மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 20

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இரண்டாம் பாகம்

'கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருதரிய

வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கியபின் என்னெஞ்சில்

பொருத்தப்படாது எம் இராமானுச மற்றோர் மெய்ப் பொருளே!'


(இராமாநுச நூற்றந்தாதி - 78)

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்


பிக்ஷா ஜீவனம் என்பது ஒருவரின் வைராக்கியத்தை வளர்ப்பது. இதுபோல் ஜீவிப்பவர்க்கு, இருக்கும் நாள்தான் கணக்கு. நாளை என்ற ஒன்று விடிந்தால்தான் உண்டு. ஆகவே, நாளைக்கு என்று எதையும் சேமித்து வைத்துக் கொள்ள தோன்றாது. வழிபாட்டுக் கடமைகளையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட மனம் விழையாது. `எதையும் நன்றே செய்; அதையும் இன்றே செய்’ என்கிற முனைப்புதான் தோன்றும்.

சாமான்யர்களோ, எச்சரிக்கை எனும் பெயரில் நாளைய தினத்தை உத்தேசித்து, தன் தேவைக்கான சகலத்தையும் சேமித்து வைத்துக்கொள்வர். உண்மையில் ஒருவரைப் பொறுத்தவரையிலும் `நாளை' என்கிற ஒன்று உறுதி இல்லை. இதுவே உயிர் வாழ்வின் யதார்த்தம். ஆயினும் இந்த உண்மை தெரிந்தும், பல காலம் மண்ணில் வாழப் போவதாய்க் கருதிக்கொண்டு சொத்துக்களைச் சேர்க்கிறார்கள் மனிதர்கள். சொத்து சேர்ந்ததும் அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிகளை யோசித்து, அதற்கானவற்றைச் செய்ய முனைகிறார்கள்.

ராமாநுஜர்
ராமாநுஜர்


இதனால் ஆசை, பயம், எச்சரிக்கை என்கிற உணர்வுகள் உருவாகி, மனமானது அவற்றில் லயிக்கத் தொடங்கிவிடும். ஆனால் மனிதப் பிறப்பு அருளப்பட்டிருப்பதோ, இறைவனையே எண்ணி அவரின் திருவடிகளைச் சென்று சேர்ந்துவிடுவதற்கே. சாமான்யர்களைப் பொறுத்தவரையிலும் இந்த உயர்ந்த நோக்கமானது பின்னுக்குப் போய், ஆசையும் பாசமுமாய் வாழ்ந்திடும் நோக்கமே பெரிதும் இருக்கும். குறிப்பாக `தன்னைப் படைத்த இறைவன் தனக்குத் துணை நின்று தன் நாட்கள் கடைத்தேற உதவுவார்' என்ற எண்ணம் சிறிதாகி, `நாம் சேமித்து வைப்பதே நம்மைக் காப்பாற்றும்' என்ற எண்ணம் பெரிதாகிவிடும். இந்த எண்ணமே சுயநலத்திற்கு இட்டுச்செல்லும். சுயநலத்தில் ருசி ஏற்பட்டுவிட்டால், பொதுநலம் பெரிதாகத் தோன்றாது!

யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று தோன்றும். அதனால் பிறருக்கு உதவுதல், தர்மம் செய்தல் போன்ற நல்ல செயல் களைச் செய்யத் தோன்றாது.

அன்றாடம் பிக்ஷை புரிபவருக்கோ, இதுபோன்று நேராது. அவர் வசம் ஏதுமில்லை இழப்பதற்கு. அவர்களைப் பொறுத்தவரையிலும் அன்றைய நாள் மட்டுமே இருப்பதால், அதைத் துளியும் சேதமின்றி, இறை எண்ணங்களுடன் மட்டுமே கழிக்கத் தோன்றும். இதனாலேயே சந்நியாஸ லட்சணங்களில் பிக்ஷை ஒரு கொள்கையாகவே வரையறுக்கப்பட்டது.

கூரத்தாழ்வான், கிரகஸ்தராக திருமணம் புரிந்து மனைவி சகிதம் வாழ்ந்தபோதிலும், இந்தச் சந்நியாஸ கொள்கையே தனக்கு மிக ஏற்றது என்று கருதி பிக்ஷை ஏற்று வாழ்வதை விரும்பினார். பிக்ஷைக்குச் சென்று பெற்று வரும் அரிசியைக் கொண்டும் கொல்லையில் விளையும் கீரைகளைக் கொண்டும் அவரின் மனைவி சமைத்துப் பரிமாறுவாள். கணவன் உண்டபின், அவர் உண்ட எச்சில் இலையில் தானும் உணவருந்தி, ஸ்ரீகூரத்தாழ்வானின் வாழ்வியல் தர்மத்தைத் தானும் பின்பற்றினாள்.

ஒருநாள் கடும் மழை. வெளியே தலை காட்ட முடியவில்லை. அந்த மழை நான்கைந்து நாள்கள் தொடர்ந்தது. கூரத்தாழ்வானால் வெளியே பிக்ஷை ஏற்கச் செல்ல முடியவில்லை. அதனால் அவரும் அவர் பத்தினியும் பட்டினி கிடக்க நேரிட்டது.

அந்தப் பெருமழை நாள்களிலும் அரங்கன் சந்நிதியில் பூஜைகளும் நைவேத்திய சமர்ப்பண மும் துளியும் தடையில்லாம நடந்தன. ஓர் உச்சிக்கால வேளையில் நைவேத்தியத்துடன் பூஜை நிகழ்வதை, கோயிலின் மணிச் சத்தம் ஊருக்கே உணர்த்தியது.

மணியின் நாதம் செவியில் விழுந்த நிலையில், கூரத்தாழ்வானின் பத்தினி `இங்கே நாங்கள் பட்டினி கிடக்கிறோம். நல்லவேளை... எம்பெருமானே மழை காரணமாக உமக்கான பணிவிடைகள் எதுவும் தடைப்படவில்லை. நீராவது பசியின்றி இருக்கிறீரே. அதுவே எமக்கு இப்போது நிறைவு' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

இப்படி, அவள் தனக்குள் சொல்லிக் கொண்டது, அரங்கனின் திருச்செவிகளிலும் எதிரொலித்தது. தனக்கான பாகவதர்களை அரங்கன் அவ்வப்போது சோதிப்பாரேயன்றி, ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை.

ஆகவே, தமக்கு நைவேத்தியமாகத் தரப்பட்ட அரவணைப் பிரசாதத்தை தாமே ஒரு ஏவலன் உருவில் எடுத்துச் சென்று கூரத்தாழ்வான் கிரகத்தில் இருக்கும் அவரின் பத்தினியாரிடம் சேர்ப்பித்தார்.

``இதை யார் அனுப்பியது?'' என்ற அவளின் கேள்விக்கு ``எம்பெருமானே தாங்கள் பட்டினி கிடப்பது கண்டு மனம் பொறுக்காது, இதை வழங்கி வரச் சொன்னார்'' என்று பதிலுரைத்தான் அந்த ஏவலன்.

கூரத்தாழ்வானும் அவரின் பத்தினியும் சிலிர்த்துப் போனார்கள். அந்த அரவணைப் பிரசாதம் பலர் பல வேளை வைத்துச் சாப்பிடும் அளவுக்கு இருந்தது. ஆனாலும் தங்களுக்குத் தேவையான இரண்டு பாகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை பசியுடன் உள்ள மற்றவர்களுக்கு ஸ்ரீபண்டாரம் மூலம் வழங்கும்படி பணித்தார் கூரத்தாழ்வான்.

இவ்வாறு அன்று அரங்கன் அளித்த அந்த இரு பாக அரவணைப் பிரசாதத்தை உண்ட கூரத்தாழ்வானின் பத்தினி, பிள்ளைப் பேற்றினை அடையும் பாக்கியம் பெற்றவளா னாள். பிரசாத பலத்தால் அவர்களுக்கு இரு குமாரர்கள் பிறந்தனர். எப்படி புத்ரகாமேஷ்டி யாகப் பிரசாதப் பலனால் தசரதரின் பத்தினிகள் ராம, லட்சுமண, பரத, சத்ருக்னர்களை ஈன்றனரோ, அதுபோலவே கூரத்தாழ்வானின் பத்தினியும் இரண்டு பிள்ளைகளைப் பெற்று கூரத்தாழ்வானின் பிள்ளைக்கலியைத் தீர்த்தாள்.

இங்ஙனம், சுபகிருது வருடத்தில் வைகாசி மாதத்தில், பௌர்ணமியும் அனுஷ நட்சத்திர மும் இணைந்த புதன்கிழமை அன்று கூரத்தழ்வா னுக்கு இரு புத்திரர்கள் பிறந்ததை அறிந்த ஸ்ரீராமாநுஜர், ``குழந்தைகளின் பெயரென்ன'' என்று கேட்டார்.

கூரத்தாழ்வானோ ``இன்னமும் நாமகரணம் ஆகவில்லை. குருவான தங்களின் திருவாயால் தாங்களே நாமகரண வைபவத்தை நடத்தித் தர வேண்டும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

ஸ்ரீராமாநுஜர் தன் சீடர்களில் ஒருவரான எம்பாரிடம் அக்குழந்தைகளை எடுத்து வரப் பணித்தார். எம்பாரும் கூரத்தாழ்வான் இல்லம் ஏகி உடையவர் விருப்பத்தைக் கூறினார். பின்னர் கூரத்தாழ்வான் மடியில் ஒரு குழந்தையும் எம்பார் மடியில் ஒரு குழந்தையும் இருக்க ஸ்ரீராமாநுஜரின் திருமடம் நோக்கிப் புறப்பட்டார். உண்மையில் அக்குழந்தைகள் பெரும் பாக்கியசாலிகள்!

வளர்ந்து பெரியவர்களாகி குருவிடம் தீட்சைப் பெற்றுக் கொள்வது என்பதே எல்லோர் வாழ்விலும் நிகழ்ந்திடும் சம்பவமாகும். ஆனால் இங்கோ, பிறந்து 12 நாட்களில் குழந்தைகளுக்கு ஜகத் குருவான ஸ்ரீராமாநுஜரே நாமகரணம் செய்து வைக்கவுள்ளார்!

இச்செய்தி திருவரங்க வாழ் மக்களிடையே பரவியது. சிலர் மனதில் அக்குழந்தைகள் நிமித்தம் பொறாமையும் உண்டானது. பொதுவில் குழந்தைகளைத் திருஷ்டியும் பொறாமையும் எளிதில் தாக்கிவிடும். அவர்களுக்கு மனக்கூடு அமைந்திராது. உடற்கூடும் கர்ப்பவயிற்று உணவால் மட்டுமே உருப் பெற்றிருக்கும். இதனால் பலவித தோஷங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. இதில் ஒன்றுதான் பாலாரிஷ்டம் எனப்படும் தோஷம்!

இவற்றை அறிந்திருந்த எம்பார், எவருடைய பொறாமையும் திருஷ்டியும் அக்குழந்தைகளைத் தாக்காமல் இருக்கும்படி ‘த்வயம்’ எனப்படும் மந்திரத்தை உச்சரித்தப்படியே சென்றார். அது, அந்தக் குழந்தைகளுக்குக் காப்பாக விளங்கியது.

குழந்தைகளைக் கண்ட ஸ்ரீராமாநுஜர் பெரிதும் மகிழ்ந்து அக்குழந்தைகளை ஆசீர்வதித்தார். பின்னர் ஒரு குழந்தைக்கு `பராசரன்' என்றும் இளையவனுக்கு `வேதவியாசன்' என்றும் பெயர் சூட்டினார். அக்காலத்தில் பாட்டன் பெயரைப் பேரனுக்கு வைத்திடும் வழக்கம் இருந்தது. அதையொட்டி, கூரத்தாழ்வானின் தந்தையான ஸ்ரீராம சோமையாஜியாரின் பெயரையும் இளையவனான வேதவியாசனுக்கு இரண்டாம் திருநாமமாகச் சூட்டினார். அதுவே சுருங்கி பின்னாளில் ஸ்ரீராமப் பிள்ளை என்றானது.

ஸ்ரீவைஷ்ணவம் திருவரங்கத்தில் செழித்து வளர, எம்பெருமானே தன் திருப்ரசாதமாய் இவ்விருவரையும் பூவுலகுக்கு அனுப்பியதாக அனைவரும் உணர்ந்து மகிழ்ந்தனர்.

இக்காலக்கட்டத்தில் உடையவரின் திருச் சேவையால் எழுநூறு ஜீயர் பெருமக்கள், பன்னீராயிரம் ஏகாங்கிகள், எழுபத்திநாலு ஆச்சார்ய புருஷர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் திவ்யதேசம் தோறும் சென்று ஸ்ரீவைஷ்ணவத்தில் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபிதம் செய்தனர். அத்துடன், திவ்யதேச திருக்கோயில்களில் ஆறு கால பூஜைகள் மற்றும் ஏனைய உற்சவங்கள் குறையின்றி நடைபெறச் செய்தனர்.

இவர்களுக்கெல்லாம் சிகரம் போல ஸ்ரீராமாநுஜர் திருவரங்கத்தில் இருந்தபடி எல்லோருக்கும் வழிகாட்டி அருளினார். தொடர்ந்து 60 வருடங்கள் - இந்த 60 வருடங்களில் 60 சதுர்மாஸ்ய விரதத்தினை ஸ்ரீராமாநுஜர் மேற்கொண்டு, எவரும் புரிந்திடாத சாதனையைப் புரிந்தவராக விளங்கினார்.

எப்போதும் காலமானது ஒரு நேர்கோடு போல செல்லாது. அது சற்று மேலும் கீழுமாகவே செல்லும். அதுவே கால இயற்கை. இதைச் சான்றோர்கள் `கால பேத இயல்பு' என்று கூறுவார்கள். அதாவது சில சோதனைகள் ஏற்படும்; சில வேதனைகளும் ஏற்படும்.

எல்லா நாள்களும் உண்பதும் உடுப்பதுமாக மட்டுமே கழிந்தால், அந்த நாள்களுக்கென பிரத்யேக அடையாளங்கள் இல்லாமல் போய் சலிப்புதான் மிஞ்சும். இந்தக் கருத்துக்கு ஏற்ப, உடையவராகிய ஸ்ரீராமாநுஜரின் வயது முதிர்ந்த காலத்தில், திருவரங்கம் முதலான சோழ நாட்டினை ஆட்சி செய்த சோழப் பரம்பரையிலும் மாற்றங்கள் உண்டாயின.

அப்போதைய அரச னாக திறந்த சோழமன்னன் சிவபக்தி மிகுந்தவனாக இருந்தான். இவனுக்கு அருகிலிருந்த சிலருக்கு உடையவரின் மீது ஒரு கோபம் இருந்தது.

உடையவரின் தீட்சண்யம், கட்டுப்பாடு, அவர் பின்னே அணிவகுத்து நிற்கும் சீடர்களின் கூட்டம்... இவை அவர்களுக்கு எரிச்சல் மூட்டின. ஸ்ரீராமாநுஜரை எப்பாடுபட்டாவது மட்டம் தட்டி விழவைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தன.

இங்ஙனம் உடையவர் மீது எரிச்சலும் கோபமும் கொண்டிருந்தவர்களில் ஒருவரே நாலூரான். இந்த நாலூரானும் ஒரு வைணவரே!

- தொடரும்...


பாதியிலும் பாதி தந்தாலும் போதும்!

குற்றாலம்
குற்றாலம்


குற்றாலம் இயற்கைத் தன்மையால் உடலையும் இறைத் தன்மையால் உள்ளத்தையும் ஏக காலத்தில் குளிர்விக்கும் புண்ணிய க்ஷேத்திரம்.

அங்கு கோயில் கொண்டிருக்கும் குற்றாலநாதரிடம் அற்புதமாய் ஒரு வேண்டுகோளை பாடலாகச் சமர்ப்பித்தார், கவிராஜ பண்டாரத்தையா என்ற புலவர். அந்தப் பாடல்...

'அருவித் திரிகூடத்தையா

உனைநான்
மருவிப் பிரிந்திருக்க மாட்டேன்
ஒருவிமலைக்கு
ஆதியிலே பாதி தந்தாய்;

அத்தனை வேண்டாம் எனக்குப்
பாதியிலே பாதி தந்துப் பார்!'

உன் மனைவிக்கு உடலில் பாதியைத் தந்தாய். எனக்குப் பாதி வேண்டாம் பாதியிலும் பாதி அதாவது `கால்' தந்தால் போதும் என்கிறார். கால் - திருவடி. உனது திருவடி போதும் என்பது கருத்து!

- ஹரிணி, சேலம்

`பாவத்துக்குப் பரிகாரம்...'

பல காலம் பாவங்களே செய்து வந்த ஒருவன், பாவத்துக்குப் பரிகாரம் தேட விரும்பினான். சாது ஒருவரைச் சந்தித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

அவர் அவனிடம், ``உன் வீட்டில் தலையணை இருந்தால், அதை நடுவீதிக்கு எடுத்துச் சென்று பிரித்து, அதனுள் இருக்கும் பஞ்சையெல்லாம் பறக்கவிட்டு விட்டுவா'' என்றார்.

அவனும் அப்படியே செய்துவிட்டு சாதுவிடம் வந்தான். இப்போது அவர், ``பறக்கவிட்ட பஞ்சை சேகரித்து மீண்டும் தலையணையில் அடைத்து எடுத்து வா'' என்றார்.

அவன் திகைத்தான். ``எப்படி சாமி காற்றில் நாலாதிசையும் பறக்கவிட்ட பஞ்சை மீண்டும் பொறுக்குவது?'' என்றான்.

உடனே சாது, ``அப்படித்தான் நீ செய்த பாவங்களுக்கும் பரிகாரம் கிடையாது. இனியாவது பாவங்கள் செய்யாமல் இருப்பதுதான் புண்ணியம்!'' என்றார்.

- சி.ராமன், திருச்செந்தூர்