ஜோதிடம்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 42

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

கம்பர் மிக நைச்சியமான குரலில் சொன்ன தைக் கேட்ட வைணவர் ஒருவரின் கண்கள் கலங்கின.

திருவரங்கம் - ரங்கநாதரின் ஆலயத்தில் கிளி மண்டபத்தில் பலரும் அமர்ந்து உரையாடும் நிமித்தம் மனைப்பலகைகள் போடப்பட்டிருந்தன. பிரதான பலகையில் கம்பர் அமர்ந்துகொண்டார். ஆலயக் காப்பாளர், வேதியர் மற்றும் திருவரங்கம்வாழ் அரங்கனடிமைகள் பலரும் அவர் எதிரில் அமர்ந்தனர். அவர்களுக்கு இடையேயான விவாதம் தொடர்ந்தது.

“கவிச்சக்கரவர்த்தி அவர்களே, தங்கள் கருத்தை அறிந்தோம். தங்கள் நன்றியுணர்வைப் பாராட்டவும் விரும்புகிறோம். அதேநேரம், இதுகாறும் ஒரு பெரும் தமிழ்க் காப்பியத்தை நாங்கள் வாசித்ததில்லை. புராணங்களும் இதிகாசங்களும் வடமொழியிலேயே உள்ளன. இப்போதுதான் இனிய தமிழின் பாசுரங்கள் இங்கு பாடப்பட்டு வருகின்றன. அதற்குத் திருமங்கையாழ்வார் என்பவரே பிரதான காரணம். அவருக்கு எம்பெருமானே அனுமதியளித்துவிட்டான். ஆனால், உங்களுக்கு எப்படி அனுமதி தருவது... அவனைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் இல்லையே என்றே யோசிக்கிறோம்.”

“எம்பெருமான் மங்கை மன்னனுக்கு அனுமதியளித்த நிலையில், எனக்குத்தானா இல்லையென்பான்...”

“இப்போது முன்போன்ற நிலையில்லை. இன்று தங்களைப் போல் பலரும் பாடல்களுடன் வந்து திருச்சந்நிதியில் வைத்து உத்தரவு கேட்க விரும்புகின்றனர். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல் அவர்களுக்கு அவர் களின் பாடல்கள் பெரிதாக இருக்கலாம். ஆனால், தமிழ்ச் சமூகம் அதை ஏற்க வேண்டியது முக்கியமல்லவா...”

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

“சரி... இறுதியாக உங்கள் முடிவுதான் என்ன?” - கம்பர் கேட்டார்.

“உங்கள் விளக்கங்களைக் கேட்ட அளவில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அதேநேரம், நாங்கள் மட்டுமே தமிழ்ச் சமூகம் இல்லை. தமிழாய்ந்த வல்லுநர்கள் சேர, பாண்டிய நாட்டிலும் உள்ளனர். அவர்கள் எல்லோருடைய அனுமதியிருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம்.”

“திருவரங்கத்துத் திருமக்களே! இதற்காக நான் நாடு நாடாகச் சென்று, உங்களைச் சந்தித்தது போல் அவர்களை எல்லாமும் சந்தித்து, என் பாடல்களைப் பாடி அவர்கள் அனுமதியைப் பெறுவது என்பது நடைமுறை சாத்தியமா... யோசியுங்கள். இந்த ராமாயணத்தில் என்னைப் பற்றியேகூட நான் எங்கும் குறிப்புகள் வைக்கவில்லை. அந்த ராமன் புகழைத்தான் ஏந்திப்பிடித்திருக்கிறேன். வேண்டுமானால் நான் பாடுகிறேன். கேட்டுவிட்டு இறுதி முடிவுக்கு வாருங்கள்.”

கம்பர் மிக நைச்சியமான குரலில் சொன்ன தைக் கேட்ட வைணவர் ஒருவரின் கண்கள் கலங்கின.

“எதற்காக இந்தக் கண்ணீர்?”

“கம்பர்பிரானே... உங்களின் பணிவான முயற்சியும் விளக்கங்களும் எம்பெருமான்பால் உங்களுக்கிருக்கும் பக்தியும் என்னை நெகிழ்த்தி விட்டன; என்னை மட்டுமல்ல எல்லோரையும் தான். எங்களுக்கெல்லாம் ஒரே ஒரு நெருடல், தங்கள் பாடல்களில் பொருள் குற்றம் இருந்தால் அதைக் கண்டறிந்து கூற எங்களால் இயலும். சொற்குற்றமோ... இல்லை, இலக்கணப் பிழைகளோ இருந்தால், அவற்றைக் கண்டறிய வல்ல தமிழாய்ந்த வல்லுநர் இப்போது எம்மிடையே இல்லை.

பாண்டிய நாட்டில் இதற்கென்றே இருந்தன பொற்றாமரைக்குளமும், சங்கப்பலகையும். இப்போது அங்கும் பெரும் மாற்றங்கள். கால மாற்றத்தால் சங்கப்பலகையின் சாந்நித்யமும் போய்விட்டது. செய்யுளில் குற்றம் காண்போர் மட்டுமே மிகுந்ததால் வந்த வினையோ... இல்லை, சங்கப்பலகை ஏற்கும்வண்ணம் ஒருவரும் எழுதவில்லை என்பது காரணமோ... தெரியவில்லை. எனவே, நீங்கள் ஒரு தமிழாய்ந்த கூட்டத்திடம் உங்கள் ராமாயணத்தைப் பாடிக் காண்பித்து ஒப்புதல் பெற்று வந்தாலே போதும். அரங்கத்து ஆலயம் தங்களை வாரியணைத்து வரவேற்கத் தயாராக உள்ளது.”

அந்த வைணவர் கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். கம்பருக்கு அப்போதுதான் புரிந்தது, ஒரு காவியத்தைப் படைப்பதைவிட, அதை ஏற்கச் செய்யும் முயற்சியே பெரியது என்பது.

அதே கூட்டத்தில் ஒரு குரல், “கம்பர்பிரானே... இம்மட்டில் இன்னொரு சிக்கலும் உள்ளது” என்று தொடங்கியது. கம்பர் அவரை ஏறிட்டார். `பார்வையாலேயே இன்னும் என்ன சிக்கலோ...' என்கிற வினா வையும் எழுப்பினார். அவரும் தொடர்ந்தார்.

“கம்பர் பெருமானே! தாங்கள் ராமாயண காவியத்தை எழுதி எடுத்துக் கொண்டு நேராக இங்கே வந்துவிட்டீர். ஆனால், அந்த ராமனும் அவனது ராமாயணமும் வைணவர்களுக்கு மட்டுமே உரியதன்று... அல்லவா?”

“அதிலென்ன ஐயம்... இந்த ராமனும் ராமாயணமும் மனித குலத்துக்கே பொதுவானது அல்லவா. ஒரு மனிதர் எப்படி வாழவேண்டும் என்று உணர்த்தத்தானே அவன் ஏகபத்தினி விரதனாக தர்மத்தின் தலைவனாக வாழ்ந்து காட்டினான்.”

“அப்படியானால் வைணவரல்லாத சைவர், சமணர், பௌத்தர் என்பாரும் வாழும் இந்தத் தமிழ் மண்ணில் அவர்களும் ஏற்க வேண்டுமல்லவா?”

“சமணர், பௌத்தர் சித்தாந்தமே வேறு. அவர்கள் வேத மறுப்பாளர்கள். வேள்விகளை வெறுப்பவர்கள். ஆனால், சைவர் அவ்வாறல்லர்; அவர்கள் ஏற்பது அவசியம்.”

“அப்படியானால், நம் தமிழின் அருமை அறிந்த சைவர்களின் தலங்களில் பிரதானமானதும் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளதுமான சிதம்பரத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்துவரும் தீட்சிதர்களின் ஒப்புதல் பெற்றால்கூட போதுமே...”

- கூட்டத்தில் பண்டிதர் போன்ற ஒருவர் சொன்னதை அனைவரும் ஆமோதித்தனர். கம்பர் திகைத்தார்.

‘இதற்காக நான் சிதம்பரம் சென்று தீட்சிதர்களின் ஒப்பம் பெற வேண்டுமா. அவர்கள் மூவாயிரவர் ஆயிற்றே. அதில் ஒருவர் ஏற்க மறுத்தாலும் புதிதாய் ஒரு சிக்கல் உருவாகிவிடுமே’ என்று அவர் மனத்துக்குள் ஒரு சோர்வு கலந்த குரல் ஒலித்தது.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

``தாங்கள் யோசிப்பது புரிகிறது. எங்கள் வரையில் தீட்சிதர்கள் ஏற்றால் அது அந்தச் சங்கப்பலகையே ஏற்றதற்குச் சமம். அடுத்து, ஆன்மிக நெறியில் கொள்கைகள் பலவற்றில் நாங்கள் வேறுபாடும் மாறுபாடும் கொண்டிருந்தாலும், செழுந்தமிழில் இந்தத் திருவரங்கம் ஆழ்வார்களின் பாசுரங்களை ஏற்றார்போல், அந்தத் தில்லையில் அடியார் களின் பதிகங்கள், தேவாரம் என்னும் பெயரில் போற்றப்பட்டும் பாடப்பட்டும் வருகின்றன.

எனவே, அனைவருக்கும் பொதுவான ராமாயணத்தை நாங்கள் ஏற்றுப் போற்றுமுன், தில்லை வாழ் தீட்சிதர்கள் ஏற்பதும் மிக முக்கியம்” என்று முடித்தார் ஒருவர்.

அப்போது ஆலயமணி ஒலிக்கவும் அரங்கனே உத்தரவிட்டுவிட்டதாகவும், அக்கருத்தை ஆமோதித்துவிட்டதாகவும் அனைவரும் ஒரு மனதாகக் கருதினர்.

கம்பர்பிரானும் திருவரங்கம் வந்தது போலவே திருச்சிற்றம்பலம் நோக்கிப் பயணமானார்!

- தொடரும்

தென்முகக் கடவுளின் அற்புத தரிசனம்!

ந்திரா, அனந்தப்பூர் மாவட்டம்-ஹேமாவதி என்ற திருத்தலத்தில் உள்ள சிவாலயத்தில், சுவாமி ஐயப்பன் போல் ஆசன நிலையில் யோக மூர்த்தியாக அருள்புரிகிறார் தட்சிணாமூர்த்தி.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம், திருவாய்மூர், திருக்கைச்சின்னம் ஆகிய தலங்களில், நந்தியின் மேல் அமர்ந்து அருள்புரியும் மேதா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

கஞ்சனூர் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் பாதத்துக்கு அருகே நான்கு முனிவர்கள் இல்லை. ஹரதத்தர் உருவம் மட்டும் கைகுவித்த நிலையில் உள்ளது.

திருவிடைமருதூரில் உமையம்மையுடன் கூடிய ‘சாம்ய தட்சிணாமூர்த்தி’ அருள் புரிகிறார்.

காஞ்சிபுரத்துக்கு தெற்கேயுள்ள திருப்புலி வலம் தலத்தில், சிம்மத்தின்மீது திருவடியை ஊன்றியிருக்கும் தட்சிணா மூர்த்தியை தரிசிக்கலாம்.

- பரிமளம், திருச்சி-2