திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 41

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

கம்பரின் உதாரணங்களைக் கேட்ட கூட்டத்தார் சற்றுநேரம் மௌனித்தனர். பின்னர், வயதில் முதிர்ந்த வேதியர் ஒருவர், கம்பருக்கு இறுதியான கருத்தினைக் கூறலானார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!’ - கம்பர்

ட்டக்கூத்தரின் ஆட்சேபனையால் உள்ளுக்குள் கலங்கிய கம்பர், அன்னை கலைவாணியைச் சரணடைந்தார்.அவரின் பிரார்த்தனைக்கு, கலைமகளும் செவிசாய்த்தாள்.

“கம்பா கலங்காதே. இன்று மாலையில் மன்னனையும் ஒட்டக்கூத்தரையும் இடையர் தெருவுக்கு அழைத்துச் சென்று, மாறுவேடத்தில் உலா வருவாயாக. அப்போது உன் குறை நீங்கும்” என்றாள். அதேபோல் குலோத்துங்கனையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்துக்கொண்டு தானும் மாறுவேடம் அணிந்து இடையர் தெருவுக்கு வந்தார் கம்பர்.

அந்தத் தெருவில் பெண்ணொருத்தி தயிர் கடைந்துகொண்டிருந்தாள். பிள்ளைகள் அவளைச் சுற்றி விளையாடிபடி இருந்தனர். சிலர், பானை மேல் வந்து விழப் பார்த்தனர். அந்தப் பெண், தன் பிள்ளைகளைக் கடிந்துகொண்டாள்.

“பிள்ளைகளே எட்டிச் செல்லுங்கள். நான் தயிர் கடையும்போது மோர்த்துமி தெறிக்கப்போகிறது” என்றாள். `மோர்த்துமி' என்று அவள் சொன்ன வார்த்தையை அரசனும் ஒட்டக்கூத்தனும் கேட்டனர். அந்த நொடியே அரசன், “கம்பர் பாடியதில் பிழையில்லை. தயிர் கடையும் இந்தப் பெண்ணுக்குப் பரிச்சயமான ஒரு சொல் உமக்குத் தெரியாமல்போனதுதான் விந்தை” என்று பரிகாசமும் செய்தார்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

ஒட்டக்கூத்தர் மிரண்டார். சிறிதுநேரம் கழித்து அதே வழியில் அவர் திரும்ப வந்தபோது, அந்த வீடு பாழடைந்த வீடாக எவருமின்றி காட்சியளித்தது. அப்போதே ஒட்டக்கூத்தருக்கு ‘எல்லாம் சரஸ்வதி யின் லீலை’ என்று தெரிந்துவிட்டது. கூடவே கம்பர்மீது மதிப்பும் ஏற்பட்டது.

‘கம்பருக்காக சரஸ்வதியே இடையர்குலப் பெண்ணாக வந்து அருளாடல் செய்கிறாள் எனில், கம்பர் எவ்வளவு மேலானவர்? அவர் பாடப்போகும் ராமாயணமும் மிக மேலான தாகவே இருக்கும்...’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவர், தான் அதுவரை எழுதியதைக்கூட அரசனிடம் ஒப்படைக்க விரும்பவில்லை.

அதே நேரம், கம்பர் மிக வேகமாய் ராமா யணத்தை எழுதி பட்டாபிஷேகம் வரை வந்து விட்டார். ஒட்டக்கூத்தர் நிச்சயம் எழுதி முடித்திருப்பார் என்று கருதி அவரைக் காண வந்தபோது, ஒட்டக்கூத்தர் தான் எழுதிய ஓலைகளைத் தீயிட்டுக்கொண்டிருந்தார். அதைக் கண்டு பதைத்த கம்பர் எரித்ததுபோக மீதமிருந்த ஏடுகளைப் பார்த்தார். அது உத்தரகாண்டத் தொடக்கமாக இருந்து ராமனின் முடிவு வரை சென்று முடிந்திருந்தது.

“ஒட்டக்கூத்தரே! உமது எழுத்தும் மதிப்புமிக்கதே! நீங்கள் என்னை எண்ணி உங்களைத் தாழ்த்திக்கொண்டது தவறு. மேற்கொண்டு ராமாயணத்தை நான் எழுதப்போவது இல்லை. உங்களின் இந்த உத்தரகாண்டம் தொடங்கி முடிவு வரை உள்ளதை நான் பாடிய பாடல்களுடன் இணைப்பேன். நம் இருவர் பெயராலும் இது வழங்கப்படட்டும்'' என்றார்.

ஆனால், ஒட்டக்கூத்தர் மறுத்து ‘`கம்பரே... நீரே வரகவி. உமக்கு இணை எவரும் இல்லை. உமது பெயராலேயே இது வழங்கப்படட்டும்” என்று கூறிட, கம்பராமாயணம் பிறந்தது. அப்படிப் பிறந்ததை உலகறியச் செய்ய வேண்டும் அல்லவா?

‘அதற்கு என்ன செய்யலாம்’ என்று யோசிக்கையில் சோழன் அவையிலிருந்தோர் மட்டுமன்றி, கம்பரைச் சார்ந்தவர்களும் முதலில் சிந்தித்தது அரங்கநாதனை. பின்னர் சிந்தித்தது திருவரங்கத்தை!

கம்பரின் காவிய நாயகனான ஸ்ரீராமன் ஆராதித்து வணங்கிய பெருமானல்லவா அரங்கத்துப் பெருமான்! அப்படிப்பட்ட அவன் ஆலயத்தைவிடப் பொருத்தமான ஓர் இடம் இருக்கமுடியுமா என்ன?

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

கம்பரும் புறப்பட்டார் திருவரங்கம் நோக்கி!

திருவரங்கத்தில் கம்பரின் காலடிகள்பட்ட வேளை மழை பெய்யத் தொடங்கிவிட்டது. கம்பரோடு அவருக்குத் துணையாகக் குலோத்துங்க சோழன் சில காப்பாளர்களை அனுப்பியிருந்தான். அவர்கள் புரவியின் மேல் அமர்ந்து முன்னும் பின்னுமாக வந்த நிலையில், கம்பரை இரட்டைப் புரவிகள் பூட்டிய ரதம் ஒன்று திருவரங்கத்துக்கு அழைத்து வந்திருந்தது. அந்த ரதத்தில்தான் அவர் எழுதிய ராமாயணப் பாடல்கள் பனையோலை ஏட்டுக் கட்டுகளாய் மரப்பேழை ஒன்றில் இருந்தன.

பெருமழையில் கம்பர் நனைந்தார். அவர்கள் ஒதுங்குவதற்கு ஏற்ப மண்டபம் ஒன்றும் தென்பட்டது. ஆனால், கம்பர் மழையில் நனை வதை விரும்பினார்.

காப்பாளர்கள் “இது என்ன வேடிக்கை...” என்றனர்.

“வேடிக்கையல்ல. இது வருண பாசம்! பஞ்சபூதங்களில் ஒருவனான வருணன் என்னைக் குளிர்விக்கிறான். அதனால் பயணக் களைப்பு தீர்வதோடு, அரங்கப் பெருமானை தரிசிக்க இப்படியே செல்லலாம். காவிரிக்குச் சென்று நீராடத் தேவை இல்லையே...” என்றார் கம்பர்.

“இதனால் உடல் நலம் கெடலாமல்லவா?”

“வான் மழையும் தேன் மழையும் ஒன்று. இதனால் ஒரு கேடும் நிச்சயமாக வராது. நான், இம்மண்ணின் அரங்கநாதப் பெருமானை பூஜித்த ராமனின் வாழ்க்கையைப் பாடியவன். இது எனக்கான வரவேற்பு” என்றார் கம்பர்.

அப்படியே நனைந்த வண்ணமே ஆலயத்துக்குள் நுழைந்த கம்பர், அதன் எழிலை வியக்கத் தொடங்கினார். அகண்ட பிராகாரங்கள், அழகான கற்தூண்கள், தரைப் பரப்பெங்கும் சமமான பட்டியக் கற்கள், சுற்றிலும் திருமண் காப்பணிந்த வைணவ பக்தர்கள், அவர்கள் பக்தியோடு பாடிடும் பாசுரங்கள்.

கம்பர், வரும் நாள்களில் தன் ராமாயணப் பாடல்களையும் இதுபோல் எல்லோரும் பாடியபடி செல்வதாகக் கற்பனை செய்துகொண்டார். அப்போது, ஆலய நிர்வாகிகளுக்குக் கம்பரின் வருகை தெரியவரவும் அவர்கள் பூரண கும்பத்துடன் எதிரில் வந்தனர். கம்பரும் பூரித்தார்.

“வாருங்கள் கவிச்சக்கரவர்த்தி. தங்கள் வரவால் அரங்கன் மகிழ்கிறான். அவன் மகிழ்ந்தால் அவனியே மகிழ்ந்திடும். வாருங்கள்... வாருங்கள்...” என்றார் வேதவிற்பன்னர் ஒருவர்.

“தங்கள் விளிப்பும் களிப்பும் எனக்கு மகிழ் வோடு பரவசமும் தருகின்றன. ஒரு புலவனைப் போற்றிடும் இந்தப் பண்பாடு ஓங்குக உயர்க!” என்று பதில்மொழி கூறினார் கம்பர்.

அதன்பின், அரங்கப் பெருமானின் தரிசனமும் பரிவட்டத் திருக்காப்புடன் திவ்யமாக நடந்து முடிந்தது. பச்சைக் கற்பூரமும் ஏலமும் கிராம்பும் கலந்த தீர்த்தமுடன் இருந்த பச்சைவண்ணத் திருத் துழாய், அவர் நாவில் ஒரு பிரத்யேகச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அப்படியே பிரதட்சணம் வந்து கிளி மண்டபத் தில் அவர் அமர்ந்து உரையாடும் நிமித்தம் மனைப்பலகைகள் போடப்பட்டிருந்தன. பிரதானப் பலகையில் கம்பர் அமர்ந்திட, ஆலயக் காப்பாளர் முதல் வேதியர் தொட்டு, திருவரங்கம் வாழ் அரங்கனடிமைகள் பல்லோரும் அவர் எதிரில் அமர்ந்தனர்.

“வாழிய சோழ மணித்திருநாடு! வாழ்க மாமன்னர் குலோத்துங்கர்! வாழ்க கவிச்சக்கர வர்த்தி கம்பர் பிரான்! வாழ்க சோழ மக்கள்!” என்று ஒருவர் கட்டியக் குரல் கொடுத்து முடித்தார்.

கம்பருடன் உரையாடல் தொடங்கியது.

“கவிச் சக்கரவர்த்தியே, தங்கள் வருகைக்குப் பின்னால் ஒரு பெரும் காரணம் இருப்பதாகக் கேள்வியுற்றோம். அதை நாங்கள் அறியலாமா?”

“இது என்ன கேள்வி.. தாங்கள் அறிய வேண்டியே நான் இங்கு வந்துள்ளேன். சோழ மன்னனின் விருப்பம் காரணமாகவும், என்மீது பெரும் பற்று கொண்ட சடையப்ப வள்ளலின் பெருவிருப்பம் காரணமாகவும் வடமொழியில் வால்மீகி இயற்றிய ராமகாதையை யாம் அருந்தமிழில் ராமாயணமாக எழுதியுள்ளோம்.”

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

“நாங்களும் அதை எல்லாம் கேள்வியுற்றோம்..”

“என்னோடு பெரும் புலவரான ஒட்டக்கூத்தரும் இணைந்து எழுதியுள்ளார். அரிய இதிகாசமான ராமகாதையை ராமாயணமாக்கிய யாம் அதை இத்திருவரங்கத் திருத்தலத்தில் உங்கள் எல்லோர் முன்னிலையிலும் அரங்கேற்றி மகிழ விரும்புகிறோம்.”

“மிகச் சிறந்த முயற்சி. இக்காதையை தாங்கள் எவ்வாறு எழுதியுள்ளீர் என அறியலாமா?”

“தாராளமாக... இலக்கண நெருடல்களின்றி தெய்வத்தமிழ் மொழியில் பாடல்களாகவும் அப்பாடல்களைக் காண்டங்களாகப் பிரித்தும், அக்காண்டங்கள் என்னளவில் ஆறாகவும் கூத்தரின் உத்தரகாண்டம் ஏழாகவும் உள்ள இந்த ராமாயணம் என்பது 12,000 பாடல்களை உடைய பெரும் தமிழ்க் காப்பியமாகும்.”

“அற்புதம்... ஆனந்தம்... அதி விசேஷம்... ஆயினும்...” - ஒரு வைணவர் பாராட்டில் உச்சம் சென்று அப்படியே சரிந்து கீழ் இறங்கினார். கம்பர் முகத்திலும் ஒரு நொடி திகைப்பு பரவத் தொடங்கியது.

“கம்பர் பிரான் எங்களைத் தவறாகக் கருதிவிடக் கூடாது. இந்தப் பாடலில், தாங்கள் தங்களை ஆதரித்த சடையப்ப வள்ளலையும் பாராட்டியுள்ளீரோ?”

“ஆம். நான் இதைப் படைக்க அவரல்லவா மூல காரணம்?”

“நல்லது. அவருக்கான நன்றிகளை முகவுரை யோடு நிறுத்திக்கொண்டுள்ளீரா... இல்லை காவியமெங்கும் அது தொடர்கிறதா?”

“இப்போது எதற்கு இந்தக் கேள்வி?”

“காரணமாகத்தான்... ராமாயணம் என்பது அவதார புருஷனின் மாண்பைச் சொல்வது. அந்த அவதார புருஷனும் நம்மை எல்லாம் படைத்து, நாம் வாழ வழிகாட்டி அருளிய எம்பெருமானேயாவான்... அல்லவா?”

‘`அதிலென்ன சந்தேகம்?”

“சந்தேகமில்லை... அப்படிப்பட்ட இணை காட்ட முடியாத பரம புருஷனான எம்பெருமான் குறித்த இக்காப்பியத்தில், இடையில் வந்து இடையிலேயே மறைந்துவிடும் நம் போன்ற சாமான்யர்களில் ஒருவரான சடையப்பரையும் துதி செய்திருப்பது சரியா?”

“சடையப்பர் சாமான்யரா... இல்லவே இல்லை! அவர் மனித உருவில் நடமாடும் தெய்வம். தனக்கென வாழாத வள்ளல்...”

“உங்களுக்கு உதவிகள் செய்ததால், உங்கள் வரையில் அவர் தெய்வமாகத் திகழலாம். ஆனால் உலகுக்கு அவர் எப்படி தெய்வமாக முடியும்?”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“இறை ஸ்துதிக்குள் நர ஸ்துதி சரியல்ல என்பது எங்கள் கருத்து.”

``தவறான கருத்து. `நரன்' என தாங்கள் கூறிடும் நம்மைப் படைத்ததும் அவனே. அவன் படைப்பில் உயர்வு தாழ்வுக்கு இடமே கிடையாது. பேதங்கள், உயர்வு தாழ்வுகள் வாழ்வியலில் நம்மால் உருவாக்கப்பட்டவையே! இவை யாவும் இறைவனுக்குக் கிடையாது.

அதனால்தான் இதே ராமாயணத்தில், குகனை தன் சகோதரனாகவே ஏற்றுக்கொண்டான். சபரியின் ஆசிரமத்தில் அவளின் எச்சில்பட்ட பழங்களையும் ருசித்தான். அனுமனையும், ஜாம்பவானையும் அணைத்து மகிழ்ந்தான்.''

- கம்பரின் உதாரணங்களைக் கேட்ட கூட்டத்தார் சற்றுநேரம் மௌனித்தனர். பின்னர், வயதில் முதிர்ந்த வேதியர் ஒருவர், கம்பருக்கு இறுதியான கருத்தினைக் கூறலானார்.

- உலா தொடரும்...