தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம்-25

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்

இன்ன மெத்தனை நாளிவ்வுடம்புடன்

இருந்து நோவுபடக் கடவேனையோ!

என்னை யிதினின்றும் விடுவித்துநீர்

என்று தான் திரு

நாட்டினு ளேற்றுவீர்

அன்னையுமத்த னுமல்லாத சுற்றமும்

ஆகியென்னயளித்தருள் நாதனே!

என்னி தத்தை யிராப் பகலின்றியே

ஏகமெண்ணு மெதிராச வள்ளலே!

- ஆர்த்தி பிரபந்தத்திலிருந்து....

ரங்கராஜ்ஜியம்
ரங்கராஜ்ஜியம்

ஒரு நாள் மாமுனிகளும் கிடாம்பி நாயனாரும் வெக்காவை ஒட்டிய வேதவதி ஆற்றுக்கு நீராடச் சென்றனர். அன்று அங்கே நீரோட்டம் அவ்வளவாக இல்லை. ஆங்காங்கே கணுக்கால் அளவுக்கே தண்ணீர் தென்பட்டது. உடனே ``நாம் வயற்காட்டுக் கேணியில் நீராடி வரலாம்...'' என்றார் கிடாம்பி நாயனார்.

மாமுனிகளோ ``பரவாயில்லை... என்னால் இங்கே இந்த அளவு நீரிலேயே நீராட முடியும்'' என்றதுடன், அப்போதே சர்ப்ப வடிவம் எடுத்து நீருக்குள் துளைத்துச் சென்று முழுவதும் நனைந்த நிலையில் மீண்டும் வெளிப்பட்டார்; தன் அவதார தேகத் திற்கு திரும்பினார்.

அதைக் கண்ட கிடாம்பி நாயனார் சிலிர்த்துப்போனார்; ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். அவரிடம், ``ஒருவகையில் தாங்கள் எனக்குப் பாஷ்யம் கற்பித்த ஆச்சார்யர். தங்களுக்கு நன்றி காட்டவே, நான் என் மூலத்தைக் காட்டியருளினேன். இதைத் தாங்கள் தங்களுக்குள் நினைத்து மகிழ்ந்தால் போதும். எனது அவதாரக் காலம் பூர்த்தியாகும் வரை, இன்றைய அனுபவத்தை நீங்கள் எவரிடமும் பகிரக் கூடாது'' என்று அன்புக் கட்டளை இட்டார் மாமுனிகள். கிடாம்பி நாயனாரும் அவ்வாறே நடப்பதாக உறுதியளித்தார்.

இதுவரையிலும் மாமுனியாய் கருதப்பட்ட அழகிய மணவாள நாயனார், இதன் பிறகு தன் யாத்திரையைப் பூர்த்தி செய்துகொண்டு திருவரங்கத்துக்குத் திரும்பினார். பல்லவராயன் மாளிகையில் தங்கியிருந்து, அரங்கனின் விருப்பப்படி பிரபந்த உரைகளையும், வசன திவ்ய சாஸ்திரத்தையும் சகலருக்கும் போதித்தார்.

காலத்தாலும், நித்திய அனுஷ்டானங்களாலும், அரங்கனின் தண்ணருளாலும் அழகிய மணவாள நாயனாராகத் திகழ்ந்த இவருக்கு `மணவாள மாமுனி' என்கிற சந்நியாச பட்டத்திற்கான திருநாமத்தை `சடகோப யதி' என்கிற திருவாய்மொழிப் பிள்ளையின் அத்யந்த சீடர் சாதித்தருளினார்.

இந்தத் திருநாமத்தைத் திருவரங்கத்தார் அனைவரும் ஏற்று மகிழ்ந்தனர். மேலும், `மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும்' என்று இவருக்குப் பல்லாண்டு பாடிச் சிறப்பித்தனர். காலத்தால் ஏராளமான சீடர்கள் இவருக்கு உண்டாயினர். அவர்களில் திருமஞ்சனம் அப்பா என்பவரும், அவரின் திருக்குமாரத்தியான ஆய்ச்சியும் குறிப்பிடத்தக்கவர்கள். பட்டர்பிரான் ஜீயரும் இவரின் திருவடிகளை ஆஸ்ரயித்து சீடரானார்.

ரங்கா... ரங்கா
ரங்கா... ரங்கா
SteveAllenPhoto

காலத்தால் மாமுனிகள் பல உரைகளை எழுதினார். முமுஷுப்படி, தத்வத்ரயம், வசன பூசனத்திற்கு வேதம், வேதாந்தம், புராணங்களின் துணைக்கொண்டு இவர் உரைகளை எழுதினார்.

`திருவாய்மொழி நூற்றந்தாதி' என்னும் வெண்பா அமைப்பிலுள்ள நூறு பாசுரங் களையும் எழுதினார். இவ்வாறு இவர் எழுதியவற்றில் `உபதேச ரத்தினமாலை'க்குத் தனிச் சிறப்புண்டு. திருவாய் மொழிப் பாடல்களின் ஏற்றம், அவற்றை எழுதியவர் களின் குறிப்புகள், பிள்ளை உலகாசார்யரின் திருவவதாரம், ஆச்சார்யனுக்குப் புரியும் தொண்டினால் உண்டாகும் நன்மைகள் என உபதேச ரத்னமாலை பெரும் பொருளோடு திகழ்ந்தது.

திருவாலி நகரில் திருமங்கையாழ்வாருக்கு வடிவழகுப் பாசுரம் பாடி அங்கே மங்களாசாசனமும் செய்தார். தொடர்ந்து திருக்கண்ண புரம் சென்று, அங்கே மங்கை மன்னனுக்கு ஒரு திருச் சந்நிதியை உண்டாக்கி மங்கையாழ் வார் மீது தனக்கிருந்த பற்றுதலை உலகிற்கு உணர்த்தினார்.

இவரைச் சிந்திக்கும்போது, உச்சபட்சமாய் கருதப்படும் விஷயம் ஒன்று உண்டு. இவரது அருமை பெருமையை உலகோர் அறிந்தது ஒரு புறம் இருக்க, திருவரங்கநாதனாகிய பெரிய பெருமாளே அதை உலகறியச் செய்ய வைத்த சம்பவம் இன்றும் எல்லோராலும் பெரிதும் சிந்திக்கப்படுகிறது.

இவரின் உரையாற்றல், ஞாபக சக்தி, தபோ பலம், மகா கருணை என சகலமும் சகலருக்கும் தெரிய வேண்டும் என்று கருதினார் பெரிய பெருமாள். ஆகவே இவரின் கனவில் தோன்றி தம்முடைய சந்நிதியில் பத்து மாத காலத்துக்குப் பிரவசன உரை நிகழ்த்தும்படி பணித்தார்.

குறிப்பிட்ட அந்தக் காலத்தில் அரங்கனுக்கான எவ்வித உத்சவங்களும் நிகழவில்லை. `நிகழத் தேவையில்லை' என்று பட்டர்கள் கனவிலும் ஏனைய ஆசார்யர்கள் கனவிலும் உரைத்து விட்டார் பெருமாள். அதனைத் தொடர்ந்து பெரிய பெருமாளின் திருச்சந்நிதி முன் உள்ள கிளி மண்ட பத்தில், தினமும் மாமுனிகள் உரை நிகழ்த்தினார். திருவாய்மொழியின் பொருளை எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும்படி இவர் சொன்ன விதத்தில் திருவரங்கத்தவர்கள் சொக்கிப் போயினர்.

இடையில் ஆனி மாத திருமூல நட்சத்திர நாள் வந்தது. அதுவரையிலும் பிரவசனத்துக்காக தமது திருச்செவியை மட்டுமே சாற்றிவந்த பெரிய பெருமாள், அன்றைய தினம் அழகிய சிறுவனின் வடிவில் வந்தார். பார்ப்பவர்கள், வைத்த கண்களை எடுத்துவிடாதபடி நல்ல தேஜஸுடன் சிரத்தில் வஸ்திர கிரீடம் சூட்டியவராக மண்டபத்துக்கு வந்தார். எல்லோரும் பக்திப்பெருக்குடன் அவனை நோக்கினார்கள்.

மாமுனிகளுக்கே கூட சிறுவனின் தோற்றமும் திருமேனி வாசமும் பெரும் சிலிர்ப்பை உண்டாக்கி விட்டது. அந்தப் பிள்ளை முன்வரிசையில் வந்து அமர்ந்ததுடன், ``என்ன இன்றைய உரையைத் தொடங்கவில்லையா?'' என்றும் கேட்டான்.

மாமுனிகளும் மறுபேச்சின்றி அன்றைய பிரவசனத்தை நிகழ்த்தி முடித்தார். அன்று பரிதாபி வருடம் ஆனி மூலம். திரு பவித்திர திருநாள் கூட. மாமுனிகள் பிரவசனத்தை முடிக்கவும், அங்கேயே ஒரு பட்டோலை நறுக்கில் அந்தப் பிள்ளை மாமுனி களைப் போற்றி ஒரு தனியனை எழுதலாயிற்று.

 சைலேஸ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்

யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்! - என்று எழுதியதோடு, அதை சபை நடுவே வாசிக்கவும் செய்தான்.

``என் திருநாமம் ரங்கநாயகம், யாம் இம்முனி யின் பிரவசன உரைகளால் பெரிதும் மகிழ்ந்தோம். இவை சித்தம் தெளிவிப்பவை. பிறவிக் கடலைக் கடக்க துணை நிற்பவை... எனவே இவர் பிரவசன உரைகளைப் போற்றி இத்தனியனைப் பாடி உள்ளோம்'' என்று கூறிவிட்டு, ஓலையில் எழுதியதை அப்படியே பாடியபிறகு, பொருளையும் கூறத் தொடங்கினான் அந்தப் பிள்ளை.

“திருமலையாழ்வரான சைலேசரின் பரம கருணைக்கு உரியவரும், அதனால் ஞானம் பெற்று வைராக்கியமும் நற்குணங்களும் கொண்ட யதீந்திர னான எம்பெருமானின் திறத்தினை உடையவருமான அழகிய மணவாள மாமுனியைப் போற்றுவோம்...” என்று பொருளும் கூறி முடித்தான். பிறகு, அந்த ஓலையை மாமுனிகளின் முன் வைத்துவிட்டு, ஒரு புன்னகையோடு அங்கிருந்து நடந்து பெரிய பெருமாள் திருச்சந்நிதியை நோக்கிச் சென்றான்.

அனைத்தையும் மெய்ம்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்கள், அவனைப் பின்தொடர்ந்தனர். அந்தப் பிள்ளையோ திருச்சந்நிதிக்குள் நுழைந்து மறைந்தும் போயிற்று. ` ரங்கநாயகமாக வந்த பாலகன் பெரிய பெருமாளே' என்பது எல்லோருக்கும் ருசுவானது. அந்த நொடி மாமுனிகளும் உணர்ச்சிப் பெருக்கோடு “ரங்கா... ரங்கா...” என்றிட அனைவரும் கோஷித்தனர்.

அதன்பின்னர் அந்தப் பட்டோலைக்கு மஞ்சக் காப்பு சாற்றுதல் செய்து, அதை எடுத்துச் சென்று பெரிய பெருமாள் திருவடிகளில் சமர்ப்பித்து அனைவரும் மகிழ்ந்தனர்.

அதன் பின்னர் இந்தத் தனியனையே அனைத்து திருச்சந்நிதிகளிலும் பாடித் துதித்து மகிழும் ஒரு வழிமுறையும் உருவாயிற்று. “ சைலேஸ தயாபாத்ரம்” என்கிற இத்தனியனைச் சிந்திக்கும்போதெல்லாம் பெரிய பெருமாளும்,  மணவாள மாமுனிகளமே நம் உள்ளத்தில் பொங்கி எழுவர்.

தம்முடைய அவதாரங்களில் வசிஷ்டருக்கும் சாந்தீப முனிவருக்கும் சீடனாகவும், பலராமனுக்குத் தம்பியாகவும் தன்னை செலுத்திக் கொண்டவர் எம்பெருமான்.

திருவரங்கத்திலும் மணவாள மாமுனிகளின் பொருட்டு ஒரு சிறுவனாக வந்து இதுபோல தனியன் அளித்துச் சிறப்பித்தது அவரது எல்லையில்லா கருணைக்குச் சாட்சி. இதனால் உந்தப்பெற்ற மணவாள மாமுனிகளும் தன் அவதாரக் கடமையை தொடர்ந்து செய்தார்;  வைஷ்ணவ கொள்கைகள் என்றும் சிறந்து விளங்கிட பெரும் காரணம் ஆனார்.

- தொடரும்.

ஞான நூல்
ஞான நூல்
Iakov Filimonov

ஆயுளை வளர்க்கும் விஷயங்கள்!

பழைய ஞான நூல்களில் ஒன்றான நீதி சாஸ்திரம், அடுத்தவரிடம் சொல்லக் கூடாத ஒன்பது விஷயங்களைப் பட்டியல் இடுகிறது. அவை என்னென்ன தெரியுமா?

வயது, செல்வம், குடும்பத்தில் கலகம், மந்திரம், மருந்து, கணவன்- மனைவி சேர்க்கை, தானம், மானம், அவமானம் - இந்த ஒன்பதையும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் பாதுகாக்க வேண்டும்.

அதேபோல், நம் ஆயுளை வளர்ப்பவை மற்றும் குறைப்பவை குறித்தும் விவரிக்கிறது. காலை வெயில், பிணப் புகை, தன்னைவிட வயதில் மூத்த பெண்ணின் சேர்க்கை, குட்டையாய் தேங்கிய அழுக்கு நீர், இரவில் தயிர் சாதம் உண்ணுதல் ஆகியவை ஆயுளைக் குறைக்கும். மாலை வெயில், ஹோமப் புகை, இரவில் பால் அன்னம் ஆகியவை ஆயுளை வளர்க்கும்.

நம்மை ஏழையாக்கும் விவரங் களையும் நீதிசாஸ்திரம் விவரிக்கிறது: கல்லின் மேல் வைத்த சந்தனத்தைப் பூசிக் கொள்வது, பூனை தீண்டிய உணவை உண்பது, நீரில் தன் நிழலைப் பார்ப்பது ஆகிய செயல்கள், ஒருவன் எவ்வளவு பெரிய செல்வந்த னாக இருந்தாலும் அவனை ஏழையாக்கிவிடுமாம்!

- கலா கெளதம், முசிறி

`மாயனே நேயனே!'

`மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை...' என்றெல்லாம் பகவானைப் போற்றுகிறாள் ஆண்டாள். பகவான் தம்முடைய அவதாரக் காலத்தில் எத்தனையோ மாயங்களைப் புரிந்துள்ளார். அத்தனையும் நம் நன்மைக்காகத்தான். வைகுண்டத் திலும் ஒருமுறை மாயாலீலை புரிந்தார் பெருமாள்.

ஒருமுறை, எம்பெருமானுக்கு விண்ணோர்கள் திருமஞ்சனம் செய்தார்கள். திருமஞ்சனம் நிறைவுற்றதும் தூபம் காட்டப் பட்டது. ஒரே புகை மண்டலம்... எதுவும் புலப்படாத நிலை. பகவானின் திருமுக மண்டலத்தைப் பார்க்க முடிய வில்லை. அந்த ஒரு க்ஷண காலத்தில் பரமாத்மா என்ன செய்தார் தெரியுமா?

அங்கிருந்து ஆயர்பாடிக்கு வந்து கிருஷ்ணனாகப் பிறந்து, வெண்ணெய் திருடி, பல அரிய பெரிய காரியங்களை எல்லாம் முடித்துவிட்டாராம். இது மொத்தமும் ஒரு கணத்தில் - தூபம் சமர்ப்பிப்பதற்குள் நடந்து முடிந்து போய்விட்டது என்றால், அவருடைய மாயா வேஷத்தை என்னவென்பது!

திருமழிசை ஆழ்வாரும் `மாயமாய மாக்கினாயுன் மாயமுற்று மாயமே’ என்று பாடுகிறார். இந்தப் புண்ணிய மார்கழியில் நாமும் அந்த மாயனைப் போற்றி வழிபட்டு மகிமை பெறுவோம்.

-கே.பிருந்தா, சென்னை-44