திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 71

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

பொதுவாக திருப்பணியோ, பொதுப்பணியோ ஆண் மக்களே பெரிதும் முன்வருவதும் அறியப்படுவதுமாகவுள்ளனர்.

தேசமெலா முகந்திடவே பெரும் பூதூரில்

சித்திரையிலா திரைநாள் வந்து தோன்றி

காசினி மேல் வாதியரை வென்றரங்கர்

கதியாக வாழ்ந்தருளுமெதி ராசா! முன்

பூசுரர் கோன் திருவரங்கத்தமுதனா ருன்

பொன்னடி மேலந்தாதியாகப் போற்றிப்

பேசிய நற்கலித்துறை நூற்றெட்டுப் பாட்டும்

பிழையறவே யெனக்கருள் செய்பேணி நீயே!

- பிரபந்த சாரத்தில்

சுவாமி ஸ்ரீமந் நிகமாந்த மகாதேசிகன் அருளியது

`பெரிய திருமுடியடைவு' எனும் நூலின் கூற்றுப்படி, ஸ்ரீராமாநுஜர் திருவரங்கம் கோயிலைச் சீர்திருத்தி, உயரிய நெறிபாடுகளை வகுத்து கோயிலுக்குள் அருள்நதியைப் பெருக் கெடுக்க விட்ட காலத்தில், ஏகாங்கிகள் என்பார் பன்னீராயிரவர் வரை இருந்தனர் என்று அறிய முடிகிறது.

இவர்களில் குறிப்பிடப்படும்படியாக ‘பிள்ளை ராமாநுஜர் வேளைக்காரர், ஜகன்னாத பிரம்ம ராயர், தொண்டைமான் சக்ரவர்த்தி முதலான திருநாமதாரிகள் ஸ்ரீராமாநுஜர் காட்டிய வழியில் பெரும் சேவை செய்தவர்கள் ஆவர்.

பொதுவாக திருப்பணியோ, பொதுப்பணியோ ஆண் மக்களே பெரிதும் முன்வருவதும் அறியப்படுவதுமாகவுள்ளனர். எனில் இந்த தேசத்தில் பெண்மக்கள் இதுபோன்ற பணிகளில் பெரிதும் ஈடுபடவில்லையா என்ற கேள்வி எழும்பக்கூடும்.

இந்த விஷயத்தில்... ஸ்ரீராமாநுஜர் எப்படி சாதிபேதமற்ற சமூக நெறிக்கு பாடுபட்டாரோ, அதேபோல் ஆண் - பெண் பேதத்தையும் தவிர்த்தார். ஓர் ஆணின் பக்திக்கும் தியாகத்துக்கும் பெண்மகளின் பக்தியோ தொண்டோ சளைத்தவை அல்ல என்பது அவர் கருத்தாகும்.

ரங்க ராஜ்ஜியம் - 71

இதனால் பெண்டிர் பலரும் ஸ்ரீராமாநுஜரின் வழியில் நடந்து அவரால் ஆட்கொள்ளப் பட்டனர். அவர்களில் பருத்தி கொல்லை யம்மாள் முதலானவராய் விளங்கினார். இவரின் குருபக்தி, பதிபக்தி மற்றும் இறைத் தொண்டு ஸ்ரீராமாநுஜரைச் சிலிர்க்கச் செய்தன.

`பருத்தி கொல்லை' என்பது ஓர் ஊரின் பெயர். இவ்வூரில், ஸ்ரீராமாநுஜரின் வழியைப் பின்பற்றும் வரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். இவர்களின் திருமணம் ஒரு காதல் திருமணம். வரதன் அந்தணன்; அவன் மனைவி கொல்லை, அப்போதைய வர்ணாசிரமக் கொள்கையின்படி சூத்திர வகுப்பினள். அவள், ஸ்ரீவைணவ சித்தாந்தத்தின் மீது பெரும் பற்றும் ஈர்ப்பும் கொண்டவள். இதுவே வரதன் இவள்மீது காதல் கொள்ள காரணமானது. இதை ஸ்ரீராமாநுஜரும் அறிவார். ஊரார் இவர்களை ஒதுக்கியபோதும் ஸ்ரீராமாநுஜர் ஆதரித்தார். அதனால் ஊராரும் ஏற்கும் நிலை பின்னர் வந்தது.

ஒருமுறை ஸ்ரீராமாநுஜர் யாத்திரையின் போது பருத்தி கொல்லை வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது வரதன் நினைப்பு எழ, அவன் இல்லத்தில் தங்கியிருந்து அங்கேயே பசியாறிவிட்டு, பிறகு தன் பயணத்தைத் தொடங்க எண்ணினார். தொண்டர்களுடன் தான் வரும் செய்தியை முதலில் சொல்லி அனுப்பினார்.

செய்தியோடு சீடன் ஒருவன் சென்றபோது, வரதன் வீட்டில் இல்லை. எனவே, செய்தியைப் பருத்தி கொல்லைதான் எதிர்கொண்டாள். கூடவே சஞ்சலத்துக்கும் ஆளானாள்.

காரணம், அப்போது அவள் இல்லத்தில் நிலவிய வறுமை. அடுப்புக்குள் பூனை தூங்கிக் கொண்டிருந்தது. சாப்பிட்டு இரண்டு நாள்கள் ஆகியிருந்தன!

இப்படியான நிலையில்தான் ஸ்ரீராமாநுஜர் வருகிறார் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அவரின் வருகையால் வரதனுக்குக் குருவருள் கிடைப்பதுடன், ஊரிலும் மதிப்பு மரியாதை கூடும். ஜாதி செருக்குடையோர் வரதனை ஒதுக்கியே வைத்திருந்தனர். அவர்களெல்லாம் ஸ்ரீராமாநுஜரின் அரவணைப்பு கண்டு தங்களை சிறிதாவது மாற்றிக்கொள்ளக் கூடும் என்பதெல்லாம் உட்பொதிவான விஷயங்கள்.

அடுத்து, எத்தகைய வறுமை நிலையும் குருவருளுக்கும் அன்னதான புண்ணியத் துக்கும் ஆட்படும் பட்சத்தில், அந்த வறுமை நிலை விலகி நன்மை அதிகரித்திடும். ஆக, ஸ்ரீராமாநுஜரின் ஒவ்வொரு முடிவும் செயலும் இங்ஙனம் நுட்பங்கள் பல உடையனவாகவே இருந்தன.

ரங்க ராஜ்ஜியம் - 71

எனினும் பருத்தி கொல்லை யைப் பொறுத்தவரையிலும், `ஸ்ரீராமாநுஜர் வருகிறார்' என்ற செய்தி, அவளைத் திகைக்கவும் கலங்கவும் வைத்துவிட்டது.

எப்படியும் பத்து பேராவது ஸ்ரீராமாநுஜருடன் வருவார்கள். அவ்வளவு பேருக்கும் உணவிட வேண்டும். இங்கோ இருவருக்கே உணவில்லாத நிலை. என்ன செய்வது?

கணவன் வந்தபிறகு அவனிடம் சொல்லி, ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லலாம் என்றால், அதற்குப் போதுமான கால அவகாசம் இல்லை. வருபவர் ஒரு மகான். அவரின் பாதம் இல்லத்தில் பட கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

`நாங்களே பட்டினியோடு இருக்கிறோம்' என்று கூறி ஸ்ரீராமாநுஜரையும் சீடர்களையும் திருப்பி அனுப்பலாம்தான். இல்லாதபோது வேறு என்ன செய்வது? ஆனால், அப்படிச் செய்தால், அது வாழ்நாள் பிழையாகி

விடுமே. `ஒருவேளை சோறிட வக்கற்று போனோம்' என்பது, நல்ல வைணவனாக வாழ்ந்து புண்ணியம் இல்லை என்ற ஒரு கருத்தை அல்லவா காலத்தால் உருவாக்கிவிடும். எனவே எப்பாடு பட்டாவது இச்சூழலைச் சமாளித்து, வருவோருக்கு விருந்தளிப்பது என்று விவேகமான முடிவை எடுத்தாள் பருத்தி கொல்லை.

அதன்பொருட்டு, மளிகைக் கடைக்குச் சென்று அந்தக் கடை முதலாளியின் முன் நின்று தன் தேவையைச் சொன்னாள்.

அந்த முதலாளி எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன். ஆசை, காமம், லோபம் ஆகிய குணங்கள் மிகுந்தவன். அவனுக்குப் பருத்திகொல்லையின் மேல் சற்றே காமம் இருந்தது. இப்போது அவள் உதவி என்று வந்து நிற்கவும், இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது என்று கருதினான்.

``தாராளமாக உனக்கு அரிசி, பருப்பு, முதல் காய்கறி வரை சகலமும் தருகிறேன். நீ அவற்றுக்குப் பணம் தரத் தேவையில்லை. நான் கேட்கும் வேறு ஒன்றைத் தந்தால் போதும்'' என்றான்.

பருத்தி கொல்லைக்குப் புரிந்தது, அவன் தன்னையே கேட்கப் போகிறான் என்று. அவனுடைய எண்ணமும் பேச்சும் முதலில் ஊசியாய்த் தைத்தன. என்றாலும், எப்படியேனும் ஸ்ரீராமாநுஜருக்கு விருந்திட வேண்டும் என்ற உறுதிமிக்க அவளது எண்ணம், அவனுடைய விருப்பத்துக்குச் சம்மதிக்கச் செய்தது.

இது பாழுடம்பு. உயிர் போனாலோ பூச்சியும் புழுவும் நெளியத் தொடங்கிவிடும். ஆயினும் இந்த உடம்பை சிலர் மோகிப்பதுதான் பெரும் ஆச்சர்யம். இல்லாவிட்டாலும் மனித சமூகம் உருவாகிட வழி இல்லாது போய்விடும். எனவேதான் காம நெருப்பு அடக்கமாய் எரிந்திட, கற்பெனும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. அந்தக் கட்டுப்பாடுகள் உடைந்துவிடும் பட்சத்தில், அதை விடக் கேடு வேறெதுவும் இல்லை!

தன்னை இழந்த நிலையில் உயிர் வாழ்வதால் தான் என்ன பயன்? எனவே, தன்னையே அடகுவைத்து சோதனையைக் கடப்போம். பின்னர், பட்ட கடனுக்குத் தன்னைத் தந்த நிலையில், பாழ்பட்ட உடலை நெருப்புக்கு இரையாக்கி உயிர் துறப்போம். இப்போதைக்கு இது ஒன்றே வழி என்று தீர்மானித்தாள் பருத்தி கொல்லை.

அவள் தன்னுடைய ஆசைக்கு இணங்கி விட்டதற்காகப் பெரிதும் மகிழ்ந்தான் கடை முதலாளி. சரக்குகளை வாரி வழங்கினான். பருத்தி கொல்லையும் நன்கு சமைத்தாள். இல்லம் தேடி வந்த ஸ்ரீராமாநுஜருக்கும் சீடர்களுக்கும் அருமையாய் அமுது படைத் தாள். நல்லவேளையாக அவளின் கணவன் வரதனும் வந்து அந்த அன்ன மகா யக்ஞத்தை அவளுடன் சேர்ந்து நடத்தினான்.

ஸ்ரீராமாநுஜர் பூரித்துப் போனார். சீடர் களும் பசியாறிக் களைப்பு நீங்கி உற்சாகம் அடைந்தனர். எல்லோரும் ஓய்வெடுத்த நேரத் தில், வரதன் பருத்திகொல்லையிடம், `எதை விற்று இவ்வளவு பொருள்களை வாங்கினாய்' என்று கேட்டான். அவள் கண்ணீர் மல்க விஷயத்தை விவரித்தாள்.

``இந்த உடலை இன்னமும் விற்கவில்லை. அடகுவைத்துள்ளேன். இனி போய் இதை அவனுக்கு விற்றுவிட வேண்டும். அதன்பின் நான் உங்களுக்கு உகந்தவளாய் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. எனவே தீப்பாய விரும்புகிறேன்'' என்றாள்.

அடுத்த நொடியில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் வரதன்.

``பருத்தி! நீ மிகவும் உயர்ந்துவிட்டாய். உன் முடிவும் செயலும் அசாதாரணமானவை. பெரும் சோதனையை, உன்னையே பணயம் வைத்துச் சாதனையாக்கிவிட்டாய்.

இம்மட்டில் நான் உனக்குப் பயன் இல்லாத வனாகிவிட்டேன். ஆனால் நீயோ எனக்கும் நம் மகானுக்கும் சீடர்களுக்கும் பெரும் பயனளித்துவிட்டாய். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் நானே உன்னைக் கடை முதலாளியிடம் அழைத்துச் செல்கிறேன். அவன் மோகம் தீரட்டும். பின் நாம் சேர்ந்தே மடிவோம்'' என்று கூறி கண்ணீர் வடித்தான்.

அப்படியே, அந்த வணிகனின் வீட்டுக்கு மனைவியோடு சென்று நின்றான் வரதன். அந்த மளிகைக் கடை வணிகன் ஆடிப்போனான். பருத்திகொல்லை கணவனோடு வந்து தன்னை அடிக்கப் போவதாகக் கருதியவன், அதன்பொருட்டு மிரண்டான்.

ஆனால் வரதனோ ``வணிகரே! நீங்கள் தந்த பொருளுக்கு உரிய விலையை தரத்தான் வந்துள்ளேன். இதோ, நீங்கள் ஆசைப்பட்ட என் மனைவி. இவளை நீங்கள் ஒரு பிணத்தைத் தொடுவது போலத்தான் தொடமுடியும்.

இவள் உங்களுக்குத் தன்னையே தந்திட சம்மதித்த நொடியே உயிரை விட்டுவிட்டாள். ஆயினும் ஒரு பெரிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டாள். அந்த நிறைவுதான் இப்போது இவள் வசமும் என் வசமும் இருக்கிறது. இவளைப் போல் ஒரு பெண்ணை மணந்த நான் பாக்கியசாலி. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்'' என்றான்.

வரதனின் பேச்சு அந்த வணிகனை உலுக்கி எடுத்துவிட்டது. சோறிடுவதற்காகத் தன்னையே தருகிறாள் மனைவி. அவளை மெச்சி முன் நிறுத்துகிறான் கணவன்.

இவர்கள் எப்பேர்பட்டவர்கள்... வறுமையி லும் இவர்கள் காட்டும் இந்தச் செம்மையை என்னவென்று சொல்வது?

அந்த வணிகனுக்குள் மனசாட்சி விழித்துக் கொண்டு, அவனைல் கூனிக்குறுகச் செய்தது.

``அம்மா என்னை மன்னித்துவிடு'' என்று அவள் கால்களில் மரம்போல் விழுந்தான். அப்படியே அவளின் கணவனின் கால்களையும் பற்றியவன், ``உண்மையில் நான் ஆண்மகன் இல்லை. நீங்கள்தான் ஆண்மகன். உங்கள் மனைவியின் துணிவைவிட, அதற்கு வழிவிட்ட உங்களின் துணிவு அசாத்தியமான ஒன்று. துளியும் சுயநலமின்றிச் சிந்தித்து நடக்கிறீர்கள்.

உங்கள் முன் நான் ஒரு தூசு! உங்களால் ஒரு பெரும் பாடமும் கற்றேன். என் வாழ்நாளில் நான் இனி காம-குரோதத்துக்கும், சுயநலத்துக்கும் ஒருபோதும் இடம் தரமாட்டேன். இது சத்தியம்'' என்றான்.

கச்சிதமாய் அப்போது அங்கு வந்த ஸ்ரீராமாநுஜர், ``வரதா! ஒரு நல்ல வைணவன் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு நீ பெரும் உதாரணம் ஆகி விட்டாய். உன்னை விஞ்சிவிட்டாள் உன் மனைவி. உங்களால் காம - குரோதம் குறித்த ஒரு விழிப்பு ஏற்பட்டுள்ளது.

குருசேவை நிமித்தம் ஒருவர் எவ்வளவு உயரத்துக் குச் செல்ல முடியும் என்பதற்கும் நீ ஓர் அளவைக் கொடுத்துவிட்டாய். என் சீடர்களின் பட்டியலில், பருத்திகொல்லை எப்போதும் முதலில் இருப்பாள்'' என்று ஆசீர்வதித்தார்.

பருத்தி கொல்லையைப் போலவே இன்னும் பல பெண்மக்கள், ஸ்ரீராமாநுஜரைத் தங்களின் ஆத்மகுருவாய் வரித்து, அவர் காட்டிய வழியில் நடந்தனர்.

உக்கலம்மாள், கோமடத்தம்மாள், அம்மாங்கியம் மாள், இளையவில்லி, திருவனந்தபுரத்து அம்மாள், கோட்டியூராண்டாள், தேவகிப்பிராட்டி, அத்துழாய், அம்மங்கி, ஆசூரி, இன்னிளவஞ்சி என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.

- தொடரும்.

ரங்க ராஜ்ஜியம் - 71

கல்யாண வரம் அருள்வாள் காட்டூர் முத்துமாரி!

கோவை காந்திபுரத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது காட்டூர். இவ்வூரில் கோயில்கொண்டுள்ள முத்துமாரியம்மன், தொழில் சிறக்கவும் செல்வம் கொழிக்கவும் அருள் பாலிக்கும் அன்னை. சித்திரை 3-வது செவ்வாய் அன்று இந்த அம்மனுக்கு நிகழும் திருக் கல்யாண வைபவத்தின் போது, பூஜையில் வைத்துத் தரப்படும் மஞ்சள் சரடை வாங்கி பெண்கள் அணிந்தால், கணவனின் தீராத நோயும் தீரும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும். மூலம் நட்சத்திரக்காரர்கள், 9 வெள்ளிக் கிழமைகள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

-கே.கிருத்திகா, திருப்பூர்-2

ரங்க ராஜ்ஜியம் - 71

`சிறப்புகள் அனைத்தும் என் மகிமையே!'

வாழ்வில் முன்னேற விரும்பு வோர், நிச்சயமாகப் பொறாமையை மனதிலிருந்து நீக்கியே ஆக வேண்டும்.

பொறாமை மனிதனுடைய செல்வத்தையெல்லாம் கவர்ந்து, அவனைத் தீய வழியில் செலுத்தி அழித்துவிடும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.

பொறாமையில் இருந்து விடுபட இரண்டு வழிகள் உண்டு.

முதலாவது, எவர் முன்னேறினா லும் உளமாரப் பாராட்டுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண் டும். இந்த இனிய வழக்கம், தெய்வ நிலைக்கு உயர்த்தும்!

2-வது வழி, எல்லாவற்றையும் இறைவனின் மகிமையாகக் காணப் பழகிக் கொள்ளுதல்.

`எங்கு, எச்சிறப்பு காணப் படினும், அவை அனைத்தும் என் மகிமையே என்று அறிந்துகொள்' என்று கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார் கிருஷ்ணர்.

ஆக, இறையருள் எல்லோரிடத் திலும் வெளிப்படுகிறது. இறையரு ளுடன் போட்டி போடவோ, இறைவனைப் பார்த்துப் பொறாமைப்படவோ நம்மால் முடியாது. எனவே, அனைத்து அனுபவங்களிலும் கடவுளைக் காணப் பழகிக்கொண்டால், பொறாமையிலிருந்து விடுபடலாம்!

(சுவாமி ஓங்காராநந்தரின் அருள் மொழித் தொகுப்பிலிருந்து...)

- ஆர்.கண்ணன், சென்னை-44