மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 66

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் ( ரங்க ராஜ்ஜியம் )

படங்கள்: காவல்கேணி வெங்கடகிருஷ்ணன்

‘பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப, இப்பார்முழுதும்

போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து,

தீர்த்தான் இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாளினையோடு

ஆர்த்தான் இவை எம்மிராமானுசன் செய்யும் அற்புதமே...

-இராமாநுச நூற்றந்தாதி- 52

டெல்லி சுல்தான் மாளிகைக்கு மைசூர் செல்லப்பிள்ளை சென்ற விதமே அலாதியானது. அதை அறியும் முன் திருநாராயணபுரம் என்கிற மேல்கோட்டை எப்படி உருவாயிற்று என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

விஷ்ணுவர்த்தனின் மகளைப் பிடித்த பேயை ஸ்ரீராமாநுஜர் விலக்கவும், அவரைத் தன் சென்னிமேல் வைத்துக் கொண்டாடத் தொடங்கிவிட்டான் விஷ்ணுவர்த்தன். ஸ்ரீராமாநுஜர் தன்னுடனேயே இருந்து, தன் குலத்துக்குக் குருவாகி வழிநடத்த வேண்டும் என்றும் அவரிடம் பிரார்த்தித்தான்.

அப்போது சமணத்துறவிகள்தான் பெரிதும் அவனைச் சார்ந்திருந்தனர். ஸ்ரீராமாநுஜரின் வருகை அவர்களில் பலரையும் மனம் மாறச் செய்துவிட்டிருந்தது. ஆயினும் அவர்களில் சிலர், ஸ்ரீராமாநுஜர் அங்கிருந்து சென்றபின், திரும்பவும் தங்களால் விஷ்ணுவர்த்த ராயனைத் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று கருதினர்.

இன்னும் சிலரோ ஸ்ரீராமாநுஜர் அப்போது முதுமையைக் கடந்துகொண்டிருப்பதைக் கண்டு “இவர் இன்னும் சில காலம் இருப்பார். நாம் அதுவரை பொறுத்திருப்போம். வேறு வழியில்லை'' என்று எண்ணம் கொண்டிருந்தனர்.

இவையெல்லாம் ஸ்ரீராமாநுஜரின் கவனத்துக் கும் வந்தன. தான் ஏற்படுத்திய மாற்றம், தான் இல்லாத பட்சத்தில் ஒரு தற்காலிகமானதாக மட்டுமே இருந்துவிடும் என்கிற யதார்த்தத்தை ஸ்ரீராமாநுஜர் புரிந்துகொண்டார். அதற்கு நிரந்தர தீர்வு காண விரும்பினார்.

ரங்க ராஜ்ஜியம் - 66

இந்த நேரத்தில்தான் அரசன் விஷ்ணு வர்த்தனின் முன்னோர், ஒரு காட்டுக்குள் பெருமாளைத் தங்கள் குல தெய்வமாக வைத்து வணங்கி வந்தனர் என்ற தகவலும், கால மாற்றம் சமணர்களின் வருகை மற்றும் அந்நிய படையெடுப்பால் அவர்களின் அந்தக் கோயில் அழிந்து போனது என்ற தகவலும் தெரிய வந்தன. இந்தச் செய்திகள் ஸ்ரீராமாநுஜரை அடைந்த நேரம், அதுவரை விண்ணில் மேகங் களால் மறைக்கப்பட்டிருந்த சூரியன் விடுபட்டு ஒளியைத் தரலானான்.

அக்காட்சியைக் கண்ட ஸ்ரீராமாநுஜர் அப்போது தெரிந்த சூரியனைப் பெருமாளாகவும், மறைந்திருந்த மேகக் கூட்டத்தைக் கசப்பான கடந்த காலமாகவும் எண்ணிப் பார்த்தார். இது ஒருவகை நிமித்தம்!

`எப்படி இப்போது சூரியன் புலப்பட்டானோ, அதுபோல் அக்காட்டில் மறைந்துவிட்ட எம்பெருமானும் புலப்படுவான்' என்கிற ஓர் எண்ணம், அந்தக் கோயிலை கண்டறியத் தூண்டியது. ஸ்ரீராமாநுஜர் தன் எண்ணத்தை ஸ்ரீவிஷ்ணுவர்த்தனிடம் சொன்னார்.

விஷ்ணுவர்த்தனும் அக்காட்டைத் திருத்தும் நோக்குடன், அக்காட்டை ஒட்டி வாழ்ந்த பஞ்சமர்களை ஸ்ரீராமாநுஜருக்கு உதவிடப் பணித்தான். தங்களுக்கென்று ஒரு அடையாள மின்றி, கல்விகேள்விகளுக்கும் இடமின்றி, உழைத்தாலே சோறு என்கிற நிலையில் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழவேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதைக் கண்ட ஸ்ரீராமாநுஜர், அந்த மக்களிடம் பெரிதும் கனிவைக் காட்டி வழிநடத்தினார்.

அந்தக் காட்டுக்கு `யதுகிரிக் காடு' என்றொரு பெயரும் இருந்தது. அப்பெயரின்படி பார்த்தால் யாதவனாகிய கிருஷ்ணன் தொடர்புடையவர் கள் அவனுக்கான யுகத்தில் அந்தப் பகுதியில் வாழ்ந்து இருக்க வேண்டும் என்றும் யூகித்தார். பகவான் கிருஷ்ணனும் தன் அவதார நாள்களில் அந்த மலைப் பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்த ஸ்ரீராமாநுஜரின் நம்பிக்கை வீண்போகவில்லை.

அந்தக் காட்ந்த் திருத்திச் செடிகளையும் மரங்களையும் வெட்டி வீழ்த்திய நிலையில், ஆங்காங்கே ஆலயத் தடயங்கள் தெரிந்தன. தங்க நகைகளுடன் எம்பெருமானின் திருவுருவச் சிலைகளும் கிடைக்கத் தொடங்கின. தான் தோண்டிய ஓர் இடத்தில் கிடைத்த எம்பெருமானின் சிலை ரூபத்தைத் தூக்கிக்கொண்டு ஸ்ரீராமாநுஜரைத் தேடி வந்தவன் அவரிடம் அதைக் காட்டியபோது, அவனோடு சேர்ந்து அப்பெருமானை விழுந்து வணங்கினார் ஸ்ரீராமாநுஜர். அவன் ஆச்சர் யமும் அதிர்ச்சியும் அடைந்தான்.

ஸ்ரீராமாநுஜரோ “எதிரியால் புதையுண்டவன் உங்களால் மீண்டும் வெளிப்பட்டு, உங்களுக்குப் பெருமை சேர்த்து விட்டான். இனி நீங்கள் எதிலும் தாழ்ந்தவர் அல்ல'' என்றார்.

“அப்படி என்றால் நாங்கள் யார்?” என்று கேள்வி எழுப்பினார் ஒருவர். .

“திருக்குலத்தவர், எம்பெருமானின் கருணைக்கே உரித்தான திருக்குலத்தவர்” என்றார் ஸ்ரீராமாநுஜர். அதைக் கேட்டு அவர் களும் ஆர்ப்பரித்தனர். அங்கே வேகமாக ஆலயப் பணிகள் நடக்கத் தொடங்கின.

ஸ்ரீவிஷ்ணுவர்த்தன் ஸ்ரீராமாநுஜரிடம் அந்த ஆலயப் பணிகள் தொடர்பாய் ஒரு கருத்தைக் கூறினான்.

“ஸ்வாமி! நடப்பது எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. உங்களால் என் வாழ்வு மட்டுமல்ல இந்த அகண்ட மைசூர் சாம்ராஜ் ஜியத்துக்கே ஒளி வந்துவிட்டது போல் உணர்கிறேன்.”

“நீ என்னை அதிகம் புகழ்கிறாய்!”

“இல்லை ஸ்வாமி. நான் கூறுவது உண்மை. புதிய ஆலயம் மீளும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, இங்கிருந்து மிலேச்சர்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டவையும் திரும்பக் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது.”

“புதைந்து போனவையே திரும்பக் கிடைக்கும் போது, நீ சொல்வதும் நடக்கும்.''

“அப்படியானால், களவாடப்பட்ட உற்சவ மூர்த்தி விக்கிரகமும் கிடைத்துவிடும் என்று சொல்லுங்கள்.”

“யாரால், எப்போது அது களவாடப் பட்டது?”

“இன்று தில்லியை ஆட்சி செய்வோரின் முன்னோரால்.”

“அவர்கள், உருவ வழிபாட்டுக்கு எதிரானவர்கள். அதனால் வழிபடப்படும் உருவங்களை அழித்து விடுவார் கள். ஆனாலும்...”

“என்னவென்று கூறுங்கள்...”

“அது பெரிதும் வழிபடப்பட்ட மூர்த்தம் தானே...”

“அதில் என்ன சந்தேகம். உற்சவ மூர்த்தியாய் இந்த மைசூரைச் சுற்றி வந்த தெய்வம் அது. நாடே வணங்கியதே!”

“அப்படியானால், நம் கருத்துப்படி அதற்கென்று ஒரு சக்தி உண்டு. எம்பெருமான் அதனுள் என்றும் தன்னை உயிர்ப்புடனேயே வைத்திருப்பான்.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்...”

“அது அழிந்திருக்காது. அழிந்திருக்க முடியாது. என்றும் அருளப்போவதே அது.”

“நீங்கள் சொல்வது உண்மைதான். அந்த உற்சவமூர்த்தியைச் சுல்தானின் சகோதரி தனக்கான விளையாட்டுப் பொருளாக வைத்துக்கொண்டிருப்பதாக எனக்கு நம்பகமான தகவல் ஒன்றும் கிடைத்தது.”

“என்றால், அதை நாம் திரும்பப் பெறலாமே...”

“திரும்பப் பெறுவதா... அதுவும் எதிரியான தில்லி சுல்தானிடமிருந்தா?”

“ஏன் முடியாது?”

“எப்படி ஸ்வாமி... நான் கேள்விப்பட்ட தகவல் அனுமானமாகக்கூட இருக்கலாம். ஒருவேளை உண்மை என்றாலும், நாம் வழிபட விரும்புவதைச் சுல்தான் ஆதரிப்பானா? தன் மதமும் மதக் கொள்கையும் தழைப்பதை விரும்புபவன், எப்படித் திரும்பத் தருவான்?''

“விஷ்ணுவர்த்தா... அக்கடா என்று திருவரங்கத்திலிருந்த நான் இங்கு வருவேன் என்று நீ நினைத்தாயா? உன் மகளைப் பேய் பிடிக்கும் என நீ கற்பனையிலாவது நினைத்துப் பார்த்தாயா... அவள் குணமானதும், இன்று யதுகிரிக்காடு திருத்தம் கண்டு புதைந்த ஆலயம் திரும்பக் கிடைத்ததும் எப்படி?”

“புரிகிறது... அவன் ஆட்டுவிக்கிறான்; நாம் ஆடுகிறோம்... அப்படித்தானே?”

“அப்படியேதான்... இப்போதும் அவனே என்னுள் இருந்து பேசுகிறான். அவன் திரும்பக் கிடைப்பான் என்றே எனக்குப் படுகிறது. நான் தில்லிக்குச் செல்ல ஏற்பாடு செய். திருக்குலத் தவர்களே எனக்குத் துணையாக வரட்டும். அவர்கள் துணையோடு நான் அந்த உற்சவ மூர்த்தியுடன் திரும்ப வருவேன்.”

ஸ்ரீராமாநுஜர் உறுதிபடக் கூறினார். ஸ்ரீவிஷ்ணுவர்த்தனும் பயண ஏற்பாடுகளைச் செய்தான்.

தில்லிப் பட்டணம்... பாரத தேசத்தின் தொண்டைப் பகுதி. தலைப்பாகமான பனி மலை காஷ்மீரம் வரை ஸ்ரீராமாநுஜர் சென்று வந்த அனுபவத்தில், தில்லியை இலகுவாய் அடைந்தார். மடாதிபதிக்கு உண்டான முறையோடு தில்லி சுல்தானுக்குச் செய்தி அனுப்பினார். அதில் சுல்தானைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

சுல்தான் ஸ்ரீராமாநுஜரை எண்ணி ஆச்சர்யப் பட்டான். ‘ஓர் இந்து மதத் துறவி என்னை எதற்குச் சந்திக்க விரும்புகிறார். ஏதாவது உதவி கேட்பதற்காக இருக்குமோ’ என்று தன் சக பிரதானிகளிடம் ஆலோசித்தான். பிரதானிகள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

`அவர்கள் பக்கிரிகள். நமக்கு நேரம்தான் விரயம்' என்றனர். ஆனாலும் முறையாக ஓர் அரசனைப் போல் தூதுவன் மூலம் செய்தி அனுப்பிய ஸ்ரீராமாநுஜரைச் சாமானியராக சுல்தானால் நினைக்க முடியவில்லை. ‘சரி, வரச் சொல் பார்க்கலாம்’ என்று பதில் அனுப்பினான்.

ரங்க ராஜ்ஜியம் - 66

ஸ்ரீராமாநுஜரும் அவன் மாளிகைக்கு எழுந்தருளினார். அவரின் தோற்றம், கையில் பிடித்திருந்த தண்டம், நடந்து வந்த விதம் என எல்லாமே சுல்தானை ஆச்சர்யப்படுத்தின. அவனையும் அறியாமல் ஒரு மரியாதை மனத்துக்குள் உருவாயிற்று.

‘வந்தால் நிற்கவைத்தே, என்ன விஷயம்...’ என்று கேட்க எண்ணியிருந்த அவன், அதை எல்லாம் மறந்தவனாக, அவரைத் தனக்கு நிகராக அமரப் பணித்தான். ஸ்ரீராமாநுஜரும் அமர்ந்தார். சுல்தானிடம் பேசினார்.

“சுல்தானே உன் அன்புக்கு நன்றி.. இறைவ னின் கருணை உனக்கு ஸித்திக்கட்டும். உன் நாடும் மக்களும் நலமோடும் வளமோடும் வாழ்வார்களாக” என்றார்.

சம்ஸ்கிருத மொழியில் ஸ்ரீராமாநுஜர் பேசியது சுல்தானுக்கு எளிதில் புரிந்திருந்தும் அருகிலிருந்த மொழிபெயர்ப்பாளர் அதை விளக்கினார். இருவருக்கும் இடையே விவாதம் தொடங்கியது.

“தாங்கள் யார்... தங்கள் பெயர் என்ன?”

“நான் ஒரு வைணவத் துறவி . என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் இளையாழ்வான் . ஆனால் ஒரு சந்நியாசியாக மறுபிறப்பெடுத்த நிலையில், என் குருவால் என் பெயர் மாறியது. இந்த சந்நியாசிக்கு அவர் ராமாநுஜன் என்கிற நாமத் தைச் சூட்டினார். அவ்வகையில் உற்ற நாமம் ஒன்று; பெற்ற நாமம் இது.”

“விசித்திரமான விளக்கம். அது என்ன வைணவத் துறவி?”

“வைணவம் என்பது எனது பாதை. ஆதலால் நான் வைண வத் துறவி.”

“உங்கள் மதத்தில்தான் எத்தனை பாதைகள்...”

“கடவுள் ஒருவர்தான். அவரை நான் ‘நாராயணன்’ என்பேன். நீங்கள் ‘அல்லாஹ்’ என்பீர்கள். பெயரில் தான் மாற்றம். பல கடவுளர்கள் என்பது தவறான புரிதல். அனைத்தும் ஒருவனேயான அவன் எடுத்த வடிவங்கள்.”

“அப்படியானால் எங்கள் அல்லாஹ்வை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?”

“எனக்கு அதில் யாதொரு தடையும் இல்லை. அவனால் உண்டானது இந்த உலகு. அதில்தான் நீங்களும் உள்ளீர்கள்; நானும் இருக்கிறேன் என்றால், நாம் எல்லோருமே அவன் படைப்பு தானே?”

“அப்படியானால் வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் வெவ்வேறாக இருப்பது எதனால்?”

“பூகோளமே அதற்கு முழு முதல் காரணம். எவராயினும் வாழும் நிலப் பரப்பைக் கொண் டும், அதன் சூழலை வைத்துமே தமக்கான அறிவையும் ஆற்றலையும் கொள்ள முடியும்.

ஒருவர் தமக்கான ஊருக்குச் செல்ல பல வழிகள் இருப்பது போன்றதே இதுவும். அவற்றில் ஒரு வழி நீர்வழிப் பாதையாக இருந்தால், படகின் துணை அவசியம். பாதை நிலமிசை என்றால் அதற்கேற்ற வாகனங்கள் அமையும். அதுபோல்தான் மதங்கள் மற்றும் அதன் வழிமுறைகள் அமைகின்றன.”

“இதில் என் வழியே உயர்ந்தது - சிறந்தது என்று கூறுவது சரியா, தவறா ?”

“சரியும் இல்லை; தவறும் இல்லை. அது ஓர் அறியாமை. நல்ல ஞானம் ஸித்தித்தால் எல்லாம் சரியாகிவிடும்.”

ரங்க ராஜ்ஜியம் - 66

“துளியும் தயக்கமின்றி என் கேள்விகளுக்கு விடைகளைத் தந்த உங்கள் ஞானத்தை எண்ணி வியக்கிறேன். தாங்கள் என்னைக் காண வந்த நோக்கம்?”

“நாங்கள் பெரிதும் வணங்கி வந்த எங்கள் தெய்வச் சிலை ஒன்று உங்களிடம் இருக்கிறது.”

“என்னிடமா... தெய்வச் சிலையா... ”

“ஆம்! போர் புரிய வந்த போது அள்ளி எடுத்து வந்தவற் றுடன், அந்தச் சிலையும் வந்து விட்டது.''

``எங்கள் கொள்கைக்கு மாறானதை நாங்கள் ஏற்பதில்லை; அழித்துவிடுவோம். அப்படியிருக்க, சிலை எப்படி இங்கு இருக்க முடியும்?”

“அதை ஒரு கலைப்பொருளாகக் கருதும் பட்சத்தில் அழிக்கத் தோன்றாதல்லவா?”

“சரிதான்... அப்படி அது இருந்தால் யோசிக் கிறேன். ஆனால், அது இங்கு இருப்பது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“போரிட்டது உங்கள் மூதாதையர். எனவே அது இங்கேதான் இருக்கவேண்டும். இந்த யூகமும் மேலும் நாங்கள் பக்தியோடு வணங்கிய எங்கள் இறைவன் அழிவற்றவன் என்கிற என் நம்பிக்கையுமே நான் இங்கே வரவும் உங்களைச் சந்திக்கவுமான காரணங்கள்.”

சுல்தான் சிந்திக்கலானான்.

-தொடரும்...

`காசியில் வாசி அவிநாசி!'

கோவையிலிருந்து ஈரோடு செல்லும் சாலை யில் அமைந்திருக்கிறது அவிநாசி. இங்குள்ள சிவாலயம் பிரசித்திபெற்றது. `காசியில் வாசி அவிநாசி' என்பார்கள் பெரியோர்கள்.

ரங்க ராஜ்ஜியம் - 66

காசிக்குச் சென்று வழிபட முடியவில்லை என்றால், அவிநாசிக்குச் சென்று இத்தல ஈசனை வழிபடலாம். அதன் மூலம் காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கே அம்பாள் சந்நிதியில் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு விளக்கேற்றி வழிபடுவார்கள். இதன் மூலம் விஷக்கடி பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.

- மல்லிகா அன்பழகன், சென்னை-78