திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 67

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இந்தச் சிலையில் எங்கள் முன்னோரின் தொடர்புகளை நாங்கள் உணர்வதால், கூடுதலாக ஒரு பற்றுதல் உருவாகிறது. பக்தியால் வார்க்கப்பட்டு, பக்தியால் போற்றப்பட்ட பக்திப் பரிபூரணம் இந்த விக்கிரகம்!

`கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய

வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கியபின், என்னெஞ்சினில்

பொருத்தப்படாது, எம் இராமானுச மற்றோர் பொய்ப் பொருளே...’

- இராமானுச நூற்றந்தாதி - 78

ஸ்ரீராமநுஜரின் விளக்கம் சுல்தானை சிந்திக்கவைத்தது. இந்த நிலையில் சுல்தானுடன் இருந்த பிரதானி ஒருவர், சுல்தானின் காதில் எதையோ கூறினார். உடன், முகத்தில் ஆச்சரி யக் கீற்று தோன்ற, தன்னுடைய குறுந்தாடியை நீவியபடியே சுல்தான் சொன்னான்.

“உங்கள் யூகமும் நம்பிக்கையும் சரி என்றே தெரிகிறது. எனக்கொரு சகோதரி இருக்கிறாள். அவளது விளையாட்டுப் பொருள்களில் செப்புச்சிலை ஒன்று இருப்பதும் இப்போதுதான் எனக்கே தெரிய வந்திருக்கிறது. தாங்கள் குறிப்பிடுவது, அநேகமாக அந்தச் சிலையாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.”

“அதைப் பார்த்த மாத்திரத்தில் நான் சொல்லிவிடுவேன்” என்றார் ஸ்ரீராமாநுஜர்.

“அப்படியானால், அதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள்?”

“ஆம்! அழியாத அவனை திரும்பவும் எழுந்தருளச் செய்து வணங்கி ஒய்வு பெற விரும்புகிறோம்.”

ரங்க ராஜ்ஜியம் - 67

“விநோதம்... என் சகோதரிவரையிலும் அது விளையாட்டுப் பொருள்தான். அதுவா உங்களுக்கு இறைவன்?”

“எங்கள் கொள்கைப்படி அவன் துணிலும் இருப்பவன்; துரும்பிலும் இருப்பவன். அந்தச் சிலையில் மட்டும் இல்லாது போவானா?”

“அப்படியானால் புதிய சிலை ஒன்றைச் செய்து அதை வழிபடலாமே... எதற்கு இவ்வளவு பிரயத்தனம்?’’

“இங்கு உள்ள சிலையில் எங்கள் முன்னோரின் பதிவுகள் உள்ளன. ஆகவே, இது உலோக மீட்பு அல்ல; உணர்ச்சிகளின் மீட்பு.”

“அவ்வளவு உயரியது, இப்போது விளையாட் டுப் பொருளாகிவிட்டதே... இன்னமுமா அதனுள் மாண்பு இருக்க முடியும்?’’

ரங்க ராஜ்ஜியம் - 67

“அது பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்தது. இறைவன் வேண்டுபவர்க்கு வேண்டும் விதத்தில் வயப்படுபவன். உங்கள் சகோதரிக்கு விளையாட்டுப் பொருளாய் வயப்பட்டிருப்பதும் அவன் கருணையே.”

``எப்படிக் கேட்டாலும் ஒரு தெளிவான பதிலைக் கூறி என்னை வியக்கவைக்கிறீர்கள். உள்ளபடியே நாம் எதிரெதிர் துருவங்கள். இதுபோல் பேசியபடி இருப்பது எனக்கே வியப்பாகதான் உள்ளது.’’

“எனக்கு யாதொரு வியப்பும் இல்லை. எனது கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். அதுபோல் உங்கள் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். கொள்கைதான் இங்கே வேறு. ஆனால் உறுதிப்பாடு இருவருக் கும் ஒன்றே. இந்த உறுதியை நீங்களும் நானும் மதித்தால் போதும்... நடப்பதெல்லாம் நலமா கவே இருக்கும்''.

ரங்க ராஜ்ஜியம் - 67

ஸ்ரீராமநுஜரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அவரை அழைத்துக் கொண்டு தன் சகோதரியின் அந்தப்புரம் நோக்கி புறப் பட்டான் சுல்தான். அவர்களின் வருகையைச் சகோதரிக்குத் தெரிவிக்க பணிப்பெண்கள் விரைந்தனர்.

அவள் வரும்வரை காத்திருந்த தருணத்தில், ஸ்ரீராமநுஜர் தன்னை மிகவும் பெருமிதத்துடன் பார்ப்பதாக உணர்ந்தான் சுல்தான்.

``என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``சகோதரியைப் பார்ப்பதிலும் ஓர் உயர்ந்த நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதை இப்போது கண்டேன். என்னை அது நெகிழவைத்தது. எங்கள் சமயத்தில் பெண்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதேபோல் எங்களுக் கும் உண்டு. ஒரு பெண்ணை அவள் கணவனைத் தவிர மற்றவர்கள் தவறாகப் பார்த்துவிடக் கூடாது என்பதும் காரணம். ஆனால், இங்கே ஒரு சகோதரனுக்குமா அந்தக் கட்டுப்பாடு?’’

``அப்படியில்லை. உடன் நீங்கள் வந்திருப்பதால், அதை நானும் பின்பற்றுவதே சிறந்தது.’’

``அற்புதம், இதை நான் போற்றுகிறேன்!’’

இப்படி ஸ்ரீராமநுஜர் சொல்லவும், உள்ளே சென்ற தாதி திரும்பி வந்து பணிவோடு வணங்கி, அவர்களை உள்ளே வருமாறு வேண்டினாள்.

உள்ளே செல்லச் செல்ல நல்ல பரிமள வாசம் வீசியது. உயர்ந்த இடத்துக்குச் செல்வது போல் தோன்றியது. சற்றைக்கெல்லாம் சுல்தானின் சகோதரி ரசியா இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றாள்.

சல்லடை போன்ற மேலாடை தரித்து, அதனுள் தன் முகம் மறைத்து, பணிந்து, முகம் தாழ்த்திக் கையசைத்து அவள் வரவேற்ற விதம் மிகவும் பணிவானதாகவும் மதிப்பானதாகவும் இருந்தது.

“ரசியா!”

“அண்ணா...”

``உன் பொழுதுகள் நன்றாக கழிகின்றனவா?’’

``எல்லாம்வல்ல அல்லாவின் கருணையாலும் தங்களின் பேரன்பினாலும் எனக்கு யாதொரு குறையும் இல்லை அண்ணா.’’

ரங்க ராஜ்ஜியம் - 67

``உன் இருப்பிடம் மிகவும் வாசமாக உள்ளதே?’’

``ஓ அதுவா... நான் என் மனம் கவர்ந்த உலோகச் சிற்பம் ஒன்றுடன் விளையாடி வருகிறேன். அந்தச் சிற்பம், பார்ப்பதற்கு ஓர் அரசனைப் போல் இருக்கிறது. என்னவோ தெரியவில்லை, அதைக் கொண்டாடத் தோன்றியது. அதனால் வாசனைத் திரவியங்கள் தெளித்து ஊர்வலம் போல் பவனி வரச் செய்து, எனக்கு நானே மகிழ்ந்த வண்ணம் உள்ளேன்’’ என்ற ரசியா, சற்றுத் தள்ளி பின்னால் தண்டமுடன் கண்களை மூடியபடி நின்ற ஸ்ரீராமநுஜரைக் கண்டாள்.

‘`அண்ணா யார் இவர்?’’ என வினவினாள்

``இவர் ஒரு துறவியம்மா. நீ எந்தச் சிற்பம் குறித்து சொன்னாயோ, அதற்காக வந்திருப்பவர்.’’

``என்ன சொல்கிறீர்கள்?’’

சுல்தான் ரசியாவிடம் சகலத்தையும் விவரித்தார். அனைத்தையும் கேட்ட ரசியாவின் முகத்தில் வாட்டம்.

``ஏனம்மா உன் முகம் வாடி விட்டது?’’

``நான் கொண்டாடும் ஒன்றைப் பிரிவதா என்ற கேள்வியே வாட்டத்தைத் தந்துவிட்டது.’’

``சிலைகளை ரசிப்பதே நம் வழக்கம். நீ கொண்டாடுகிறேன் என்கிறாயே... எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.’’

“எனக்கும்தான் அண்ணா! கண்களைக் கவரும் பல பொருள்களும் ஓவியங்களும் நம் அரண்மனையில் அதிகம் உண்டுதான். ஆனால், அவற்றைவிடவும் இந்தச் சிலையின் மீதுதான் எனக்கு ஈர்ப்பு அதிகமாக உள்ளது. இதைப் பார்த்தாலே மனம் நிறைந்து அமைதி ததும்புகிறது. எனவேதான் இதைப் பிரியாது என் சயனக் கூடத்திலேயே வைத்திருக்கிறேன். பொழுது விடிந்தால் நான் பார்த்திடும் முதல் முகம் இதன் முகமாகவே இருத்தல் வேண்டும் என்றும் மனம் துடிக்கிறது.’’

``அப்படியானால் இதைத் திருப்பித் தர

நீ சம்மதிக்க மாட்டாயா?’’

``ஏனோ அப்படிச் சொல்லவும் மனம் வர மறுக்கிறது. அதேநேரம் பிரியவும் மனம் மறுக் கிறது’’ என்று அந்தச் சிலையை நெருங்கியபடியே ரசியா கூறவும் ஸ்ரீராமநுஜர் திருவாய் மலர்ந்தார். அந்தச் சிலையைப் பார்த்து கைகூப்பியபடியே பேசலானார்.

``அம்மா உன் பிரேமை எனக்குப் புரிகிறது. எல்லாம் அவன் செயல். இது, நாங்கள் போற்றி வணங்கி வந்த உற்சவ மூர்த்தி விக்கிரகம். இதை நாங்கள் வணங்காத நாளில்லை; போற்றாத நாளும் இல்லை. இது உலோகத்தால் செய்யப் பட்டிருக்கலாம். அவ்வண்ணம் அதைச் செய்யத் தூண்டியது எங்கள் பக்தி உள்ளமே.

ஆம்! பக்தியால் வார்க்கப்பட்டு, பக்தியால் போற்றப்பட்ட பக்தி பரிபூரணம் இந்த விக்கிரகம். அதனாலேயே எவ்வித கொள்ளைச் சம்பவத்திலும் இந்தச் சிலை எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை; இங்கேயும் தங்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.

நாங்கள் நினைத்தால் இதைப்போல் அநேக சிலைகளைச் செய்து கொள்ள முடியும். அவற்றிலும் இறைவன் இருக்கவே செய்வான். ஆயினும் ஒரு நெடிய கால தொடர்பு புதியற்றுக்கு ஏற்படாது. இதனுள் நாங்கள் எங்கள் முன்னோரின் தொடர்புகளை உணர்வ தால், கூடுதலாக ஒரு பற்றுதல் உருவாகிறது. எனவே, தாங்கள் இச்சிலையைத் திரும்ப அளித்து, எங்களின் குறை நீக்கவேண்டும்.’’

ஸ்ரீராமநுஜரின் மிக நிதானமான இதமான பேச்சு ரசியாவையும் சிந்திக்க செய்தது. கண் களில் கண்ணீர் துளிர்த்தது. அந்த முத்துமாலை சூட்டப்பட்ட சிலையை எடுத்து அதன் கன்னத்தில் முத்தமிட்டவள், ஒரு குழந்தையைப் பிரிய நேரும் தாயைப் போல பரிதவித்தாள். அதை அவள் ஸ்ரீராமநுஜர் வசம் தந்த தருணத் தில் மயக்கத்துக்கும் ஆளானாள்.

சுல்தான் அதிர்ந்தான். ஒருபுறம் சேடிப் பெண்கள் அவளின் மயக்கத்தைத் தெளிவிக்க முயல, சுல்தான் கவலையோடு ஸ்ரீராமநுஜ ரைப் பார்த்தான்.

அத்துடன், ``இப்படி ஒரு சம்பவத்தை நான் கற்பனையும் செய்து பார்த்ததில்லை. என் சகோதரியின் நிலை எனக்கே நம்ப முடியாத தாக உள்ளது’’ என்றான்.

``எனக்கும் இது வியப்பளிக்கும் ஒன்றே. ஆயினும் எம் இறைவன் லீலைகள் பல புரிபவன் என்று அறிந்திருப்பதால், இதையும் அவனின் ஒரு லீலாவிநோதமாகவே காண்கிறேன்’’ என்று ஸ்ரீராமநுஜர் பதில் உரைத்தார்.

``லீலையோ எதுவோ என் சகோதரி வருந்துவதையோ, அதனால் அவள் மயங்குவதையோ என்னால் சகிக்க முடியாது. எனக்கு அவளின் மகிழ்ச்சி முக்கியம்.’’ என்றான் சுல்தான்.

``உங்கள் சகோதரி ஒருவரின் மகிழ்ச்சியே உங்களுக்குப் பிரதானம் என்கிறீர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான... ஏன், கோடிக்கணக்கான பேர் இந்த இறையுருவைத் திரும்ப ஒப்படத்தால் மகிழ்வார்கள். ஓர் அரசனின் இடத்திலிருந்து அவர்களை எண்ணிப் பாருங்கள்.’’

``அப்படி நான் பார்த்ததால்தான், விசேஷ அனுமதியோடு உங்களை இங்கு வரை அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் இங்கு நடப்பது என்னை வருத்துகிறதே?’’

சுல்தான் இப்படிக் கூறவும் மயக்கம் நீங்கி கண் விழித்த ரசியா, கண்கள் கலங்கிட விக்கிரகத்தைப் பார்த்தாள்.

சுல்தான் அவளிடம், ``ரசியா! இதைப் போல் நூறு பொம்மைகளை நான் உனக்குச் செய்து தருகிறேன். நீ வருந்தாதே. சிலைகளை நாம் ரசிக்கலாம். வழிபாட்டுக்கு இணையாக நேசிப்பது கூடாது; நம் மார்க் கத்தை நீ மறந்துவிடாதே!’’

``அண்ணா நான் மறக்கவில்லை. நம் வரையிலும் இறைவன் ஒருவனே. அவன் வடிவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன். அப்படிப்பட்டவன், பசியின்போது உணவாய்ப் புலனாவது போல், என் அமைதிக்கு இப்படி ஓர் உருவாகிக் காட்சி தருகிறான். நான் என்ன செய்வேன்?’’

ரசியா கண்ணீர் சிந்தினாள்.

சுல்தான் அவளிடம் கேட்டான்: ``எனில், சிலையைத் திருப்பித் தர முடியாது எனத் தீர்மான மாகச் சொல்லிவிடலாமே?’’

இப்போது ஸ்ரீராமநுஜர் இடைமறித்தார்.

``சுல்தான் அப்படிக் கூறக் கூடாது. இங்கே, நம்மிலும் பெரியவன் இறைவனாகிய அவனே. அவன்தான் நம் எல்லோரையும் ஆட்டிப் படைப்பவன். அவனிடமே நாம் கேட்கலாமே..? என்றார்.

``என்ன... சிலையிடம் கேட்பதா..?’’

சுல்தான் வியந்தான்!

- தொடரும்...

கந்தன்குடி முருகன்!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகிலுள்ள திருத்தலம் கந்தன்குடி. பிரசித்திபெற்ற முருகன் திருத்தலம் இது.

அம்பன், அம்பரன் ஆகிய அசுரர் களை அழிக்கப் புறப்பட்டாள் சக்திதேவி. அப்போது, `அவர்களை நானே அழிக் கிறேன்' என்று கொதித்தெழுந்தார் முருகப்பெருமான். `நீ இங்கு இருந்து கொள். அவர்களை நானே அழித்து வருகிறேன்' என்று முருகனுக்கு அருளி, அம்பாள் அசுரவதம் நிகழ்த்திய தலம் கந்தன்குடி.

இந்தத் தலத்துக்கு வந்து கந்தன்குடி முருகப்பெருமானை மனமுருக வேண்டி வணங்கி வழிபட்டால், தடைகள் மற்றும் தோஷங்கள் நீங்கி, விரைவில் கல்யாண வரம் கிடைக்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் கந்தன் கருணை யால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்