மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 62

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

வைஷ்ணவ நெறிப்பாட்டில் ஆச்சார்யனே எல்லாம். அவரே வணங்கத் தக்க தெய்வம்.

மன்னிய பேரிருள் மாண்டபின்

கோவலுள் மாமலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை

காட்டும் தமிழ்த் தலைவன்

பொன்னடி போற்றும் இராமாநுசர்க்கு

அன்பு பூண்டவர் தாள்,

சென்னியிற் சூடும்

திருவுடையார் என்றும் சீரியரே

- ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதி

வைஷ்ணவ நெறிப்பாட்டில் ஆச்சார்யனே எல்லாம். அவரே வணங்கத் தக்க தெய்வம். அவருக்குச் செய்யும் தொண்டே திருத்தொண்டு. சுருக்கமாகக் கூறுவதானால், ஒருவர் அடையவேண்டிய நல்ல மதி, விதி, கதி, நிதி ஆகிய நான்கும் ஆச்சார்யனே... அவரின் திருவடிகளே.

அவ்வகையில், ஸ்ரீராமாநுஜர் தானே ஒரு முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்ட, திருவரங்கப் பெருமாளரையர் தன் பங்குக்கு ஸ்ரீராமாநுஜருக்கு ‘லக்ஷ்மண முனி’ என்ற திருநாமத்தை அருளிச் செய்தார்.

இளையாழ்வானாய்ப் பிறந்து சந்நியாசத்தின்போது ஸ்ரீராமாநுஜன் என்றாகி, பின் திருவரங்கத்தில் உடையவர் என்றாகி, திருக்கோட்டியூரில் எம்பெருமானாகி, திருவரங்கம் பெருமாளரையரால் ‘லக்ஷ்மண முனி’ என்றும் ஆகிட, ஸ்ரீராமாநுஜரின் புகழ் தேசம் எங்கும் பரவியது.

ஸ்ரீராமாநுஜரும் ஓரிடத்தில் நின்றுவிடாது, பெரும் தேடலோடு யாத்திரை புரிவதில் விருப்பமுள்ளவராக இருந்தார். அவ்வகையில் ‘திருமலை யாத்திரை’ புரிந்து திருவேங்கடவனைத் தினமும் தரிசித்ததுடன், தன் தாய்மாமனான பெரிய திருமலை நம்பி வாயிலாக ராமாயணம் முழுவதை யும் கசடின்றிக் கேட்டறிந்தார். இதனால் அவரது ஞானம் பெரிதும் வளர்ந்து சூரியனுக்கு நிகராய் ஒளி வீசிற்று. சோதனைகளும் வரவே செய்தன. சோதனை வந்தால்தானே சாதனை நிகழ முடியும்.

யக்ஞமூர்த்தி என்றொருவர் வடவர்; அத்வைத சித்தாந்தி. இவருக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் வாதப் போர் நிகழ்ந்தது. ஒரு நாளல்ல... இரண்டு நாளல்ல... பல நாள்கள்! அதில் யக்ஞமூர்த்தி ஸ்ரீராமாநுஜரிடம் சரண் புகுந்தார். அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்கிற நாமத்தைச் சூட்டி ஸ்ரீவைஷ்ணவ நெறியில் நடக்கப் பணித்தார். இக்காலகட்டத்தில் உறங்காவில்லி, பொன்னாச்சி போன்ற பிராமணரல்லாதவரும் சீடர்களாயினர். எப்படி?

ரங்க ராஜ்ஜியம் - 62

ஸ்ரீராமாநுஜர் என்று சொல்லும்போதே, ‘சீர்திருத்தம்’ என்கிற ஒரு சொல் நம் மனக் கண்களில் தோன்றி மறையும். செம்மாந்த சந்நியாசி, குருவே போற்றிய குரு, அரங்கனே ‘உடையவர்’ என்றழைத்த பெருமைக்கு உரியவர் ஆகிய சிறப்புகளை எல்லாம் கடந்து, ஸ்ரீராமாநுஜர் என்றதும் நம் மனத்தில் பிரகாசிப்பது அவரின் சீரிய செயல்பாடுகளே!

அதிலும் ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் பிராமணப் பிறப்பாளனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு வட்டத்தை உடைத்து, விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் சகலரும் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பதை, தாம் வாழ்ந்த காலத்திலேயே நிலைநிறுத்தியவர் ஸ்ரீராமாநுஜர்.

அப்படி அவரால் அரங்கனைச் சரணாகதி புகுந்தவர்கள் ஏராளம். அவர்களில், வரலாற்றில் அழுத்தமாய்ப் பதிவானவர்களில் இருவர்தான், தனுர்தாசன் எனும் பிள்ளை உறங்காவில்லி தாசரும் அவரின் மனைவி ஹேமாம்பாள் என்னும் பொன்னாச்சியும். இவர்கள் இருவரைக் கொண்டே அன்று திருவரங்கம் இருந்த இருப்பை மட்டுமல்ல, மேலும் பல ரசமான சங்கதிகளை நாம் அறியலாம்!

திருவரங்கம் சோழதேசத்தின் ஒரு திருத்தலம். சோழ தேசத்தில் வைஷ்ணவம் சார்ந்த திருவரங்கம் மட்டுமல்ல, சைவம் சார்ந்த திருவானைக்கா , தஞ்சை, திருவாரூர் என்று பல தலங்கள் இருந்தன. அதனால், சைவ வைணவ பேதமும் போட்டிப் பொறாமைகளும்கூட மலிந்து கிடந்தன. சமணமும் பௌத்தமும் கூட பரவியிருந்தன. சுருங்கச் சொல்வதானால், ஒன்றுக்கு பல வழிகள்!

ஆயினும், இவற்றில் சரணாகதி புரியவும் சார்ந்து தெளியவும் வைஷ்ணவமே சிறந்தது என்பதைத் தன் தவத்தால், திறத்தால், அருளால், செயலால் நிரூபித்தார் ஸ்ரீராமாநுஜர். அப்படி நிரூபித்து, பரம அத்வைதியும் தன் முதல் குருவுமான யாதவப்பிரகாசரையே `கோவிந்த ஜீயர்’ என்கிற வைணவ மடாதிபதியாக்கினார்.

ஒரு குருவையே மாற்றியவருக்குச் சாமானி யர்களை மாற்றுவதா பெரிது? ஆயினும், எவராக இருப்பினும் உணர்ந்து தெளிதல் வேண்டும் என்று எண்ணினார். அவர் மீது கொண்ட மதிப்பு மற்றும் அன்பின் நிமித்தம் எவரும் தன்னை மாற்றிக்கொள்ளக் கூடாது. எம்பெருமானை உணர்ந்தும், அவன்மீது பக்தி கொண்டும், அவனே நமக்கு விமோசனம் அளிக்க வல்லவன் என்பதை உணர்ந்தும்தான் ஒருவர் மாறிட வேண்டும் என்பதில் பெரிதும் கவனமாக இருந்தார்.

அப்படியே உணர்ந்து தெளிந்து தங்களை அரங்கனிடமும் ஸ்ரீராமாநுஜரிடமும் ஒப்படைத்தவர்களே தனுர் தாசரும் ஹேமாம் பாளும். மறவர் குடிப்பிறப்பில் பிறந்து, சோழ அரசன் அவையில் அரசனுக்குப் பெரும் காப்பாளனாயும், செருக் களத்தில் பெரும் மல்லனாகவும் திகழ்ந்தவனே தனுர்தாசன். வாட்டசாட்டமான உடலுடன் மீசையை முறுக்கிக்கொண்டு அவன் தெருவில் நடந்தால், உறையூரே அதிரும். அவன் மனைவியான ஹேமாம்பாள் நடந்தாலோ வைத்த கண் வாங்காது!

கணவனும் மனைவியும் ரதமேறி தெருவில் செல்கையில் எல்லோர் கண்ணும் படும் என்பதால், இவர்கள் இருவரும் இல்லம் ஏகிடும் நேரம், திருஷ்டி சுற்றி வரவேற்பர். அதற்கென்றே பணியாளர்களும் இருந்தனர்.

தனுர்தாசனின் முன்னோர்கள் சைவ மரபு வழி வந்தவர்கள். எனவே, தனுர்தாசன் நெற்றியில் விபூதியே முதலில் இருந்தது. ஆயினும், பெரிதாக பேதம் பாராட்டாமல் உறையூர் அழகிய மணவாள பெருமாளையும் சேவிப்பவனாக இருந்தான், தனுர்தாசன்.

இப்படிப்பட்டவனின் வாழ்வில்தான் ஸ்ரீராமாநுஜரால் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது.மிகச்சிறந்த ஆசார்யனாய் அனைவர் பாலும் அன்பு கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கிய ஸ்ரீராமாநுஜர் மேல் தனுர்தாசனுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டது.

ஒருமுறை உறையூர் அழகிய மணவாளப் பெருமாளை தரிசிக்க ஸ்ரீராமாநுஜர் வந்த நேரத்தில், தனுர்தாசனும் வந்தான். அவனது ரதம் செல்ல வழிவிட்டு, தன்னோடு தன் சீடர்களை ஒதுக்கிக் கொண்டு நின்ற ஸ்ரீராமாநுஜரின் பெருந்தன்மையான செயல் தனுர்தாசனைப் பெரிதும் சிந்திக்க வைத்தது.

இதன்பின் உச்சபட்சமாய் ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. ஸ்ரீராமாநுஜர் ஒரு இல்லத்தின் திண்ணையில் தங்கி, இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது, வீதியில் வந்த தனுர்தாசனின் ரதம், ஓர் ஓரமாய் நின்றது. அதிலிருந்து அவனும் அவன் மனைவியும் இறங்கினர். அப்போது கடும் வெயில். வெயிலின் வெம்மை மனைவியைத் தாக்கி, அவளுக்கு வியர்த்துவிடக் கூடாது என்று கருதிய தனுர்தாசன், ஒரு பட்டுக் குடையை ரதத்திலிருந்து எடுத்து, மனைவி மீது சூரியக்கதிர் விழாதபடி பிடித்ததோடு, ‘`ஹேமாம்பாள்... பார்த்து நட... கால்கள் கொப்பளித்தால் சொல்...

என் தலைப்பாகையை விரித்துப் போடுகிறேன். அதன் மேல் நீ நடந்து வரலாம்’’ என்றபடியே தன் தலைப்பாகையைக் கழற்றிவிட்டான்.

அவனது செயல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதுடன், `இப்படியும் ஒரு பெண்டாட்டி தாசனா?' என்றும் எண்ணச் செய்தது. இதை ஸ்ரீராமாநுஜரும் கண்டார். அவர் பார்ப்பதை தனுர்தாசனும் கண்டான். ஹேமாம்பாளும் கண்டவளாய், அவர் இருந்த திண்ணைப்புறம் வந்து வணங்கினர்.

ஸ்ரீராமாநுஜர் புன்னகைத்தார்; அதில் ஆயிரம் அர்த்தங்கள். அது அவனுக்கும் புரிந்தது.

‘`என்ன தனுர்தாசா... உன் மனைவி உடல் என்ன பொன்னா? வெயில் பட்டால் உருகி விடுமா, என்ன? மாவீரனான நீ இப்படியா பெண்டாட்டிக்குக் குடை பிடிப்பாய்...’’ என்று அங்கு இருந்தவர்களில் ஒருவர் பேச்சைத் தொடங்கினார்.

அப்பேச்சு தனுர்தாசனைக் கோபப்படுத்த வில்லை. மாறாக, ``இப்படி ஒரு பொன்னழகிக்காக என் உயிரையும் காணிக்கை யாகத் தருவேன். நீங்களே சொல்லுங்கள். என் மனைவிக்கு நிகரான அழகுடையவர் எவரேனும் இந்த ஊரில் உள்ளனரா?

இவள் கண்கள் இரண்டும் மட்டும் போதுமே... சேல்விழி, வேல்விழி, கயல்விழி என்று எப்படி வேண்டுமானாலும், அழைக்கலாமே?'' என்றான், அவனைச் சீண்டியவருக்கு அவனிடம் சிக்கிக் கொண்டது போல் ஆயிற்று. அவனோ ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து ‘`ஸ்வாமி!

தாங்கள் எல்லாம் அறிந்த மகா ஞானி. தங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன்.

இன்று எங்கள் திருமண நாள். உங்களிடம் ஆசிபெற வந்துள்ளோம். நீங்களே சொல்லுங்கள்...என் மனைவி மேல் நான் காதலுடனும் பாசத்துடனும் இருப்பது தவறா? இப்படி ஒரு பேரழகிக்குப் பணிவிடை செய்வது ஒரு ஆண்மகனின் கடமை அல்லவா?’’ என்று கேட்டான்.

ரங்க ராஜ்ஜியம் - 62

அதுவரை மௌனமாக மென்னகையுடன் இருந்த ஸ்ரீராமாநுஜர் ‘`அப்பா, உன் பெயர் என்ன?’’ என்று கேட்டார்.

‘`தனுர்தாசன். சோழ மன்னனின் மெய்க் காப்பாளன். மறவர் குலத்தைச் சார்ந்த மல்லனும் கூட. இவள் என் மனைவி ஹேமாம்பாள். செல்வச் செழிப்புடைய குடும்பத்தில் பிறந்து என்னை வந்து சேர்ந்தவள். தாய் வீட்டில் அனுபவித்த இன்பங்களைவிட கூடுதலாக புகுந்த வீட்டில் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்... தவறில்லையே...?''

‘`இதில் தப்பு சரிக்கு ஏது இடம்? மனையாளை நீ எவ்வளவு போற்றுகிறாய் என்பது உன் பேச்சிலிருந்து புலனாகிறது. உன் மனையாள் கொடுத்து வைத்தவள்... ஆயினும்...''

என்ற ஸ்ரீராமாநுஜர், சற்றே இடைவெளி விட, தனுர்தாசன் கேட்டான்.

‘’ஆயினும் என்று ஏன் நிறுத்திவிட்டீர்கள்... எதுவாயினும் கூறுங்கள் ஸ்வாமி...’’

‘’இந்த உடலின் அழகு, கண்ணழகு மற்றும் உள்ள செல்வம் என்று எதுவும் நிலையானது இல்லை. எதுவும் உடன் வரப் போவதுமில்லை. இதை நீ அறிவாயா?’’

‘`தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்?’’

‘`எதையும் இம்மட்டில் வார்த்தைகளில் கூறுவதால் பயனில்லை. உன்னை அனுபவிக்கச் செய்வதே சிறப்பாகும்.

ரங்க ராஜ்ஜியம் - 62

மேலினும் மேலானதைக் காணாததாலும் அறியாத தாலும் அழிந்துபடுவதில் மனம் நிலை கொண்டுவிடுகிறது. ஒரு பேரழகனையும் அழகுக்கே அழகான அவன் விழிகளையும் உனக்கு நான் காட்டுகிறேன். அந்த விழிகளைப் பார்த்தபிறகு சொல்... இப்போது என்னுடன் வருவாயா?’’

என்று கேட்டபடியே எழுந்து நின்றார்.

‘`தாராளமாக வருகிறேன். தங்களின் பேச்சு என்னை என்னவோ செய்கிறது.’’ என்ற தனுர்தாசன், ஸ்ரீராமாநுஜருடனும் அவரின் சீடர்களுடனும் எம்பெருமானின் திருச் சந்நிதிக்குச் சென்றான்.

ஸ்ரீராமாநுஜரின் விருப்பத்திற்கிணங்க திருச்சந்நிதியின் கைங்கர்யபரர், கற்பூர ஆரத்தியை எம்பெருமானின் திருக்கோலம் முன் காட்டியதோடு, முகமருகே நன்கு வெளிச் சம் படும்படி பிடித்து நின்றார்.

அவ்வேளையில் புலப்பட்ட, காதளவோடிய எம்பெருமானின் நயனங்களிரண்டும் தனுர் தாசனை வியக்கவைத்தன. சிலா ரூபமாய் இருப்பினும், எம்பெருமான் கண்களைத்திறந்து பார்த்தது போல் ஒரு பிரமை தட்டியது, தனுர் தாசனுக்கு.

எப்பிறப்பின் புண்ணியமோ, முன்னோர் தவமோ... இப்பிறப்பில் நிகரில்லா ஆச்சாரியன் கண்ணில்பட்டு, அதனால் எம்பெருமானின் கண்களிலும் பட்டு, நேத்திர தீட்சையே கிட்டி விட்டது போன்ற பெருங்கருணைக்கு ஆளான தனுர்தாசன், அந்த நொடி தன்னை மறந்தான்.

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 62

துர்காதேவி சரணம்!

சுருட்டப்பள்ளி ஈஸ்வரன் திருக்கோயிலில் அருள் புரியும் துர்கை, பிடாரியின் மீது நின்று காட்சி தருகிறாள். இது ஓர் அபூர்வ திருக்கோலம் என்பர். கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் திருத்தலத்தில் மூன்று கண்களுடனும் எட்டுத் திருக்கரங்களுடனும் காட்சி தரும் துர்கை, பக்தர்களைக் காக்க உடனே புறப்படும் தயார் நிலையில் உள்ளாள். இவரது எட்டுக் கரங்களில் ஒன்றில் கிளியை வைத்திருப்பது சிறப்பு.

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் உள்ள மேற்புற தேவ கோஷ்டத்தில், மகிஷன் மீது நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள், துர்கை. காஞ்சியில் ஐராவதேஸ்வரர் கோயிலில் வடக்கு கோஷ்டத்தில் காட்சி தரும் துர்கை, மேல்புறம் மானும் கீழே சிங்கத்துடனும் காட்சி தருகிறாள்.

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் என்ற ஊரில் குடவரைக் கோயிலில் உள்ள துர்கை முன்னிரு கரங்களில், வலக்கை காக்கும் குறிப்பிலும், இடக்கை இடுப்பிலும் இருக்க, பின்னிரு கரங்களில் சங்கு- சக்கரத்துடன் காட்சி தருகிறாள்.

- டி.ஆர்.பரிமளம், திருச்சி-21