மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 69

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

ஸ்ரீராமாநுஜர் வந்ததும் மலர்களைத் தூவி அனைவரும் மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமாநுஜர் திருவரங்கம் திரும்பினார். எல்லையைத் தொட்ட நொடி சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கியவர், காவிரியாற்றைத் தாண்டுகையில் சிலிர்த்துப்போய் நின்றார்.

அவர் திருவரங்கத்தில் இருந்தபோதுகூட வராத எழுச்சி, அவர் இல்லாதபோது வந்திருந் தது. அது, அவர் ஊருக்குள் நுழைந்தபோது எதிரொலித்தது!

ஊர் எல்லையில் கூரத்தாழ்வான் எனப்படும் கூரேசன் தன் கண்களை இழந்த நிலையில், தன் இரு பிள்ளைகளான பராசரனுடனும் வியாச பட்டன் எனப்படும் ராமபிள்ளையுடனும் மலர்களை ஏந்தியபடி காத்திருந்தார்.

ஸ்ரீராமாநுஜர் வந்ததும் மலர்களைத் தூவி அனைவரும் மகிழ்ந்தனர். ஸ்ரீராமாநுஜர் கூரேசரை ஆரத் தழுவிக்கொண்டார்.

``கூரேசா! என் சீடர்த் திலகமே! உன்னை இந்த நிலையிலா நான் காணவேண்டும்?’’ என்று கண்ணீர் உகுத்தார்.

“ஸ்வாமி... என்ன இது? தாங்களா கண்ணீர் சிந்துவது? ஐயோ, நான் குருவை அழச்செய்த பாவியாகிவிட்டேனே...” என்று கூரேசரும் படபடத்தார்.

“நீ பாவி இல்லை கூரேசா... நானே பாவி...”

ரங்க ராஜ்ஜியம் - 69

“தாங்களா பாவி? தவறு. வராது வந்த மாமணியும் தாங்களே; மாமுனியும் தாங்களே. தாங்கள் மறந்தும் இப்படிக் கூறக் கூடாது.”

``நீ ஸ்ரீவைணவ சித்தாந்தத்தின் வைராக்கிய சாட்சியாகத் திகழ்கிறாய். காவி தரித்து சந்நியாசம் வாங்கிக்கொள்ளாவிட்டாலும் நீ என்னிலும் மேலான சந்நியாசி. ராமாயணத்தில் பரதன் பற்றிக் கூறுகையில், `ஆயிரம் ராமர் ஒரு பரதனுக்கு ஈடாவரோ' என்பர். நான் இப்போது அதுபோல் சொல்கிறேன்... ஆயிரம் ராமாநுஜர் ஒரு கூரேசனுக்கு ஈடாக முடியாது...’’

“இதெல்லாம் பெரும் சொற்கள். இதைக் கேட்க நான் காத்திருக்கவில்லை; தங்களின் திருவடி நிழலுக்கே காத்திருந்தேன்.’’

``உன் ஒவ்வொரு சொல்லும் உன் வைராக்கியத்தை, குருபக்தியைப் பேரொளியோடு வெளிப்படுத்துகிறது. நீ கண்களை இழந்துவிட்ட போதிலும் தைரியத்தையும் வீர்யத்தையும் துளியும் இழக்கவில்லை.''

``நான் உங்களால் உருவாக்கப்பட்டவன். அப்படியிருக்க அவை எப்படி என்னிடம் இல்லாமல் போகும்? புறக்கண்கள் போனால் என்ன... அகக் கண்களில் எவ்விதத் தடையும் இன்றி அரங்கனை தரிசித்தப்படி இருக்கிறேன்.!”

“கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. கூரேசா! என் பொருட்டு நீ காஞ்சியம்பதிக்கு என்னுடன் வர வேண்டும்.”

“காஞ்சிக்கா... இந்த வயதிலா?”

``உன் முன்னால் வயது ஒரு பொருட்டே இல்லை. காஞ்சிப் பேரருளாளன் வரம் தரும் மூர்த்தியாக - வரதனாகத் திகழ்பவன். அரங்கனே உறங்கன்; நீ கேளாமலேயே உனக்குப் பார்வை அளித்திருக்க வேண்டியவன் அருளாது கிடக்கிறான். அதனாலேயே அவனு டைய வரம் தரும் அம்சத்திடம் சென்று, உனக்குப் பார்வை வேண்டி பிரார்த்திக்க விரும்புகிறேன்.

நான் ஸ்ரீபாஷ்யம் கூறும்போது படி எடுத்து எழுதியவன் நீ. அப்போது நான் பொருள் கூறுமுன், சில பதங்களுக்கான பொருளை வேகமாய்க் கிரகித்துக் கூறி, பின் எழுதியவனும் நீ! இந்த ஒரு செயலுக்குப் பரிசாகவும்... காஞ்சிப் பேரருளாளனிடம் உன் பார்வைக்காகப் பிரார்த்திக்க விரும்புகிறேன்.''

``சுவாமி! தங்கள் விருப்பத்தை நிராகரிக்கும் ஆற்றல் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இப்போதும் அதுவே உண்மை. உம் விருப்பப்படியே வருகிறேன்'' என்று கூறி, அடுத்த சில தினங்களிலேயே ஸ்ரீராமாநுஜருடன் காஞ்சிக்குச் சென்றார் கூரத்தாழ்வார்.

கண்களை இழந்த நிலையில் ஸ்ரீராமாநுஜர் முன்னிலையில் `வரதராஜ ஸ்தவம்' எனும் துதியினைப் பாடினார். காஞ்சி வரதனிடம், தனக்குப் பார்வை வேண்டும் எனக் கேட்காமல், தனக்கு இந்த நிலை ஏற்படக் காரணமான நாலூரானுக்கு... தனக்குக் கிடைத்த - கிடைக்கப் போகிற அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 69

கூரேசரின் செய்கை ஸ்ரீராமாநுஜரை நெஞ்சம் விம்மச் செய்தது. பகைவனுக்கும் அருளும் இந்தப் பண்புதான் ஸ்ரீவைணவனின் முதல் அம்சம். உலகில் தன் வரையில் எது நடந்தாலும், அதன் பின்னால் ஒரு சரியான காரண - காரியம் இருப்பதை நம்புபவர்களாலேயே இவ்வாறு செயல்படவும் முடியும்.

தனக்கு நேரும் துன்பங்கள் சோதனை மாத்திரமே! அந்தத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள மறுத்து பாதைமாறு வது விசிஷ்டாத்வைத சித்தாந் தத்துக்கு அழகல்லவே. கூரேசரின் இச்செயலால் அவரின் புகழ் விண்ணளவு உயர்ந்தது.

இதன்பின் கூரேசர் அதிக காலம் வாழ்ந்து விடவில்லை. ஸ்ரீராமாநுஜர் பார்த்திட, அவர் எதிரில் ஒரு மகத்தான மனிதனாய், சீடனாய், வைணவனாய்த் திகழ்ந்து, பின் உலகைத் துறந்தார்.

ஸ்ரீராமாநுஜரை கூரேசரின் பிரிவு பெரிதும் பாதித்தபோதிலும் அவர் பிள்ளைகளான பராசர ரும், வேதவியாசனும் `நாங்கள் இருக்கிறோம்' என்று ஸ்ரீராமாநு ஜருக்குத் தோள் கொடுத்தனர்!

கூரேசரின் பிள்ளைகளுக்குப் பராசரரின் பெயரையும், வேதவியாசரின் பெயரையும் சூட்டியதே ஸ்ரீராமாநுஜர்தான். அந்தப் பெயர்களுக்கேற்ப அவர்கள் விளங்கினார்கள். தன் காலத்துக்குப் பிறகு இவர்களால் தன் கொள்கைகள் தொடர்ந்திட வேண்டும் என்று ஸ்ரீராமாநுஜர் விரும்பிய வண்ணமே அவர்கள் நடந்துகொண்டனர்.

வைணவம் என்பது உயர்ந்த மானுட நெறி. அது மதம் என்றால் மதம்; இனம் என்றால் இனம்; தடம் என்றால் தடம் என்பதை இவர்கள் வழியாகவும் ஸ்ரீராமாநுஜர் வளர்த்தெடுத்தார்.

வைணவத்திற்குள் சாதிபேதங்களுக்கே இடம் கிடையாது. சாதி என்ற ஓர் அடையாளம் அவசியப்படும் பட்சத்திலும் ஒருவன் தன்னை வைணவன் என்று கூறிக்கொண்டால் போதும், அதிலேயே எல்லாம் அடங்கிவிட வேண்டும் என்று ஸ்ரீராமாநுஜர் விரும்பினார்.

சாதிபேதம், நாத்திகம், ஒழுக்கமின்மை இவையே மனிதர்களைக் குருடர்களாக்கும். இவற்றை அறவே நீக்கி `ஒன்றே குலம் - ஒருவனே தேவன் - அவன் நாராயணன் - அவனுள் எல்லாம் அடக்கம்' என்பதே விசிஷ்டாத்வைதம்.

தனது கொள்கையை தான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீராமாநுஜர் பின்பற்றியும் காட்டினார். அதன்பொருட்டு எவ்வளவோ சம்பவங்கள்!

திருவரங்கச் சுற்றில் அழகன் என்று ஒருவன். அவன் வரையில் பெயர் மட்டும்தான் அழகு. மற்ற எல்லாமே அவனிடம் பழுது.

அதாவது அவனுக்கு வாய் பேச வராது, காது கேட்காது. அதனால் ஊரே அவனை ஒதுக்கி வைத்து ஊமை, செவிடன் என்று மலிவாக அழைத்து வந்தது.

ஸ்ரீராமாநுஜர் ஒருநாள் காவிரிக் குச் சென்று திரும்பும் வழியில், அவரின் பார்வையில் அழகன் தென்பட்டான்.

உடனே ஸ்ரீராமாநுஜருடன் வந்த அவரின் சீடர்கள், `ஏ ஊமையே! ஓரமாய்ப் போ... ஒரு மகான் வரும்போது இப்படித்தான் அழுக்கு ஆடையும், கலைந்த தலையுமாய் எதிரில் வருவாயா... முட்டாளே...' என்று அவனை விரட்டினர்.

அவனோ பரிதாபமாக ஸ்ரீராமாநுஜரைப் பார்த்தான். சீடர்களில் ஒருவர் அவனைக் கோல் ஒன்றால் தள்ளிவிடவும் முற்பட்டார். உடனேயே ஸ்ரீராமாநுஜர் அவரைத் தடுத்தார்.

``இதுபோல் உடல் குறைபாடு உள்ளவர்களிடம் ஒருபோதும் நாம் கோபமோ வெறுப்போ கொள்ளல் ஆகாது. அக்குறைபாடு நமக்கு இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து, நம்மை எம்பெருமான் நன்றாக படைத்தமைக்காக நன்றி கூற வேண்டும். அடுத்து, குறைபாடு உடையவருக்கு அந்தக் குறையின் பாதிப்பு தெரியாத அளவுக்கு உதவவேண்டும்'' என்றார்.

ஸ்ரீராமாநுஜரின் அந்தக் கருத்தைச் சீடர்கள் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழி விட்டுவிட்டனர் என்றே கூறவேண்டும்.

அவனது கர்மவினை அவன் இப்படிப் பிறந்துவிட்டதாக ஒருவர் முணுமுணுத்தார். அவரின் அந்தக் கருத்து ஸ்ரீராமாநுஜரைச் சிந்திக்க வைத்தது.

ஒருவருடைய வாழ்வின் இன்ப துன்பங்களின் பின்னே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதற்கு, அவருடைய கர்மம் ஒரு காரணம் என்றாலும், காரணத்தைச் சொல்லி அவர்களை ஒதுக்குவதும் அலட்சியப்படுத்துவதும் பெரும் பாவம் என்று உணர்ந்தவர் ஒரு காரியம் செய்யலானார்.

எதையும் வார்த்தைகளால் கூறுவதைவிட செயல் வடிவில் செய்திடும்போது அது ஆயிரம் மடங்கு சக்திமிக்கதாகி விடுகிறது.

தன் சீடன் ஒருவன் மூலம், பேசவும் கேட்கவும் இயலாத அழகனைத் தன் இல்லத்துக்கு அழைத்துவரப் பணித்தார். தட்டுத் தடுமாறியபடி தன் முன் வந்து நின்றவனை, துளியும் தயக்கமின்றி கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் ஒரு தனி அறைக்கு அவனை அழைத்துச் சென்றார். முன்னதாக அவனுக்கு நல்ல உணவு அளிக்கப்பட்டு அவன் பசியாறினான். அவனுடைய அழுக்கு ஆடைகள் அகற்றப்பட்டு புத்தாடை அணிவிக்கப்பட்டது. பின் அவனுக்குத் திருமண் காப்பும் இடப்பட்டது.

அவன் பார்ப்பதற்கே ஒரு புதிய மனிதனாய்த் தெரிந்தான். மௌனம் மிகுந்த ஒரு வைணவன் இப்படித்தான் இருப்பான் என்று அவனைப் பற்றிய ஒரு விளக்கம் அளித்த ஸ்ரீராமாநுஜர், தனியறைக்குள் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவனுக்கு ஒரு குருவாய் தன் ஆத்ம சக்தியை வழங்க தீர்மானித்தார்.

- தொடரும்...

தியானமும் தூக்கமும்!

ரங்க ராஜ்ஜியம் - 69

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார். சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்... ''முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!''

- எஸ். மாரியப்பன், தேனி