ஒரு சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீ இலக்கணம் வகுப்பாயாக' என்று அவர் கனவில் உரைத்தவன், கூரேசனை ஸ்ரீ ராமாநுஜரை நோக்கி ஓடச் செய்தான்.

அங்கே, ஸ்ரீராமாநுஜரின் சகோதரியின் பிள்ளையான `தாசரி' என்கிற முதலியாண்டான், கையில் விசிறியோடு ஸ்ரீராமாநுஜரின் முன் நிற்கக் கண்ட கூரேசன், ஸ்ரீராமாநுஜரின் காலடி பணிந்து, ``நான் இனி தங்களைப் பிரியாது திருத்தொண்டு ஆற்றிட அருள வேண்டும்'' என்று வேண்டி நின்றார். அப்போது அவருக்கும் சரி, முதலியாண்டானுக்கும் சரி... பின்னாளில் அவர்கள் இருவரையுமே ஸ்ரீராமாநுஜரின் தண்டும் பவித்திரமும் என்று காலம் அழைக்கப் போவது தெரியாது.

இக் காலகட்டத்தில், சில நெருடல் களையும் ஸ்ரீராமாநுஜர் சந்திக்க நேர்ந்தது. பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் அதன் தலைநகரான காஞ்சியில், ஸ்ரீவைஷ்ணவம் போலவே சைவ சமயமும், பிற சமயங்களும் காலூன்ற பார்த்தன. அவற்றில் சைவம் வைஷ்ணவத்தோடு ஒரு பெரும் போட்டி போடும் போலத் தோன்றியது.

ஸ்ரீ ராமாநுஜரின் சிற்றன்னையின் மகனான கோவிந்தன் சைவ சார்பு கொண்டு அத்துவைத சித்தாந்தியாகத் திகழ்ந்தார். ஸ்ரீராமாநுஜர் அம்மட்டில் கோவிந்தனை ஸ்ரீவைஷ்ணவனாக் கும் ஒரு கடப்பாடு இருப்பதை உணர்ந்தார்.

அம்மட்டில் `விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பற்றி கோவிந்தன் கசடற அறிந்திடின் மாற்றம் தானாக வரும்' என்று நம்பினார். சிலர் இம்மட்டில் கோவிந்தனை இகழவும், ஸ்ரீராமாநுஜர் அவர்களைத் திருத்தலானார்.

``ஆறறிவுள்ள ஒரு மானிடன், தன் பகுத்தறிவினால் தான் யாரென்று அறிவதோடு, இப்பிறப் பினின்று விடுபடும் வழி யாது எனவும் சிந்தித்து அவ்வழியில் நடத்தல் வேண்டும். அதற்கே ஆறாம் அறிவு அருளப்பட்டது. இந்த அறிவோடு தன்னிலும் மேலான இறையை மறுத்து நாத்திகனாகத் திகழ்வதே ஆபத்தாகும்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

அவ்வாறன்றி, ஏதேனும் ஓர் இறைவழி செல்வதில் குறையோ பிழையோ இல்லை. அவற்றில் மேலினும் மேலானதை உணர்வதும் அதன்படி நடப்பதும்கூட அவன் செயலே.

கோவிந்தன் நம் கொள்கைகளை அறிந்தும் புரிந்தும் வந்தால், ஏற்று வழி நடத்துவோம். இல்லையாயின், அதுவும் அவன் சித்தமே என்று நாம் நம் கடமையைச் செய்திடுவோம்'' என்றார்.

பின்னாளில் அந்தக் கோவிந்தன் ஸ்ரீ ராமாநுஜரின் தாய்மாமனான திருமலைநம்பி மூலமாய் ஸ்ரீராமாநுஜரிடம் அழைத்து வரப்பட்டு உபதேசிக்கப் பெற்று, கோவிந்த பட்டர் என்கிற மதிப்பிற்குரிய ஸ்தானத்தையும் அடைந்தான்.

கூரேசர், முதலியாண்டான், கோவிந்த பட்டர் என்று ஸ்ரீராமாநுஜரின் தொண்டர் கூட்டம் விரிவடைந்துகொண்டே போயிற்று. இதில் உச்சபட்சம்- தொடக்கத்தில், ஸ்ரீராமாநுஜரை வெறுத்து, கொல்லவும் முயன்ற யாதவப்பிரகாசரே மனம் மாறி, விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஏற்றதுதான்.

ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப்படி குரு உபதேசத்தின்போது யாதவப் பிரகாசரின் பழைய நாமம் விளக்கப் பட்டு, கோவிந்த ஜீயர் என்கிற புதிய பெயரும் வழங்கப்படலாயிற்று.

யாதவப்பிரகாசரே மாறிவிட்டது பல்லவ மண்டலத்தையே உலுக்கியது. பேரருளா ளன் ஆலயத்தில் பக்தர்களின் கூட்டம் பொங்கி வழியலாயிற்று. ஸ்ரீராமாநுஜரின் திருச்செயல் களும், வழிநடத்துதலும் திருவரங்கத்தையும் எட்டிற்று. ஸ்ரீராமாநுஜரை அழைத்து வரச் சென்ற பெரிய நம்பி, ஸ்ரீராமாநுஜரை ஒரு சந்நியாசியாக்கி விட்டு தனியே திரும்பி விட்டமையால், இம்முறை திருவரங்கப் பெருமாளரையர் என்னும் உயர்ந்த இசை அறிஞரை காஞ்சிக்கு அனுப்பினர்.

எப்பாடுபட்டாவது ஸ்ரீராமாநுஜரை காஞ்சியிலிருந்து திருவரங்கத்துக்கு அழைத்து வந்துவிட வேண்டுமென்று அவருக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தனர். அதனைத் திருவரங்கப் பெருமாளரையர் காஞ்சிப் பேரருளாளன் துணையோடு சாதித்தார் .

பேரருளாளன் சந்நிதியிலேயே ஸ்ரீராமாநுஜர் திருவரங்கம் சென்றிட அசரீரி ஒலித்தது. காஞ்சியும் ஸ்ரீராமாநுஜருக்குப் பிரியாவிடை கொடுத்தது. திருவரங்கம் வந்த ஸ்ரீ ராமாநுஜரைத் திருவரங்கம் திரண்டு நின்று வரவேற்றது. அந்த நாள் திருவரங்க வரலாற்றில் ஒரு பொன்னாள்!

திருவரங்கமே, இளையாழ்வாராய் பிறந்து ஸ்ரீராமாநுஜர் என்றானவரை `உடையவர்' என்று மாற்றியது. அரங்கனின் அருளுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உடையவர் என்றும் ஆக்கியது. தன்னை உடையவராய் ஆக்கிய அரங்கனின் ஆலயமிசை ஸ்ரீராமாநுஜர் அநேக சீர்திருத்தங்களை மேற்கொள்ளலானார்.

அவை அசாதாரணமானவை!

பெரியவர், சிறியவர் என்கிற பாகுபாடுகள் இல்லாது, ஆலயப் பணி எதுவாயினும் அது உயர் பணியே என்று கருதும் விதமாய்ப் பணிக்கு உரியவர்களை நியமித்தார்.

துளசி பறிப்பதாயினும், தூப தீபம் காட்டுவ தாயினும், பல்லக்குச் சுமப்பதாயினும் பக்தியும் ஈடுபாடும் பிரதானம். ஒருபுறம் சீர்திருத்தச் செயல்கள், மறுபுறத்தில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை ஏந்திப் பிடித்தல். நடுவே தன்னை ஒரு மாணவனாகக் கருதிக்கொண்டு கற்க வேண்டியவற்றைக் கற்கவும் செய்தார்.

இம்மட்டில் பெரியநம்பி முதல் திருக்கோட்டி யூர் நம்பி, திருமலையாண்டான், பெரிய திருமலை நம்பி, திருவரங்கப் பெருமாளரையர் ஆகிய ஆளவந்தாரின் சீடர்கள், ஆளவந்தாரிடம் தாங்கள் கற்றறிந்தவற்றை, அப்படியே ஸ்ரீராமானுஜருக்குக் கடத்தினர்.

பெரிய நம்பி ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அளித்தார். திருமலையாண்டான் `திருவாய்மொழி' வியாக்கியானம் அளித்தார். திருவரங்கப் பெருமாளரையர் சரமோபாயத்தை உபதேசித்தார். திருமலைநம்பி ஸ்ரீராமாயணத்தை அருளிச் செய்தார்.

இவர்களில் திருக்கோட்டியூர் நம்பியின் மூலம் பெறப்பட்ட ரகஸ்யார்த்த உபதேசமும், அதனையொட்டி நிகழ்ந்த சம்பவங்களும் ஸ்ரீராமாநுஜர் வாழ்வில் ஒரு தனி வரலாறாகவே ஆகிவிட்டன எனலாம்.

திருக்கோட்டியூர் பாண்டிய மண்டலத்துக்கும் சேர நாட்டுக்கும் இடையில் இருக்கின்ற திருத்தலமாகும். இங்கே எம்பெருமான் சௌமிய நாராயணனாகச் சேவை சாதிக்கின்றார். ஹிரண்ய கசிபுவை அழிக்கும் பொருட்டு நரசிம்ம அவதாரம் எடுக்குமுன், எம்பெருமான் தேவர்களுடன் கூடி ஆலோசித்த இடம் இது.

தேவர்களின் துன்பங்களை நீக்கிட நரசிம்மாவதாரம் எடுத்ததோடு அவர்களின் துன்பங்களைப் போக்கியதால், இத்திருத்தலம் திருக்கோட்டியூர் என்று அழைக்கப்பட்டது.

இங்குதான் இந்திரன் பூஜித்த சௌமிய நாராயணர் விக்கிரகம் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளது. மேலும் இங்கே நின்ற, நடந்த, இருந்த, கிடந்த கோலமாகவும் எம்பெருமான் காட்சி தருகிறார். நம்பி அவர்கள், இத்தலத்தில் இருந்தபடி ஆசார்யனாகத் தொண்டாற்றி வந்தார்.

ஆச்சார்யன் இருக்குமிடம் தேடிச் சென்று உபதேசம் பெறுவதே நல்ல சீடனுக்கு அழகு. ஸ்ரீராமாநுஜர் தானொரு ஆச்சார்யனாகிவிட்ட போதிலும், தன்னை ஒரு மாணாக்கனாகவே கருதியதாலும், `கற்றது கையளவு, கல்லாதது உலகளவு' என்று உணர்ந்திருந்ததாலும் திருக்கோட்டியூருக்கு நடந்தே சென்று உபதேசம் பெற விரும்பினார்.

அப்படி அவர் செல்கையில் கூரேசரும் முதலியாண்டனும் குருவுக்குத் துணையாகவும் உதவியாகவும் உடன் வந்தனர்.

ஆச்சார்ய நம்பிகள் இல்லத்தை அடைந்து காத்திருந்து பின் நம்பியைக் காண முற்பட்டார் ஸ்ரீராமாநுஜர். நம்பியும், `வந்திருப்பது யார்?' என்று அறிய விரும்பிக் கேட்டார்.

ஸ்ரீராமாநுஜரும் ``நான் ராமாநுஜன் திருவரங்கத்தினின்றும் உபதேசம் பெற்றிட வந்துள்ளேன்'' என்றார்.

அடுத்த சில நொடிகளிலேயே ``அப்புறம் பார்க்கலாம்'' என்று கூறிவிட்டார் ஆச்சார்ய நம்பி. இப்படி ஒரு முறை அல்ல, பல முறை சொன்னார். இதை ஒரு பேரளவுக்கு உட்படுத்த விரும்பி 18 முறை என்று குறிப்பிடுவது ஒரு காவிய அழகு!

`18' எனும் எண், எண்களின் முதல் `பெருகிய வடிவம்'. ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் முதல் பெரிய வடிவம் இது. இடையில் பூஜ்ஜியம் இருந்து, எண்களின் பெருக்கத்துக்கு ஒரு வழியும் உருவானது.

இந்தப் பூஜ்ஜியம் மதிப்பற்றது போல் தெரியும். இதன் அருகில் ஒரு எண் வந்து சேர்ந்திட, அந்த எண் அதன் பதின்மத்துக்கு உயர்ந்திடும். இந்தப் பூஜ்ஜியத்தின் எப்பக்கம் அது நிற்கிறது என்பதைப் பொறுத்து அது பெருகும்; அதேபோல பன்மடங்கு குறுகவும் செய்யும். எனவே அது பதினெட்டை ஒரு முழுமுதல் குறியீட்டு எண்ணாகச் சான்றோர் கருதினர்.

18 புராணம், 18 நாள் பாரதப்போர் போன்றவை ஒரு பூரணத்துக்கானவையாகவும் விளங்கின. எனவேதான் ஸ்ரீராமாநுஜர் உபதேசம் பெற செய்த முயற்சியும் அதன் மேலான விளைவும் 18 முறை என்கிற ஓர் அளவுக்கு ஆட்பட்டன. இதில் ஸ்ரீராமாநுஜர் பதினெட்டாவது முறை வந்தபோது ஆச்சார்ய நம்பியிடம் உபதேசம் பெற்றார்.

இந்த முறை ``யார் வந்திருப்பது?'' எனும் நம்பியின் கேள்விக்கு, `நான் ராமாநுஜன் வந்திருக்கிறேன்' என்று கூறாமல், `அடியேன் ராமாநுஜன் வந்திருக்கிறேன்' என்று ஸ்ரீராமாநுஜர் கூறவும் உபதேசமும் கிட்டியது.

ஒரு மனிதனுக்குத் தன் வரையில், 'நான் யார்?' என்பதே பிரதான கேள்வி. அதற்கான தேடலே வாழ்க்கை! இந்த `நான்' பெரிதும் அகந்தைக்குரிய தொனிப்பையே கொண்டிருக் கிறது. அகந்தை உள்ளவரை ஞானம் ஸித்திப்பது சாத்தியமில்லை.

இம்மட்டில், அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்குள் ஒருவர் `நான்' என்கிற சொல்லை பயன்படுத்துவதற்கும் ஒரு ஞானாசிரியன் பயன்படுத்துவதற்கும் வேற்றுமை உள்ளது. எவராயினும் இந்த `நான்' என்கிற பதம் ஆபத்தானது என்பதை உலகம் உணரவேண்டும் என்று ஆச்சார்ய நம்பி கருதினார்.

அதற்குக் கருவியாக ஸ்ரீராமாநுஜரும் பயன்பட்டார். இருவர் மூலமாகவும் ஒரு அழியாப் பாடத்தை உலகம் கற்றது. இப்பாடங்களுக்கெல்லாம் பாடம் ஒன்று இருந்தது. அப்பாடமும் திருக்கோட்டி யூரில்தான் கற்பிக்கப்பட்டது.

ரகஸ்யார்த்த உபதேசத்தைச் செய்த திருக் கோட்டியூர் ஆச்சார்ய நம்பி, ``இதை... குறிப்பாக, மூலமந்திரமான `ஓம் நமோ நாராயணாய' என்கிற அஷ்டாட்சரத்தை, நீ பிறருக்கு உபதேசிக் கக் கூடாது'' என்று அதன் விதியைக் கூறினார்.

அதைக் கேட்டு, அதிர்ந்தார் ஸ்ரீ ராமாநுஜர்!

``ஏன் ஸ்வாமி அப்படி?''

``அது அப்படித்தான். உயர்வான ரகஸ்யார்த்த உபதேசம் என்பது பெரும் முயற்சி உடையோருக் கும் பக்தி உடையோருக்கும் குரு மூலமாகவே உபதேசிக்கப்பட வேண்டும். அது, பிரசாதம் போல அனைவருக்கும் பொதுவானதல்ல...'' என்றார் ஆசார்ய நம்பி. ஸ்ரீராமாநுஜரின் கேள்விகள் தொடர்ந்தன!

-தொடரும்...

`கந்தன் காலடியைவணங்கினால்...'

லையெழுத்தை மாற்றிட எவராலும் முடியாது என்பார்கள். ஆனால், யாராலும் செய்ய முடியாத இந்தச் செயலை ஒருவரால் செய்ய முடியுமாம். அதுவும் எப்படி? தன் திருப்பாதங்களை வைப்பதன் மூலமே அதை எளிதாகச் செய்து விடுவாராம் அவர். யார் அவர்?

ரங்க ராஜ்ஜியம் - 60

திருச்செந்தூர் ஆண்டவர்தான். பிரம்மனின் எழுத்தை மாற்றிடும், அழிக்கும் வல்லமை மிக்கவர் முருகப் பெருமான் என்கிறார் அருணகிரிநாதர். முருகன் என்றாலே அழகு, அந்த அழகை மேலும் போற்றும் விதமாக அவர் அருளிய கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றில்தான், 'கந்தனின் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே?' என்று பாடியுள்ளார்! நாமும் செந்தூர் கந்தனின் காலடியைப் போற்றித் தொழுவோம்.

- ஜெயலெட்சுமி கோபாலன், சென்னை-64