
இறைவனிடமே தீர்வு கேட்போம்
`தற்க சமணரும் சாக்கிய பேய்களும் தாழ் சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்
நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே
- இராமாநுஜ நூற்றந்தாதி - 99
சுல்தான் தன் தங்கை கண்ணீர் விடுவதைப் பொறுக்காமல், `எனில் சிலையைத் தரமுடியாது என்று கூறிவிடலாமே' என்று கூற ராமாநுஜர் இடைமறித்து ``இறைவனிடமே தீர்வு கேட்போம்'' என்றார்.
`சிலையிடம் கேட்பதா' என்று சுல்தான் வியந்தான்.
``சிலையாக மட்டும் நினைத்தால் கேட்க தோன்றாதுதான். இறைவனே சிலை வடிவில் இருப்பதாக நம்பும்பட்சத்தில் கேட்கத் தோன்றும்'' என்றார் ஸ்ரீராமாநுஜர்.
``எப்படி?''
``இப்போது இங்கே நாம் பேசு வதை எல்லாமும் அவன் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். என்னை இங்கே வரச் செய்தவ னும் அவனே. தங்கள் சகோதரியாரின் மனத்தில் இடம் பிடித்தவனும் அவனே. எனவே அவனே இதற்கு விடை கூறட்டும்.''
ஸ்ரீராமாநுஜர் இப்படி சொன்ன நொடியில் சிலையின் கழுத்தில் கிடந்த முத்துமாலை தானாய் அவிழ்ந்து கீழே விழுந்தது. அதைப் பார்த்ததும் ஸ்ரீராமாநு ஜரிடம் பெரும் சிலிர்ப்பு.

``இதோ அவனே உத்தரவு இட்டுவிட்டான். எம்பெருமானே! உன் கருணையே கருணை...'' என்று நெகிழ்ந்தார் ஸ்ரீராமாநுஜர்.
``இதுவா சம்மதம்?'' - சந்தேகத் துடன் கேட்டான் சுல்தான்.
``ஆம், நடப்பது கலியுகம். இதில் இறைவனின் பேச்சென்பது இப்படி நிமித்திகம் சார்ந்தே இருக்கும்.''
``இதை எப்படி நம்புவது? நூல் நலிந்துபோனதால்கூட மாலை அறுந்து விழுந்திருக்கலாம் அல்லவா?''
``நலிந்த நூலாலும் ஒரு மாலை அறுந்து விழும்தான். ஆனாலும் நாம் பிரார்த்திக்கும் நொடியில் இவ்வாறு நிகழ்ந்ததால், இதை இறைவனின் பதிலாகக் கொள்வதே நமக்கழகு.''
``இதற்கு... இறைவன் நேரிலேயே தோன்றி கூறலாமே... ஏன் இந்தக் குழப்பமான செயல்பாடு?''
``அப்படியானால், அவனை நேரில் பார்த்தால்தான் நாம் நம்புவோம் என்றாகிறதே? அவனைப் பார்த்திராதவர் பக்தி எல்லாமும் நம்பிக்கை அற்றது என்றும் ஆகிறதே?''
இப்படி வாதம் வளர்ந்த நிலையில், ரசியாவே அதற் கொரு வழியை காணலானாள். ``அண்ணா! நான் இதை பிரிய விரும்பவில்லை. அதே நேரம் இவர் விருப்பமும் ஈடேற வேண்டும். இவர் கூறியது போல், சிலை என்னிடம் இருந்தால் என் ஒருத்திக்கே இது சொந்தம். ஆலயம் கண்டால் ஆயிரமாயிரம் பேருக்கு சொந்தம். எனவே அதற்கேற்ப முடிவு செய்யுங்கள்'' என்றாள்.
``தாயே! உங்களை நான் எங்கள் சூடிக் கொடுத்த சுடர்கொடியாகவே காண்கிறேன்'' என நெகிழ்ந்தார் ஸ்ரீராமாநுஜர்.
``அது யார்?'' எனக் கேட்டான் சுல்தான்.
``ஆண்டாள் அவள் பெயர். தங்கள் சகோதரி இச்சிலையை உயிராகக் கருதுவதுபோல அவளும் திருவில்லிப்புத்தூர் ஆலயத்தின் இறைவந்த் தன் உயிராய்க் கருதி, தினமும் அவனுக்கான மாலையை தான் அணிந்து அழகு பார்த்து பிறகே அனுப்புவாள். அப்படி ஒரு பக்தி. அதன் விளைவாக அவள் இறுதியில் அவனையே மணந்து அவனோடும் கலந்து விட்டாள்.''
``அப்படியானால் நானும் அவ்வண்ணமே விரும்புகிறேன்.''
``உன் விருப்பம் அதுவானால் நீ இவரோடு செல்ல நேரிடும். அதை யோசித்தாயா?''
சுல்தான் கேட்க, அவன் சகோதரி பதில் சொன்னாள்: ``நன்றாக யோசித்தே சொல் கிறேன். என் வாழ்வு இனி சிலையோடுதான்!''
``நல்லது தாயே. நான் தங்களை அழைத்துச் சென்று, எங்கள் ஆலயத்தில் இச்சிலையை நிறுத்தி, தங்களையும் உடனிருக்கச் செய்வேன். அங்கு ஆண்டாள் நாச்சியார் போல் தங்களைத் துலுக்க நாச்சியாராக வரித்து தங்களை எல்லோரும் வணங்கச் செய்கிறேன்... போதுமா?'' - ஸ்ரீராமாநுஜர் இவ்வாறு கூறவும் சுல்தான் முகத்தில் ஏக சிந்தனை.

``சுல்தானுக்கு இத்தேர்வு உசிதமில்லையோ?''
``அப்படி இல்லை. எனக்கு என் சகோதரியின் மகிழ்ச்சியே முக்கியம். அதேநேரம் எங்கள் மார்க்க நெறிகளை விட்டு அவள் விலகவும் கூடாது. அது குறித்தே யோசிக்கிறேன்.''
``என் வழிமுறையைப் பின்பற்ற எனக்கு எப்படி உறுதியும் விருப்பமும் உள்ளனவோ, அப்படியே தங்களின் சகோதரியும் திகழலாம். எனக்கு அதில் ஆட்சேபணையே இல்லை. அவரவர் உணர்வும் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும். அதுவே முக்கியம்.''
இவ்வாறு ஸ்ரீராமாநுஜர் கூறியதுடன், எம்பெருமானின் திருச்சிலையுடன் மைசூர் நோக்கிப் புறப்பட்டார். ஒரு தனித்த ரதத்தில் சேடியர்களோடு ரசியாவும் உடன் புறப்பட் டாள்.
மைசூர் நகரமே ஸ்ரீராமாநுஜரின் வருகைக் காகக் காத்திருந்தது. மன்னனான விஷ்ணுவர்த்த ராயன், நடக்க முடியாத விஷயம் நடந்து முடிந்த மகிழ்வில் பெரும் உணர்ச்சிப் பெருக்கில் இருந்தான்!
இந்த நிலையில் ஸ்ரீராமாநுஜர் வந்துசேர்ந்தார். டெல்லியிலிருந்து ரசியா பூஜித்த நம்பி என்கிற செல்லப்பிள்ளையான சம்பத்குமாரனை திருக்குலத்தவர்களே சுமந்து வந்திருந்தனர். ஸ்ரீராமாநுஜர், மன்னன் விஷ்ணுவர்தராயனிடம் திருக்குலத்தவரின் பாதங்களைக் கழுவி அந்நீரை அனைவர் மேலும் தெளிக்கப் பணித்தார்.
எம்பெருமானைத் தங்கள் தோள்களில் சுமந்து வந்தவர்களுக்குக் காட்டப்படும் இந்த வந்தனம், இரண்டு விதங்களில் சிறப்புக்குரியது. ஒன்று சாதி பேதமற்ற பார்வை; அடுத்து இறை அடியவர்களும் இறைவனுக்கு மிகப் பிரியமானவர்களே என்கிற கோணம்.

அதைத் தொடர்ந்து ஸ்ரீராமாநுஜர் அங்குள்ளோர் முன் ஒரு பிரசங்கம் நிகழ்த்த லானார். முன்னதாய் பெரியாழ்வாரின் பல்லாண்டு பாசுரம் அடியவர்களால் பாடப் பட்டது. அப்போது முதலியாண்டான் கிடம்பி ஆச்சான், கோவிந்தன் உள்ளிட்ட அவரின் முக்கிய சீடர்களும் உடனிருந்தனர். ஸ்ரீராமாநுஜர் திருவாய் மலரலானார்.
“மஹா பக்தச் சிரோமணிகளே... இன்று ஒரு மகத்தான நாள். இரவும் பகலுமாய்க் கழியும் பொழுதுகள் நல்ல அடையாளத்தையும் மதிப்பையும் பெறுவது என்பது, அந்தப் பொழுதுகளில் நடக்கும் சம்பவங்களால்தான்.
அந்த வகையில் இன்றைய பொழுது, நம்பி எனப்படுகிற செல்லப்பிள்ளையான சம்பத் குமாரன், தன் பூலோகக் கிரகத்துக்குத் திரும்பிய பொழுதாகும்!
கொள்ளை போனதாய்க் கருதப்பட்டவன், துளியும் மாசுமருவின்றித் திரும்ப வந்திருக் கிறான். இவன் கொள்ளையடிக்கப்பட்ட போது, ‘இவனுக்கே இக்கதியா’ என்று கலங்கியவர் பலருண்டு. ஆனால் நம் பார்வைக்கு அது கொள்ளை. உண்மையில் அவன் ஒரு சுற்றுலா சென்றதுபோல்தான் தெரிகிறது. அப்படிச் சென்றவன், தான் சென்ற இடத்தின் செல்லச் சீமாட்டியான நம் தாய்க்கு ஒப்பான ரசியாபேகத்தின் மனத்தைக் கொள்ளைகொண்டு, அவரோடுதான் திரும்ப வந்திருக்கிறான். உண்மையில் இவனே கொள்ளையன்.
கொள்ளை என நாம் கருதும் இச்சம்பவங்கள் வரலாற்றில் அழுத்தமாய்ச் சிந்திக்கப்படும். இக்கொள்ளை மட்டும் நிகழாது போயிருந்தால், இந்தப் பரத கண்டம் முழுக்கச் சென்றவன் என்ற பாக்கியம் எனக்கும் ஏற்பட்டிருக்காது. அவனைச் சுமந்து வரும் பாக்கியம் திருக்குலத் தவர்க்கும் வாய்த்திருக்காது. பாழ்ப்பட்டிருந்த இந்த மேல்கோட்டைக் கோயிலும் புத்துயிர் பெற்றிருக்காது. ஒரு சம்பவம் - ஆனால் எவ்வளவு நன்மைகள்!
இனி, இங்கே இந்த ஆலயம் கால காலத்துக் கும் போற்றப்பட்டு, வைணவம் தழைத்திடத் துணை நிற்கும். அவன் நிர்குணன், சர்வக்ஞன், பேதம் கடந்தவன் என்பதற்குச் சான்றாக அவன்பால் காதல்கொண்ட சுல்தானின் சகோதரி ‘துலுக்க நாச்சி’ என்றாகி எம்பெருமா னின் திருவடி நிழலில் இளைப்பாறுவாராக.
ஸ்ரீஆண்டாளைக் கொண்டாடும் வண்ணம் இந்தத் துலுக்க நாச்சியையும் நாம் கொண்டா டிடுவோம். என் ஆத்ம குருவான ஆளவந்தாரின் ஆசைகளில் பல இங்கே நிறைவேறியுள்ளன.
இது போதாது. இங்கிருந்து வடக்கு நோக்கி வைணவத்தைப் பரப்பும் வண்ணம் ஸ்ரீமட ஸ்தாபனங்களைச் செய்து, விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைக் காலமெல்லாம் பரப்புகின்ற கடமையையும் அடியேன் இப்போது இங்கே தொடங்கிட விரும்புகிறேன்.

இவற்றை நிலைப்படுத்திய நிலையில், நான் திருவரங்கம் திரும்பி அங்கே அரங்கனடியில் நின்று என் அந்திமகாலச் சேவையைத் தொடர விரும்புகிறேன்...''
இங்ஙனம் ஸ்ரீராமாநுஜர் கூறவும் அங்கிருந்த அனைவரிடமும் பேரமைதி. மன்னன் விஷ்ணு வர்தராயன் கண்கலங்கினான்.
“ராயா என்ன இது? அரசன் அழலாமா?”
“நல்ல குருவின் நிமித்தம் தாராளமாய் அழலாம் சுவாமி.”
“என்றால் காரணம் நான் என்றாகிறதே?”
“ஆம்! தாங்கள் இப்போது வயதில் சதம் கண்டுள்ளீர்கள். இப்படி ஒரு முதுமையில் தாங்கள் டெல்லிவரை சென்று வந்ததே பெரும் பாடு. இந்த நிலையில், மீண்டும் தாங்கள் திருவரங்கம் நோக்கிச் செல்வதை என்னால் ஏற்க முடியாது. தங்களின் அணுக்கம் எங்களுக்கு இப்போதும் எப்போதும் வேண்டும்.இனி, இந்த மைசூரும் மேல்கோட்டையுமே தங்களின் கோட்டை. இதைவிட்டுத் தாங்கள் செல்லலாகாது.”
“உன் குருபக்தியைக் கண்டு மகிழ்கிறேன். அதேவேளை, என்மீது குருபக்தியோடு திகழ்ந்து தன் இரு கண்களையும் இழந்துவிட்ட கூரத்தாழ்வானை இவ்வேளை எண்ணிப் பார்க்கிறேன். அவன் தியாகத்தை நான் போற்றி யாக வேண்டும். அவன் மீண்டும் பார்வை பெறவேண்டும் என்பதன் நிமித்தமே நான் திருவரங்கம் செல்ல விரும்புகிறேன்.”
“அப்படியானால், இங்கே உங்கள் இடத்தில் இருந்து யார் வழிகாட்டுவார்?”
“கவலைப்படாதே... இங்கேயும் நான் இருப்பேன்!”
“அது எப்படி?”
``நம் வழக்கில் சிலைகள் கலைப் பொருள்கள் மட்டுமல்ல. மந்திரபூர்வமாக அவற்றுக்கு உயிர் ஊட்டப்படும்போது, அவை சக்திக் களஞ்சிய மாகி, வேண்டுவோர்க்கு வேண்டுவதை அருள்வனவாகிவிடுகின்றன. அவ்வகையில் என்னைப் போலவே நீ ஒரு சிலையைச் செய்வாயாக. நான் அதைத் தழுவி என் ஆத்ம சக்தியைச் செலுத்தித் தருவேன். அது நான் உகந்தளித்த ‘தமருகந்த மேனியாக’ திகழ்ந்து காலாகாலத்துக்கும் உங்களுக்குக் குருவருளோடு இறையருளையும் பெற்றுத் தந்திடும்...”
ஸ்ரீராமாநுஜரின் அக்கருத்தைக் கேட்ட மன்னன் விஷ்ணுவர்தன் உடனடியாக ஒரு சிலையைச் செய்தான். அதை ஸ்ரீராமாநுஜர் தழுவி மகிழ்ந்து, தன் ஆத்ம சக்தியை அதனுள் நிரப்பியவராய் அனைவரிடம் இருந்தும் பிரிந்து புறப்பட்டார்.
முதலியாண்டானும், கிடம்பி ஆச்சானும் உடன் புறப்பட்டனர். விஷ்ணுவர்தராயன் நெடுந்தூரம் வரை வந்து விடை தந்ததோடு ஸ்ரீராமாநுஜரின் பல்லக்கு கண்களை விட்டு மறையும்வரை நின்று பார்த்துவிட்டுப் பிறகே திரும்பிச் சென்றான்.
அப்படிச் சென்றவன் ஸ்ரீ ராமாநுஜரால் நிறுவப்பட்ட பலநூறு மடங்களுக்கும் நிவந்தம் அளித்து, அந்த மடங்கள் தங்கள் வைணவத் திருப்பணியைத் தொடர்ந்திட வழிவகைகள் செய்தான்.
ஸ்ரீராமாநுஜரும் திருவரங்கம் திரும்பினார். எல்லையைத் தொட்ட நொடி சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கியவர் காவிரியாற்றைத் தாண்டுகையில் சிலிர்த்துப் போய் நின்றார்.
ஸ்ரீராமாநுஜரைத் தண்டிக்க நினைத்த கிருமி கண்ட சோழன் நோயுற்று மாண்டிருந்தான். ஸ்ரீராமாநுஜருக்குக் கேடு நினைத்த எவரும் நல்ல நிலையில் இல்லை. அவரவர் கர்மத்தால் அதற்குரிய இடர்களை அடைந்து, பலர் உயிர் விட்டிருந்தனர். ஸ்ரீராமாநுஜர் இருந்தபோது கூட வராத எழுச்சி அவர் இல்லாதபோது வந்திருந்தது. அது அவருக்குள் எதிரொலித்தது.
கூரத்தாழ்வான் எனப்படும் கூரேசன், தன் கண்களை இழந்த நிலையில், தன் இரு பிள்ளை களான பராசரனுடனும், வியாச பட்டன் எனப்படும் ராம பிள்ளையுடனும் ஊர் எல்லையில் மலர்களை ஏந்தியபடி காத்திருந்தார்!
- இன்னும் வரும்...