Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 73

விபீஷணனால் அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட பெருமாள், காவிரிக்கரையில் அசைக்க முடியாதபடி அமர்ந்து விட்டார்.

பிரீமியம் ஸ்டோரி

`பொய் வண்ணம் மனதகற்றிப் புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைத்தவருக்கு மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில்போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனையான் கண்டது தென்னராய்கத்தே!'


- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்.

திருவரங்கம் திருக்கோயிலில் ஸ்ரீகருடன் நின்றவாறில்லாமல் அமர்ந்து காட்சியளிப்பதன் பின்புலத்தில் ஒரு ரசமான கதை உண்டு.

‘பெரிய திருவடி’ என்றும் விளிக்கப்படும் கருடன் இங்கே விஸ்வரூப கருடனாய், பெருமாளுக்கு உகந்தவராய், அவரையே சுமக்கும் பேறு பெற்றவராய்த் திகழ்கிறார்.

கருடன்
கருடன்


சம்ஸ்கிருதத்தில் ‘கருடன்’ என்றால் ‘அதிகம் சுமப்பவன்’ என்று பொருள். குறிப்பாக, பெருமாளின் வாகனமாகி அவரையே சுமப்பவன் எனும்போது, ‘ஒட்டுமொத்த புவனங்களையெல்லாம் சுமப்பவன் இவரே’ என்ற பொருளும் வந்து விடுகிறது. விபீஷணன் வைத்த இடத்திலிருந்து தற்போதுள்ள திருவரங்க சந்நிதிக்குப் பெருமாளைச் சுமந்து வந்தவரும் இவரே.

பிரம்மாவின் கட்டளைக் கேற்ப பெருமாளைச் சுமந்து வந்தவரிடம், ``இங்கேயே நான் அழைக்கும் வரை காத்திரு'’ என்று சொல்லிப் பெருமாளை எடுத்துச் சென்று சந்நிதியை உருவாக்கினார் பிரம்மன்.

முன்னதாய் விபீஷண னால் அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட பெருமாள், காவிரிக்கரையில் அசைக்க முடியாதபடி அமர்ந்து விட்டார். பின்னர் பிரம்மா வந்து திருவரங்கத் தீவின் நடுவில் சரியான இடத்தைத் தேர்வு செய்து, அங்கே எம்பெருமானுக்குத் திருச்சந்நிதியைத் தோற்றுவிக்கிறார். அப்போது ‘அழைக்கும் வரை காத்திரு’ என்று சொன்னதன் பேரில் கருடனும் அமர்ந்த நிலையில் காத்திருக் கத் தொடங்குகிறார்.

அப்படி அவர் காத்திருக்கும் கோலத்தையே நாம் இப்போதும் கண்டு வணங்கி வருகிறோம். பெருமாளிடம் இருந்து எப்போது அழைப்பு வந்தாலும் புறப்படத் தயாராக, எப்போதும் விழிப்புடன் கருடன் காத்திருக்கும் கோலத்தில் இங்கே கோயில் கொண்டிருக்கிறார்.

இந்தச் சந்நிதி மட்டுமல்ல, ஆழ்வார் பெருமக்களுக்கெல்லாம் ஆலயத்தில் ஸ்ரீராமாநுஜரால் சந்நிதிகள் ஏற்படுத்தப் பட்டன. அவர்களின் திருநட்சத்திர உற்சவங்கள் கொண்டாடப் பட்டன. அவர்களின் சரிதங்களும் அவர்களுடைய பாசுரங்களும் பெருமளவில் எல்லோராலும் சிந்திக்கப்பட்டன.

பாஞ்சராத்ரம் என்ற ஆகம சாஸ்திரப்படி, பெரிய பெருமாளுக்கு நித்ய உற்சவம், பட்ச உற்சவம், மாத உற்சவம், சம்வத்சரோத்சவ உற்சவம், மஹோத்சவம் போன்றவை கொண்டாடப்பட்டன.

இவ்வளவு பெரிய கோயிலுக்கு அபிஷேகம் மற்றும் பிரசாதத்தின் பொருட்டு எவ்வளவு அரிசி - பருப்பு, பால், தயிர் தேவைப்படும்?! அவை தடையின்றி கிடைக்கவும் ஸ்ரீராமாநுஜர் வழிவகைகளைக் கண்டருளினார்.

ஆலயத்தின் ஈசான்ய பாகத்தில் அதாவது சித்திரை வீதியில் வடகிழக்கு மூலையில் கோ சாலை ஒன்றை ஏற்படுத்தினார்.நூற்றுக் கணக்கான பசுக்கள் இங்கே போஷிக்கப்பட்டன. இந்தப் பசுக்களைப் பாதுகாக்கவும் விருத்தி செய்யவும் கொள்ளிடத்தின் வடகரையில் சோழங்கநல்லூர் என்னும் கிராமத்துக்கு அருகில் ஐந்து கிராமங்களைக் காடாக்கி, அங்கே ஆநிரை காத்த பெருமாளுக்கு ஒரு கோயிலையும் உண்டாக்கினார்.

அதை ஒரு பிருந்தாவனமாகவே கருதி ஆக்கியவர், அடிக்கடி அங்கு சென்று, எல்லாம் முறையாகவும் சிறப்பாகவும் இருக்கின்றனவா என்பதை மேற்பார்வையும் செய்தார்.

பின்னர் அதைப் பராமரிக்கும் பொறுப்பைத் தன் சீடர்களில் ஒருவரான அகளங்க நாட்டாழ் வானுக்கு அளித்தார். இன்றும் சித்திரை வீதியில் கோசாலை அருகிலிருந்து, பங்குனி பிரம்மோத்சவத்தின் இறுதி நாளன்று எம்பெருமான் திருவீதி உலா வருவார். அப்படி வரும் ரதத்திற்கு ‘கோ ரதம்’ என்றே பெயர்.

ஸ்ரீராமாநுஜர் செய்த சீர்திருத்தங்களில் கோயில் நிலங்களைப் பராமரிப்பதும், அதன் மூலம் வருவாய் திரட்டுவதும் ஓர் அம்சமாகும். இந்தப் பணியையும் அகளங்க நாட்டாழ்வானிடமே ஒப்படைத்தார்.

இந்த நிலங்களிலிருந்து குத்தகைப் பணம் மட்டுமல்ல நெல், வாழை மற்றும் காய்கறிகளும் விளைவிக்கப்பட்டன. அவை கோயிலை அடையும்படிச் செய்தார் அகளங்க நாட்டாழ்வான். இதன் பொருட்டு ‘ஸ்ரீ பண்டாரம்’ என்கிற ஒரு பண்டகசாலை உருவாக்கப்பட்டு, அதில் ஊழியம் புரிவோர் இவற்றை வாங்கிப் பாதுகாப்பாக வைத்து எம்பெருமானின் அன்றாட ஆராதனைகளுக்கும், பிரசாத விநியோகங்களுக்கும் வழிவகை செய்தனர்.

ஸ்ரீராமாநுஜர் இப்படி ஆலய நிர்வாகத் தைச் செம்மைப்படுத்தி ஆகமப் பிசகின்றித் திருவாராதனைகளையும் செய்யச் செய்து ‘பூலோக வைகுண்டம்’ எனப்படும் திருவரங்கம் தலத்தை இந்தப் பூவுலகிற்கே முன்மாதிரியாக விளங்கச் செய்தார்.

ஸ்ரீராமாநுஜர் வாழ்ந்த காலத்தில் திருவரங்கம் வருவோர், திரும்பிச் செல்ல மனமின்றி, ஆலய மண்டபங்களில் தங்கியும் சத்திரங்களில் தங்கியும் தினமும் நித்திய வழிபாடு கண்டனர்.

காவிரியில் நீராடி, அரங்க தரிசனம் முடித்து, பிரசாத அன்னம் உண்டு, மாலைவேளையில் செவிக்கு உணவாக உபன்யாசங்கள் கேட்டு, ‘பூலோக வைகுண்டம் என்றால் இதுவே’ என்று மனதார உணர்ந்து, இப்படியே தாங்கள் இங்கே இருந்து விடலாகாதா... தங்களின் இன்னுயிர் இங்கே அப்படியே பிரிந்திடாதா என்று ஏக்கம் மிகக் கொண்டனர்.

ஸ்ரீராமாநுஜர் இந்தச் சீர்திருத்தங்களை அத்தனை எளிதாய்ச் செய்திடவில்லை. அவருக்கு நிறையவே எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, திருச்சந்நிதியில் பணிபுரிந்து வந்த பெரியநம்பி என்பவர் ஸ்ரீராமாநுஜரை ஓர் ஆசார்யனாகக் கருதவில்லை. அதேநேரம் அரங்கனுக்கான தன் கைங்கரியத்திலும் ஒரு குறையும் வைக்கவில்லை.

எம்பெருமானிடம் குறையில்லாத பக்தி யும் ஆசார்யனிடம் ஓர் அலட்சியமும் பெரிய நம்பியிடம் காணப்பட்டது. இது ராமாநுஜரை வருத்திய நிலையில், எம்பெருமானிடமே பிரார்த்திக்கலானார். அதன் எதிரொலியாக அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், பெரியநம்பியை அவர் போக்கில் விட்டுவிடக் கூறினார்.

ஸ்ரீராமாநுஜர் இச்செய்தியைத் தன் அத்தியந்த சீடர்களில் ஒருவனான கூரத்தாழ்வானிடம் கூறி, “எம்பெருமான் விருப்பமே நம் விருப்பம். ஆகையால் பெரியநம்பியிடம் என்னைப் பணிக்கும்படி ஆக்ஞையிட வேண்டாம். என்னைப் பணித்த பெருமான் ஒருநாள் அவரையும் பணிப்பான். பணிக்காவிடில் அதுவே அவன் திருவுள்ளம் என்று யாம் வாளாதிருப்போம்” என்றார்.

அதன்பின் கூரத்தாழ்வான் பெரியநம்பியிடம் ஸ்ரீராமாநுஜர் குறித்து ஏதும் பேசுவது இல்லை. அத்துடன் அவர் செயல்பாடுகளை விமர்சித்தோ இல்லை எதிர்த்தோ ஏதும் செய்திடாமல், குருவின் கட்டளையைச் சிரமேற் கொள்ளலானார்.

கூரத்தாழ்வானின் இப்போக்கு பெரியநம்பியைச் சிந்திக்க வைத்தது. ஒரு முறை, தீர்த்தம் சாதிக்கையில் உடன் சடாரி சாதிக்க மறந்துவிட, கூரத்தாழ்வான் அதுகுறித்து ஏதும் கேட்கவில்லை.

‘இன்று எம்பெருமானுடைய திருவடி சம்பந்தம் நமக்கு இல்லை. இதுவே அவன் விருப்பம் போலும்’ என்று கருதி அமைதி காத்தார். இதை அறிந்த ஒருவர் விஷயத்தைப் பெரிய நம்பியிடம் கூறினார்.

பெரிய நம்பி தன் தவற்றை உணர்ந்து கூரத்தாழ்வான் அடுத்து சேவை புரிகையில், மிக கவனமாக அவருக்குத் தீர்த்தம், சடாரி சாதித்து, “முதல் நாள் எப்படியோ தவறிவிட்டது, வருந்துகிறேன்” என்றார்.

“அதனால் பாதகம் இல்லை நீர் எப்படி நடந்தாலும் அதை எம்பெருமான் பெரிதும் ரசிக்கிறான். அவன் உள்ளம் கவர்ந்த ஓர் அர்ச்சகராய் நீர் திகழ்கிறீர்” என்றார்.

“அது எப்படி உமக்குத் தெரியும்?” என்று பெரியநம்பி கேட்டார்.

“உடையவர் கனவில் சென்று உம்மை உம் போக்கில்விடச் சொல்லியுள்ளார். உமக்காக எம்பெருமானே பரிந்து பேசியது, சாதாரண விஷயமா?” என்று கேட்டிட, பெரிய நம்பி சிலிர்த்துப் போனார்.

``அதனால்தான் சில காலமாய் நீங்கள் உடையவர் குறித்து என்னிடம் ஏதும் பேசுவது இல்லையோ?” என்றும் கேட்டார்.

“ஆம், உடையவரும் எம்பெருமான் விருப்பமே என் விருப்பம் என்றார்'' எனப் பதிலுரைத்தார் கூரத்தாழ்வான்.

இச்சம்பவம் பெரியநம்பியைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. தனக்காக எம்பெருமான் பேசியது, அதை உடையவராகிய ராமாநுஜரும் அப்படியே ஏற்று அதன்படி நடந்தது என்று எல்லாமே அவருக்குள் ராமாநுஜர் மேல் ஒரு பெரும் மதிப்பைத் தோற்றுவிக்கத் தொடங்கின.

இந்த மதிப்பே அபிமான மாகி அவரை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்கவும் தூண்டியது. ஸ்ரீராமாநுஜர் காட்டிய பொறுமையும் விவேகமும் இதுபோல் பலரையும், அவர்பால் ஈர்த்து அவருடைய தாசர்களாக் கியது. இதனால் ஸ்ரீ ராமாநுஜர் வைணவ ஆசார்யர்களில் தனித்து ரத்தினம்போல் பிரகாசமாக விளங்கினார்.

‘ஸ்ரீவைஷ்ணவம்’ என்கிற ஓர் இறைவழி பெரிய பெருமாளாகிய அரங்கனிடம் தொடங்குகிறது. அதன்பின் அது பெரிய பிராட்டியைத் தொட்டு மணவாள மாமுனிகள், சேனை முதலியார், திருவாய்மொழிப் பிள்ளை, நம்மாழ்வார், பிள்ளை லோகாச்சார்யர், நாதமுனிகள், வடக்கு திருவீதிப் பிள்ளை, உய்யக்கொண்டார், நஞ்சீயர், நம்பிள்ளை, மணக்கால் நம்பி, ஆளவந்தார், பராசரபட்டர், பெரிய நம்பிகள், எம்பார் என்று நீண்டு ராமாநுஜரைத் தொடுகிறது.

கருட வாகன பெருமாள்
கருட வாகன பெருமாள்இவர்கள் போக திருக்கச்சி நம்பிகள், கூரத் தாழ்வான், முதலியாண்டான், உறங்காவில்லி தாசர், வடுகநம்பி என்கிற சீடர்களாலும் சிறப்புற்றது. நெடிய இந்தப் பட்டியலில் காலத்தால் ஸ்ரீவேதாந்த தேசிகனும் வந்து இணைகிறார்.

காஞ்சிக்கு அருகில் உள்ள ‘திருத்தண்கா’ என்ற ‘தூப்புல்’ எனும் ஊரில், வேதாந்த தேசிகரைப் பிறப்பிக்கச் செய்தான் எம்பெருமான்.

அனந்தசூரி என்கிற ஸ்ரீவைஷ்ணவருக்கும் வேதாரம்பை என்கிற அவரின் பத்தினிக்கும் ஒரு வரப்பிரசாதமாக வந்து பிறந்தவர்தான் வேங்கடநாதன் என்னும் வேதாந்த தேசிகன்.

இவர் திருமலைக் கோயில் கண்டாமணியின் அம்சமாய்ப் பிறந்தவர் என்பர். பிள்ளைப் பேறின்றி வருந்திய வேதாரம்பை, ஒரு நாள் திருமலை திருப்பதியில் உள்ள ஆராதனை மணியை விழுங்குவது போல் கனவு கண்டாள்.

எம்பெருமானாகிய அந்த வேங்கடவனே அதைத் தன் கைப்பட எடுத்துக் கொடுத்து ‘உம் விழுங்கு’ என்று சொல்லித் தர அவளும் விழுங்கினாள். கனவு கலைந்தது!

அன்றே பிள்ளைப் பேற்றுக்கான அறிகுறிகளும் தெரியவந்தன. அதன்பின் ஓர் உண்மையும் தெரிய வந்தது. திருமலையில் வேங்கடவன் திருச்சந்நிதி மணி ஒன்று காணாமல் போயிருந்தது.

‘அது எங்கே போயிற்று’ என்று திருமலை ஜீயர் மனம் வருந்தினார். ‘யாரும் களவாடி விட்டனரோ... இதுபோல் தொடர்ந்து களவு நேருமோ’ என்றெல்லாம் அவருக்குள் விசாரங்கள்.

அன்றே அவரின் கனவில் தோன்றினார் திருவேங்கடமுடையான். தானே மணியை வேதாரம்பைக்கு அளித்ததாகவும் அதன் எதிரொலியாக அவளுக்கு ஒரு பிள்ளை பிறக்கப் போவதையும் சொல்லி, அந்தப் பிள்ளை ஸ்ரீவைஷ்ணவ உலகெங்கும் எம் புகழைப் பரப்பிப் பெரும் பேறு பெற்று விளங்கு வான் என்றும் கூறி மறைந்தார்.

அந்தக் கனவிலிருந்து கண்விழித்த ஜீயர் அப்போதே வேங்கடநாதனை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கிவிட்டார்.

பின்னர், வேதாரம்பை புரட்டாசி மாத திருவோண நட்சத்திர நாளில் வேங்கடநாதனை ஈன்றெடுத்தாள். வேங்கடவன் அருளால் பிறந்ததன் பொருட்டு ‘வேங்கடநாதன்’ என்கிற பெயரையும் சூட்டி மகிழ்ந்தனர்.

ஸ்ரீவேதாந்த தேசிகர்
ஸ்ரீவேதாந்த தேசிகர்


குழந்தை எழிலோடு வளரலானான். கருவிலேயே திருவுடைய பிள்ளை ஆதலால், எதையும் ஒருமுறை கேட்டாலே போதும் ஏகாக்ரஹியாக மனத்தில் இறுத்திக் கொண்டார்.

தந்தையிடம் வேதத்தையும், நடாதூர் அம்மாள் என்கிற வைணவப் பெண்மணி யிடம் இதிகாசங்களோடு, பதினெட்டு புராணங் களையும் கற்றார். 20 வயது நிறைவடைவதற்குள் கல்வி கேள்விகளில் நல்ல பூரணத்துவம் வேங்கடநாதனுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

அக்கால வழக்கிற்கு ஏற்ப உபநயனமும் திருமணமும் உரிய காலத்தில் நடந்தேறின. ஏழு வயதில் உபநயனமும், பதினேழு வயதில் திருமணமும் நடந்து கிரகஸ்த வாழ்வும் தொடங்கியது. திருமங்கை என்பவள் மனைவியாய் வந்தாள்.

வேங்கடநாதனின் மாமாவான ‘அப்புள்ளார்’ என்பார் ஒரு காரியம் செய்தார். இவர் வசம் ஸ்ரீராமாநுஜர் அணிந்து கலைந்த பாதரட்சைகள் இருந்தன. அதை அப்படியே ஒரு பெட்டியில் வைத்து அருட்பரிசாக வேங்கடநாதனிடம் வழங்கி ஸ்ரீராமாநுஜரின் சீலத்தையும் எடுத்துரைத்தார்.

அப்படியே `‘ஸ்ரீராமாநுஜர் நெறியில் அவரை குருவாய் வரித்துக்கொண்டு, நீ உன் கடமை களைச் செய்வாயாக'’ என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வேங்கடநாதன் வாழ்வில் பெரும் அதிசயங்கள் நிகழத் தொடங் கின. இவரின் பக்தி யாத்திரையில் கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் ஒரு பெரும் திருப்பத்தை இவர் வரையில் நிகழ்த்தியது.

கருடநதி பாய்ந்திடும் இந்த க்ஷேத்திரத்தில் எம்பெருமான் தேவநாதனாகவும், பெருமாட்டி செங்கமல நாச்சியாகவும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கொரு சிறுகுன்றும் அதன் மேல் ஓர் அரச மரமும் உள்ளன. இந்த மரத்தடிதான் வேங்கட நாதனைப் பெரும் வேதாந்தியாக்கியது!

எப்படி?

- தொடரும்.

கலியுகத்தில் என்ன நடக்கும்?

ஸ்ரீமத் ராமாயணத்தில் உத்தர காண்டத்தில், கலியுகத்தில் என்னென்ன நடக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. அவை:

* மனம் போனபடி நடப்பதே வழி என்பார்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி நியாயம்.

* நீதி நூல்கள் படிக்கக் கிடைக்காது. அறங்கள், தீயவர்களின் தூண்டுதல் மற்றும் பேராசையில் நடத்தப்படும்.

* சுய விளம்பரம் செய்பவன் அறிவாளி ஆவான். போலிகள் புகழும் பெருமையும் பெறு வார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் பேசுவோர் மகான்கள் ஆவார்கள்.

கலியுக ராமர்
கலியுக ராமர்

* ஊரார் பொருளைக் கொள்ளையடிப் பவர்கள் கெட்டிக்காரர்கள் ஆவர். நெறிப்படி நடப்பவர் அறிவிலிகளாகக் கருதப்படுவர். துறவிகள் அநியாயமாக செல்வம் சேர்ப்பர்.ஞானம், தவம் ஆகியவை கேலிக்குள்ளாகும்.

* பொய் பேசுபவர்கள் புலவர்களாக இருப்பர்; உண்மை உழைப்பாளிகள் ஏழையாக இருப்பர்.

* தற்பெருமைக்காக தானம் வழங்குவர்.ஆயுதங்கள் முக்கியமாகும். விரசமான நூல்கள் பெருகும்.

* மக்கள் உடலை வளர்ப்பார்கள்; உறுதியை மதிக்கமாட்டார்கள். மனைவி வந்த பின் பெற்றவர் களை அலட்சியப் படுத்துவார்கள்.

- ஆர்.லட்சுமி, கரூர்-4.

`போன ஜன்மத்தில் யாரை அடித்தேனோ?'

ஒருமுறை ஆசிரமத்தில் எவரும் இல்லாமல் தனியே அமர்ந்திருந்தார் ஸ்ரீரமண மகரிஷி.

அப்போது அங்கு வந்த ஐந்து முரடர்கள் ஸ்ரீரமணரைக் கடுமையாக அடித்துக் காயப்படுத்தி விட்டு ஓடிவிட்டார்கள்.

சற்று நேரத்தில் அங்கு வந்த ஆசிரமவாசிகள் ஸ்ரீரமணருக்கு ஏற்பட்டிருந்த காயங்களைப் பார்த்துப் பதறினர்.

பகவான் ரமணர்
பகவான் ரமணர்``உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் யாரென்று சொல்லுங்கள்'' என்று கேட்டார்கள்.

பகவானோ எதுவும் பேசாது மெளனமாகவே இருந்தார். ஆசிரமவாசிகள் பொறுமை இழந்தனர். உரிமையோடு பகவானிடம் கோபித்துக் கொண்டனர்.

உடனே பகவான் ரமணர் சொன்னார்:

``போன ஜன்மத்தில் நான் யாரை அடித்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்... ஞாபகம் வரவில்லையே!''

தன்னுடைய முன்வினையே காரணம். வேறு எவரும் இதற்குப் பொறுப்பல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லி, வினைப்பயனை உணர்த்தினார் பகவான் ஸ்ரீரமணர்.

- அ.யாழினி பர்வதம், சென்னை-78

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு