Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 15

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 15

ரங்க ராஜ்ஜியம்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

பொருந்திய தேசும் திறலும் புகழும், நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும், செறுகலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த

அருந்தவன், எங்களி ராமாநுசனை அடைபவர்க்கே!


- இராமாநுச நூற்றந்தாதி

ராமாநுஜர்
ராமாநுஜர்


``நம்பியை யாம் விலக்கியது சரியல்ல. அதில் அரங்கனுக்கு உடன்பாடில்லை. எனவே இந்த நொடியே என் கட்டளையை நான் திரும்பப் பெறுகிறேன். அரங்கனடியவ ராக அவரே தொடரட்டும். மற்றதை அரங்கனே பார்த்துக்கொள்வான்.''

ராமாநுஜர் இக்கருத்தைச் சொன்ன அதே தருணம், அழகியமணவாளனின் பல்லக்கு உலா முடிந்து திருச்சந்நிதிக்குத் திரும்ப வந்தது. எம்பெருமானை வணங்கி விட்டுப் புறப்படுமுன், நம்பியை அழைத்தார் ராமாநுஜர்.

``உன் வரையில் நான் இட்ட கட்டளையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். நீரே தொடர்க. அதுவே அரங்கனின் விருப்பம்'' என்றார்.

அதைக் கேட்ட கோயில் நம்பிக்குச் சிலிர்ப்பு ஏற்பட்டது. பின்னர், ராமாநுஜர் மடம் நோக்கி சென்றுவிட, கூரத்தாழ்வான் கோயில் நம்பியை தனியே அழைத்து நடந்த தைக் கூறி முடித்தார். கோயில் நம்பியின் திருமுகத்தில் பெரும் புளகாங்கிதம்!

`என் பொருட்டு அந்த அரங்கனே வந்து பேசினானா? நான் அவ்வளவு புண்ணியனா? ரங்கா... என்னே உன் கருணை!' என்று நெக்குருகிப்போனார் கோயில்நம்பி.

``ஆம்! உமக்காக பேசியது மட்டுமல்ல, உம்மைத் திருத்தி ஆட்கொள்ளவும் அரங்கன் பணித்துள்ளார். இனியும் நீர் உடையவரை புரிந்துகொள்ளத் தவறினால், அதை அரங்கன் மன்னிக்க மாட்டார்'' என்றார் கூரத்தாழ்வான்.

``திருத்திக்கொள்ளுமளவு நான் என்ன தவறிழைத்துவிட்டேன்? ஆசார பங்கம் கூடாது என்பதே என் நிலைப்பாடு. ஆனால் ராமாநுஜரோ என் கருத்துக்கு மாறுபடு கிறாரே...''

``உமது கருத்துதான் தனது கருத்தும் என்றால், அரங்கன் அவர் கனவில் வந்திருப் பாரா... உம் கனவிலல்லவா வந்திருப்பார்?''

``அதுவும் சரியே. அரங்கன் ஆட்கொண்ட உடையவராகிய ராமாநுஜரிடம் இனி நான் பிணக்குக் கொள்ளேன். இனி, அவரே எனக்கும் ஆசார்யன்'' என்றார் கோயில் நம்பி. அவரின் இந்த மனமாற்றத்தை ராமாநுஜரிடம் சொல்ல விரைந்தார் கூரத்தாழ்வான்!

ராமாநுஜர் திருமடத்தில் அன்றாட பாடுகள் முடிந்த நிலையில், சற்றே ஆரோகணித்த வேளையில், மூச்சிறைக்க வந்து நின்றார் கூரத்தாழ்வான்.

``ஆழ்வான்! எதனால் இந்த இளைப்பு. ஏன் இந்தப் பாடு?'' என்று ராமாநுஜர் வினவவும் கூரத்தாழ்வான் பணிந்து பேசலானார்.

``ஸ்வாமி! கோயில்நம்பியின் நிமித்தம் எம்பெருமான் தங்களின் கனவில் வந்து பேசியதை நம்பியிடம் உரைத்தேன். அதைக் கேட்ட நொடி சிலிர்த்துப் போனார் அவர். அவர் மனம் ஆனந்தக் கூத்தாட தொடங்கி விட்டது.''

``இதைச் சொல்லத்தான் இப்படி ஓடி வந்தாயா? இப்போது நினைத்தாலும் என் மனம் அந்தக் கனவை எண்ணிச் சிலிர்க்கிறது. ஒருவேளை, கோயில்நம்பி என்னு டன் பிணக்குக் கொள்ளாது இருந்திருந்தால் இவ்வாறு நிகழ்ந்திருக்குமா?''

``ஆம் ஸ்வாமி... இந்த வாழ்வே மிக விநோதமான ஒன்றாக உள்ளது. எது எப்போது எப்படி மாறும் என்று அனுமானிக்க முடிவதில்லை. நேற்றுவரையிலும் கோயில் நம்பி குறித்து விசனப் பட்ட தாங்கள் இப்போது மகிழ்கிறீர்கள்.

அதேபோல், இதுவரை உங்களைப் புரிந்துகொள்ளாது நடந்துகொண்ட கோயில் நம்பியோ... `இனி உடையவரின் கருத்தே எனது கருத்து. அவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்' என்கிறார். சொல்லப்போனால் அரங்கன் ஒரு நல்ல சீடனை தங்களுக்கு அளித்துவிட்டார் என்பேன்.''

``ஆழ்வான்! அரங்கன் சர்வ வியாபி. ஒரு பக்தன் ஒன்றை அவனிடம் கேட்கத் தேவையே இல்லை. அவனைச் சரணடைந்த வர்களுக்கு, அவன் பார்த்து பார்த்து படியளப்பான். அதற்கு சாட்சிதான் கோயில் நம்பி விஷயமும்...''

``புரிகிறது ஸ்வாமி. இதுபோன்ற நுட்பமான விஷயங் களைக் குருவான உங்கள் வாயாரக் கேட்கும்போது பரவசம் ஏற்படுகிறது. இம்மட்டில் உங்களைக் குருவாக அடையப் பெற்ற நான் பெரும் பாக்கியசாலி!'' என்று நெகிழ்ச்சியுடன் கூறிப் பணிந்தார் கூரத்தாழ்வான்.

நாட்கள் நகர்ந்தன. ராமாநுஜரின் உள்ளக்கிடக்கை கோயில் நம்பிக்குப் புரிய ஆரம்பித்து. ஒரு கட்டத்தில் ராமாநுஜருக்கு மிகப் பிடித்தமான சீடராக மாறினார் கோயில் நம்பி.

முன்னதாய் ஒரு கருத்தும் உண்டு. கோயில் நம்பி ராமாநுஜருக்கு ஆதரவாக இல்லாத நிலையில், எம்பெருமானே கனவில் வந்து கோயில் நம்பியே தொடரட்டும் எனக் கூறிட, அதன்படி ராமாநுஜர் திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் சென்று விட்டார்.

திருவரங்கத்தில் ராமாநுஜர் இல்லாத நிலையில், அதை ஒரு வெற்றிடமாய் உணர்ந்த கூரத்தாழ்வான் கோயில் நம்பியிடம் ராமாநுஜர் செய்ய எண்ணிய சீர்திருத்தங்களை எடுத்துக்கூறி, அதுவே கால காலத் திற்கும் ஏற்புடையது என்று கோயில் நம்பிக்குப் புரிய வைத்தார். இந்த வகையில் கோயில் நம்பிக்கு முதல் ஆசார்யனாக கருதத் தக்கவர் கூரத்தாழ்வானே! பின்னரே கோயில் நம்பி ராமாநுஜரை மனதார ஏற்றார் என்றொரு கருத்தும் வரலாற்றுப் பதிவுகளில் காணக் கிடைக்கிறது.

ஒரு பிரதான சம்பவம், கோயில் நம்பி வரையிலும் அவரது மன மாற்றத்துக்கும் கோயிலின் சீரமைப்புக்கும் காரணமாகிவிட்டது. அந்தச் சம்பவம் கோயில் நம்பியின் தாயாரின் பரமபதிப்பாகும்.

தாயார் பரமபதித்துவிட்ட நிலையில், ஒரு தனயனாய் பித்ரு காரியங்களைக் கோயில் நம்பி செய்யத் தொடங்கினார். 10 நாட்கள் வியோகக் காரியங்கள் எந்த குறைபாடும் இன்றி நடந்து முடிந்தது.

11-ம் நாள் சகுண்டீகரணம் என்கிற சடங்கொன்று உண்டு. இச்சடங்கில் ஒரு சகுண்டீகரணராய், அதாவது இறந்துவிட்ட தாயாருக்கு அவரது ஆத்ம சாந்திக்குப் பெரிதும் துணை நிற்பவராய் பிராமணர் ஒருவர்... இறந்தவர் நிமித்தம் அவருக்குப் பிடித்தமானவற்றைத் தாம் உண்டு, தாம் மிகத் திருப்தியுற்றதாகக் கூற வேண்டும். `தமக்குத் திருப்தி இல்லை' என்று அவர் கூறிவிட்டால், இறந்துபட்ட ஆன்மா மட்டுமன்றி, அவர்களின் பித்ருக்களும் விண்ணுலகில் அல்லல்படுவர்; அலைந்து திரிவர்.

அது மண்ணுலகில் பித்ரு காரியம் செய்த கர்த்தாவை யும் மிகவும் பாதிக்கும். எனவே, எல்லோரும் சகுண்டீ பிராமணருக்குத் திருப்தி ஏற்படும் விதமாகவே நடப்பர். போஜனத்தோடு அவருக்குப் புதிய செருப்பு, குடை மற்றும் வெள்ளி பொருட்கள் தட்சணை என்று வாரி வழங்குவார்கள்.

திருவரங்கம்
திருவரங்கம்


இவ்வேளையில் இறந்தவர் ஆன்மாவும் சகுண்டி பிராமணரைச் சம்மந்தம் கொள்வதால், பிராமணருக்குப் பல இடையூறுகளும் உருவாகும். குறிப்பாக ஊரில் சகுண்டீ பிராமணர் என்பவர் இவ்வாறு போஜனம் கொண்டால், ஒரு வருட காலம் தீட்டு காக்க வேண்டியவர்ஆகிறார். அவர் எந்தக் கோயிலுக்கும் செல்லவோ, குளங்களில் நீராடவோ கூடாது. தீட்சை வளர்த்து முனிப் போல் கிடக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு ஆன்மா பொருட்டு தனது ஷேம லாபங்களை அடகு வைக்கவேண்டியிருக்கும் என்பதால், சகுண்டி பிராம்மணனாக முன்வர பலரும் மறுப்பர். சிலர் அஞ்சவும் செய்வர். எனவே, ஊருக்கு ஒரு சகுண்டி பிராமணர் இருந்தால் அதுவே அதிகம். அவரும் எல்லோரின் பொருட்டு கோயில் குளங்களைத் துறந்து விசேஷ காரியங்களிலும் பங்கு கொள்ளாது ஒதுங்கியே இருப்பார். இது ஒருவகை தியாகமும் கூட! எனவே குழந்தை குட்டிகள் - மனைவி மக்கள் இல்லாத ஒரு கிரகஸ்தரே இதன் பொருட்டு முன்வருவார்.

கோயில் நம்பியின் தாயாரின் வியோகத்தின் போது பதினோராம் நாளன்று சகுண்டி பிராமணன் அதாவது நிமந்தரணர் ஆக ஒருவர் கூட கிடைக்கவில்லை. கோயில் நம்பி தவித்தார்.

இந்தச் செய்தி ராமாநுஜரின் கவனத்துக்குச் சென்றது. கோயில் நம்பிக்காக எம்பெருமானே கனவில் வந்து பேசியிருக்கும் நிலையில், அவர் கோயில் நம்பியைக் கைவிடுவாரா என்ன?

கூரத்தாழ்வானை அழைத்து ``ஆழ்வான்... நீயே கோயில் நம்பியின் தாயாரின் வியோகத்துக் கான நிமந்தரணன் ஆவாய். ஒருவருக்குச் செய்யும் உதவிகளில் தலையான உதவி இதுவே.

இவ்வேளையில் நூறு யானை எடை அளவிலான பொன்னைத் தருவதுகூட பெரிதன்று. நிமந்தரணராகி அவர் குறை நீங்கச் செய்வதே சிறப்பாகும். இதன் மூலம் எம்பெருமானின் பெரும் கருணைக்கு நீ ஆட்படுவாய்'' என்றார்.

கூரத்தாழ்வான் மறுமொழியே பேசவில்லை. உடனேயே கோயில் நம்பியின் வியோகம் நடக்கும் இடம் நோக்கிச் சென்றார்.

இதைக் கண்ட மற்ற சீடர்கள் குறிப்பாக முதலியாண்டான் ``ஸ்வாமி! இதனால் ஒரு ஆண்டுக்கு கூரத்தாழ்வான் நம்மோடு ஆலயம் ஏகமுடியாதே, உற்சவங்களிலும் பங்குகொள்ள முடியாதே'' என்று கேட்டார்.

``அதை அறியாமலா ஆழ்வானை அனுப்பினேன். நாம் ஆண்டு முழுக்க தொழுது பெறப் போகும் பயனை கூரத்தாழ்வான் நிமிந்தரணன் ஆவதற்குச் சம்மதித்த நொடியிலேயே பெற்று விட்டான்'' என்றார் உடையவர்.

நிமிந்தரணராக வியோகத்திற்குச் சென்ற கூரத்தாழ்வானைக் கண்டு கோயில்நம்பி விக்கித்துப் போனார். தன் குருவையொத்தவரா தன் பொருட்டு இப்படி வந்து நிற்கிறார் என்று ஆச்சர்யத்திலும் ஆனந்தத்திலும் திணறிப் போனார்.

வியோக காரியங்களும் முறைப்படி நடக்கத் தொடங்கின. தன் பொருட்டு கூரத் தாழ்வானை ராமாநுஜரே அனுப்பினார் என்ற தகவலும் அவரை நெகிழச் செய்தது. ராமாநுஜரின் உள்ளத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கோயில் நம்பி.

`இப்படியான பெரும் உள்ளமும் பெருந் தன்மையும் கொண்ட ராமாநுஜர் நிச்சயம் நான் அச்சப்படும்படியான ஒரு காரியத்தை எக்காலத்திலும் செய்ய மாட்டார்' என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார் அவர்.

வியோகம் முடிந்தது. திருப்தியை கூரத்தாழ்வான் வெளிப்படுத்தும் நேரமும் வந்தது. கூரத்தாழ்வான் ``மிகத் திருப்தி... பரம திருப்தி!'' என்றார். அப்போதே அவரின் காலடியில் விழுந்து கதறத் தோன்றியது கோயில் நம்பிக்கு. தன்னுடைய இக்கட்டை நீக்கிய கூரத்தாழ்வானுக்கும் ராமாநுஜருக் கும் நன்றி காட்ட விரும்பிய கோயில் நம்பி, உடனடியாக ஒரு காரியம் செய்தார்.

திருவரங்கக் கோயிலின் திருச்சந்நிதி சாவிக் கொத்தை எடுத்து வந்து கூரத்தாழ்வான் முன்வைத்தவர், ``ஸ்வாமி! நீங்கள் மட்டுமல்ல நானும்கூட ஓர் ஆண்டு காலம் ஆலயம் சென்று திருப்பணி செய்ய இயலாத சூதக நிலையில் இருப்பவன்தானே? இப்படி ஒரு நிலையில் ஆலயத்தை, எம்பெருமானுக்கான திருவாராதனைகளை ராமாநுஜரே திருப்தியாகவும் நேர்த்தியாகவும் செய்ய இயலும். எனவே கோயில் சாவியை உம் மூலமாக நான் அவரிடம் ஒப்புவிக்கிறேன். அவர் இதைப் பெற்றுக்கொண்டு தம்முடைய திருப்பணியையும் அவர் விருப்பம் போல் தொடரட்டும்'' என்றார்.

கூரத்தாழ்வானும் மகிழ்வோடு அதைப் பெற்றுக்கொண்டு ராமாநுஜரைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறி, சாவிக்கொத்தையும் ஒப்புவித்தார்.

அந்த நொடி முதல் ராமாநுஜர் ஆலயப் பணிகளில் பல சீர்திருத்தங்களையும் மேன்மைகளையும் செய்யத் தொடங்கினார்.

இந்தச் சீர்திருத்த செயல்பாடுகளை `பத்து கொத்து' என்று கோயிலொழுகு குறிப்பிடு கிறது. அதாவது பத்து விதத்தில் கோயில் பணிகளை வரையறை செய்தார் ராமாநுஜர்.

இதில் முதல் கொத்துக்கு `திருப்பதியார்' என்று பெயர். அதாவது திருவரங்கத்துக்கு வெளியிலிருந்து திருவரங்கத்துக்கு வந்து தங்கி சேவை புரியும் வைணவர்களை திருப்பதியார் என்று விளித்தார். இவர்கள் கோயில் பணிகளில் ஈடுபட மாட்டார்கள். இவர்களுக்கென்றே பிரத்தியேக பணிகளை ராமாநுஜர் நியமித்தருளினார். இவர்களில் திருப்பாற்கடல் தாசர், திருக்குருகைப்பிரான் பிள்ளை, செல்வ நம்பி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இரண்டாம் கொத்தில் உள்ளோர் `கோயில் திருப்பணி செய்வோர்' ஆவர்.

திருமங்கை மன்னன் காலம் தொட்டு கொடவர் கொத்திலிருந்து வந்திருந்தவர் திருத்தாழ்வரை தாசர். இவரின் வம்சத்தில் வந்த ஐந்துபேருக்கு திருக்குருகூர் தாசர், நாலு கவிப் பெருமாள், சடகோப தாசர், திருக்கலிக்கன்றி தாசர், ராமாநுஜர் தாசர் ஆகிய திருநாமங்களைச் சாற்றி, இவர்கள் கோயில் கைங்கர்யங்களைச் செய்யும் வழக்கத்தை உருவாக்கினார்.

மூன்றாவது கொத்து பாகவத நம்பிமார்! இவர்கள் பெரிய பெருமாளுக்குத் திருவாராதன கைங்கரியங்களைச் செய்து வருபவர்கள். ஐந்து கோத்திரக்கார்களை இந்த கைங்கரியத்தில் நியமித்தார் ராமாநுஜர்.

நான்காம் கொத்து உள்ளூர்க்காரர்கள். கொடுவாளெடுப்பார் குழுவில் இருப்பவர் களைப் பிரித்து இவர்களுக்கு `உள்ளூரார்' என்று பெயரிட்டு, இவர்கள் பாகவத நம்பிமார்களுக்கு உதவிடும்படிச் செய்தார்.

ஐந்தாம் கொத்து `விண்ணப்பம் செய்வார்'. நாதமுனிகள் காலம் தொடங்கி கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் பாடுவார்களான அரையர்களுக்கு `விண்ணப்பம் செய்வார்' என்ற பதத்தைச் சூட்டி இவர்களை ஐந்தாம் கொத்தாக்கினார் ராமாநுஜர்.

- தொடரும்...