Published:Updated:

ரங்கராஜ்ஜியம் - 25

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்கராஜ்ஜியம்

இந்திரா சௌந்தர்ராஜன்

ரங்கராஜ்ஜியம் - 25

இந்திரா சௌந்தர்ராஜன்

Published:Updated:
ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்கராஜ்ஜியம்

எனக்கே திருவரங்கனே பிரான்

தனக்கே அடிமை தமியேன் - புனக்கேழ்

மருத்துளவோன் மேலன்றி மற்றொருவர்

மேல் என் கருத்துளவோ ஆராயுங் கால்

- பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

ரங்கராஜ்ஜியம்
ரங்கராஜ்ஜியம்


மாந்திரீகனைக் கருவூலத்திற்குக் கூட்டிச்சென்ற கூரநாராயண ஜீயர், கருவூலத்திலிருந்து அவனது தேவைக்கேற்ப பொன் - பொருளை எடுத்துக்கொள்ளச் சொன்னார். ஜீயரோடு உடன் சென்றவர்கள் அவன் அதை மறுப்பான் என்றே கருதினர்.

ஆனால் அவனோ எம்பெருமானுக்குச் சொந்தமான பொன் நகைகளையும் முத்திரைக் காசுகளையும் துளியும் லஜ்ஜையின்றி ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டான். அவனது செயல் ஜீயரின் சீடர்களுக்குக் கோபத்தையும் எரிச்சலையும் தந்தது. அதை ஜீயரிடம் காட்டினர்.

``ஸ்வாமி... என்ன இது? இவனொரு களவாணி. துர்மந்திர ப்ரயோகி. இந்த ஆலயத்துக்கும் நமக்கும் பெரும் துரோகம் இழைத்தவன். இவனுக்குப் போய் கருவூலத்தைத் திறந்துவிட்டுள்ளீரே... இவனும் வெட்கமின்றி இவற்றையெல்லாம் எடுத்துச்செல்ல விழைகிறானே... எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை’’ என்றனர்.

``வருந்தாதீர்கள்! இவன் பொன் - பொருளுக்கு ஆசைப்பட்டே இந்தச் செயலில் இறங்கி யுள்ளான். இவன் போன்ற மாந்திரீகர்கள் பாவங்களின் காரணமாகவே இப்பிறப்பில் இச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவன் முன்னோர் புண்ணியங்கள் செய்திருந்தால், இவன் இப்படியான செயல்களில் இறங்கியிருக்க மாட்டான்; உங்களைப் போலவே எம்பெருமானை நேர்வழியில் சிந்தித்து, பக்தி புரிபவனாய் இருந்திருப்பான். ஆனால், அப்படியான விதி இவனுக்கு இல்லை. அதனால் இவனது ஆசாரம் வைணவாசாரமாக இல்லாமல், வாமாசாரமாக மாறிவிட்டது.

இவனைப் போன்றவர்களை அவர்கள் போக்கிலேயே போய் நாம் சிந்திக்கவைக்க இயலும். இவனும் மிக விரைவில் சிந்திப்பான். என் திருஷ்டியில் இவன் இன்னும் சில நாள்களே உயிரோடு இருக்கப் போகிறான் என்று தெரிகிறது. சற்று முயன்றால் அது எப்படி நிகழும் என்பதை என்னால் கூறிவிட முடியும். ஆனால், நான் அதை அவ்வளவு நுட்பமாக அறிய விரும்பவில்லை. எனவே இவன் குறித்து மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாம். இவனை ஊர் எல்லை வரை கொண்டுபோய் விட்டுவிட்டு வாருங்கள். அதன்பின் என்ன நடக்க வேண்டுமோ, அது தானாக நடந்திடும்’’ என்றார் கூரநாராயண ஜீயர்.

திருவரங்கம் ஆலயம்
திருவரங்கம் ஆலயம்


சீடர்களும் அதன் பின் எதுவும் பேசவில்லை. அந்த மாந்திரீகனை ஊர் எல்லையில் விட்டுத் திரும்பினர். மாந்திரீகன் தன்னுடைய கன்னட தேசம் நோக்கி பயணிக்கலானான். வழியில் வழிப்பறி கூட்டம் ஒன்று அவனை மறித்தது. அவனிடம் இருந்த பொன் - பொருளைக் கொள்ளையடித்துவிட்டு மாந்திரீகனையும் விரட்டி விட யத்தனித்தனர்.

மாந்திரீகனோ, தன்னுடைய மந்திர வித்தையால் அவர்களைச் செயலிழக்கச் செய்து, அவர்களிடம் உள்ள பொருளையும் அபகரிக்க முடிவு செய்தவனாக மந்திர ப்ரயோகம் செய்யத் தொடங்கினான். அதைக் கள்வர்கள், மாந்திரீகனை உயிரோடுவிட்டால் தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து நொடிப்பொழுதில் அவன் சிரசை வெட்டிக் கொன்று போட்டனர்.

பின்னர் அவனிடம் கைப்பற்றிய பொருள்களை ஆராய்ந்த போதுதான் அவை திருவரங்கம் ஆலயத்தின் கருவூலச் சொத்து என்பது தெரிய வந்தது. அவர்கள் கள்வர்களாக விளங்கிய போதிலும் திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள். அதனால் பெருமாள் சொத்து பெருமாளுக்கே உரியது; அதை அபகரிப்பது பெரும் பாவம் என்பதை அறிந்து வைத்திருந்தனர். ஆகவே, அந்தக் கூட்டத்தின் தலைவன், அந்த நகைமூட்டையை எடுத்துச்சென்று திருவரங்கத்துக் கருவூலக் காப்பாளரிடம் நடந்ததைக் கூறி ஒப்படைத்தான்.

அப்போதுதான் கூரநாராயண ஜீயரின் தீர்க்கதரிசன மகிமையை மீண்டும் ஒருமுறை எல்லோரும் அறிந்து சிலிர்த்தனர். அவரின் புகழ் மேலும் அதிகரித்தது. இங்ஙனம் கூரநாராயண ஜீயர், திருவரங்க ஆலயம் வரையில் பல அதிசயங்களைச் செய்ததோடு காலகாலத்துக் கும் நிலைக்கும் வகையில் செயலாற்றினார். தன் மந்திர சக்தியைத் தன்பொருட்டுத் துளியும் பயன்படுத்தாமல், திருவரங்கத்தின் மேன்மைக்காகவே பயன்படுத்தினார்.

இவரின் காலத்தில் சமணம், பௌத்தம் போன்ற மாற்று வழிமுறைகள் இருந்தபோதிலும் சைவப் பிரிவைச் சேர்ந்த சிலர், வைணவத்தின் பொலிவை விரும்பவில்லை. அவர்கள் திருவானைக்காவில் இருந்து கொண்டு சில சிக்கல்களை உருவாக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சிகளையும் கூரநாராயண ஜீயர் சாதுர்யமாய் முறியடித்தார்.

இந்தக் காலகட்டத்தில் திருவரங்கம் மட்டுமன்றி அதன் சுற்று வட்டாரத்தில் பல கிராமங்களில் விளைநிலங்கள் பாதிப்புற்றன. மண்மூடிப்போன தங்களின் நிலங்களை அடையாளம் காண்பதிலும் அளவெடுத்துப் பிரித்துக்கொள்வதிலும் மக்களுக்குப் பெரும் சிரம மாக இருந்தது.

கூரநாராயண ஜீயர், சிந்தாமணி என்கிற கிராமம் வழியே காவிரியைத் திசை திருப்பி னால், பின்னாளில் எந்தச் சேதமும் வராது என்று அறிந்தார். அதுகுறித்து அப்போதைய சோழ அரசனிடம் முறையிட்டார். அவன் மூலமாக தீர்வு காண முனைந்தார். ஆனால், இந்தத் திட்டத்தைச் சிந்தாமணியில் வசித்தவர்கள் விரும்பவில்லை. தங்களின் ஊர் மட்டும் வெள்ளத்துக்கு ஆட்படலாமா என்று கேட்டனர். ஆனால் அதுவே பூகோள ரீதியாக சரியான தீர்வு என்பதை அவர்களுக்கு புரியவைக்க முயன்றார் கூரநாராயண ஜீயர்.

இவ்வேளையில், கோயிலின் நிர்வாக அதிகாரியாக விளங்கிய கந்தாடை தோழப்பரும் அவரின் புத்திரரும் ஜீயர் பெருமானுக்குப் பெரிதும் ஒத்தாசையாக விளங்கினர். இதுதொடர்பான கல்வெட்டு சாசனங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. கிபி 1198-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, பல அரிய செய்திகளைத் தெரிவிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் சோழதேசத்தை ஆட்சி செய்தவன் 3-ம் குலோத்துங்கன் என்று தெரிகிறது. திருவரங்கம் மட்டுமல்ல, திருவானைக்காவலைச் சுற்றியிருந்த பகுதிகளும் மண் மூடிப்போய்க் கிடந்தன. பல நஞ்சை நிலங்களும் தோட்டங்களும் அடியோடு உருக்குலைந்துவிட்டிருந்தன. அதனால் அந்த நிலங்களை அடையாளம் காண்பதும், அந்த நிலங்களுக்கான திசைகளை அறிவதும்கூட கடினமாக இருந்தது.

சோழன், `அண்ணவாயில் உடையான் காங்கேய ராயர்’ என்பவரை ஒரு நீதிபதியாக நியமித்து, நிலங்களை இழந்து தவித்தவர்களுக்கு நியாயம் வழங்க உத்தரவிட்டான். அவரும் தன் கடமையைச் செவ்வனே செய்து, திருவரங்கம் சார்ந்த நிலங்களை அளந்து எல்லைகளை உருவாக்கி, அந்த எல்லைக்கு அடையாளமாக சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்ட கற்களை நட்டார். அதேபோல திருவானைக்காவல் நிலங்களுக்குத் திரிசூலத்தை அடையாளமாகக் கொண்ட கற்களை நட்டார்.

திருச்சிராப்பள்ளி நகரமும் காவிரியின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டது. அவர்களுக்குக் கொத்தட்டை என்ற ஊரில் மாற்று நிலம் வழங்கப்பட்டது. இப்படிக் காவிரியால் நேரிட்ட உத்பாதம், ஜீயரின் முனைப்பால் அரசாங்க சகாயத்தோடு சரி செய்யப்பட்டது.

பிற்காலத்தில் அதாவது கி.பி. 1546-ம் ஆண்டு விஜயநகர மன்னனான சதாசிவராயன் பொறித்த கல்வெட்டுப்படி, திருவேங்கட அய்யங்கார் என்று அழைக்கப்பட்ட சைல பூர்ணாசார்ய தாத்தாசார்யாருக்குச் சிந்தாமணி கிராமம் வழங்கப்பட்டுள்ளது. அவரோ அதை அப்படியே எம்பெருமானாகிய அரங்கநாதனுக்கே கொடுத்துவிடுகிறார். அவ்வாறு கொடுக்கும்போது, `நலந்திகழ் நாராயண ஜீயர் எனப்படும் ரங்க நாராயண ஜீயர் காலத்தில் பெரிய பெருமாளுக்கு நடைபெற்ற அதே முறையில், திருவாராதனம் மற்றும் அமுதுப்படி சாற்றல்கள் நடத்திட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டதாம்.

8.2.1547 தேதியிட்ட இந்தக் கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கூரநாராயண ஜீயர் வழிகாட்டலோடு காவிரியானது சிந்தாமணி பக்கம் திருப்பி விடப்பட்டதையும், அதன் பொருட்டு சிந்தாமணியில் வாழ்ந்தோருக்குக் கொளக்குட்டை என்கிற கிராமத்தை அளித்த விவரத்தையும் குறிப்பிடுகிறது.

கொளக்குட்டை எனும் கொடத்தட்டை கிராமத்தார் கொத்தட்டையார் என்று அழைக்கப்படுகிறார்கள். இன்றும் இந்த வம்சத்தவர், பெரியகோயிலில் பண்டாரிகளாகக் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு ஆலய நலன் பொருட்டு கூரநாராயண ஜீயர் காவிரியையே திசை திருப்பியதால், பல பிராமணர்களும் பாதிக்கப்பட்டனர். அதை அறிந்த சோழன் கூரநாராயண ஜீயரிடம், `உங்கள் திருத்தங்களால் பல பிராமணர்கள் வீடு-வாசல் இழந்து எங்கோ செல்லும் நிலை உருவாகிறதே... இது பாவம் இல்லையா?’ என்று கேட்டதாகவும், `ஒரு பெரும் நன்மைக்காகச் சில சிறு தீமைகளை ஏற்கத்தான் வேண்டும். இதற்கு பகவத் கீதையிலேயே பிரமாணம் உண்டு’ என்று கூரநாராயண ஜீயர் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

அதேபோல காவிரி சீறாமல் செல்லவும் நேராக இருக்கவும் இந்த ஜீயரே வாமாசார முறையில் காளியம்மன், பிடாரி, ஐயனார் ஆகியோரைக் காவல் தேவதைகளாய்ப் பிரதிஷ்டை செய்தார் என்றும் கோயிலொழுகு மூலம் அறிய முடிகிறது.

திருவரங்கம் கோயிலுக்குள் ராஜ மகேந்திரன் திருச்சுற்றில் உறையூர் கமலவல்லி நாச்சியாரையும், துலுக்க நாச்சியாரையும், கோகுலவல்லியையும் புனர் நிர்மாணம் செய்தவரும் கூரநாராயண ஜீயரே.

தற்போது கமலவல்லித் தாயார் விக்கிரகம் இந்தத் திருவீதியில் காணப்படவில்லை. ஆயினும் தாயார் இருந்த தடயங்கள் உள்ளன. காலத்தால் தாயார் விக்கிரகம் இடம் மாறிவிட்டது என்றே நினைக்க வேண்டி உள்ளது.அதேபோல் ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் வடமேற்கு மூலையான வாயவியத்தில் அமைந்துள்ள யாகசாலையில் கோபிநாதரையும், நாளிகைகேட்டான் வாசலின் உட்புறம் வடக்குப் பார்த்து சங்கநிதி, - பத்ம நிதியையும், திருவாயில் முகப்பில் பத்ர-சுபத்திரர் ஆகிய துவார பாலகர்களையும் ஜீர்ணோத்தாரணம் பண்ணிவைத்தார் கூரநாராயண ஜீயர்.

அப்படியே குலசேகரன் திருவீதியில் சேனைவென்றான் திருமண்டபத்தில் (தற்போது பவித்ரோத்சவம் நடைபெறும் மண்டபம்) வராகரையும், அதன் வடபகுதியில் திருமங்கையாழ்வார் நடைமாளிகையில் வசந்த கோபாலனையும், ஹயக்ரீவரையும் பிரதிஷ்டை செய்தார்.

இந்தக் காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த பூர்வாசாரியர்கள் ஓலைகளில் எழுதிய வியாக்கியானங்களும், மற்றைய பல நூல்களும் அதன் பிரதிகளும் `திருமங்கையாழ்வார் நடைமாளிகை’ என்று அழைக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த சரஸ்வதி மண்டபம் பண்டாரம் எனும் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இதன் காப்பாளராக சரஸ்வதிதேவியே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தாள். பின்னாளில் நிகழ்ந்த படையெடுப்புகளில் முதலில் மிலேச்சர்கள் குறிவைத்தது இந்த சரஸ்வதி பண்டாரத்தைதான். அங்கிருந்த நூல்கள் எரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன.

அப்போது, சரஸ்வதி விக்கிரகத்தைக் காப்பாற்ற எண்ணி அதை பவித்ரோத்சவ மண்டபத்திற்கு இடம் மாற்றியதாகக் கோயிலொழுகு குறிப்புகள் கூறுகின்றன.

- தொடரும்.

சந்தனக் கொடிமரம்!


திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் இன்று நாம் தரிசிக்கும் தங்கத் தகடுகள் வேய்ந்த சந்தனக் கொடிமரத்தை, முருகப்பெருமானே அமைத்ததாகக் கூறுவர். ஒரு முறை இலங்கை கண்டியரசனது கனவில் தோன்றிய முருகன், ‘சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடுக’ என்று அருளினாராம். அதன்படி கண்டியரசன், சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்கவிட்டான். அது செந்தூர்க் கடலோரத்தில் ஒதுங்கியது. அங்கு நீந்திக் கொண்டிருந்த எருமை ஒன்று அதை கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததாம். பின்னர் முருகனின் அசரீரிப்படி அதை செந்தூர் கோயில் கொடிமரமாக அமைத்துப் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

- கே.ராஜலக்ஷ்மி, சென்னை-61