மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 70

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இந்தக் காட்சியைக் கண்ட கூரேசர் மெய்சிலிர்த்தார். அந்த நொடியில், தான் ஊனம் ஏதுமின்றிப் பிறந்துவிட்டதை நினைத்து வருந்தினார்.

சீடர் ஒருவர் மூலம் அழைத்துவரப்பட்ட அழகனைத் துளியும் தயக்கமின்றி கட்டியணைத்து வரவேற்றார் ஸ்ரீராமாநுஜர். பின்னர் ஒரு தனி அறைக்கு அவனை அழைத்துச் சென்றார். முன்னதாக உணவு முடித்து, புத்தாடை அணிந்து திருமண் காப்பு இடப்பட்டு, முற்றிலும் புதிய மனிதனாகத் திகழ்ந்த அழகனுக்கு, ஒரு குருவாய் தன் ஆத்ம சக்தியை வழங்கத் தீர்மானித்தார் ஸ்ரீராமாநுஜர்.

தான் அவனுக்குச் செய்யப்போகும் கிரியைகளைத் தன் சீடர்கள் பார்ப்பதை, பல காரணங்களைக் கருதி ஸ்ரீராமாநுஜர் தவிர்த்தார். அதனால்தான் தனியறைக்குள் கதவைத் தாளிட்டுக்கொண்டு செயல் பட்டார். ஆயினும் உள்ளே நடப்பதைக் காணும் ஆவலில், தான் செய்வது தவறென்று தெரிந்தும், ஒரு வேகத்தில் கதவின் துவாரம் வழியே உள்ளே நோக்கினார் கூரத்தாழ்வார்.

ஸ்ரீராமாநுஜர் அழகனிடம் முத்திரை பாஷையில், தன்னைப் பற்றிக்கொண்டு சரணாகதி புரியச் சொன்னார். அத்துடன், ஸ்பரிச தீட்சை முலமே தன் ஆத்மசக்தி அழகனிடம் போய்ச் சேரும் என்பதால், தன் திருவடிகளை அவன் தலைமேல் பதித்து, ஆத்ம சக்தியை அவனுக்கு அளித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 70

இந்தக் காட்சியைக் கண்ட கூரேசர் மெய்சிலிர்த்தார். அந்த நொடியில், தான் ஊனம் ஏதுமின்றிப் பிறந்துவிட்டதை நினைத்து வருந்தினார். அழகனைப் போல் தானும் ஏதேனும் ஊனத்துடன் பிறந்திருந்தால், தனக்கும் திருவடி தீட்சை கிடைத்திருக்கும்; குரு குலத்தில் ஆரம்பித்து படிப்படியாகக் கல்வி கற்று காலம்க் கடத்தி யிருக்கவும் தேவை இருந்திருக்காது; குருவின் கருணை ஒரு நொடி யில் தன்னைக் கடைத்தேற்றியிருக்கும் என்று எண்ணினார். அந்த நிலையில் கூரேசர் தனக்கு அந்த பாக்கியம் கிட்டாமல் போனதற் காக சுவரில் தலையை மோதிக்கொண்டாராம்.

ஸ்ரீராமாநுஜரின் இந்தச் செயல், ஊனமுற்றவர்களிடம் அவர் காட்டிய கருணைக்கு ஒரு சாட்சி. ஸ்ரீராமாநுஜர் வாழ்ந்த காலத்தில் ஜாதிச் செருக்கு, செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு, வீரச் செருக்கு என்று பல செருக்குகள் மிகுந்து காணப்பட்டன. அவற்றின் நடுவே வைணவ நெறியை நிறுவ, அவர் பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

தன் சீடர்களில் ஒருவரான மறவர் குலத்தைச் சேர்ந்த உறங்கா வில்லியின் மரணத்தின்போது, கூரத்தாழ்வானின் மூத்த புதல்வரான பராசரரை அழைத்தார் ஸ்ரீராமாநுஜர். அவரிடம், ஒரு பிராமணன் இறந்தால் எப்படி கிரியைகள் புரிவரோ, அப்படி உறங்காவில்லிக்கும் செய்யப் பணித்தார். அதேநேரம் உறங்காவில்லியின் வழிமுறைகளில் பின்பற்ற வேண்டும்; வழிமுறைகளில் பெரிது-சிறிது எனும் பேதம் கூடாது என்பதைத் தன் செயலால் நிரூபித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 70

ஸ்ரீராமாநுஜரின் வாழ்வில் தினமும் ஒரு முன்னுதாரணச் சம்பவம் நிகழ்ந்தது எனலாம். அவற்றில் சில மட்டுமே வரலாற்றில் பதிவாகியுள்ளன. ‘ராமாநுஜாசார்ய திவ்ய சரிதை’ என்ற நூலில் அந்தப் பதிவுகளைக் காணலாம்.

ஒரு நாளின் விடிகாலை தொடங்கி இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஸ்ரீராமாநுஜர் அன்றாடம் செய்யும் செயல்களை, ஒரு பதிவேடு போல குறித்துவைத்துச் சொல்கிறது அந்த நூல்.

ஸ்ரீராமாநுஜர் திருவரங்கத்தில் வாழ்ந்த வரையிலும் சேரன் மடத்தில்தான் தங்கியிருந்தார். காவிரியில் தவராசன் படித்துறையில் தான் அவர் நீராடுவார். அதனைத் தொடர்ந்து திருவரங்க‌த்து ஆலயத் திருப்பணிகள் அவருக்காகக் காத்திருந்தன.

இந்தத் திருப்பணிகளில் அவர் செய்த சீர்திருத்தங்கள் அசாதாரண மானவை. கோயில் பணியாளர்களை அவர் பத்துக் கொத்துகளாக வகைப்படுத்திப் பணியில் ஈடுபடுத்தியதை, திருக்கோயிலின் பதிவேடான கோயிலொழுகு மூலம் அறிய முடிகிறது.

வைணவத்தைப் பின்பற்றும் எக்குலத்தவரும் ஒரு குலத்தவரே. அவர்கள் அனைவருக்கும் கோயில் திருப்பணிகளில் உரிமை உண்டு. அந்த வகையில் அவரவர் தன்மைக்கேற்ப பணிகளைப் பிரித்தளித்து, அவர்களின் பூரணச் சம்மதத்துடன் இச்செயலைச் செய்தார்.

திருப்பணி செய்வார், திருப்பதியார், பாகவத நம்பியர், உள்ளூர்வாசிகள், விண்ணப்பதாரர், திருக்கரக்கையர், ஸ்தானத்தார், பட்டாள் கொத்து, ஆரியபட்டாள், தாசநம்பிகள் ஆகிய பிரிவுகளை உருவாக்கி நியமித்து, அனைவரும் அவரவர் கடமைகளை இனிதே செய்திட வகை செய்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 70

இதுபோக ஏகங்கிகள், சாத்தாத முதலியர் போன்றோருக்கும் கைங்கர்யங்களை நியமித்து, அவற்றை முறைப்படி செய்யப் பணித்தார். இதனால் அனைத்துப் பணிகளும் ஆனந்த உணர்வுடனும், ஒற்றுமையுடனும் நடைபெற்றன.

பணிகளைப் பிரித்தது போலவே கொண்டாட்டங்களையும் வகைப்படுத்தினார். திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாள் போன்றவற்றைச் சொல்லலாம். இவராலேயே பகல் பத்து - ராப்பத்து திருவத்யயன உற்சவம் போன்ற வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் உருவாயின.

இத்திருநாளில் ஆழ்வார் பெருமக்கள் உச்சிமேல் வைத்து கொண்டாடப்படுவது சிறப்பான ஒன்றாகும். அம்மட்டில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த நம்மாழ்வாரின் சிலா ரூபம் அங்கிருந்து பல நாள்கள் பயணித்துத் திருவரங்கத்திற்கு வந்து சேரும். சில வருடங்களில் புயல், மழை போன்ற இயற்கை உபாதைகளால் இந்தப் பயணம் நிகழாது போய், ஒரு குறை உண்டானது. இதைத் தவிர்த்திட நம்மாழ்வாரின் திருவுருவைத் திருவரங்கத்திலேயே வடிவமைத்து பிரதிஷ்டை செய்து, ஆழ்வார்களின் வைபவம் தடைகளின்றித் தொடர வழிகண்டார் ஸ்ரீராமாநுஜர்.

திருவரங்கம் குறித்துச் சிந்திக்கையில், காவிரியை எண்ணாமல் இருக்க முடியாது. நாலு புறமும் பாய்ந்து செல்லும் இந்நதியின் வெள்ளப் பெருக்கில் பலமுறை மூழ்கி மீண்டிருக்கிறது திருவரங்கம். இன்று போல் அணைகள் எதுவும் கட்டப்பட்டிராத காலம் அது!

ஸ்ரீராமாநுஜரின் காலத்திலும் வெள்ளச் சேதமும் உயிர்ச் சேதமும் மிகுதியாய் ஏற்பட்டது. இப்படியான வெள்ளச் சேதத்திலிருந்து திருவரங்கத்தைக் காத்திட, பொதுப்பணித்துறை அமைப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீராமாநுஜர். அதில் பணிபுரிந்தோர் ‘இருகரை காப்போர்’ என்று அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு திருவரங்கம் பெருவரங்கமாய்த் திகழ பெரும் காரணமாய் இருந்த ஸ்ரீராமாநுஜர், தன் திருப்பணிகளைத் திருவரங்கத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பல்வேறு வைணவ ஆலயங்களுக்குச் சென்று அங்கும் திருப்பணிகள் செய்தார். குறிப்பாக ஒரு வைணவ ஆலயம் தூய்மையான திருக்குளம், பாதுகாப்பான மதில் சுவர், ஒரு காத கூரை, கம்பீரமான கோபுரம் ஆகியவற்றுடனும் நந்தவனத்துடனும் திகழவேண்டும் என்பதை எல்லா இடங்களிலும் நிலைப்படுத்தினார்.

ஆலய பூஜைகள் தடைப்படக் கூடாது, வழிபாடுகளில் காலம் தாழ்த்துதலும் தவறுதலும் கூடாது, நைவேத்தியம் - அபிஷேகங்கள் என எதிலும் குறை இருக்கக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். மேலினும் மேலாக ஆலயத்துக்கு வருவோருக்குப் பிரசாத உணவு தவறாமல் கிடைக்க வேண்டும்; பசியால் பக்தி சிதிலமாகி விடக் கூடாது என்பதில் மிகக் கூர்மையாக இருந்தார்.

ஆலயம் என்பது பொது மக்களின் சொத்து. அது ஒரு கலாசாரக் களம். அங்கே நம் கலாசாரத்தின் பிரதிபலிப்புகள் இருக்கவேண்டும்.

அதற்காக வசந்த மண்டபங்களை அமைத்து, அவற்றில் உபன்யாசங்கள் நிகழ வகை செய்தார். திருவரங்கத்தைத் திருத்தியதுபோல், திருமலை திருப்பதியையும் பல விதங்களில் திருத்தி வைணவம் பெரிதினும் பெரிதாய்த் தழைத்திட வகை செய்தார்.

ஸ்ரீராமாநுஜர் திருவரங்கத்திலிருந்து திருப்பதிக்கு மூன்று முறை சென்றதை உறுதி செய்ய முடிகிறது. இந்த எண்ணிக்கை அதிகமா கவும் இருக்கலாம். முதல்முறை சென்றபோது ஓராண்டுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார். அங்கேதான் திருமலை நம்பியிடம் ராமாயணம் முழுவதையும் கேட்டு அறிந்துகொண்டார்.

இரண்டாம் முறை சென்றபோது, பல வரலாற்றுச் சிறப்பு மிகுந்த செயல்களைச் செய்தார். அப்போது சைவர்களில் சிலர் திருமலை தங்களுக்குச் சொந்தம் என்று கூறி வழக்கு தொடுத்தனர்.

ஸ்ரீராமாநுஜர் இந்த வழக்கில் திருமலை தெய்வம் திருவேங்கடமுடை யானே என்பதைப் பலரும் உணரும் வண்ணம் நிரூபித்தார். அதிலிருந்து திருவேங்கடமுடையானின் நெற்றியில் திருமண் காப்பு பிரதானமாகத் தெரியும் விதமாய்ப் பொருத்தப்பட்டது. சங்கும் சக்கரமும் ஆலயமிசை பெரும் சின்னங்களாகிப் பிரகாசிக்கத் தொடங்கின.

ஸ்ரீவராஹர் சந்நிதி, ஸ்ரீநரசிம்மர் சந்நிதி போன்றவை வேங்கடேச மகாத்மியத்தின்படி நிர்மாணிக்கப்பட்டன. கூடுதலாக ஒரு லட்சுமி யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தார். அதன் காரணமாக திருமலை உண்டியல் பொங்கி வழிவதை இன்றளவும் காணலாம். திருப்பதி மலைக்கு மேல் மட்டுமல்ல, மலைக்குக் கீழேயும் இவர் அறிய பல திருப்பணிகளைச் செய்தார். அதற்கு பல அரசர் பெருமக்கள் அவருக்குத் துணை நின்றனர்.

- தொடரும்...