
திருவரங்க சரிதம்
வித்தகன் வேதியன் வேதாந்த தேசிக னெங்கள் தூப்புல்
மெய்த்தவ னுத்தமன் வேங்கட நாதன் வியன் கலைகள்
மொய்த்திடு நாவின் முழக்கொடு வாத்தியார் மூலமறக்
கைத்தவ னென்றுரைத் தேன் கண்டி லேனென் கடுவினையே
- பிள்ளை அந்தாதியில் ஸ்ரீநயினாராச்சாரியார்.

ஸ்ரீவேதாந்த தேசிகன் என்று பின்னாளில் பக்தியோடு அழைக்கப் பட்ட தேசிகனின் தொடக்கக் காலத்தில் அவர் ‘வேங்கடநாதன்’ என்றே அறியப்பட்டார். காஞ்சியை ஒட்டிய தூப்புல் இவரின் பிறந்த இடமாய் இருந்தபோதும், வளர்ந்து மணம் முடித்த நிலையில் இவர் அதிக காலம் கழித்தது காஞ்சியில்தான்.
முக்திக்குத் திருவரங்கம் எனில் வரத்துக்குக் காஞ்சி என்றொரு வழக்கு உண்டு. திருவரங்கமும் சரி, காஞ்சியும் சரி நேரான பிரம்ம சம்பந்தமுடைய கோயில்களாகும். திருவரங்கப் பெருமானை பிரம்மா, தன் சத்திய லோகத்தில் வைத்து பூஜித்து வந்தார். பின்னர் அது இஷ்வாகு என்கிற சூரிய வம்சத்தவனால் பூவுலகு வந்தது. அதற்கும் பின் விபீஷணன் மூலம் திருவரங்கம் வந்து காலத்தால் பெரிய கோயில் என்றும் ஆனது.
இப்பெருமான் நேராக பிரம்மனின் சத்திய லோகத்திலிருந்து வந்தவர் என்றால், காஞ்சி வரதர் காஞ்சியம்பதியில் ‘ஹஸ்தகிரி’ எனும் சிறு குன்றின் மேல் கோயில் கொண்டவர்.
தேவர்களுக்கும் மானுடர்க்கும் வரம் தரவென்றே கோயில் கொண்ட மூர்த்தி என்பதால் ‘வரதராஜன்’ என்று விளிக்கப்பட்டார். இந்த மூர்த்தியைத் தொழுவதைத் தன் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தார் ஸ்ரீதேசிகன் என்கிற வேங்கடநாதன்.
ஒருமுறை வரதன் சந்நிதியில் திருமஞ்சனம் முடிந்து தரிசிக்கக் காத்திருக்கையில் சந்நிதிக்கு வெளியில் ஸ்ரீவேங்கடநாதன் கருடனைக் கண்டார். அந்நிலையில் கருடனின் பக்தியையும் எம்பெருமானையே சுமக்கும் பாக்கியம் பெற்றிருப்பதையும் எண்ணி கருடனைத் துதித்த போது, அசரீரிபோல் ஒரு குரல் வேங்கடநாதன் காதில் ஒலித்து அடங் கியது. அந்த அசரீரிக் குரல்தான் வேங்கடநாதனைத் திருவஹீந்திரபுரம் சென்று அங்கிருக்கும் தேவநாத பெருமானையும் செங்கமல நாச்சியையும் வணங்கிடத் தூண்டியது. அதன் நிமித்தம், காஞ்சியிலிருந்து திருவஹீந்திரபுரம் வந்து பெருமானையும் பிராட்டியையும் வணங்கிய வேங்கடநாதன், அருகிலுள்ள குன்றின் மேலுள்ள அரசமரத்தடியில் பெரும் தியானத்திலும் கோடி நாம ஜபத் திலும் ஆழ்ந்துவிட்டார்.
அதன் விளைவு அபாரமானது!
திருமலை வேங்கடவனின் கண்டாமணி அம்சமான வேங்கட நாதனுக்கு, எம்பெருமானின் கட்டளைக்கும் விருப்பத்திற்கும் இணங்க ஸ்ரீகருடன் தண்ணருள் பாலிக்கத் தீர்மானித்தான்.

வேங்கடநாதனின் கோடி நாம ஜபம் பூர்த்தியாகும் தருணத்தில், கையில் ஒரு ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி விக்ரஹத்துடன் விண்ணில் பறந்து வந்து வேங்கடநாதனுக்குக் காட்சி தந்து அருள் பாலிக்கலானான்.
வேங்கடநாதன் தியானம் கலைந்து கண் மலர்ந்த நொடி கண்ணில்பட்ட மூர்த்தி, எம்பெருமானின் வித்யா சொரூப மான ஸ்ரீஹயக்ரீவ மூர்த்திதான். வேங்கடநாதன் சிலிர்த்துப் போனார்.
``பட்சி ராஜனே! என்பொருட்டு வித்யா மூர்த்தியுடன் அருள் பாலிக்க வந்தாயோ’' என்று விம்முதலுடன் வணங்கினார்.
ஸ்ரீகருடனும் ``வேங்கடநாதா! உன் தியானமும் தவமும் வைகுண் டத்தை அடைந்து என் செவிக்குள் புகுந்து இன்புறச் செய்தது.
எம்பெருமானுக்கே பணியும் உனது சிரமும் பக்தியும் அவர் வாகனமான என்பொருட்டும் தியானித்ததை எண்ணி மகிழ்கிறேன். அதேவேளை தலை இருக்க, வாலை அழைத்த உன் செயலின் நோக்கம் அறியவும் வந்துள்ளேன்'' என்றார் ஸ்ரீகருடன்.
``பட்சிராஜனே! வைகுண்டக் காவலன் எம்பெருமானை, இமை போலக் காப்பவன் நீ. நம் எல்லோருக்கும் அவரே பெரும் காவலன். ஆயினும் அவர் நம் பொருட்டு தன்னை அடிமையாக்கிக் கொண்டு, நம் பக்திப் பிடிக்குள் அடங்கிவிடுகிறார். அப்படி அவரை பக்தியால் அடக்கியதில் பெரிய திருவடியான தாங்கள் அல்லவா பக்திக்கு முன்னுதாரணம்.
``அதனால்?''
“உம்மைப் போலவே அவர்மீது தாளாத பக்தியும் மாறாத காதலும் கொள்ளவே முன்னுதாரணமான உம்மைத் தியானித்தேன்.''
``மகிழ்ச்சி! உனது விருப்பம் ஈடேறக் கடவதாக. கூடுதலாய் வித்யா மற்றும் மேதாவிலாச சொரூப மான இந்த ஹயக்ரீவர் ரூபத்தை அளிப்பதோடு, ஹயக்ரீவர் மூல மந்திரத்தையும் உனக்கு உபதேசிக் கிறேன். இந்த மந்திர உபாசனை ஆயக் கலைகள் அறுபத்து நான்குக்கும் உன்னை அதிபன் ஆக்கும். சர்வசுதந்திரமாக இந்த உலகமே உன்னை அழைக்கும்படிச் செய்யும்”
- என்றபடியே ஸ்ரீஹயக்ரீவர் விக்ரஹத்தை அளித்து, மந்திரத்தை வேங்கடநாதனின் காதில் உபதேசித்தார் ஸ்ரீகருடன்.
அந்த நொடியே நடமாடும் ஒரு மந்திரமூர்த்தி ஆனார் வேங்கடநாதன். ஸ்ரீஹயக்ரீவரின் வித்யா பலத்தைப் பூவுலகத்தவர் பெற்றிட, அக்குன்றின் மீது கருடன் அளித்த மூர்த்தியை எழுந்தருளச் செய்து ஓர் ஆலயமும் உண்டாக்கினார்.
இதன்பின்னர், காஞ்சியம்பதிக்குத் திரும்பி அத்திகிரி வரதனை தரிசித்துத் தன் இல் வாழ்வைத் தொடர்ந்தார். இந்த நிலையில் அவர் வாழ்வில் பொன்னெழுத்தில் இருக்கும்படியாகப் பல சம்பவங்கள் நிகழ்ந்தன!
அதில் ஒன்று ஸ்ரீதேசிகன் `திருச்சின்னமாலை' என்று எண்சீர் விருத்தமாய் பதினாறு பாகங்கள் கொண்ட பிரபந்தத் தொகுப்பு பாடிய நிகழ்வு.
திருச்சின்னம் என்பது ஊதுகுழல் போல் ஒளியெழுப்பும் ஓர் இசைக்கருவி. இவ்வொலியானது திருமந்திரார்த்தம், த்வ்யம், சரம ஸ்லோகம் ஆகியவற்றின் பொருள் தரும் சிலிர்ப்பைத் தர வல்லது.
காஞ்சிப் பேரருளாளனே இம்மூன்றின் பொருள் வடிவினன்தானே. அப்படிப்பட்ட காஞ்சி வரதன் திருவீதியுலா செய்ய எழுந்தருளும்போது, திருச்சின்னக் கருவி எக்காள ஒலி எழுப்பி அவன் வருவதை உறுதி செய்வதுடன், அவன்பால் மனதைக் குவியவைத்து விடும்.
காஞ்சிப் பேரருளாளன் திருச்சந்நிதியில் அவ்வகையில் இரண்டு கருவிகள் இருந்தன. அவற்றின் ஒலி விசையில் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவேங்கடநாதன், அவற்றின் பெயரிலேயே அந்த வரதராஜனுக்குத் `திருச்சின்னமாலை' என்கிற பிரபந்தத்தைப் பாடியருளினார்.

இப்பாசுரத்தில் பத்தாம் பாசுரம் பாடுவதற்கு எளியது. நம்மையும் தாளம் போடச் செய்திடும் வலிமையுடையது!
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேலழகர் வந்தார்
கச்சிதனிற் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரந்தரு தெய்வப்பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியு முகில் வண்ணர் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தார்
உத்திர வேதிக்குள்ளேயுதித்தார் வந்தார்
உம்பர் தொழுங்கழலுடையார் வந்தார்தாமே
இப்பாடலைக் கேட்டு இன்புற்ற காஞ்சி வரதன் ஒரு காரியம் செய்யலானார்.
இப்பாடலை ஸ்ரீவேங்கடநாதன் பாடிய அன்று இரவு அவர் கனவில் தோன்றினார். தன் திருச்சந்நிதி திருச்சின்னக்கருவிகள் இரண்டில் ஒன்றை எடுத்து ஸ்ரீ வேங்கடநாதன் வசமளித்தார்.
``இது உனக்கு நான் தரும் பரிசு. உன் திருச் சின்னமாலைக்கு என் திருச்சின்னமே பரிசு” என்று அளித்து மறைந்தார்.
கண் விழித்த வேங்கடநாதனின் அருகில் கருவி இருந்தது. அதேவேளை, கோயிலில் ஒன்று குறைந்து போனதன் நிமித்தம், ஆலய ஸ்தானிகர் கனவில் தோன்றினார் வரதன்.
“ஒரு கருவி இல்லை என வருந்த வேண்டாம். அது ஸ்ரீவேங்கடநாதனுக்கு அன்புப் பரிசாகி விட்டது. இனி மீதமுள்ள ஒரு கருவியால் இசைத்தால் போதும். ஏன் இரண்டு கருவிகள் இல்லை என்கிற எண்ணம் இதனால் எழும்பும். அவ்வேளை, இரண்டில் ஒன்று ஸ்ரீவேங்கட நாதனுக்குப் பரிசாகிவிட்டது தெரியவரும். அவன் என் பொருட்டுப் பாடிய திருச்சின்னம் நினைவுக்கு வரும்!” என்று கூறி மறைந்தார்.
ஆலய ஸ்தானீகரும் ஆலயத்துக்குச் சென்று பார்த்தார். இரண்டில் ஒன்றே அங்கு இருந்த தைக் கண்டார். அவ்வேளை அங்கு வந்த வேங்கடநாதன், வரதனின் கருணையால் பல பாடல்களைப் பாடலானார்.
மும்மணிக்கோவை, கந்துப்பா, கழற்பா, அம்மானை, ஊசற்பா, ஏசற்பா, நவரத்தினமாலை என்று காலத்தால் ஸ்ரீவேங்கடநாதன் பாடிய பாடல்கள், வைணவ உலகம் கொண்டாடும் தோத்திரப் பாடல்களாயின.
இன்றும் காஞ்சி வரதரின் திருச்சந்நிதியில் ஒரு திருச்சின்னம் மட்டுமே ஒலிக்கப்படுகிறது. வேங்கடநாதன் பரிசாக பெற்ற திருச்சின்னம் தூப்புல் சுவாமி தேசிகன் சந்நிதியில் ஒலிக்கப் படுகிறது.
இச்சம்பவத்துக்குப் பின் ஸ்ரீவேங்கடநாதன் புகழ் எட்டுத் திக்கும் வேகமாய்ப் பரவியது. இவ்வேளையில்தான் திருவரங்கத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
திருவரங்கத்தில் வசித்து வந்த சில அத்வைத சித்தாந்திகள், ஸ்ரீராமாநுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை விமர்சித்துத் தங்களின் அத்வைதமே பெரிது என வாதம் செய்தனர். அவர்களுக்கு உகந்த பதிலை ஸ்ரீவேங்கடநாதன் ஆகிய வேதாந்த தேசிகராலேயே தர இயலும் என்று திருவரங்கத்தில் அப்போதிருந்த வைணவ ஆசார்ய பெருமக்களில் பலர் எண்ணினர்.
இதன் பொருட்டு அவர்கள் காஞ்சியம்பதி வந்து வேங்கடநாதனை அழைத்தனர். அவர்களின் அழைப்பினை திருவரங்கனின் அழைப்பாகவே கருதி, வேங்கடநாதன் திருவரங்கம் எழுந்தருளினார்.
முதல் காரியமாக தன் ஆத்ம குருவாக விளங்கிய ஸ்ரீராமாநுஜரின் தாமான திருமேனியை உடைய சந்நிதிக்கு எழுந்தருளி குரு வணக்கம் செய்தார். அவ்வேளையில் அவர் பாடியதே ‘ஸ்ரீயதிராஜ ஸப்ததி’ எனப்படுகிறது.
பின்னர் அரங்கனையும் அரங்கநாயகியையும் தரிசித்துச் சிலிர்த்தார். இதன்பின் அத்வைதிகள் உடனான வாதம் தொடங்கியது.

எட்டு நாள்கள் இடைவெளி இன்றித் தொடர்ந்த வாதப் போரில், வேங்கடநாதன் அத்வைதிகளின் சகல கேள்விகளுக்கும் பதிலளித்தார். இறுதியில் அவர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிறுவிக் காட்டவும், அப்போது அங்கு உள்ளவர்களால் `வேதாந்தாச்சார்யர்' என்ற பெயருடன் விளிக்கப்பட்டார்.
இதன்பிறகு இப்பெயரே மருவி ‘வேதாந்த தேசிகர்’ என்றாகியது. கூடுதலாய், திருவரங்கத்தில் வாழ்ந்த சுதர்சன சூரி என்கிற அன்பர் ஸ்ரீவேதாந்த தேசிகரின் பக்தி மற்றும் பாடல் புனையும் ஆற்றலால் பெரிதும் கவரப் பட்டு ‘கவிதார்ச்சிக சிம்மம்’ என்ற பட்டத்தை அளித்தார்.
ஸ்ரீவேதாந்த தேசிகரின் வளர்ச்சியையும் எழுச்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாத பலரும் அப்போது இருந்தனர். இவர்களால் ஒரு சோதனைக்கு ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆட்பட நேர்ந்தது.
முன்னதாய் ஒரு நிகழ்வு. மணப்பாக்கத்தில் நம்பி என்றொரு வைஷ்ணவர் வாழ்ந்தார். ஸ்ரீராமாநுஜரால் ஆகர்சிக்கப்பட்டு வைணவ நெறிப்படி வாழ்ந்து வந்தவருக்கு, வைணவம் தொடர்பான சகல நெறிகளையும் கற்கும் விருப்பம் ஏற்பட்டது.
தான் கற்பதோடு வைணவ நெறியை உலகம் முழுக்கப் பரப்பும் எண்ணமும் அவரிடம் இருந்தது. அதன் நிமித்தம் வேட்கையுடன் காஞ்சி வரதன் சந்நிதிக்கு வந்தார்.
காஞ்சி வரதனிடம் ``எம்பெருமானே! என் மரணப் பரியந்தம் நான் ஸ்ரீவைணவ சம்பிரதாயங்களைக் கற்றுக்கொண்டு தெளிவ தோடு, ஒரு நாளைக்கு ஒருவருக்காவது உபதேசிப்பது என்ற எண்ணம் கொண்டு உள்ளேன். இதுகூட உன்னால் வந்ததே. எனக்கு நீயே உற்ற குருவைக் காட்டியருள வேண்டும்” என்று வேண்டி நின்றார்.
அன்று இரவில் நம்பிகள் கனவில் தோன்றி னார் பேரருளாளன்.
``உனது விருப்பம் ஈடேற உடனே ஸ்ரீரங்கம் செல். அங்கு பிள்ளை லோகாசார்யர் என்பவர் வைஷ்ணவமே உருவெடுத்ததுபோல வாழ்ந்து வருகிறார். அவர் நாவால் உரைப்பவை அனைத்தும் என் கூற்றே. இதை நீ உணர்வாய்.
அப்படியே ஒரு சோதனைக் காலமும் வர உள்ளது. அவ்வேளை லோகாசார்யருக்குத் துணையாகவும் இரு. அங்கு செல்லும் முன் ஸ்ரீதேசிகரின் தண்ணருளைப் பூரண ஆசார்ய அருளாகக் கொள்வாயாக” என்று கூறி மறைந்தார்.
கண்விழித்த மணப்பாக்கத்து நம்பி முகத்தில் பூரிப்பு. வரதன் வரம் தருவதில் நிகர் இல்லாதவன் என்பது நிரூபணமாகிட, மணப்பாக்கம் நம்பி ஸ்ரீவேதாந்த தேசிகரை நாடிச் சென்றார்.
நம்பி அங்கு சென்றபோதுதான் அந்த விசித்திரமான சம்பவத்தையும் காண நேர்ந்தது. பின் உலகமே அறியும் ஒன்றாகவும் ஆனது அது.
அந்தச் சம்பவம், ஸ்ரீவைஷ்ணவ உலகிற்கு எம்பெருமாட்டியாம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தர உகந்த `ஸ்ரீதுதி' என்கிற தோத்திரம் தோன்றவும் காரணமானது.
- தொடரும்...
`நேரில் வந்து கூறிவிடு!'
ஞானக் கண்ணால் பகவானைக் கண்டுவிட்ட நம்மாழ்வாருக்கு, ஊனக் கண்ணாலும் அவரைக் காண ஆசை வந்தது.
ஆனால், அவர் நெஞ்சம் உருகப் பல முறை அழைத்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை. உடனே, பகவானிடம் வேறு மாதிரி வேண்டினார் ஆழ்வார்.
‘‘பகவானே! என் ஊனக் கண்களுக்கு நீ காட்சி தர விரும்பவில்லையா? பரவாயில்லை... ‘அவ்வாறு காட்சி தர விருப்பம் இல்லை’ என்பதையாவது என் முன் தோன்றிக் கூறிவிடு.
‘நீ ஒரு மகாபாவி. அதனால் உனக்குக் காட்சி தரமாட்டேன்' என்று உன் குரலால் நேரில் வந்து கூறிச் சென்றுவிடு.
இவ்வாறு நீ விருப்பமுடன் கூறினாலும் சரி; வெறுப்புடன் கூறினாலும் சரி... அதை நான் பொருட்படுத்தவில்லை; உன்னை எப்படியேனும் காண வேண்டும். உன் சொல் கேட்க வேண்டும். இவையே என் ஆசை!’’ என்கிறார் நம்மாழ்வார்.
`கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால் பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியென் காண வந்தே’ என்பது அந்தப் பாசுரம்.
பகவானை ஆழ்வார்கள் அனுபவிக்கும் பாங்கே தனிச் சுவைதான்!
- எஸ்.திருமலை, கோவை-9