மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 63

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

அவர்களுடைய இந்த மாற்றம் பலருக்கு வியப்பையும் சிலருக்கு வெறுப்பையும் அளித்தது. அதற்குக் காரணம் அவர்களின் சாதியும் குலமும்!

எப்பிறப்பின் புண்ணியமோ, முன்னோர் தவமோ... இப்பிறப்பில் நிகரில்லா ஆசார்யனின் கண்ணில் பட்டு, அதனால் எம்பெருமானின் கண்களிலும் பட்டு, நேத்திர தீட்சையே கிட்டிவிட்டதுபோன்ற பெருங்கருணைக்கு ஆளானான் தனுர்தாசன்.

ஸ்ரீராமாநுஜரின் விருப்பத்துக்கு இணங்க, திருச்சந்நிதியின் கைங்கரியபரர் கற்பூர ஆரத்தியை எம்பெருமானின் திருக்கோலம் முன் காட்டியதோடு, முகமருகே நன்கு வெளிச்சம்

படும்படி பிடித்து நின்றார். அவ்வேளையில் எம்பெருமானின் நயனங்கள் இரண்டும் தனுர்தாசனை வியக்கவைத்தன.

சிலாரூபமாய் இருப்பினும் உயிர்ப் பெற்று கண்களைத் திறந்து பார்த்ததுபோல் ஒரு பிரமை தட்டியது தனுர்தாசனுக்கு. அந்த நொடி தன்னை மறந்தான்.

அவன் மனைவியும் `தான் ஒரு பேரழகி’ எனும் மெல்லிய செருக்கிலிருந்து விடுபட்டவளாகக் கரங்களைக் கூப்பிக் கண்ணீர் சிந்தலானாள். அப்போதே அங்கேயே தம்பதி இருவரும் ஸ்ரீராமாநுஜரின் திருவடிகளில் விழுந்தனர்.

‘`ஸ்வாமி! தாங்கள் முதலில் என்னை மன்னிக்கவேண்டும். பின் சீடனாய் ஆட்கொண்டு அருள வேண்டும்’’ என்றான் தனுர்தாசன். ஹேமாம்பாளும் அதையே உரைத்தாள்.

கூடுதலாய், ‘`இன்று எங்கள் மணநாள். நாங்கள் ஒன்றுசேர்ந்த நாள் மட்டுமன்று, உங்களோடு ஒன்றாக சேர்ந்த நாளும்கூட. இனி, உங்கள் வழியே எங்கள் வழி; உங்கள் கொள்கையே எங்கள் கொள்கை. எங்கள் இறைவன் இந்தத் திருவரங்கன்’’ என்று நெகிழ்ந்தாள்.

இவ்வாறு சொன்னதுடன், ‘’ஸ்ரீராமாநுஜரின் சீடர் என்றால், அதற்கேறப வாழ்ந்திட வேண்டும். இனி ரதமேறிச் செல்லும் போக வாழ்வு தேவையில்லை. மல்லாடி மகிழும் வீர வாழ்வும் தேவை இல்லை. நித்ய சுகத்தையும் மோட்சத்தையும் தரும் இறை வாழ்வே என் வாழ்வு...’’ என்று சொல்லி, அதற்கேற்ப தனது அரசுப் பணியை விடுத்து, ஆடையிலும் பெரும் மாற்றம் கண்டு, மேனியில் திருமண் பூசி, அடியவர்களைப் போல எளிய தோற்றத்தில் ஸ்ரீராமாநுஜரைச் சரண்புகுந்தனர் இருவரும்.

ஸ்ரீராமாநுஜருக்கும் அவரின் மடத்துக்குமான ஊழியங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யத் தொடங்கினர். பேரழகியான ஹேமாம்பாள் மடத்துப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவியதோடு, சாணம் தெளித்தல், கோலமிடுதல், பூத்தொடுத்தல், காய் நறுக்குதல் என்று எல்லா பணிகளையும் செய்யலானாள். தனுர்தாசனோ ராமானுஜர் இடும் பணிகளை எல்லாம் செய்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 63

அவர்களுடைய இந்த மாற்றம் பலருக்கு வியப்பையும் சிலருக்கு வெறுப்பையும் அளித்தது. அதற்குக் காரணம் அவர்களின் சாதியும் குலமும்!

`உயர உயரப் பறந்தாலும் குருவி குருவிதான் அது பருந்தாக முடியாது’ என்றும், `எவ்வளவு தொண்டாற்றினாலும் பரகதிக்கான ஞானம் உன் போன்றவர்களுக்கு ஸித்திக்காது. அது பிராமணர்களுக்கு... அவர்கள் வேதம் ஓதுவதால், அவர்களுக்கே வாய்க்கப் பெற்ற ஒன்றாகும்’ என்றும் கூறினார்கள்.

சுருக்கமாய்ச் சொல்வதானால் `வேதம் கற்றல், ஓதுதல், தியானம், தவம் ஆகியவற்றாலேயே இறைபதம் அடைய முடியும். மற்ற தொண்டுகளால் புண்ணியம் கிட்டும்; அதன் மூலம் இகபர வாழ்வில் இன்பமாய் வாழலாம் அவ்வளவே’ என்றனர்.

இக்கருத்துக்கள் தனுர்தாசனைச் சலனப்படுத்தியபோதிலும் ஸ்ரீராமாநுஜரிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொண்டு செய்து வரலானான் தனுர்தாசன்.

ஸ்ரீராமாநுஜர் இதை அறியாமலில்லை.நேத்திரங்களைக் காட்டி அவன் கோத்திரத்தையே மாற்றியவர், அவனின் தளராத மன உறுதியை எண்ணி மகிழ்ந்தார். அதற்கேற்ப மனையாளும் திகழ்ந்தது பெரும் மகிழ்வை அவருக்கு அளித்திருந்தது.

ஒருநாள் காவிரியில் குளித்துக் கரையேறி நடக்கும்போது, சீடர் குழாமில் விலகி நின்றபடி இருந்த தனுர்தாசனை அருகில் அழைத்து, அவன் தோளைப் பற்றியபடி மணல்வெளியில் நடக்கலானார். இதைக் கண்ட சீடர்களில் சிலருக்கு மனத்தில் சஞ்சலம் மூண்டது. சிலருக்குப் பெரும் கோபம் உண்டாயிற்று.

இவன் தங்கள் குருவுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடுவான் என்று கருதியதோடு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிடும் முடிவுக்கும் வந்தனர். சீடர்களின் இந்தப் போக்கை ஸ்ரீராமாநுஜர் அறிந்தார். தனுர்தாசனின் பண்பட்ட குருபக்தியை, அவனே உத்தமமான ஸ்ரீ வைஷ்ணவன் என்பதை, அனைவரும் உணர்ந்திட ஒரு காரியம் செய்யலானார்.

அன்று இரவு தன் இல்லம் சென்றுவிட்ட தனுர்தாசனை, தான் அழைப்பதாகக் கூறி அழைத்து வரும்படி சீடன் ஒருவனை அனுப்பி வைத்தார்.

அவன் புறப்பட்டதும், சில சீடர்களைத் தன் அருகில் அழைத்தவர், ‘`இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு நடந்திடுங்கள்...’’ என்று கூறினார். உறங்கச் செல்ல வேண்டிய இந்தத் தருணத்தில், அப்படி என்ன செய்ய வேண்டும் என்ற வினாவோடு அவர்கள் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்தனர்.

‘`நீங்கள் நால்வரும் நேராக தனுர்தாசனின் மாளிகைக்குச் செல்லுங்கள். அங்கே ஹேமாம்பாள் உறக்கத்தில் இருப்பாள். அதைப் பயன்படுத்தி, அவள் அறியாவண்ணம் அவளுடைய அணிகலன் களைத் திருடிக்கொண்டு வந்து விடுங்கள்.

அதேநேரம், அவளுக்கு எந்தத் துன்பமும் நேரக்கூடாது. உங்கள் திருட்டுக்கு தோதாக தனுர்தாசனை நான் இங்கே வர பணித்துவிட்டேன். எனவே ஜாக்கிரதை!’’ என்றார் ஸ்ரீராமாநுஜர்.

அவர்கள் நால்வரும் விக்கிப்போடு ராமாநுஜரை பார்த்தனர். ஸ்ரீராமாநுஜரா தங்களைத் திருடச் சொல்வது என்ற வியப்பு ஒருபுறம்; எதற்காக திருடவேண்டும்... கேட்டாலே கொடுத்து

விடுவானே தனுர்தாசன் என்ற எண்ணம் ஒருபுறம் அவர்களைத் தயக்கம் கொள்ளச் செய்தன.

ரங்க ராஜ்ஜியம் - 63

``தாங்களா இப்படிச் சொல்வது என்ற திகைப்பில் இருக்கிறோம்.’’

``ஆம்... நான்தான் சொல்கிறேன். இது, தனுர்தாசனுக்கும் ஹேமாம் பாளுக்கும் நான் வைக்கும் ஒரு பரீட்சை!’’

‘`பரீட்சையா?’’

‘`ஆம்! நகைகள் களவு போகும் நிலையில், தனுர்தாசன் ஒரு மறவனாய் அரண்மனை அதிகாரியாய்க் கோபம் கொண்டு, கள்வர் களைக் கண்டறிந்து தண்டிக்கும் முடிவை எடுப்பானா அல்லது என்ன செய்வான் என்று கண்டறியவே இந்தச் சோதனை.’’

‘`அதிலென்ன சந்தேகம்... நிச்சயம் கள்வர்களைத் தண்டிக்கும் முடிவையே எடுப்பான். இதனால், எங்களுக்கு அவப்பெயரும் தண்டனையும் கிட்டுவது உறுதி’’

``அப்படி அவன் நடக்கும்பட்சத்தில், உங்களைக் காப்பாற்றி அந்தத் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் அஞ்சத் தேவையில்லை.’’

‘`ஸ்வாமி! தங்களைப் பணயம் வைத்து இப்படி ஒரு பரிட்சை தேவைதானா?’’

‘`சோதனைகள் செய்தாலே சாதனைகளை அடைய முடியும். இனியும் விவாதங்கள் இன்றி சொன்னதைச் செய்யுங்கள்.’’

அந்தச் சீடர்கள் நான்கு பேரும் புறப்பட்டுச் சென்றனர். செல்லும்போதே எதிரில் தனுர்தாசனும் வந்துவிட்டான். அவனைப் பார்த்தபடியே சென்றனர்.

னுர் தாசன் மாளிகை.

கதவுகள் தாளிடப்படாது திறந்தே இருந்தன. சீடர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

வீட்டின் முகப்பில் பெரிய திருமண் காப்பு, சங்கு சக்கரத்துடன் வரவேற்றது. அக்காட்சி அவர்களைத் தேக்கியது.

ஹேமாம்பாள் ஒரு பலகையைத் தலைக்குக் கொடுத்தவளாய், கூடத்தின் மையத்தில் - கோரைப்பாய் ஒன்றின்மேல் பக்கவாட்டில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.

தங்கள் முகங்களை முகமூடியால் மறைத்திருந்த சீடர்கள் நால்வரும், அவளை நெருங்கிச் சூழ்ந்து நின்றனர்!

- தொடரும்...