திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 40

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

தாயே என் நாவில் எப்போதும் நிற்பவள் நீதான்... நீயே இந்த இக்கட்டில் இருந்து என்னைக் காக்கவேண்டும்

‘தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப்போம் - நடுவே

வண்ணம் துழாவியோர் வாடையுலாவும் வள் - வாயலகால்

புண்ணந் துழாமே பொருநீர்த் திருவரங்கா - அருளாய்

எண்ணந் துழாவுமிடத்து உளவோ பண்டும் - இன்னன்னவே?’

-திருவிருத்தத்தில் நம்மாழ்வார்.

திருவரங்கம் ஆலயத்தின் பிரதான அடையாளங் களில் ஒன்று `ஐந்து குழி மூன்று வாசல்’. சித், அசித், பரம்பொருள் எனும் தத்துவங்களைக் குறிப்பது மூன்று வாசல். அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பன - ஐந்து குழிகள். அர்த்த பஞ்சக ஞானம் என்றால் என்ன?

இதற்கு, `அர்த்த பஞ்சக வியாக்கியானம்’ எனும் மணவாள மாமுனியின் நூல் பொருள் கூறுகிறது. மேலும் பிள்ளை லோகாச்சாரியார் என்பாரும் வியாக்யானம் செய்துள்ளார். ‘அர்த்த பஞ்சகம்’ என்றால் பொருள் உணர்ந்துகொள்ள வேண்டிய ஐந்து கருத்துகள் என்பதே பொருள். அவை: உலகின் நிலை, இறைவன் நிலை, வினை நிலை, இறைவனை அடைய வேண்டிய நிலை, மோட்சமடைய தடையில்லாத நிலை. இவைபோக, எம்பெருமானின் ஐந்து நிலைகளையும் இக்குழிகள் ஞாபகப்படுத்துகின்றனவாம். அவை: பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை.

பரத்வம் என்றால் வைகுண்டத்திலுள்ள மிக உயர்ந்த நிலை; வியூகம் என்றால் பாற்கடலில் உள்ள சம்ஹாராதிகள் செய்யும் நிலை; விபவம் என்றால் அவதார நிலை; அந்தர்யாமித்வம் என்றால் அவனே உள்ளுறையும் பரமனாக எல்லோருடைய ஆத்மாவுக்குள்ளும் இருப்பதென்பதாம்; அர்ச்சை என்பது கோயில்களில் அவனுக்கான நம்முடைய வழிபாடு நிலை!

இப்படி, அந்த ஐந்து குழி மூன்று வாசல், நமக்குள் பற்பல சிந்தனைகளை உருவாக்கித் தருகிறது!

பிரம்மனின் சத்யலோகத்தில் இருந்து பூவுலகில் முதலில் அயோத்திக்கும் பின், திருவரங்கத்துக்கும் வந்த அரங்கப் பெருமான் ஆலயமிசை ‘ஐந்து குழி மூன்று வாசல்’ போல் சிந்திக்கவைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல... ஆலயத்தின் ஒவ்வொரு கல் தூணும், நாம் நடக்கையில் கால்படும் பட்டியக்கற்களும், இன்னும் பல சிற்பங்களும்கூட தனக்குள் பல வரலாற்று நிகழ்வுகளை சுமந்து நிற்பவையாகும்.இந்த மண்ணையாண்ட சேர சோழ பாண்டியர் எனும் மூவராலும் போஷிக்கப்பட்ட ஓர் ஆலயமாக அரங்கன் ஆலயம் இருப்பது அதன் மாட்சிமைக்கொரு பெரும் சாட்சி. இம்மூவரைக் கடந்து கன்னடர், தெலுங்கர், மலையாள தேசத்தவர் என்று தென்னாடு சார்ந்தோரும் அரங்கனுக்குப் பெரும் தொண்டாற்றி அவனருளுக்கு பாத்திரமாயுள்ளனர். இவர்களில் கன்னடத்து ஹொய்சாளர்களின் தொண்டும், அவர் தம் பதிவும் ஆலயத்தில் இன்றும் இருக்க காணலாம்.

இன்று சமயபுரம் என்றழைக்கப்படும் மாரியம்மன் திருக்கோயில் கொண்ட தலம், அந்த நாளில் கண்ணனூர் என்ற பெயரில் விளங்கியது. அந்தக் கண்ணனூரைத் தனக்கான தலைநகரமாகக்கொண்டு விக்கிரமபுரம் என்று அதற்கொரு புதிய பெயரையும் அளித்து, இங்கே அதிகாரம் செலுத்தியவன் ‘கர்நாடக தேசத்து சந்திரன்’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இரண்டாம் நரசிம்மன் மகனான வீரசோமேஸ்வரன்.

கி.பி 1253-ல் இவன் சோழனுக்கு உதவி செய்து சோழ ஆட்சியை நிலை பெறச்செய்து அப்படியே தன் அதிகார மையத்தையும் சமயபுரத்தில் அதாவது கண்ணனூர் எனப்படுகிற விக்கிரமபுரத்தில் நிலைபெறச் செய்தான்.

ஹொய்சாள மன்னனான இவன் பெரும் பிணிக்கு ஆளாகியிருந்தான். பெரும் ரோகத்தில் சாகக் கிடந்தவன், அரங்கனைப் பிரார்த்தித்துக் கொள்ளவும் தன்வந்த்ரி சகாயத்தால் குணம் பெற்று எழுந்தான். அப்போது ஜோதிடர்கள் அவனை வழிநடத்தினர். அதன்படி ஒரு சூரியகிரகண நாளில், அவன் சமயபுரத்தில் பலவிதமான தானங்களை அளித்தான்.

குறிப்பாக வேதியருக்குச் சில கிராமங்கள், வேளாளருக்குப் பசு மாடுகளும் உழவு மாடுகளும், சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு நிவந்தங்கள், அரங்கன் ஆலயத்துக்கு நித்யப்படி விளக்கு மற்றும் பந்தங்கள் எரிக்க தேவைப்பட்ட மூவண்டா எண்ணெய்... அதாவது, மூன்று பெரிய அண்டாக்களில் ஒன்றில் எள்ளெண்ணெயும், ஒன்றில் வேப்பெண்ணையும், ஒன்றில் நெய் என்றும் பலவாறு தானங்கள் அளித்துள்ளான். அதற்கான குறிப்புகளும் உள்ளன. இவன்தான் கண்ணனூரில் அதாவது சமயபுரத்தில் அந்த நாளில் போசலேசுவரர் திருக்கோயிலையும் கட்டியவன். அக்கோயிலை ஹொய்சலா மரபு மற்றும் கலாசாரம் சார்ந்து வடிவமைத்து, திருவரங்க வரலாற்றில் தன்னை இணைத்துக்கொண்டான். கி.பி.1022-ல் இருந்து 1342 வரை இவர்கள் காலமே. வினையாதித்தன் என்பவனில் தொடங்கி, வீர சோமேசுவரனைத் தொட்டு நான்காம் வல்லாள தேவனுடன் முடிவடைகிறது ஹொய்சாளர் காலம்.

திருவரங்கன் ஆலயத்தின் ஐந்தாம் திருவீதி விக்கிரம சோழனான அகளங்கன் என்பவனால் நிர்மாணிக்கப்பட்டதாகும். இச்சுற்றில்தான் ஸ்ரீமத் நாதமுனிகள் சந்நிதி, உள் ஆண்டாள் சந்நிதி, வேணுகோபாலன் சந்நிதி, அமிர்தக்கலச கருடன் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, தாயார் சந்நிதி, தேசிகர் சந்நிதி, மேட்டு அழகிய சிங்கர் சந்நிதி, வாசுதேவப் பெருமாள் சந்நிதி, பெரிய வாச்சான் பிள்ளை சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி, பிள்ளை லோகாச்சார்யார் சந்நிதி, பார்த்தசாரதி சந்நிதி, உடையவர் சந்நிதி, திருப்பாணாழ்வார் சந்நிதி, விட்டலகிருஷ்ணன் சந்நிதி, தொண்டரடிப் பொடி ஆழ்வார் சந்நிதி என்று பல சந்நிதிகள் உள்ளன.

இந்த ஐந்தாம் பிராகாரத்தை `அகளங்கன் திருச் சுற்று' என்றழைப்பர். இவன் காலத்தில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. மலையாள தேசத்தில் வாழும் அந்தணர் மற்றும் வைணவர்கள், பங்குனி மாத பிரம்மோத்சவத்தின்போது அரங்கன் ஆலயத்துக்கு வந்து திருவரங்கத்தில் தங்கி, காவிரியில் நீராடி, அரங்கதரிசனம் புரிந்து பிரசாதமாக ஆலயத்துத் திருவமுதினை உண்டு சென்றுள்ளனர்.

இவன் காலத்தில்தான் திருவரங்கத்தில் பெரும் தொண்டாற்றிய குலசேகர அரையன், புண்டரீக நம்பி, திருவாய்ப்பாடி தாசர், திருவரங்க மாளி நம்பி, இராயூர் திருநாடுடைய நம்பி, திருவேங்கடப்பிச்சன், நாலூர் ஸ்ரீஜடாயுதாசர், கந்தாடை இலங்கை சென்ற நம்பி, கந்தாடை திருமங்கையாழ்வான், குண்டூர் பள்ளிகொண்ட நம்பி, ஸ்ரீபண்டாரவாரியம் ஆரிதந் ஆராவமுது. விஜயாலய விழுப்பரையர், அம்பலக்கூத்த நாத திருவரங்கப்பிரியன், பாரதாய கருட வாஹனன், பாரதாய திருவேங்கடவச்சிங்கம் என்று பல்லோர் பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

அகளங்கன் நன்றியோடு இவர்கள் பெயர்களை கல்வெட்டில் பொரித்தும் வைத்துள்ளான். இந்த அகளங்கன் சுற்று என்னும் ஐந்தாம் சுற்றில்தான் கம்ப நாட்டாழ்வார் தன் ராமாயணத்தையும் அரங்கேற்றம் செய்தார்.

கம்பரின் ராமாயண அரங்கேற்றம் அத்தனை சுலபத்தில் நடந்து விடவில்லை. அதன் பின்னே பலப்பல ரசமான சங்கதிகள் உண்டு!

முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலம். கி.பி 1070 முதல் 1122 வரை; 52 வருட காலம். பின் இரண்டாம் குலோத்துங்கன் விக்கிரமசோழனைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக ஆட்சி செய்கிறான். அதன்பின் இரண்டாம் ராஜராஜன் பின் இரண்டாம் ராஜாதிராஜன், இறுதியாக மூன்றாம் குலோத்துங்கன் கி.பி 1178-ல் இருந்து 1218 வரை ஆட்சி செய்தான்.

இது வரலாறு தரும் குறிப்பு. இதில் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில்தான் கம்பர் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படிப் பார்த்தால் கி.பி 1200-ல் இச்சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பு அதிகம்.

மூன்றாம் குலோத்துங்க சோழனைச் சந்திக்கும் சடையப்ப முதலியார் எனப்படும் வள்ளல் பெருமகனார், கம்பரை ராமாயணம் எழுதத் தூண்டும்படி கூறுகிறார்.

“அரசே!

கம்பன் ஒரு மகாகவி... கலைமகளோடு நிதம் பேசுபவன். அவன் கவிதையாற்றல் வேளாளர் களைப் பாடுவதிலும் உங்களைப் போன்ற அரசர் பெருமக்களைப் பாடுவதிலும் மட்டும் இருந்து விடக் கூடாது. வால்மீகி இயற்றிய ராமாயணம் வடமொழிக் காவியமாக மட்டும் உள்ளது. அது நம் சுந்தரத் தமிழில் கம்பனால் பாடப்பட வேண்டும்'' என்னும் அவர் கருத்து, குலோத்துங்க சோழனை பல கேள்விகளைக் கேட்கச் செய்தது.

‘`சடையப்பரே... எதற்காக கம்பர் இன்னொருவர் எழுதியதைப் பாடவேண்டும். சுயமாக அவர் ஒன்றை எழுதக் கூடாதா?”

“ராமாயணம் ஓர் அழியாக் காவியம். அதோடு அது நம் தமிழகத் தொடர்புகொண்ட ஓர் இதிகாசம். அனுமன் இலங்கை செல்லும் முன் ஒன்று கூடியது, பாண்டிய நாட்டின் கடலோர மலையாள மகேந்திரகிரி பர்வதத்திலிருந்துதான்! சேது பாலம் எழுப்பி இலங்கைத் தொடர் கொண்டதும் நம் ராமேஸ்வரத்தில் இருந்துதான்.

ராமன் வடக்கில் இருக்கும் அயோத்திக்கு அரசனாக இருந்திருக்கலாம். ஆனால், அவன் வாழ்வின் சோகம் முடிவுக்கு வந்தது நம் மண்ணில் தான். அப்படிப்பட்ட அவதார புருஷனின் சரிதம், தமிழில் சொல்லப்பட வேண்டியது அவசியமல்லவா?”

“நல்ல கருத்துதான். ஆனால், இதை கம்பர் ஏற்கவேண்டுமே?”

“அதற்கும் ஒரு வழி உண்டு..”

“என்ன அது?”

“கம்பரிடம் சொல்லும் முன் ஒட்டக்கூத்தரிடமும் இந்த விருப்பத்தைச் சொல்லுங்கள்...”

“கம்பரே ஒப்புக்கொள்வாரா என்கிற சந்தேகம் இருக்கும்போது ஒட்டக்கூத்தரிடமும் சொல்லச் சொல்கிறீர்களே. இந்த இருவருமே கவிச்சிங்கங்கள்! மிக மிக சுயமானவர்கள். இவர்களை எவரும் ஏதும் செய்ய இயலாது என்பதைத் தாங்கள் அறியாதவரா?”

“நன்றாக அறிவேன்.. ஆனால், நீங்கள்தான் நான் கூறியதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கம்பரிடம் இந்த விருப்பத்தைக்கூறிடும்போது, ஒட்டக்கூத்தர் எழுதச் சம்மதித்துவிட்டதாகக் கூற வேண்டும். அப்படியே ஒட்டக்கூத்தரிடம் கூறும் போது கம்பர் சம்மதித்தாகக் கூற வேண்டும்.”

“என்றால் இருவருமல்லவா எழுதுவர்?”

“எழுதட்டுமே... கம்பரின் ராமாயணம் கம்ப ராமாயணமாகவும், ஒட்டக்கூத்தரின் ராமாயணம் அவர் பெயராலும் வழங்கப்பட்டு இருவர் புகழையும் கவித்திறமையையும் காலகாலத்துக்கும் சொல்லிக்கொண்டிருக்கட்டுமே... அதோடு அரசனாக நீங்களும், எல்லோரையும் தூண்டி விட்ட கணக்கில் நானும் சிந்திக்கப்படுவேனல்லவா?”

“அருமையான யோசனை” என்ற குலோத்துங்க சோழன் சடையப்பரின் கருத்துப்படியே இருவரையும் எழுத வைத்தான். இதில் ஒட்டக்கூத்தர் முந்தினார். கம்பரோ, `எழுதுகிறேன் எழுதுகிறேன்' என்று நாளைக் கடத்தினார். குலோத்துங்கன் இருவரையும் அழைத்து, `எதுவரை எழுதியுள்ளீர்' எனக் கேட்க, ஒட்டக் கூத்தர், ‘கடல் காண் படல பரியந்தம்’ தான் எழுதிவிட்டதாகக் கூறினார்.

அதைக் கேட்ட கம்பர் எங்கே தன்னை ஒட்டக் கூத்தரைவிட தாழ்வாக எல்லோரும் கருதிவிடுவரோ எனும் அச்சத்தில், தான் அப்படலத்தைக் கடந்து விட்டதாகக் கூறினார்.

``அப்படியானால் தாங்கள் எழுதியதில் ஒரே ஒரு பாடலை மாதிரிக்கு பாடிக் காட்டுக'' என்றான் குலோத்துங்கன். கம்பர் வரகவியல்லவா... எனவே, அசராமல் அப்போதே ஒரு பாடலை யோசித்து பாடத் தொடங்கினார்.

‘குமுதனிட்ட குலவரை கூத்தரின்

திமிதமிட்டுத் திரையுந் திரைக்கடல்

துமித மூர்புக வானவர் துள்ளினார்

அமுத மின்னு மெழுமெனுமாசையால்...' - என்று பாடி பொருளும் கூறினார்.

‘`அனுமனின் வானரப் படையில் குமுதன் என்னும் படைத்தலைவன் பூமியினின்று வேரோடு பிடுங்கிய மலையை வீசியெறிந்ததில், அது கடலில் விழுந்து அதனால் தெரித்த நீர்த் துளிகள் விண்ணில் உள்ள சொர்க்கம் வரை பட்டுத் தெரித்ததாம்'' என்று பொருள் கூறினார்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

இதில் நீர்த்துளியைப் பற்றி சொல்லும்போது அதை `துமி' என்னும் சொல்லால் கம்பர் சந்தச் சிறப்போடு சொல்லியிருந்தார். அது ஒரு புதிய சொல்லாக, தமிழ்மொழியில் அதுவரை எவரும் சொல்லாத ஒன்றாக இருக்கவே ஒட்டக்கூத்தர் அதை ஆட்சேபித்தார்.

``துளியை, துமி என நீங்கள் உங்கள் விருப்பத் துக்குக் கூறுவதா? இப்படி ஒரு சொல் வழக்கில் எங்காவது உண்டா? இலக்கண நூல் எதில் ஒன்றில் இருந்தாலும் கூடக் காட்டலாம்” என்றார்.

கம்பர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

``சரி நான் இதை நிரூபிக்கிறேன்’' என்று அப்போதைக்கு சொன்ன கம்பர், நிஜத்தில் கலங்கித்தான் போனார். அப்படி அவர் கலங்கும் போதெல்லாம் கலைமகளிடம்தான் போய் நிற்பார். அப்போதும் போய் நின்றார்.

‘`தாயே என் நாவில் எப்போதும் நிற்பவள் நீதான்... நீயே இந்த இக்கட்டில் இருந்து என்னைக் காக்கவேண்டும்’' என்கிற அவரின் பிரார்த்தனைக் குக் கலைமகளும் செவி சாய்த்தாள்.

கம்பருக்கு ஓர் உபாயம் சொன்னாள்!

- உலா தொடரும்...

புற்று முருகன்!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சாலிகுளம். இங்குதான் புற்று வடிவாக இருந்து பக்தர்களின் நோயைத் தீர்த்தருள்கிறான் முருகப்பெருமான்!

புற்று முருகன்
புற்று முருகன்

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, இங்கே வசித்து வந்த முத்துசாமி என்பவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டாராம்! அப்போது முருகப்பெருமான் வயோதிகராக வந்து, புற்று மண்ணையும் பச்சிலையையும் கொடுத்து சாப்பிடச் சொல்ல... வயிற்று வலி பறந்தே போனதாம்! பிறகு ருத்திராட்ச மாலையை முத்துசாமியிடம் கொடுத்து, முருகப் பெருமான் மறைய... அந்த இடத்தில் புற்று உருவானதாகச் சொல்கின்றனர். முருகப்பெருமானே புற்று வடிவில் அருள்பாலித்து வருகிறார் என்பது ஐதீகம்!

இதையடுத்து புற்று முருகன் என ஊர்மக்கள் வழிபடத் துவங்கினர். அருகில் முருகப்பெருமானின் திருவுருவ விக்கிரகமும் உள்ளது. தீராத நோயையெல்லாம் தீர்த்து வைப்பானாம் புற்று முருகன்!

ஸ்தல விருட்சம் - வேலமரம்! நாகதோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், மஞ்சள் பொடியால் அர்ச்சித்து வழிபட... விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

- கிருஷ்ணராஜ், பங்களாப்புதூர்