Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 16

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

இரண்டாம் பாகம்

ரங்க ராஜ்ஜியம் - 16

இரண்டாம் பாகம்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

இறைஞ்சப்படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என்னருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பற இருந்தான் எனக்கு ஆரும் நிகரில்லையே

- இராமாநுச நூற்றந்தாதி (48)


பத்து விதத்தில் கோயில் பணிகளை வரையறை செய்தார் ஶ்ரீராமாநுஜர். முதல் ஐந்து கொத்து விவரங்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மீதவுள்ளவற்றைக் காண்போம்.

ஆறாம் கொத்து - திருக்கரகக்கையார். அதாவது எம்பெருமானின் திருமஞ்சனம் பொருட்டுக் காவிரி ஆற்றி லிருந்து குடங்களில் நீர் எடுத்து வரும் பணி செய்பவர்கள். இவர்களே திருக்கரகக்கையார் எனப்பட்டனர்.

ஏழாம் கொத்து - ஸ்தானத்தார்! இவர்கள் அந்தணர் குலத்தைச் சேர்ந்த அதிகாரிகள். அரசர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்பவர்களாயும் இவர்கள் திகழ்ந்தனர். சேனை நாத பிரம்மராயர், வீரசுந்தர பிரம்மராயர், ஜநநாத பிரம்மராயர் இதற்கு உதாரணங்களாவர்.

எட்டாம் கொத்து - பட்டாள் கொத்து என்றும் இவர்களுக்குப் பெயர் உண்டு. பெரிய பெருமாள் திருவாராதனம் காணும் நேரங்களில் நான்கு வேதங்கள், ஶ்ரீவிஷ்ணு புராணம் போன்ற புராணங்களை ஓதுவர். மேலும் ராமாயண இதிகாசங்களையும், ஶ்ரீரங்க மகாத்மியத்தையும், ஏனைய மீமாம்ச சூத்திரங்களையும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும், பஞ்சாங்கக் குறிப்பு களையும் கீர்த்தனங்களோடு பாடி இசைப்பவர்களாவர்.

இக்குழுவில்தான் கருடவாகன பண்டிதர், பெரியநம்பி, திருப்பணி செய்வார், நம்பிமார், ஆழ்வான், கோவிந்தப் பெருமாள் எனப்படுகிற எம்பார், ஆச்சான், கோயில் நம்பி, திருக்குருகைப் பிரான், பிள்ளான், சிறியாழ்வான், அம்மாள் ஆகியோர் அடங்கி யிருந்தனர்.

ஒன்பதாம் கொத்து - ஆரியப்பட்டாள் கொத்து என்பதும் இதன் திருநாமமாகும். கோயில் திருவாசல்களில் காவல் காப்போருக்கு ஆரியப்பட்டாள் கொத்து என்ற நாமம் சூட்டப்பட்டது.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்பத்தாம் கொத்து - தாசநம்பிக் கொத்து என்பது இதன் இயற்பெயராகும். ஶ்ரீராமானுஜரின் தாசர்களான புண்டரீக தாசர் செய்து வந்த செயல்பாடுகளை முறைப்படுத்தி, அதற்கு தாசநம்பி கொத்து என்று பெயரிட்டருளினார். இவர்கள் தொண்டரடிப்பொடியாழ்வார் காலம் தொட்டே பெரிய பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்பவர்களாவர்.

இவையே பத்து கொத்து எனும் பத்துக்கொத்து சீர்திருத்தங்களாகும். ஶ்ரீராமாநுஜர் மேலும் சில திருத்த காரியங்களையும் செய்தார். ஏனைய திவ்ய தேசங்களிலிருந்து ஶ்ரீரங்கத்திற்கு வந்து அங்கேயே தங்கி, திருமணமே செய்து கொள்ளாமல் ஏகாங்கிகளாக வாழ்ந்த நால்வரின் சேவையைப் போற்றும் விதம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார். ஏகாங்கிகளான அவர்கள் சில கைங்கரியங்கள் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை கௌரவித் தார். மேலும் தங்கத்தால் செய்யப்பட்ட பிரம்புகள் நான்கு, வெள்ளியால் செய்யப்பட்ட பிரம்புகள் இரண்டு, தலைவளைசல் பிரம்புகள் இரண்டு என்று மொத்தம் எட்டு பிரம்புகளைச் செய்து, அவற்றுக்கு விரக்தர்களாய் எட்டு வைணவ சந்நியாசிகளை நியமித்தார்.

இதுபோக பூணூல் (யக்ஞோபவீதம்) அணியாத அதாவது அந்தணர் அல்லாத சாத்தாத முதலிகள், கோயில் கைங்கரியங்களைப் பிரதானமாகக் கொண்டு வாழ்ந்திட வகை செய்தார்.

அந்தணர்களிடையே பத்து கொத்துகளை உருவாக்கி அதன் மூலம் சில செயல்பாடுகளை வரையறை செய்த ராமாநுஜர், அந்தணர் அல்லாதார் இடையேயும் பத்து கொத்துக்களை உருவாக்கினார்.

அதன்படி உழவுத் தொழில் புரியும் வேளாளர்கள், கோயிலின் நித்தியப்படி தேவைக்குரிய தானியங்களை அளிப்பவர்கள் ஆயினர்.அவர்களுக்கு `காரளப்பான்' எனப் பெயரிட்டு அவர்கள் கோயில் திருப்பணியில் பங்கு கொள்ள வகை செய்தார்.

அதேபோல் வழிபாட்டிற்குரிய பொருட்களைச் சேமித்துவைத்தும், கோயில் தேவைக்கேற்ப கதவுகளில் திருநாமம் தரிக்க உதவும் நாமக்கட்டி மற்றும் களிமண் அரக்கு போன்றவற்றைத் தயாரித்தும் அளிப்பவர்கள் இரண்டாம் கொத்தாயினர்.

மூன்றாம் கொத்தில் தேவதாசிகள் இடம் பெற்றனர். தேவதாசிகள் மிகுந்த மதிப்புள்ள உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கோயில் பஞ்சாயத்துக்களில் இவர்கள் தீர்ப்பளிக்கும் நீதிபதி ஸ்தானத்தில் இருந்தனர். காலத்தால் இவர்கள் பெரும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மோசமான மாற்றங்களைக் கண்டனர்.

திருவரங்கம் வரையிலும் வெள்ளையம்மாள் என்ற தாசி, மிலேச்சர் படையெடுப்பின்போது புரிந்த தியாகம் இவ்வேளையில் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இவளாலேயே ஒரு கோபுரம் மட்டும் இன்றும் வெள்ளை கோபுரம் என்றழைக்கப்படுகிறது!

நான்காம் கொத்தில் உள்ளோர் - கட்டடம் கட்டுவோர், சிற்பிகள், நகைகளைச் செய்யும் கொல்லர்கள், பித்தளைப் பாத்திரங்களைச் செய்கிற - பழுது பார்க்கிற கன்னர்கள், கோயில் விளக்குகளைச் செய்வோர் போன்றோர் ஆவர்.

கட்டடங்களைக் காவல் காப்போர் இரவுப் பணி புரிவோர், ஐந்தாம் கொத்தாயினர்.

தையற்காரர், தச்சர், நெசவாளர் முதலா னோர் ஆறாம் கொத்து ஆவர். இவர்களே ரதங்களுக்கான தொங்கல்கள், பல்லக்குத் துணிகள் உற்சவருக்கான பட்டு விரிப்புகள் ஆகியவற்றைச் செய்வார்கள். விருதுச் சின்னங் கள், ஆலவட்டங்கள், குடைகள், சாமரங்கள், குஞ்சங்கள் போன்றவை எல்லாம் இவர்களால் உருவாக்கப்பட்டன.

ஏழாம் கொத்தில் சலவைத் தொழில் புரிவோர் இடம்பெற்றனர். கோயில் துணிகள் அவ்வளவையும் சுத்தம் செய்து தரும் பொறுப்பு இவர்களுடையது.

திருவரங்கம்
திருவரங்கம்இவர்களில் கண் தெரியாத சலவைத் தொழிலாளி ஒருவரே... அறுபது ஆண்டு காலம் திருவரங்கத்தில் இல்லாது போய், பின்னர் திருவரங்கம் திரும்பிய அழகிய மணவாளப் பெருமாளை... அவர் மேனி மேலான ஆடையை முகர்ந்து பார்த்தே `இவரே நம்பெருமாள்' என்று கூறியவர் ஆவார்.

எட்டாம் கொத்தில் வருபவர்கள் பாண்டங் களைச் செய்திடும் குயவர்கள் ஆவர். மடைப் பள்ளி சட்டிப் பானைகளைச் செய்து தரும் பொறுப்பு இவர்களுடையதாகும்.

ஒன்பதாம் கொத்தினர் படகோட்டிகளாவர். இவர்கள் இல்லாதபட்சத்தில் எவரும் காவிரி ஆற்றைக் கடந்து திருவரங்கம் வர இயலாது. இவர்கள் பக்தர்களை அழைத்து வருவதோடு, அக்கரையிலிருந்து வரும் பால், தயிர், காய்கறிகளையும் கொண்டுவந்து சேர்ப்பவர்களாக இருந்தனர்.

இசைவாணர்களும் நடன ஆசிரியர்களும் பத்தாம் கொத்தாயினர். விழாக் காலங்களில் இவர்கள் பாட்டு பாடியும் ஆடியும் மகிழ்விப்பர்.

இப்படி மொத்தம் இருபது கொத்துக்களை திருவரங்க ஆலய நிமித்தம் ஶ்ரீராமாநுஜர் வகைப்படுத்தி அளித்தார்.

இவர்கள் சகலருமே பொதுவானவர்கள். அவரவர் கடமைகளை அவரவரும் செய்திடல் வேண்டும். இவர்களில் பெரியவர் - சிறியவர் என்ற பேதமெல்லாம் இல்லை. அரங்க தரிசனமும் அவனருளும் அனைவருக்கும் பொதுவானவை என்ற ஒரு நிலையை ஶ்ரீராமாநுஜர் உருவாக்கினார்.

கோயில் கணக்கு வழக்குகளை பார்ப்பவர்களை `பல்லவன் விழுப்பரையன்' என்றனர். இவர்களையே வைஷ்ணவ கணக்கு அதிகாரி என்றும் விளித்தனர்.

இப்படிப் பல சீர்திருத்தங்கள் செய்த ராமாநுஜர், கோயிலுக்குள் பல உற்சவங்கள் நடைபெறவும், அந்த வேளையில் திவ்யபிரபந்த பாசுரங்களைப் பாடிடும் இராப் பத்து திருநாள் கொண்டாட்டங்களையும் வகைப்படுத்தினார்.

குறிப்பாக பன்னிரு ஆழ்வார்களில் நம் ஆழ்வார் என்று எல்லோராலும் ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்ட - ஆழ்வார் திருநகரியில் அவதரித்த நம்மாழ்வாரின் திருச் சிலையை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, திருவரங்கத் தில் இராப்பத்து திருநாளில் பங்கேற்க செய்தார்.

அப்போது, திருவாய்மொழி பண்ணிசையை நம்மாழ்வாரைக் கேட்கச் செய்யவைக்கும் சாக்கில் எல்லோரையும் கேட்கச் செய்தார். பின்னர், மாசிமாத விசாகத்தன்று ஆழ்வார் திருநகரிக்கு நம்மாழ்வார் திரும்புவார். இவை அனைத்தும் பெரும் வைபவமாக வெகு சிறப்பாக ஶ்ரீராமாநுஜரால் நிகழ்த்தப்பட்டது.

பின்னாளில் தூரம் காரணமாகவும் பற்பல மாற்றங்களாலும் இந்த வைபவம் தடைப் பட்டது. இந்த வைபவம் திருமங்கை ஆழ்வார் காலம் தொட்டே உள்ளபோதிலும் ராமாநுஜர் காலத்தில் தீர்க்கமானது. நம்மாழ்வார் மட்டுமன்றி ஏனைய ஆழ்வார் களுக்கும் திருவரங்கக் கோயிலுக்குள் திருச் சந்நிதிகளை ஏற்படுத்தி அவர்களுக்கான நட்சத்திர நாட்களில் அவர்கள் பெரிதும் போற்றிச் சிந்திக்கப்பட்டனர்.

இவர்களின் திருவீதி உலாக்களின்போது இவர்களின் பாசுரங்கள் இசைக்கப்பட்டன.

மீண்டும் கோவில்நம்பி தொடர்பான விஷயங்களுக்கு வருவோம். கோவில் நம்பி, கோயில் கைங்கர்யங்களில் ஈடுபாடு கொண்டிருந்த அதேவேளை, அவருக்குள் நல்ல இலக்கிய புலமையும் மிகுந்திருந்தது. இதை ஶ்ரீராமாநுஜர் அறிய நேரவும், கோயில் நம்பிக்கு `திருவரங்கத்து அமுதனார்' என்ற நாமத்தைச் சாற்றியருளினார்.

கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசிக்கு `கைசிக ஏகாதசி' என்றும் மறுநாள் வரும் துவாதசிக்கு `உத்தான துவாதசி' என்றும் பெயர். இந்த துவாதசித் திருநாளின்போது, கோவில் நம்பி வராக புராணத்தின் ஒரு கிளையான கைசிக மகாத்மியத்தை அழகிய மணவாளன் முன்பு வாசிப்பார். அதன் பிறகு அழகியமணவாளன் திருவீதி உலா வருவார்.

இவ்வாறு கோவில்நம்பி கைசிக மகாத்மியத் தைத் தங்குதடையின்றி வாசித்ததைக் கேட்ட ஶ்ரீராமாநுஜர், ``அமுதான சொல் கொண்ட நீங்கள், இனி கோவில்நம்பி இல்லை. இந்தத் திருவரங்கத்தின் அமுது நீங்கள்'' என்று கூறிட, திருவரங்கத்து அமுதனார் என்கிற பெயர் உண்டானதாகக் கூறுவர்.

தம்முடைய தாயாரின் வியோகத்தைத் தொடர்ந்து ஶ்ரீராமானுஜரிடம் கோயில் காரியங்களை ஒப்படைத்துவிட்டு ஓய்ந்திருந்த திருவரங்கத்தமுதனாருக்கு இயற்பாவை சாற்றும் கடமையை அளித்தார். இந்நாட்களில் அரையர்கள் பெற்றிடும் சகல சிறப்புகளையும் அமுதனார் பெற்றிட ஆணையிட்டார். இதன் காரணமாக இவருக்கு பிரம்மரத மரியாதையும் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.

இவரால் எழுதப்பட்டதே `ஶ்ரீஇராமாநுச நூற்றந்தாதி' எனும் ஶ்ரீராமானுஜர் புகழ் பாடும் நூலாகும். இதற்கு `பிரசன்ன காயத்ரி' என்றும் ஒரு பெயர் உண்டு. ஆலயத்தில் திருவாய் மொழிச் சேவை முடிந்த பிறகு, `கண்ணிநுண் சிறுத்தாம்பு' அநுசந்திக்கப்படும் அதன்பிறகு இராமாநுச நூற்றந்தாதியை சேவிப்பது என்பது, உடையவராகிய ஶ்ரீராமாநுஜர் இட்ட கட்டளை ஆகும்.

முதலில் ஶ்ரீராமாநுஜரை மையப்படுத்தி அமுதனார் எழுதிய நூலை ஶ்ரீராமாநுஜர் ஏற்கவில்லை. தொடர்ந்து ஆழ்வார் பெருமக் களையும் அவர்களின் பக்தியையும் உள்ளடக்கி எழுதிய பிறகு, ஶ்ரீராமாநுஜர் அதை ஏற்றார் என்பர்.

- தொடரும்...

தாகம் தணித்த தலம்!

கோவையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் அனுவாவி. லட்சுமணனின் மயக்கம் தீர்க்கும் மூலிகை உள்ள சஞ்ஜீவி மலையை அனுமன் தூக்கி வந்தார். வழியில் அவருக்குத் தாகம் ஏற்பட்டது.

அவரின் தாகம் தணிக்கும் பொருட்டு முருகப்பெருமான் ஒரு ஒரு வாவியை (குளம்) உருவாக்கினாராம். அந்த இடமே அனுவாவி என்று பெயர் பெற்றது என்கிறார்கள். இங்கு அருளும் முருகப் பெருமானை 5 செவ்வாய்க் கிழமைகள் தரிசித்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- இ.ராமு, சென்னை-56

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism