திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 61

ஶ்ரீராமாநுஜர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீராமாநுஜர்

ரகஸ்யார்த்த உபதேசத்தைச் செய்த திருக்கோட்டியூர் ஆசார்ய நம்பி, ``மூலமந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற அஷ்டாட்சரத்தை நீ பிறருக்கு உபதேசிக்கக் கூடாது’’ என்று கூறி, அதன் விதியை விளக்கினார்.

`காரேய் கருணை இராமாநுச! இக்கடலிடத்தில்

ஆரேயறிபவர் நின்னருளின் தன்மை? அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னையுய்த்த பின் -உன்

சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே'

- இராமநுச நூற்றந்தாதி

ரகஸ்யார்த்த உபதேசத்தைச் செய்த திருக்கோட்டியூர் ஆசார்ய நம்பி, ``மூலமந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற அஷ்டாட்சரத்தை நீ பிறருக்கு உபதேசிக்கக் கூடாது’’ என்று கூறி, அதன் விதியை விளக்கினார்.

அதைக் கேட்டு அதிர்ந்தார் ஶ்ரீராமாநுஜர்.

‘`ஏன் ஸ்வாமி அப்படி?’’

‘`அது அப்படித்தான். உயர்வான ரகஸ்யார்த்தத்தை உபதேசம் என்பது, பெரும் முயற்சியுடையோருக்கும் பக்தி உடையோருக்கும் குரு மூலமாகவே உபதேசிக்கப்பட வேண்டும். அது பிரசாதம் போன்று அனைவருக்கும் பொதுவானதல்ல.’’

‘`அப்படியாயின் சாமான்யருக்கும் சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடப் போருக்கும் எம்பெருமான் கிட்டாதவன் என்றாகிவிடுமே?’’

‘`பொதுவென்றால்... மதிப்பை அறிவது எங்ஙனம்?’’

இப்படி ஶ்ரீராமாநுஜருக்கும் ஆசார்ய நம்பிக்கும் இடையே சிறிது தர்க்கமும்நிகழ்ந்தது.

ஶ்ரீராமாநுஜரின் உள்ளமோ தன்னுடன் வந்திருந்த கூரேசருக்கும் முதலியாண்டனுக்கும் சேர்த்தே சிந்தித்தது.

`தனக்கே இந்தப் பாடு எனில், இவர்கள் உபதேசம் பெறுவது எக்காலம்... இவர்களைப் போல பல்லாயிரவர் உள்ளனரே... அவர்கள் உபதேசம் பெறுவது எக்காலம்...’

- இந்தக் கேள்வியில் அகப்பட்ட ஶ்ரீராமாநுஜர்,

தான்... தனது... தன்னுடையது... என்பவற்றை மறந்தவராக, துறந்தவராக ஆசார்ய நம்பியிடம், ‘`ஒருவேளை, எல்லோருக்கும் ஒருவர் உபதேசித் தால் என்னவாகும்?’’ என்று கேட்டார்.

அப்படியொரு கேள்வியை நம்பி எதிர்பார்க்க வில்லை.

‘`அது குரு துரோகம். அதன் காரணமாக உபதேசித்தவருக்கு நரகம் சம்பவிக்கும்....’’ என்றார். உள்ளபடியே இந்தப் பதில் ஶ்ரீராமாநுஜருக்கு அதிர்வைத் தரவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது.

ஶ்ரீராமாநுஜர்
ஶ்ரீராமாநுஜர்

அடுத்தச் சில மணி நேரத்தில் கூரேசர், முதலியாண்டான் ஆகியோருடன், ‘வாரும்

ஜகத்தீரே’ என்று திருக்கோட்டியூர் வாழ்

வைணவர்கள் அனைவரையும் அழைத்த தோடு, மற்றுமுள்ள மார்க்கத்தவருக்கும் சேர்த்தே தனக்கு ஆசார்ய நம்பி உபதேசித்த ரகஸ்யார்த்தத்தை உபதேசித்தார் ஶ்ரீராமாநுஜர்.

அத்துடன், அஷ்டாட்சர மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற ‘மோட்சக் கதவின் சாவி’ போன்ற மந்திரத்தையும் திருக்கோட்டியூர் கோயிலின் அஷ்டாங்க விமானத்தின் ஒரு பகுதியில் நின்றபடி உபதேசித்து முடித்தார்.

அந்த நொடி ரகஸ்யார்த்தப் பூட்டு உடைக்கப் பட்டு, அது பொதுவானது. அஷ்டாட்சரம் உலகப் பொதுவாகி எல்லோருக்கும் என்றானது. ஶ்ரீராமாநுஜரை மானசீக ஆசார்யராக வரித்துக்கொண்டு ஒருவர் ‘ஓம் நமோ நாராயணாய’ என்றாலே போதும்; எம்பெருமானின் திருவடியில் ஓர் இடம் நிச்சயம்!

ஶ்ரீராமாநுஜர் தன்னையே பணயம் வைத்துச் செய்த அந்த அற்புதச் செயல், அழிக்க இயலாத வரலாறு. எப்போதுமே அரசனின் வீரம், இல்லாவிட்டால் படையெடுப்பு என்று ஆசாபாசம் உள்ள விஷயங்களே வரலாறாகும். ஆனால் முதன்முதலாய், பற்றறுத்த சந்நியாசி ஒருவரின் விதி மீறல் அன்று வரலாறாகியது.

கூரேசரும் முதலியாண்டானும் ஒருபுறம் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். மறுபுறத்திலோ, தங்களின் குரு தன்னையே பணயம் வைத்து செய்த செயலின் பொருட்டு நரகம் ஸித்திக்குமே... என்று அகக்கண்ணீரை துக்கக் கண்ணீராகவும் ஆக்கினர்.

ஶ்ரீராமாநுஜரின் இந்தச் செயல், அன்று திருக்கோட்டியூரே விவாதிக்கும் விவாதப் பொருள் ஆனது. குறிப்பாக, ஆச்சார்ய நம்பி இதனால் வெகுண்டுபோயிருந்தார். அவர் துளிகூட எதிர்பார்த்திராத செயல் இது. தன் வசம் பேழை ரத்தினம் போல் இருந்ததை, இப்படியா ஒரு கோபுரத்தின் மேல் நின்று போட்டுடைப்பது என்ற சிந்தனை மேலோங்க, அவர் மனம் நிலை கொள்ளவில்லை.

அருகிலிருந்த சீடர்கள் சிலரோ இதுதான் தருணம் என்பது போல, ‘`இவருக்கு நீங்கள் மனம் இரங்கியது தவறு. உங்கள் வார்த்தையைத் துளியும் மதிக்காது காலில் போட்டு மிதித்துவிட்டாரே...’’ என்று பலவாறு சொல்லி தூபமிட, ஆச்சார்ய நம்பியின் முகம் சிவந்தது.

அப்போது அங்கே எவரும் சற்றும் எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தார் ஶ்ரீராமாநுஜர். அவருடன் கூரேசரும் முதலியாண்டானும் வந்தனர்.

‘`என்ன தைரியம்... குரு துரோகம் செய்துவிட்டுத் துளியும் அச்சமின்றி குருவையே காண வருவதா?’’ என்பது போல் சிலர் எண்ணம்கொள்ள, ஆச்சர்ய நம்பி கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

ஶ்ரீராமாநுஜர் அந்தக் கோபத்தை எதிர்பார்த்தே வந்திருந்தார். ஆகவே, கனிந்த குரலில் பேசத் தொடங்கினார்.

‘`ஸ்வாமி! முதலில், தாங்கள் இந்தப் பாவியை மன்னிக்க வேண்டும்...” என்று கூறவும் ஆச்சார்ய நம்பி, ஶ்ரீராமாநுஜரை வெறித்துப் பார்த்தார்.

‘`தங்கள் மனம் இப்போது என்ன நினைக்கிறது என்பது எனக்கு நன்கு புரிகிறது. தங்களின் கட்டளையை மீறியவனாகி விட்டேன். நான் நரகம் செல்வது உறுதி.

எவ்வளவு புண்ணியங்களை ஒருவர் செய்திருந்தாலும், குருவின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகிவிட்டால், அவருக்கு விமோசனமே இல்லை என்பதை நன்கு அறிவேன். இப்போது நான் மன்னிக்க வேண்டுவதுகூட, தங்களை வருத்தப்பட செய்துவிட்டதற்கே அன்றி, நரகம் செல்லாதிருக்க அல்ல...’’

ஶ்ரீராமாநுஜரின் இந்த விளக்கம் ஆச்சார்ய நம்பியை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.

‘`ராமாநுஜா! என்ன சொல்கிறாய் நீ? நரகம் போகப் போவது உறுதி என்று தெரிந்தும் எப்படிச் செய்தாய் இப்படி ஒரு காரியத்தை...’’ என்று பதில் கேள்வி கேட்டார்.

‘`ஸ்வாமி! நான் ஒருவன் நரகம் சென்றபோதிலும், பல்லாயிரவர் எம்பெருமான் திருவடி நிழலில் இளைப்பாறுவரே... அதைச் சிந்தித்தேன்... அதிலும் `நான்’ எனும் சுயநலம் மிக்க சொல்லுக்குத் தங்களிடம் பாடம் கற்ற நிலையில், இதுநாள்வரை `நான்... நான்...’ என்று சிந்தித்துப் பழகிவிட்டமைக்குப் பரிகாரம் தேடவும் எண்ணினேன். எல்லாம் சேர்ந்தே என்னைக் கோபுரத்தில் ஏறச்செய்து உபதேசிக்கவும் செய்தன.

இனி, எம்பெருமானை ஒரு சாமான்யனும் அடைய இயலும். வைராக்கியம் மிக்கவர்களை அவர்களின் அந்த வைராக்கியமே காப்பாற்றிக் கரைசேர்த்துவிடும். ஆனால் சாமானியர்களுக்கு யார் இருக்கிறார்கள்?’’

ஶ்ரீராமாநுஜர் இப்படிக் கேட்டதும் ஆச்சார்ய நம்பியின் திருமுகம் பெரும் திகைப்புக்கும் சிந்தனைக்கும் ஆட்பட்டது. நெடுநேரம் பேச்சே வரவில்லை; ஶ்ரீராமாநுஜரையே பார்த்த வண்ணம் இருந்தார்.

‘`ஸ்வாமி! தங்களின் கோபம் இன்னும் தீரவில்லையா. என்னைச் செதுக்கிய பெரும் சிற்பியாகிய தாங்கள், என்னை மன்னித்தே தீர வேண்டும்.’’

ஶ்ரீராமாநுஜரின் குரல் தழுதழுத்தது. ஆச்சார்ய நம்பியும் கலங்கத் தொடங்கியிருந்தார். மெள்ள ஶ்ரீராமாநுஜரை நெருங்கி அவரின் கரங்களைத் தேடிப் பற்றி, தன்னுடைய கண்களில் ஒற்றிக் கொண்டார்.

ஶ்ரீராமாநுஜர் பதைபதைத்துப் போனார். ‘`ஸ்வாமி என்ன இது. நான் தங்களையே கலங்கவைத்துவிட்டேனே... எம்பெருமானே! என்ன இது சோதனை...” என்று அவர் பதறவும், ஆச்சார்ய நம்பி ஶ்ரீராமாநுஜரை இழுத்து அணைத்துக்கொண்டார்.

அத்துடன், ‘`ஶ்ரீராமாநுஜா... நீ என் அகக் கண்களைத் திறந்துவிட்டாய். உன்னுள் இருந்த அகந்தை நீங்கவும், உன் முகமாக அகந்தை குறித்த ஒரு பாடத்தை இந்த உலகுக்குக் கற்பிக்கவும் விரும்பிய என்னுள்ளும் அந்த ‘நான்’ என்கிற அகந்தையோ, சுயநலமோ ஒரு ஓரமாய் இருந்திருக்கின்றன.அதனால்தான் நான் நரகம் செல்வதற்கு அஞ்சி, ரகஸ்யார்த்தத்தை ரகசியமாகவே வைத்துக் கொண்டுவிட்டேன்.

ஆனால், நான் எனும் அகந்தை மற்றும் சுயநலத்தின் தன்மையை உணர்ந்த மறுநிமிடமே நீ அவற்றைப் பூரணமாய் அடக்கி வெற்றி கொண்டு விட்டாய்.

`அடக்கி’ என்று சொல்வதுகூட பிழையே. அறவே அகற்றிவிட்டாய் என்றே கூற வேண்டும். ஆகவேதான், நரகம் புகுவது என்பதும் உனக்கு அச்சத்தைத் தரவில்லை.

நான் இப்போது சொல்கிறேன்... ‘நீ நரகு செல்வாய்’ என்று கூறிய உன் ஆச்சார்யன் சொல்கிறேன்... நரகம் என்பதே உனக்கில்லை... உன்னைச் சார்ந்தவர்க்கும் இல்லை!

உனக்கு நான் குருவாக இருக்கலாம். ஆனால், நீ எனக்கும் சேர்த்து இந்த ஜகத்துக்கே குருவாகிவிட்டாய். ஜகத் குருவே... உன்னை மனதார வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்...’’ என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிய ஆச்சார்ய நம்பி, ஶ்ரீராமாநுஜரை வணங்கவும் முற்பட, அவர் கரங்களைப் பிடித்துத் தடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார் ஶ்ரீராமாநுஜர்.

‘`ஸ்வாமி! தங்களின் பேருள்ளம் இவ்வாறு கூறுகிறது. ஆனால், நான் என்றும் தங்களின் அத்யந்த சீடனே. தங்களின் கோபம் நீங்கி, தாங்கள் என்னைப் புரிந்துகொண்டதோடு, என்னை வாழ்த்தியமைக்கும் நான் காலா

காலத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன்...’’ என்று கூறி ஆனந்தக் கண்ணீர் சிந்தலானார்.

‘`ஶ்ரீராமாநுஜரே! இப்போது நீர் என் கண்களுக்கு அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணனாகக் காட்சி தருகிறீர். ஆம்! உம்மை இவ்வேளையில் கிருஷ்ணனாகவும் எம்பெருமானாகவும் பார்க்கிறேன்.

எனக்கு இங்கே இப்போது கிடைத்திருப்பது எம்பெருமானார் தரிசனம். இந்த நாள் இந்த உலகம் மறக்கக் கூடாத நாள். எம்பெருமானாரின் தரிசனம் கிடைத்த நாள். உலகுக்கு ஶ்ரீராமாநுஜர் எனும் பெருமானார் கிடைத்த நாளும்கூட...’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஆசார்ய நம்பி.

அக்கணமே, கூரத்தாழ் வாரும் முதலியாண்டானும் ‘`எம்பெருமானார் ஶ்ரீராமாநுஜர் ...” என்று உரத்தக்

குரல் கொடுக்க... சூழ்ந்திருந்தோர் ``வாழ்க... வாழ்க...’’ என வாழ்த்துக் கோஷம் எழுப்பினார்கள்.

ஶ்ரீராமாநுஜரோ அதைக் கண்டு மகிழ்ந்தாரில்லை. தான் இன்னும் அறியவேண்டியதும் புரிய வேண்டியதும் நிரம்ப இருப்பதாகவே கருதினார்.

திருவாய்மொழியைத் திருமலையாண்டானிடம் கற்ற தருணத்தில் சில சலனங்கள் ஏற்பட்டன.

திருமலையாண்டான் கூறிய சில பொருளுக்கு, ஶ்ரீராமாநுஜர் மறுபொருள் விளக்கம் கூறி, ‘இப்படியும் பொருள் கொள்ளலாம்தானே’ என்று கேட்டார்.

அது திருமலையாண்டானின் மனத்தைக் கீறியது. ஶ்ரீராமாநுஜர், தனக்கே பொருள் கூறுவது அதிகப்பிரசங்கமாக அவருக்குப் பட்டது. எனவே, ஒருகட்டத்தில் பொருள் கூறுவதை நிறுத்திவிட்டார்.

இதையறிந்த திருக்கோட்டியூர் ஆச்சார்ய நம்பி, `‘அது என்ன பொருள்?’’ என்று ஶ்ரீராமாநுஜரைக் கேட்டு, அதன் சாரத்தையும் நன்கு உணர்ந்தார்.

``இக்கருத்தை ஶ்ரீஆளவந்தாரும் கூறி நான் கேட்டுள்ளேன். எனவே, இவர் கூறியதில் பிழையில்லை’’என்று திருமலையாண்டானிடம் எடுத்துக்கூறினார். அத்துடன், ‘`பாடம் கேட்பதால் ஶ்ரீராமாநுஜரைச் சீடன் என்று மட்டும் எண்ணிவிடாதீர். அவர் சீடன் வடிவில் நடமாடும் எம்பெருமான். இதை நன்கு உணர்ந்தே அவருக்கு நான் ‘எம்பெருமான்’ என்ற பெயரைச் சூட்டினேன்’’ என்று எடுத்துரைத்தார்.

திருமலையாண்டனும் ஶ்ரீராமாநுஜரைப் புரிந்துகொண்டு அவருக்கு முற்றாக திருவாய் மொழியைக் கற்பித்தார்.

தன் ஆச்சார்யர்கள் அனைவரும் தன் பொருட்டு பெரிதும் கனிவோடு நடந்துகொள்வது கண்டு நெகிழ்ந்தார் ஶ்ரீராமாநுஜர். தான் ஓர் ஆசார்ய பட்டத்தில் இருப் பினும், தன் ஆச்சார்ய புருஷர்கள் வரையில் தானொரு மாணவன் என்கிற எண்ணத்தில், ஒரு சீடனைப் போல நடந்து கொள்ளவே அவர் விரும்பினார்.

ரங்க ராஜ்ஜியம் - 61

குறிப்பாக, திருவரங்கப் பெருமாளரையரிடம் ‘அர்த்த விசேஷம்’ கற்ற நாளில், பசுவின் பாலை தன் கைப்பட கறந்து, தானே காய்ச்சிக் கல்கண்டு சேர்த்து, குரு சமர்ப்பணம் என்று வழங்கிவந்தார்.

அத்யயன காலங்களில், மஞ்சள் காப்பினை தன் கைப்பட அரைத்துக் கொடுத்தும் தானொரு பணிவான உற்றச் சீடன் என்பதை நிரூபித்தார்.

ஶ்ரீவைஷ்ணவ நெறிப்பாட்டில் ஆச்சார்யனே எல்லாம். அவரே வணங்கத் தக்க தெய்வம். அவருக்குச் செய்யும் தொண்டே திருத்தொண்டு.

சுருக்கமாகக் கூறுவதானால், ஒருவர் அடைய வேண்டிய நல்ல மதி, விதி, கதி, நிதி ஆகிய நான்கும் ஆச்சார்யனே... அவரின் திருவடிகளே!

- தொடரும்...

கணபதியே போற்றி!

உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும் விநாயகர் வியாபித்து நிற்பதை உணர்த்தும் வகையில், அரிசி மாவுக்குள் தேங்காயும் வெல்லமும் கலந்த பூரணத்தை வைத்து விநாயகருக்குப் படைத்து அவர் அருள் பெற்றாள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

தனது தத்துவத்தை எடுத்துக் காட்டிய மோதகத்தின் மீது விநாயகருக்கு அதிகப் பிரியம் ஏற்பட்டது. விநாயகரின் கையில் மோதகம் இருப்பதை ஆதிசங்கரர், ‘முதாகராத்த மோதகம்’ என்கிறார்.

ரங்க ராஜ்ஜியம் - 61

வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிள்ளையாருக்கு மோதகம் படைப்பதுடன், கீழ்க்காணும் போற்றிகளையும் கூறி வழிபடுங்கள்; பூரணமான நல்வாழ்வு வரமாகக் கிடைக்கும்.

ஓம் சுமுகாய நம:

ஓம் ஏகதந்தாய நம:

ஓம் கபிலாய நம:

ஓம் கஜகர்ணாய நம:

ஓம் லம்போதராய நம:

ஓம் விகடாய நம:

ஓம் விக்ன ராஜாய நம:

ஓம் கணாதிபதயே நம:

ஓம் தூமகேதவே நம:

ஓம் கணாயத்க்ஷாய நம:

ஓம் பாலச்சந்த்ராய நம:

ஓம் கஜாநநாய நம:

ஓம் வக்ரதுண்டாய நம:

ஓம் சூர்ப்பகர்ணாய நம:

ஓம் ஹேரம்பாய நம:

ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:

- கே.ராமு, சென்னை-44

ஸகஸ்ர மோதக கணபதி!

வன்னி மரம் தெய்விகச் சக்தி வாய்ந்தது. வன்னி மரத்தடி விநாயகர், சக்தி வாய்ந்தவர். வன்னி இலை களால் விநாயகரை பூஜை செய்வது மிகுந்த பலன் தரும்.

ஹிரண்யகசிபுவை ஜெயிப்பதற்கு மகா விஷ்ணுவும், மகாபலியை அடக்குவதற்கு வாமனரும், தனது யாகம் இடையூறு இல்லாமல் முடிய பிரம்மாவும் வன்னி மரத்தடி விநாயகரை, வன்னி இலைகளால் பூஜை செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

ரங்க ராஜ்ஜியம் - 61

அறுகம்புல் போன்று வெப்பத்தைக் கிரகித்துக் குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மை உடையது வன்னி இலை. வன்னி மரம், தன்னை வலம் வருவோரின் பாவங்களைத் தன்னுள் அடக்கி அவர்களுக்கு நல்ல பலனைத் தருவது. இப்படிப்பட்ட வன்னி மரத்தடியில் கண்கண்ட கடவுளாக அருள் பாலிக்கும் விநாயகர் கோயில், திருச்சி ஜங்ஷனிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் எல்.ஐ.சி காலனி அருகில் உள்ள ஆனந்த நகரில் அமைந்துள்ளது.

இங்கு அடிக்கடி 1,008 மோதகங்கள் நைவேத்தியம் செய்யப்படுவதால் இவருக்கு, ‘ஸஹஸ்ர மோதக விநாயகர்’ என்ற பெயரும் உண்டு!

- கே.பூர்ணா, திருச்சி-3