திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 65

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

ஒலி எனில் அதற்கு ஒரு எதிரொலி இருப்பதுபோல் ஸ்ரீராமாநுஜரின் இந்த வேகமான செயல்பாடுகளுக்கு எதிர்வினைகளும் ஏற்படலாயின.

இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட ஞானம் என்னும்

நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து

உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்

மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே

- இராமாநுச நூற்றந்தாதி...

கலைமகளாலேயே ‘ஸ்ரீபாஷ்யக்காரர்’ என்று அருளப் பெற்ற ஸ்ரீராமாநுஜரின் புகழ், பரந்த பாரத தேசமெங்கும் வேகமாய்ப் பரவிற்று. அவரின் செயல்வேகமும் இதனால் கூடிற்று. தன் ஆத்ம குருவான ஆளவந்தாரின் பெரு விருப்பங் களில் ஒன்றான பிரம்மசூத்திரத்துக்கு அவர் செய்த விரிவுரை பெரும் பதிவாயிற்று. தொடர்ந்து அவர் பல நூல்களை எழுதினார்.

கூடவே, வைணவ நெறி உலகம் எல்லாம் பரவும் விதம்... தன்னைப் பின்தொடர்வோரில் சிறப்புகள் பல உடையோரைத் தேர்வு செய்து, அவர்களைத் தன் பிரதான சீடர்களாகத் தனித்தனியே அடியொற்றி இயங்கும்படிச் செய்தார். அவ்வகையில், 72 பேரை தேர்வு செய்து அவர்களை எல்லா பக்கங்களிலும் அனுப்பி, மானுட வாழ்வின் கசடுகள் நீங்கிட போதிக்கச் செய்தார்.

ஒலி எனில் அதற்கு ஒரு எதிரொலி இருப்பதுபோல் ஸ்ரீராமாநுஜரின் இந்த வேகமான செயல்பாடுகளுக்கு எதிர்வினைகளும் ஏற்படலாயின. குறிப்பாக சைவர், சமணர், ஸ்ரீராமாநுஜரைத் தங்களின் எதிரியாகக் கருதியதோடு, அவர் அழிக்கப்பட்டால்தான் தங்களின் கருத்துக்கள் செல்லுபடியா கும் என்று கருதினர்.

ரங்க ராஜ்ஜியம் - 65

எதிர்த்தவர்களில் முக்கியமானவன் தஞ்சையை ஆண்ட சோழர்களில் ஒருவன். இவனை ‘கிருமி கண்ட சோழன்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். சோழ அரசன் சைவநெறியைப் பின்பற்றி வந்தவன். ஸ்ரீராமாநுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் தவறானது என்று கருதினான். அப்படி அவன் கருதும்படி அவனை உற்ற சைவ நெறியாளர்கள் பேசினர். இதனால், அவன் ஸ்ரீராமாநுஜரோடு பிணக்கு கொண்டு அவரை அழைத்து வந்து பணியவைக்க திட்டமிட்டான்.

இதற்குப் பின்னால் நாலூரான் என்கிற வைணவர்தான் இருந்தார். ஸ்ரீராமாநுஜர் சைவ சித்தாந்தத்தின் பெரும் எதிரி என்பதுபோல சோழனை எண்ணச் செய்தார். இதைத் தன் நண்பர்கள் மூலம் அறிந்த கூரத்தாழ்வான், சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார். ஸ்ரீராமாநுஜர் சோழனைச் சென்று பார்ப்பது ஸ்ரீராமாநுஜரின் குரு ஸ்தானத்துக்கு அழகில்லை. அவரைப் பார்க்க அரசன் வருவதே சரியாகும். ஆனால், அரசன் அவ்வாறு நடவாமல், தன் வீரர்களை ஏவி விட்டதை கூரத்தாழ்வான் இழிவாகக் கருதினார். எனவே சோழ அரசனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பி, தானே ஸ்ரீராமாநுஜர் வேடத்தில் செல்ல முடிவு செய்தார்.

தன் குரு எந்த நிலையிலும் சிறு இழிவுக்கும் ஆளாகிவிடக்கூடாது என்று விரும்பினார். இக்கருத்தை அவர் ஸ்ரீராமாநுஜரிடம் கூறியபோது, ஸ்ரீராமாநுஜர் ஓர் யாத்திரைக்கான ஏற்பாட்டில் இருந்தார். அதைக் கைவிட்டு சோழனைச் சந்திக்கத் தயாரானார். ஆனால், கூரத்தாழ்வான் அவரைத் தடுத்தார்.

“தவறாகக் கருதாதீர்கள். தங்கள் யாத்திரை நிற்கக்கூடாது. சோழ அரசன் உங்களைச் சிறையில்கூட அடைக்க நேரலாம். அதனால் தங்களுக்குச் சோர்வும் தடையும் ஏற்பட்டுத் தாங்கள் செயலற்றுப் போவீர்கள், என்பது அவன் திட்டமாக இருக்கலாம்.

உண்மையில் அவனுக்குத் தன் கொள்கை பெரிது என்றால், தைரியமாக நேரில் அல்லவா அவன் வந்திருக்க வேண்டும். பெரிதும் முரணும் மாறுபட்ட கருத்தும் கொண்ட வடவர்களையே தாங்கள் வென்று விட்ட நிலையில், இந்தச் சோழன் ஒரு பொருட்டே இல்லை. மேலும், தாங்கள் நேரில் செல்ல எண்ணுவது தங்கள் ஸ்தானத்துக்கும் அழகில்லை; தங்களின் நோக்கத்திற்கும் அது சரியில்லை” என்றார்.

இங்ஙனம் ஸ்ரீராமானுஜரை மைசூர் நோக்கிய யாத்திரைக்குத் தயார்படுத்திய கூரத்தாழ்வான், எவரும் அறியாதபடி பெரிய நம்பியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, திரிதண்டமுடன் காவி கோலத்தில் சோழன் முன் நின்றார். துணிவுடனும் தெளிவுடனும் நின்றார் என்றே சொல்ல வேண்டும்.

ரங்க ராஜ்ஜியம் - 65

சோழனும் கூரத்தாழ்வானை ஸ்ரீராமாநுஜர் என்று கருதியே வரவேற்றான். ஆனால் வந்திருப்பது கூரேசர் என்பதைச் சோழனின் அவையிலிருந்த நாலூரான் கண்டுகொண்டதுடன், “என்ன கூரேசா... இது என்ன ஆள்மாறாட்டம்?”என்று கேட்கவும் செய்தான்.

“உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த நான் போதும்; என் குரு எதற்கு. ஆகவேதான் நான் வந்திருக்கிறேன்” என்றார் கூரேசர்.

“என்ன எங்களுக்குச் சந்தேகமா?” நாலூரான் விடைத்தான்.

“அதிலும் கூடவா சந்தேகம்?” என்று கிண்டலாக பதிலுரைத்தார் கூரேசர்.

“உளறாதே... ராமாநுஜர் எங்கே?”

“அவர் இப்போது இந்தச் சோழ நாட்டிலேயே இல்லை. யாத்திரை சென்றிருக்கிறார்.”

“இந்தச் சபையைச் சந்திக்கப் பயந்து ஓடி விட்டாரா?”

“இந்த வாலுக்கே அந்தப் பயம் துளியும் இல்லை. அப்படியிருக்க தலையா அஞ்சப் போகிறது...”

“ஒரு குற்றச்செயலைப் புரிந்துவிட்டு திமிராக வேறு பேசுகிறாயா?”

“எது குற்றச் செயல்? இந்த நானிலத்தில் வைணவ நெறியைப் பரப்புவதா, இல்லை வைணவனாக இருப்பதா?”

“நீ எப்படி வேண்டுமானால் இரு. ஆனால் நானே அறுதியானவன்; எனக்குப் பிறகே எதுவும் என்றெல்லாமா சொல்வது?”

“அந்த மாலே எல்லாம் வல்லவன். அவனுக்குள் எல்லாம் அடக்கம். இதுவே எங்கள் வரையில் பரசத்யம். அந்தச் சத்தியத்தை யார் வேண்டுமானாலும் பேசலாம்.”

கூரேசனின் பதில் நாலூரானைக் கிளறிற்று.

“அரசே இவன் என்ன பேச்சு பேசுகிறான் பார்த்தீர்களா? நீங்கள் சிவமே பெரிது என்று சொல்வதை, அப்படியே மாற்றி `திருமாலே பெரியவர்' என்கிறான்'' என்ற நாலூரான், அதுவரை அமைதியாக இருந்த அரசனைத் துணைக்கு அழைத்தான். அரசனும் இணையலானான்.

“கூரேசா! இது என்ன பேச்சு? இது அரச சபை. நீ இந்நாட்டின் பிரஜை... ஞாபகம் இருக்கட்டும்.”

“அரசர்பிரானே! நானாகப் பேசவில்லை. உங்கள் நாலூரான் பேசவைக்கிறார். நான் என்ன செய்வேன்?”

“சரி, நான் கேட்கிறேன் சிவம் பெரிதா? பெருமாள் பெரிதா?”

“பன்னிரு காப்புடன் உள்ள என் வரையில் பெரிது சிறிதே இல்லை. இருப்பதே ஒன்றே ஒன்றுதான். அது அந்த மாயவனும் அவன் திருவடிகளுமே!”

கூரேசர் கூற்றைத் தொடர்ந்து நாலூரான் இடையிட்டான். “அரசே இவனிடம் பேசினால் அது நமக்கு இழிவு. ஒன்று மட்டும் உறுதி. இவர்களை இப்படியே விட்டால் இம்மண்ணில் ஒரு சிவாலயம்கூட இருக்காது. அவ்வளவும் விஷ்ணு மயமாகிவிடும்.”

“சர்வம் விஷ்ணு மயம் ஜகத்.. என்பதுதானே சான்றோர் வாக்கு.”

“பேசாதே! ராமாநுஜரைக் கட்டுப்படுத்தத்தான் அழைத்து வரப் பணித்தோம். அவர் கையால் சைவமும் சிவமும் உயர்ந்தது என்று எழுதி வாங்காமல் விடப்போவதில்லை.”

“ பெரிது சிறிதே இல்லை... ஒன்றே ஒன்றுதான்! உங்கள் வரையில் அது சிவம் என்றால், எங்கள் வரையில் அது விஷ்ணு... அடுத்து எதையும் வற்புறுத்திப் பெறுவது என்பது எந்த விஷயத்திற்கும் அழகல்ல. என்னிடம் அப்படி எதையும் பெற்றிட முடியாது. என்னிடமே பெற முடியாத நிலையில் என் குருவிடம்... அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.”

“இந்த மமதைப் பேச்செல்லாம் உடம்பில் தெம்பு உள்ளவரைதான். கட்டி வைத்துச் சவுக்கால் அடிக்கும்போது தெரிந்துவிடும், உன் உறுதி எதுவரை என்று ...”

“உயிரே ஒரு பொருட்டு இல்லை எனும்போது இந்த மிரட்டலுக்கும் உடல் உபாதைக்குமா அஞ்சுவேன்..?”

கூரேசன் துளியும் சளைக்க வில்லை. பெரிய நம்பிக்கோ அது ஆச்சர்யமாக மட்டுமன்றி அச்சமாகவும் இருந்தது. ஒரு மிகப்பெரும் காரியம் நடக்கப் போவதாக அவருக்குத் தோன்றியது.

நாலூரானை அவருக்கு நன்கு தெரியும். நாலூரானின் தந்தை விஷ்ணு ஆலயம் ஒன்றின் காப்பாளராக இருந்தவர். அதிகாரியான அவர் ஆலய விஷயத்தில் சர்வாதி காரமாக நடந்துகொண்டவர். உற்சவக் காலங்களில் அவர் வருகைக்காக பெருமாளே சப்பரத்தில் காத்திருக்க நேர்ந்தது. அவர் வந்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்திய பிறகே வீதியுலா புறப்படும்.

அதேபோல் அவருக்கு உரியவர்களுக்கே முதல் மரியாதை... மாலடியார்கள் அவரால் பின்தள்ளப் பட்டனர். இதனால் சம்பிரதாயங்களில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வு. ஸ்ரீராமாநுஜர் இதை அறிந்து, அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கி ஆலயச் செயல்பாடுகளைச் சீர்செய்தார். பெரியவர் சிறியவர் எனும் பாகுபாட்டை நீக்கினார். நாலூரானின் தந்தை செய்த பல ஊழல்களைக் கண்டுபிடித்து ஊர் முன் நிறுத்தினார்.

இவற்றால் நாலூரானின் மனத்தில் விளைந்த கோபம்தான் சோழனின் மனத்தில் தூபம் போட்டது; ஸ்ரீராமாநுஜரை அழைத்து வரச் செய்து அவரை தண்டிக்கத் துடிக்கிறது என்பதை பெரியநம்பி புரிந்துகொண்டார்.

இது ஒரு பழிவாங்கும் செயல். அந்தப் பழி உணர்ச்சி நாலூரானிடம் பொங்கி வழிந்தது.

“அரசே, இனியும் இவனைப் பேச விடக்கூடாது. இவனைச் சவுக்கால் அடிப்பதால் பெரிய பயன் இல்லை. இவன் கண்களைப் பறிக்கவேண்டும். அதைக் கண்டு இவனையொத்தவர்கள் அஞ்ச வேண்டும்” என்றான்.

ஆனால் கூரேசரோ “அடப்பாவி! இப்படிச் சொன்னால் நாங்கள் பயந்துவிடுவோமா? நீ என்ன என் கண்களைப் பறிப்பது? உன் போன்றவர்களைக் கண்ட இந்தக் கண்கள் இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்” என்றவாறு, தன் கண்களைத் தன் கைகளால்தானே பெயர்த்து எடுத்து சபையையே அதிர வைத்தார்.

அந்த நொடியில் சோழனும் தான் தவறு செய்து விட்டதாகக் கருதினான். ஒரு வைணவனைப் பொறுத்தவரையில் குருபக்தியும் கொள்கையும் அவனுடைய இரு கண்களை விடவும் மேலானவை. இதைக் கூரத்தாழ்வான் உணர்த்தி விட்டதாகக் கருதினான். பெரிய நம்பியோ நடந்ததை எண்ணி மனம் கலங்கினார்.

கூரத்தாழ்வான் கண்களை இழந்துவிட்டதை எண்ணி வருந்தியவர், அந்த வேதனையிலேயே மாரடைப் பால் உயிர்நீத்தார். தனியே திருவரங்கம் திரும்பிய கூரத்தாழ்வானைக் கண்டு திருவரங்கமே வியந்தது.

அதேநேரம், ஸ்ரீராமாநுஜர் மைசூர் பக்கமாய் யாத்திரை சென்று விட்ட நிலையில், திருவரங்கத்தில் தனித்து இருக்கப் பிடிக்காமல், மதுரை ஒட்டிய அழகர்மலை என்னும் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று தங்கினார் கூரத்தாழ்வான்.

கூரத்தாழ்வானுக்கு நேர்ந்த கதி ஸ்ரீராமாநுஜரின் செவிகளை அடைந்தபோது அவர் மைசூரில் இருந்தார். பெரியநம்பி பரமபதம் அடைந்த செய்தி ஸ்ரீராமாநுஜரை, ஒரு துறவி என்னும் தன்மையை மீறிக் கண்கலங்கச் செய்தது. அந்த நொடியே பெரிய நம்பிக்கு மோட்சம் சித்திக்கவும் கூரத்தாழ்வான் மனம் அமைதி பெறவும், தியானிக்கலானார்.

உடனிருந்த சீடர்களில் சிலர் இதுகுறித்து ஸ்ரீராமாநுஜரிடம் விவாதிக்க லாயினர். “சுவாமி! இது என்ன சோதனை? தங்களை ஆட்கொண்ட எம்பெருமான், ஏன் சோழனை ஆட்கொள்ள வில்லை. எதனால் தங்களைச் சோழன் எதிரியாகக் கருதினான். ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன?” என்று கேட்டனர்.

ஸ்ரீ ராமாநுஜர் தீர்க்கமாய்ப் பதில் கூறலானார்.

“பூவுலக மனித வாழ்வு மாயைகள் மிகுந்தது. இங்கே ஒரு மனிதன் ஆணவப்பட்டால் அழிந்து போவான். அந்த ஆணவமே ஒருவனை `நான்... நான்..' என்று பேசச் செய்கிறது. இயக்கத்துக்குக் காரணமும் அதுவே, மயக்கத்துக்குக் காரணமும் அதுவே!

இந்த `நான்' என்கிற மாமசாரத்தை நான்கூட என்னை அறியாது சில காலம் என்னுள் கொண் டிருந்தேன். திருக்கோட்டியூர் நம்பி என்னும் ஆசார்ய பெருமகனால் பெரும் தெளிவு பெற்றேன்.

எனக்கு ஓர் ஆசார்ய நம்பி கிட்டியதுபோல, சோழனுக்கு ஒருவர் கிடைக்கவில்லை. கிடைத் திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது.

எதையும் நாம் அது நம் விருப்பத்திற்கேற்ப அனுமானிக்கலாம். ஆனால் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் அவன் செயல். கூரத்தாழ்வான் கண்களை இழந்ததும் அவன் செயலே. இதன் மூலம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் கூரத்தாழ்வான். புறக் கண்களை விட அகக் கண்களைத் திறப்பதே சாலச் சிறந்த செயல் என்பதையும் அவர் உணர்த்திவிட்டார்.

நிலத்தை உழுது புண்படுத்தாமல் பண்படுத்த இயலாது. கூரத்தாழ்வான் தன் கண்களைப் புண்ணாக்கி, வைணவத்தைப் பண்படுத்தி, `மாலடியார் ஆசார்யனுக்கு மட்டுமே தலை வணங்குவர், ஆணவம் மிக்கோருக்கல்ல' என்பதை உணர்த்திவிட்டார். நான் அதை எண்ணி மகிழ் கிறேன். வாழ்க கூரத்தாழ்வானின் திடச் சித்தம்!” என்று ஒரு பிரசங்கமே நிகழ்த்தினார்.

ஸ்ரீராமாநுஜர் மைசூரை அடைந்த காலத்தில், மைசூர் மன்னன் - ஹொய்சாள வம்சத்தவனாகிய விட்டலதேவராயனின் மகள் ஒரு பேயால் பிடிக்கப்பட்டு அலங்கோலமாய் இருந்தாள். அவளை ஆசனம் ஒன்றில் இரும்புச் சங்கிலிகளால் கட்டிப்போட்டிருந்தனர். அவள் அருகில் நெருங்கக்கூட பயந்தனர். முதலில் அவளைப் பைத்தியம் என்று கருதினர். பிறகு அவள் துர்ஆத்மாவின் வசம் அகப்பட்டுவிட்டது தெரியவந்தது. தோழிகளுடன் வனத்திற்கு விளையாடச் சென்றவளை, அங்குள்ள மரமொன்றைச் சுற்றி அலைந்த துர்ஆத்மா பிடித்துவிட்டிருந்தது.

இது ஒருவகை ஆத்ம அவஸ்தை... இது எல்லோருக்கும் நிகழாது. ஒருவர் ஜாதகத்தில் ஆத்மகாரகனான சூரியன் நீசமாகி, குரு பார்வையும் இல்லாது போய், சந்திரனும் தீயோர் சேர்க்கையில் இருக்க... இவ்வாறு நிகழும். இது ஒரு வகை ஜாதக அமைப்பு. அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெற்று இருந்தால், அந்தப் புண்ணியம் உரிய நேரத்தில் காரியமாற்றி அவரைக் காப்பாற்றிவிடும்.

அரசன் மகள் ஜாதகத்திலும் இதே கணக்குதான். அவளின் பூர்வபுண்ணியம், ஸ்ரீராமாநுஜர் என்கிற ஜகத்குருவின் பார்வையில் படச் செய்தது அவளை. அரசன் விட்டல தேவராயன் சமண சார்பு கொண்டிருந்தான். சமணத் துறவிகளை அழைத்து வந்து மகளைப் பிடித்த பேயை விடுவிக்கப் பார்த்தான். முடியவில்லை. பின்னர், ஸ்ரீராமாநுஜரைப் பற்றி அறிந்து, அவரை அழைத்து வந்து மகளைக் காட்டினான்.

ஆதிசேஷனின் அம்சமான ஸ்ரீராமாநுஜரைப் பார்த்த மாத்திரத்தில் அந்தப் பேய் ஒடுங்கிவிட்டது; அவளின் உடலைவிட்டு ஓடிப் போனது. இந்தச் சம்பவம், உடல் உள்ளம் என இரண்டிலும் ஸ்ரீராமாநுஜர் எவ்வளவு தூய்மையானவர் என்பதை விட்டல தேவராயனுக்கு உணர்த்தியது.

அவன் ஒரு யுத்தத்தில் பங்கெடுத்ததில் ஊனப் பட்டிருந்தான். ஊனமுற்ற அவனிடம் எதையும் பெறுவது தங்களுக்கு அழகல்ல என்று சமண சமயவாதிகள் நினைத்த நிலையில், ஸ்ரீராமாநுஜரோ உன் போன்றவர்களுக்கு என் போன்றோரின் பெரும் துணை அவசியம் என்பதுபோல நடந்து, அவனுக்கு ஆறுதல் அளித்தார்.

அவனும் “இனி நீங்களே என்குரு, என் வழியும் வைணவம்” என்று அறிவித்தான்.

ஒரு சோழனால் வந்த துன்பம் ஹொய்சாளனால் தூள்தூளாகிப் போனது. ஸ்ரீராமாநுஜர் வைணவ மரபின்படி அவனுக்கு விஷ்ணுவர்த்தன் என்கிற புதிய பெயரைச் சூட்டினார்.

- தொடரும்...