திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 64

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

ஹேமா! களவாட வந்தவர்கள் எம்பெருமானின் அடியவர்கள் என்கிறாய். அந்நேரம் புரண்டு படுத்து அவர்கள் விலகிச் செல்லும்படியும் செய்துவிட்டாய்.

`அற்புதன் செம்மை இராமாநுசன் எனையாள வந்த

கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய

பற் பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதென்னும்

நற்பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே'

(இராமாநுச நூற்றந்தாதி - 53)

ஸ்ரீராமாநுஜரின் சீடர்கள் ஹேமாம்பாளைச் சுற்றி நின்று கொண்டு, நாலாபுறமும் பார்த்து விட்டு, மெள்ள அவளருகே அமர்ந்து அவள் உறக்கம் கலைந்திடாதவண்ணம் அவள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றத் தொடங்கினர்.

சில விநாடிகளில் தூக்கம் கலைந்து ஹேமாம்பாள் பாதி விழிப்போடு சற்று புரளவும் அவர்கள் வேகமாய் விலகிச் சென்றனர். புரண்டு படுத்தவள், அப்படிப் படுக்கும்போதே அந்த நான்கு பேரும் ஒளிவதைப் பார்த்துவிட்டாள். பார்த்த நொடி அவளுக்குள் திகைப்பு. உடலில் திருமண் காப்பு தரித்திருக்கும் நிலையில் அவர்கள் களவு புரிகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பெரிதாக ஏதோ தேவை.

அதனால்தான் திருமங்கைமன்னன் வழியில் களவினில் அவர்கள் இறங்கிவிட்டதாய்க் கருதிய ஹேமாம்பாள், தொடர்ந்து ஆழ்ந்து உறங்குவதுபோல் நடிக்கலானாள். அவர்கள் மேலும் தன் வசம் உள்ள நகைகளை எடுத்துச் செல்லத் தோதாகப் படுத்தாள். ஆனாலும், சீடர்கள் களவாடிய வரையிலும் போதும் என்று கருதி, மெள்ள அங்கிருந்து நழுவி ஸ்ரீராமாநுஜரிடம் வந்து நின்றனர்.

ரங்க ராஜ்ஜியம் - 64

அவர்கள் வரவும், தனுர்தாசனை ‘நீ வீட்டுக்குப் போய் தங்கிவிட்டுக் காலையில் வா’ என்று அனுப்பினார். பின் சீடர்களைப் பார்த்தார். அவர்களும் நடந்ததைக் கூறினர்.

“நீங்கள் இப்போதே மீண்டும் தனுர்தாசன் இல்லம் சென்று, அவன் என்ன சொல்கிறான் என்பதை மறைந்திருந்து பார்த்துவிட்டு என்னிடம் வந்து சொல்லுங்கள்” என்றார்.

அவர்களும் சென்று பார்த்தனர். உள்ளே தனுர்தாசன் ஹேமாம்பாவை வைதபடி இருந்தான். ‘`ஹேமா! களவாட வந்தவர்கள் எம்பெருமானின் அடியவர்கள் என்கிறாய். அந்நேரம் புரண்டு படுத்து அவர்கள் விலகிச் செல்லும்படியும் செய்துவிட்டாய். பாவம், அவர்களுக்கு என்ன தேவையோ காலம் அவர் களைக் கள்வர்களாக்கிவிட்டது.

நீ அவர்களை அழைத்து, உன் நகைகள் அவ்வளவையும் அவர்கள் களவாடத் தேவையின்றிக் கழற்றிக் கொடுத்து இருக்கலாம். அருமையான சந்தர்ப்பத்தை விட்டுவிட்டாய். பாவம் அடியவர்கள்’’ என்றான், தனுர்தாசன்.

அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டதும் ஒளிந்திருந்த அடியவர்கள் அப்படியே விக்கித்துப் போய்விட்டனர்.

‘`நான் என்ன செய்வேன் சுவாமி. அவர்கள், மேலும் என் நகைகளை எடுத்துச் செல்லட்டும் என்று எண்ணியே புரண்டு படுத்தேன். ஆனால், அதுவே தடையாகும் என்று நான் எண்ணவில்லை” என்றாள் ஹேமாம்பாள்.

தொடர்ந்து, ‘`ஹேமா! நமக்கு நல்ல வாய்ப்பை அந்த நாராயணன் அளித்தான். ஆனால் அது பறிபோய்விட்டது. அடியவருக்குப் பயன்படாத இந்த நகைகளை இனி நீ அணியக்கூடாது, கழற்றிவிடு’’ என்ற தனுர்தாசனின் கட்டளை இட, ஹேமாம்பாளும் மீதம் உள்ள நகைகளைக் கழற்றி வைத்தாள். அதைக் கண்ட அடியவர்கள் வெட்கித் தலை குனிந்தபடியே திரும்பி வந்து, ஸ்ரீராமாநுஜரிடம் நடந்ததைக் கூறினர்.

ஸ்ரீராமாநுஜர் அவ்வேளையில் அங்கு உள்ளோருக்கு ஒரு சிறு சோதனையும் வைத்திருந்தார். அவர்களின் காவித் துணியை கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டி விட்டிருந்தார். அதைக் கண்டவர்கள் கோபம் கொண்டு, ‘`யார் இப்படிச் செய்தது. இனி எப்படி இந்த ஆடையை அணிய முடியும். இப்படிச் செய்தவன் நரகுக்குத்தான் செல்வான். அவன் ஒரு படுபாவி. அவன் கையில் கிடைத் தால் அடித்துத் துவைத்துவிடுவேன்'’ என்று ஆளுக்கு ஆள் புலம்பினர்.

ரங்க ராஜ்ஜியம் - 64

``அப்படியானால் நீங்கள் என்னைத்தான் அடித்துத் துவைக்கவேண்டும்'' என்றபடிஸ்ரீராமாநுஜர் அவர்கள் முன் சென்று நின்றார். அவர்கள் விக்கித்தனர். எதற்கு இப்படி நடந்து கொண்டார் என்று சிந்திக்கவும் செய்தனர்.

ஸ்ரீராமாநுஜர் அவர்களிடம் பேசலானார்,

‘`அருமைச் சீடர்களே! நீங்கள் சந்நியாச தர்மத்திற்கு உகந்தவர்களே இல்லை என்பதைக் காட்டிவிட்டீர்கள். ஒரு காவித்துணிமீது கூட உங்களுக்குப் பெரும் பற்று இருப்பதோடு, கோபதாபங்கள் உங்களை விட்டுப் போகவே இல்லை. ஆனால், தனுர்தாசனும் அவன் மனைவியும் பொன் நகைகளை இழந்தும் துளியும் துக்கப்படாமல்... நகைகளை முழுமை யாக எடுக்காமல் அடியவர்கள் சென்று விட்டனரே என்று வருந்தியதைக் கண்டீர்கள்.

அப்படிப்பட்ட தனுர்தாசனின் தோளில் கை போட்டு நடந்ததைப் பெரும் ஆசாரக் குறைவாகப் பேசினீர்கள். இப்போது சொல்லுங் கள் தனுர்தாசன் உயர்ந்தவனா... நீங்களா..?

பிராமணக் குலத்தில் பிறந்தும் ஆசாபாசங்கள் உங்களை விடவில்லை. மறவர் குலமாய் இருப்பினும் தனுர்தாசன் வைராக்கியத்தோடு திகழ்ந்து, நல்லதொரு ஸ்ரீவைஷ்ணவன் ஆகி விட்டான். பிறப்பு ஒரு வழிதான், செயல்தான் எதையும் தீர்மானம் செய்கிறது. அப்படிப் பார்த்தால் தனுர்தாசன் எங்கே, நீங்கள் எங்கே'' என்று கேட்டு அனைவரையும் சிந்திக்க வைத்தார் ஸ்ரீராமாநுஜர்.

இந்த நிகழ்வுக்குப் பின் தனுர்தாசனை அழைத்துத் திருவரங்க ஆலயக் காப்பாளன் பணியை அவனுக்கு அளித்தார். அதன்படி ஆலயத்தை இரவு பகலாகக் கண் துஞ்சாது அதாவது உறங்காது காத்ததாலும் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரத்தைக் குரு மூலம் உபதேசிக்கப் பெற்ற தாலும் தனுர்தாசனுக்கு ஒரு தாஸ்ய நாமத்தை யும் வைணவ சித்தாந்தப்படி சூட்டினார். அந்த நாமமே ‘பிள்ளை உறங்காவில்லி’. அவன் மனைவியான ஹேமாவு க்கு ‘பொன்னாச்சி’ என்ற பெயரைச் சூட்டினார். பொன் நகைகளை இழக்க துணிந்தவள் ஆயிற்றே!

இரண்டு பெயர்களும் அவர் களின் செயல்பாட்டை ஞாபகப் படுத்துவதாக இருப்பதை உணர லாம். பின்னர், இவர்களின் மருமக்களான வண்டவில்லியும் செண்டவில்லியும் ஸ்ரீராமாநுஜ சீடர்கள் ஆயினர். இவர்களையும் ஸ்ரீவைஷ்ணவ மரபின்படி வண்ட அலங்கார தாசர் என்றும் செண்டலங்கார தாசர் என்றும் பெயர் சூட்டி ஏற்றுக்கொண்டார்.

இவர்களின் குலத்தலைவனான அகளங் கனும் ஸ்ரீராமாநுஜரின் சீடனாகி அகளங்க நாட்டாழ்வான் என்ற பரிபூர்ண திருநாமத்தைப் பெற்றான். இதனால் ஸ்ரீவைஷ்ணவம் எல்லா பக்கங்களிலும் எல்லா மனிதர்களிடத்திலும் வேகமாக வளர்ச்சி கண்டது.

விசிஷ்டாத்வைத சித்தாந்தம் மற்ற சித்தாந்தங் களை விலக்கிப் பரிபூரண சித்தாந்தமாக விண்பரிதிபோல ஜொலித்தது. நாராயண முழக்கம் எட்டு திக்கும் கேட்டது.

எப்போதும் ஒரு நல்ல கனி மரமோ இல்லை பூச்செடியோ பூத்துக் குலுங்கும்போது கண் படும். கண்பட்டாலே பொறாமை உருவாகும். பொறாமை தற்செயலாய்ச் சில விளைவுகளை ஏற்படுத்தும். இது உலக யதார்த்தம்.

உடையவராம் ஸ்ரீராமாநுஜரின் விருத்தியும் திருவரங்க ஆலயத்தை அவர் செய்த நேர்த்தியும் குறிப்பாக நாலாயிரத்தை அவர் திருச்சந்நிதியில் பாடப் பணித்ததைக் கேட்கச் செய்த விதமும், சாதி வேற்றுமை பாராமல் ‘ரங்கா’ என்று உருக்கமுடன் ஓடி வருவோருக்கெல்லாம் குருவாய் அடைக்கலம் அளித்து, உபதேசம் செய்த செயலும் பலரையும் பொறாமை கொள்ள வைத்தன.

இவர் இருக்கும்வரை நம்மால் தலையெடுக்க முடியாது என்றும் கருதச் செய்தன. அதனால் சிலர், ஸ்ரீராமாநுஜருக்கு விஷம் வைத்துக் கொல்லத் திட்டமிட்டனர்.

அதை மிகச் சுலபமான ஒன்றாகக் கருதினர். அதற்கேற்ப, அவர் தினமும் பிக்ஷை கேட்டு வரும் ஒரு பிராமணர் வீட்டை அடையாளம் கண்டு, அந்த பிக்ஷை உணவில் விஷத்தைக் கலந்துவிட்டனர்.

அந்த உணவை அவருக்குப் பிச்சை இடுகையில், அதை அளித்த பிராமணரின் மனைவி குற்ற உணர்ச்சி தாளாது, முகக்குறிப்பு களால் அவருக்கு விஷம் இருப்பதை உணர்த்திக் காலில் விழுந்து அழ தொடங்கினாள்.

“ஓர் உயிரின் இழப்பின் போதுதான் இப்படியான துக்கம் ஏற்படும். எதை உத்தேசித்து யாரோ இறந்துவிட்டதுபோல் அழுகிறாய். பிக்ஷையின்போது அழலாமா? கண்ணீருடன் இடும் பிக்ஷையை ஏற்பதும் அழகல்லவே எனக்கு” என்றார் ஸ்ரீராமாநுஜர்.

`‘சுவாமி, நான் இறந்து விட்டதற்காக அழ வில்லை. என் கையால் ஒருவர் இறந்து விடப் போகிறாரே என்று நினைத்து பதைபதைத்தே அழுகிறேன்'' என்று அவளும் மறைமுகமாக கூறவும், ஸ்ரீராமாநுஜருக்குப் புரிந்தது.

அப்படியே நேராகக் காவிரி ஆற்றை நோக்கி நடந்தவர், உணவை ஆற்றில் கொட்டிவிட்டு, பாத்திரங்களையும் கழுவி கவிழ்த்து வைத்து விட்டு, தான் வாழக்கூடாது என்று எண்ணியவர் களை உத்தேசித்து அவர்களுக்கு நல்ல புத்தியும் நற்கதியும் ஏற்பட வேண்டி தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

ஸ்ரீராமாநுஜரின் இந்தச் செயல் சீடர்களுடன் திருவரங்கத்தையே அவரருகே திரட்டி அழைத்து வந்து விட்டது. அவர்களில் திருக் கோஷ்டியூர் நம்பியும் ஒருவர்.

“ராமாநுஜரே நடந்ததை அறிந்தோம். வருந்து கிறோம். ஒரு சந்நியாசி - யோகியைப் பொறுத்த வரையில் இதுவும் ஓர் அனுபவம். இந்த அனுபவம் அந்த யோகியைச் செயல் இழக்கச் செய்தாலோ, பெரிதும் வருந்த வைத்தாலோ அவர் முதிர்ச்சி பெறவில்லை என்று பொருள்.

தாங்களோ மிக முதிர்ந்தவர்! இப்படியே எத்தனை நாள் இருப்பீர். உங்களின் திருப்பணி இதனால் முன்பைவிட வேகம் அடைய வேண்டுமேயன்றி சுணங்கலாமா” என்று கேட்டார்.

ஸ்ரீராமாநுஜர் பதில் சொன்னார்...

“நான் சுணங்கிவிடவில்லை, மேலும் திறம்பட இயங்குவதற்கு ஆத்ம சக்தி வேண்டியே நதிக்கரையில் அமர்ந்தேன். அப்படியே, என்னை அழிக்க நினைப்பவர்களின் செயல் பாடுகள் மாற வேண்டி எம்பெருமானிடம் விண்ணப்பித்தேன்.

பிரம்மனைப் படைத்த அவனே அல்லவா அசுரப் பகைவரையும் படைத்தான். பின் அவனே அல்லவா அவர்களை அழித்தான். அவன் லீலைகளில் இதையும் ஒன்றாகவே கருதுகிறேன். எனக்கு உணவளித்த பெண்மணி யின் கண்ணீர் வடிவில், அவன் என் வாழ்வை நீட்டித்த கருணையை நான் என்னவென்பேன்...”

இந்தப் பதிலால் திருக்கோஷ்டியூர் நம்பியை மட்டுமல்லாது, வந்திருந்த அனைவரையும் ஸ்ரீராமாநுஜர் திக்குமுக்காடச் செய்தார்.

அதன்பிறகு, ஸ்ரீராமாநுஜருக்கான உணவை கிடாம்பி ஆச்சான் என்பவர் சமைத்து வழங்கி யதோடு, அவரின் பசியை ஆற்றிடும் பெருந் தொண்டனாகவும் ஆனார்.

மொத்தத்தில் ஸ்ரீராமாநுஜரைக் கொல்ல முயன்ற செயல், அவருக்கு உகந்த உணவைச் சமைத்து தரும் ஒரு நல்ல சீடனை தந்தது. இறுதிவரையிலும் தன்னைக் கொல்ல முயன்றவர்களைப் பற்றி அவர் எதுவும் கூறாமல் விட்ட செயல், எதிரிகளிடமும் ஓர் இணக்கத்தை உருவாக்கத் தொடங்கியது.

அவர்கள், `இனி ஸ்ரீராமாநுஜரோடு மோதுவதில் பயனில்லை. அவருடைய கொள்கையான விசிஷ்டாத்வைத சித்தாந்தத் தோடு மோதுவதே சரி' என்று மாற்று வழிகளை எண்ணத் தொடங்கினார்.

சைவர், சமணர், பௌத்தர் என்கிற சகலரும் இம்மட்டில் ஸ்ரீராமாநுஜரை வீழ்த்த சபதம் செய்தனர். அதன் உச்சமாக ஒரு வாதப்போர் பாரத தேசத்தின் பனித்தலைப் பாகமான காஷ்மீரில் நடந்ததுதான் விசித்திரம்.

தன் அத்யந்த சீடனான கூரேசருடன் காஷ்மீரம் சென்ற ஸ்ரீராமாநுஜர், அங்குள்ள சமயவாதிகளைத் தன் வாதத் திறமையாலும் சத்தியத்தாலும் வென்றார்.

அதுமட்டுமா?

கல்விக்கு அதிதேவதையான ஸ்ரீசரஸ்வதி தேவியே நேரில் தோன்றி தன் பங்குக்கு ராமாநுஜரை ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்றாள்!

- தொடரும்

`காலம் வரும்... காத்திருப்போம்!'

ரங்க ராஜ்ஜியம் - 64

ஒருமுறை, புத்தருக்காக குளத்தில் நீர் எடுக்கச் சென்றார் சீடர். அப்போதுதான் யானை ஒன்று நீர் பருகிச் சென்றிருந்ததால், குளத்து நீர் கலங்கிப் போயிருந்தது. ஆகவே, அருகிலுள்ள ஓடையில் தெளிந்த நீரை எடுத்து வரலாம் என்று புறப்பட்டார் சீடர்.

ஆனால், அதற்குள் புத்தர் அழைக்கவே தண்ணீர் எடுக்காமல் திரும்பினார். ``தண்ணீர் எங்கே?'' என்று புத்தர் கேட்டதும், சீடர் விஷயத்தை விவரித்தார். ``ஓடையிலிருந்து நீர் கொண்டு வருகிறேன்'' என்றார். ஆனால், புத்தரோ, ``குளத்து நீரையே பருகலாமே!'' என்றார். சீடர் மீண்டும் குளத்துக்குச் சென்றார். இப்போது, நீர் தெளிந்துவிட்டது. பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டு வந்தார்.

புத்தர் சொன்னார்: ``கலங்கிய குளம் தெளிந்து விட்டது பார்த்தாயா... ஆகவே, எது குறித்தும் அவசர முடிவு எடுக்கக் கூடாது. பிரச்னைகளைச் சந்திக்க நேரும்போது, அவை அமைதியாகும் தருணத்துக்காகக் காத்திருக்க வேண்டும்.''

- எஸ். மாரியப்பன், தேனி