
இரண்டாம் பாகம்
ஸ்ரீராமாநுஜர் திருவரங்கத்துக்குத் திரும்பி வீரியமுடன் தன் செயல்பாடுகளைத் தொடங்கியபோது, வயதில் சதம் கண்டிருந்தார். அப்படிச் சதம் கண்ட நிலையிலும் துளியும் முதுமைக்கான உவட்டல்துவட்டலின்றி, ஆலயப் பணிகளிலும் தனக்கேயுண்டான சீர்திருத்தங்களிலும் மும்முரமாக இருந்தார்.

ஸ்ரீராமாநுஜர் திருநாராயணபுரத்தை விட்டு திருவரங்கத்துக்கு வந்து, இனி அங்கேயே தங்கியிருக்கப் போகிறார் என்கிற செய்தியை அறிந்து, எட்டுத்திக்கிலுமிருந்து வைஷ்ணவர்கள் தங்கள் குருவைக் காண திருவரங்கம் நோக்கி வரத் தொடங்கினார்கள்.
இவ்வாறு திருவரங்கம் திரும்பிவிட்ட நிலையில், அழகர்கோயிலில் இருந்து கூரத்தாழ்வானையும் அழைத்துக்கொண்டு வந்த ராமாநு ஜருக்கு, கூரத்தாழ்வான் பார்வை இன்றி அவதிப்படுவது பெரும் வருத்தத்தைத் தந்தது. கூரத்தாழ்வானுக்கோ தன் பார்வை பறிபோனது குறித்துக் கவலையில்லை. ஆனால், பார்வை இல்லாததால் குருநாதரின் அருகிலிருந்து அவருக்குத் தொண்டாற்ற இயலவில்லையே என்றுதான் அவர் வருந்தினார்.
ராமாநுஜருக்கு இணையான வயது முதுமையும் அவரை வருத்தியது. இந்நிலையில்தான் அவரைக் காஞ்சிப் பேரருளாளன் சந்நிதிக்கும், காஞ்சிக்கு அருகிலுள்ள கூரம் என்கிற அவரது சொந்த ஊருக்கும் சென்று வரப் பணித்தார் ராமாநுஜர்.
இந்தம் மண்ணில் தெய்விக மூர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையையும் கேண்மையும் கொண்டிருக்கின்றன. அம்மட்டில், இகபர வாழ்வில் கர்ம வினைகளால் நமக்கு நேரிடும் துன்பங்களைப் போக்கிக்கொள்ள ஏதுவாக பல தெய்வச்சந்நிதிகள் அமைந்துள்ளன.
முக்திக்கு அரங்கன், விருத்திக்கு வேங்கடவன், அச்சமற்ற மனதுக்கு நரசிம்மன், அறிவுக்குக் கிருஷ்ணன், வீரத்துக்கு ராமன் என்கிற வரிசையில், வேண்டும் வரங்களைப் பெறவேண்டும் எனில், அதற்குக் காஞ்சி வரதனே உகந்தவர். இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் கூரத்தாழ்வானைக் காஞ்சிக்குச் சென்றுவரப் பணித்தார் ராமாநுஜர். ``அப்படிச் செல்லும் இடத்தில், காஞ்சி வரதரிடம் பார்வையை வரமாகக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே என் பிரார்த்தனை’’ என்றும் கூறியிருந்தார்.

கூரத்தாழ்வானும் காஞ்சிக்குச் சென்றார். காஞ்சி வரதரைப் பிரார்த்தித்து `வரதராஜ ஸ்தவம்’ என்கிற மந்திர பாசுரத்தைப் பாடி அருளினார். பேரருளாளனாகிய வரதர் கூரத்தாழ்வாரின் கண் களில் ஒளியை வழங்கினார்.
அப்போது கூரத்தாழ்வான் தனக்காக மட்டுமன்றி, தனது பார்வை பறிபோகக் காரணமாக இருந்த நாலூரானுக்கும் சேர்த்தே பிரார்த்தித்துக்கொண்டார். பேரருளாளன் கண்ணொளி வழங்கிய அதேநேரத்தில், `முக்தியை அரங்கன் சந்நிதியில் வேண்டிப் பெற் றிடுக’ என்று திருவாக்கு கிடைத்தது. அப்போது, `நாலூரானும் முக்தி பெற வேண்டும்’ என்கிற அவரின் விருப்பமும் ஈடேறிற்று.
நாலூரானை உலகம் குருவுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதுவதை கூரத்தாழ்வான் விரும்பவில்லை. குருவானவர் தன்னைச் சரணடைந்தோருக்கு எந்த நிலையிலும் நன்மையே செய்ய வேண்டும் என்ற கருத்தை தனது இந்தச் செயலால் உலகுக்கு அளித்தார் கூரத்தாழ்வான். இதையறிந்த ராமாநுஜர் மிகவும் மகிழ்ந்தார். கூரத்தாழ்வான் குரு, சீடன் எனும் இரு பதத்துக்கும் இலக்கணமாய்த் திகழ்வதாக அறிவித்தார்.
காலம் இப்படியே சென்றுவிடுமா என்ன?
கூரத்தாழ்வானுக்கு உடல் நலிந்தது. நித்ய கர்மங்களை நின்று செய்ய முடியாதபடி ஒரு நிலை ஏற்பட்டது. மண்ணுக்குப் பாரமாய் பிறருக்கும் பாரமாய் வாழ்வதா என்கிற கேள்வி ஏற்பட்டது அவருக்குள்.

ஓட்டமாய் ஓடி காரியங்கள் பல நிறைவேற்றி எந்திரமாகத் திகழ்ந்தவன் இப்படி நடைபிணமாகக் கிடப்பதா என்றும் எண்ணம் தோன்றிட, திருவரங்கனின் சந்நிதியை அடைந்தார். அரங்கனின் திருமுன் நின்று, `உலக வாழ்விலிருந்து எம்மை விடுவித்து உன்னோடு சேர்த்துக் கொள்க’ என்று பிரார்த்தித்தார். அரங்கனும் அசரீரியாக அனுமதியளித்தார். அதன்பின்னர், தன் உற்ற குருவான ராமாநுஜ ரிடம் சென்று தனக்கு விடை கொடுக்கும்படி பிரார்த்தித்தார்.
ராமாநுஜர் அவரிடம், ``என்னை விட்டு முன்செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது?’’ என்று கேட்டார்.
``நான் முன் செல்வது எனக்காக மட்டுமல்ல. உமக்காகவும்கூட. உமக்கான நாளில் நீர் வைகுண்டம் வரும் நேரம், உம்மை அங்கே முன்னின்று வரவேற் கவே நான் முன்னதாகச் செல்கிறேன்’’ என்றார் கூரத்தாழ்வான்.
இந்தப் பதில் ராமாநுஜரை நெகழ்த்தியது. அப்படியே கூரத் தாழ்வானின் காதுகளில் திருமந்திரத்தை ஒருமுறைக்கு இருமுறை ஓதினார். கூரத்தாழ்வானின் ஆத்மா வைகுண்டம் ஏகியது.
இங்ஙனம் அவர் திருமந்திரத்தைக் கூரத்தாழ்வானின் காதுகளில் இருமுறை ஓதியது எதனால் என்பதும் பிறகு தெரிந்தது. இகத்தில் இதுநாள் வரையிலும் வாழ்ந்தமைக்கும் வாழ வைத்தமைக்கும் ஒருமுறை. பரத்தில் இனி எம்பெருமான் கழலடியில் நித்திய சூரியாய் வாழப்போவதற்காக ஒருமுறை என்ற விளக்கம், ராமாநுஜரின் சீடர்களுக் குச் சிலிர்ப்பைத் தந்தது.
இப்படியாக கூரத்தாழ்வானின் காலம் முடிந்த நிலையில் தனக்கான காலமும் தொலைவில் இல்லை என்றுணர்ந்தார் ராமாநு ஜர். முதலியாண்டானைக் கோயில் நிர்வாகியாக நீட்டிப் பித்தார். பெரியநம்பியின் மீது தனக்குள்ள பிரேமையை உலகறியச் செய்யவேண்டி, அவரின் குமாரருக்கு ஆளவந்தார் எழுந்தருளி யிருந்த மடத்தைத் தானமாக அளித்தார். அதன் எதிர்மனை கூரத்தாழ்வானு டையது.
மேலும் முதலியாண்டானுக்குச் சேனாதிபதி பட்டம் அளித்து அதற்கான பட்டயத்தையும் வழங்கினார். அவரை இக்காலத்தில் எல்லோரும் ‘யதிராஜன்’ என்று அழைத்தனர். நூறு சாதுர்மாஸ்யம் கண்டவர்களுக்கான பெயர் அது.
அதேபோல், தன் சிஷ்யர்களில் ஒருவராகவும் ராமாநுஜதாசன் என்று பெயர் கொண்டிருந்தவருமான சிற்பி ஒருவரை அழைத்து, தம்மைப் போலவே ஒரு விக்கிரகத்தைச் செய்யப் பணித்தார்.
சிற்பமும் தயாரானது. ராமாநுஜர் கைகூப்பிய கோலத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் திகழ்ந்தது அந்தச் சிற்பம். அதை ஆரத் தழுவி தன்னுடைய ஆத்ம சக்தியை அந்தச் சிலா மேனி முழுக்கவும் ஆவிர்பவிக்கச் செய்தார் ராமாநுஜர். பின்னர் கந்தாடை ஆண்டானைக் கொண்டு, புஷ்ய மாசத்தில் - குரு புஷ்யத்தில் பெரும்புதூரில் அதைப் பிரதிஷ்டைசெய்யச் செய்தார். அந்தத் திருமேனி `தாம் உகந்த திருமேனி’ என்றாயிற்று.
முன்னதாக திருநாராயணபுரத்தில் இருந்து ராமாநுஜர் புறப்படும்போது, அங்கேயும் இதேபோல் ஒரு சிலை வடிக்கச் செய்து, `இதை நான் என்றே கருதுங்கள்’ என்று அங்குள்ளவர்களிடம் கூறிவிட்டு வந்திருந்தார். அந்தத் திருமேனி ‘தமருகந்த திருமேனி’ என்றாயிற்று.
இப்படி இரண்டு திருமேனிகள் உண்டான நிலையில், அவரைச் சேர்ந்தவர்கள், கூரத்தாழ்வானைத் தொடர்ந்து ராமாநுஜரும் எம்பெருமானின் கழலடி சேர இருப்பதைப் புரிந்துகொண்டனர்.
ராமாநுஜர் நடமாட இயலாதபடி இருந்த நிலையில்... ரங்க ராஜ பட்டரும் பெரியபெருமாள் பட்டரும் அரங்கனுக் கான திருவாராதனைப் பிரசாதத்தை சர்வ வாத்திய கோஷத்துடன் கொண்டு வந்து அவரின் முன் வைத்து வணங்கினர். அதைக் கண்டு மகிழ்ந்த ராமாநுஜர், தன் சீடர்களில் ஒருவரான
நடதூராழ்வானிடம் பாஷ்யத்தைப் பத்திரமாகப் பேணிக் காக்கும்படி கேட்டுக்கொண்டார். சூக்தி சிம்மாசனத்தை பராசர பட்டருக்கு என்று இட்டருளினார். கந்தாடை ஆண்டானிடம் சரம விக்ரக கைங்கர்ய பணி புரியும்படிவேண்டிக்கொண்டார். அப்படியே சீடர்கள் மற்றும் அபிமானம் மிக்க வைஷ்ணவர்கள் சகலரையும் அழைத்து, தன் காலத்துக்குப் பிறகு வைஷ்ணவம் நலிவுற்றதாக ஒருவரும் சொல்லிவிடக் கூடாது என்பதைச் சொல்லி, எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தான் வகுத்து தந்த பாதையில் பயணிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் இத்தனை நாள்களில் என்னால் ஏதேனும் மன வருத்தம் உண்டாகி இருப்பின் அதற்காக மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் அவ்வாறு கூறியபோது, சீடர்கள் எல்லோரும் விசும்பி அழுதுவிட்டனர்.
பின்னர், நடக்க முடியாத அந்த நிலையிலும் நிறைவாக திருவரங்கனை தரிசிக்க விரும்பினார் ராமாநுஜர். பராசரபட்டரின் துணையோடு தள்ளாடலோடு நடந்து சென்று திருவரங்கனை தரிசித்து வந்தார். இறுதியாக அனைவருக்குமான ஆறு கட்டளை களையும் பிறப்பித்தார்.
1) பாஷ்யத்தை வாசியுங்கள்; அனைவரையும் வாசிக்கச் செய்யுங்கள்.
2) ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களை ஓதுங்கள்; அனை வரையும் ஓதச் செய்யுங்கள்.
3) அமுதுபடி, சாத்துப்படி செய்து அனைவருக்கும் வழங்குங்கள்.
4) திருநாராயணபுரம் போன்ற திவ்யதேசங்களில் ஒரு குடிசை யாவது போட்டுக்கொண்டு வாழ முற்படுங்கள்.
5) மேற்சொன்னவை நான்கும் சாத்தியப்படாதவர்கள் த்வய மஹாமந்திரத்தை, அதன் அர்த்தம் உணர்ந்து தினமும் பாராயணம் செய்யுங்கள்.
6) அதுவும் எம்மால் ஆகாது என்பவர்கள் எம்பெருமானே உபாயம் மற்றும் உபேயம் என்பதை உணர்ந்து ஒரு பரம பாகவத னிடத்தில் அன்பு காட்டி, அவனோடு சேர்ந்து வாழ்ந்திடுங்கள்.
இங்ஙனம் தன் சீடர்களுக்கு அறிவுரை வழங்கிய நிலையில், எம்பார் எனும் சீடரின் மடியில் தலைவைத்தும் வடுக நம்பியின் சிரத்தில் கால்களை இருத்தியும், திருவரங்கனையும் காஞ்சிப் பேரருளாளனையும் எண்ணியபடி, தன் இன்னுயிர் பிரிந்து வைகுண்டம் ஏகிட, திருநாடு அலங்கரித்தார்.
-தொடரும்...
இறைவன் இருக்கும் இடம்!
ஏழைகளிடமும், பலவீனமானவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவரிடம் இறைவன் அதீத மகிழ்ச்சி கொள்கிறான். சுயநலம் மிக்கவர்கள், ஏமாற்றுபவர்களிடம் இருந்து இறைவன் விலகியே இருக்கிறான்.
இரண்டு தோட்டக்காரர்கள். ஒருவன் சோம்பேறி; வேலை செய்யமாட்டான். ஆனால் எஜமானரைக் கண்டதும் பலவாறு புகழ்ந்து பேசுவான். மற்றவன் உழைப்பாளி. உழைப்பின் பலனை எஜமானருக்குச் சமர்ப்பிப்பான். இதில் யாரை எஜமானன் விரும்புவான். உழைப்பாளியைத்தானே? இறைவனும் அப்படியே. உண்மையாய் இருப்பவன் உள்ளத்தில் மகிழ்ந்து உறைகிறார்.
`ஆட்டுக் காலைத் தாரும் அம்பலவாணரே!'
`ஆட்டுக் காலைத் தாரும் அம்பலவாணரே காட்டுப்புலியும் பாம்பும் காத்துக்கொண்டிருக்கிற ஆட்டுக்காலைத் தாரும்'
இசை முன்னோடி முத்துத்தாண்டவரின் பாடல்களில் ஒன்று இது. ஆட்டுகிற கால் சரி... அதென்ன காட்டுப்புலியும் பாம்பும் காத்துக் கொண்டிருக்கும் கால்? காட்டுப்புலி - வியாக்ரபாதர். அதாவது புலிக்கால் முனிவர். பாம்பு - பதஞ்சலி முனிவர். இவர்கள் இருவரும் காணும் ஆவலோடு காத்திருந்து தரிசித்துப் பேறு பெற்றது பரமனின் தாண்டவத்தை. இந்த முனிவர் இருவரும் போற்றும் ஆனந்தத் திருவடி தரிசனம் எமக்கும் வேண்டும் என்று பொருள்.
-கே.மணிவேல், கரூர்