மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 19

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கராஜ்ஜியம்

இரண்டாம் பாகம்

காஷ்மீரத்தில் அத்வைத பண்டிதர்களோடு மோதி விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்தும் வாய்ப்பு ராமாநுஜருக்குக் கிடைத்தது. அங்கிருந்த சரஸ்வதி பண்டாரத்தில் `போதாயன விருத்தி கிரந்தம்’ என்று ஒன்று இருந்தது. காஷ்மீர அரசன் அதை உடையவராகிய ராமாநுஜருக்கு வழங்கினான்.

ரங்கராஜ்ஜியம்
ரங்கராஜ்ஜியம்


ராமாநுஜர் அதைத் தன் சீடனாகிய கூரத்தாழ்வான் வசம் தந்து வாசிக்கச் சொல்ல, கூரத்தாழ்வானும் வாசித்து முடித்தார். ஆனால், காஷ்மீரத்து பொறாமை பிடித்த பண்டிதர்கள் சிலர் அந்தக் கிரந்தத்தை அவரிடமிருந்து பறித்து எரித்துவிட்டனர். கூரத்தாழ்வான் மயங்கி விழுந்துவிட்டார்.

இதையறிந்த ராமாநுஜர் `இப்படி ஆகிவிட்டதே’ என்று பதைபதைத்த நிலையில், கண்விழித்த கூரத்தாழ்வான் ``குருவே என் பொருட்டு கவலை கொள்ள வேண்டாம். கிரந்த விவரங்கள் முழுமையாக என் மனதில் பதிவாகிவிட்டன. இப்போதே ஓலைகளையும் எழுத்தாணியையும் தந்தால் நான் அப்படியே எழுதித் தந்திடுவேன்’’ என்று ஆச்சரியம் அளித்தார்.

இவ்வாறாக காஷ்மீர யாத்திரை நடந்து முடிந்த நிலையில், அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்ரமத்துக்கு எழுந்தருளினார் ராமாநுஜர். அங்கே பத்ரிநாதனை கண்ணாரக் கண்டு சேவித்தவர், பின்னர் சாளக்கிராம பூமிக்கு எழுந்தருளி, அங்குள்ள பல தீர்த்தங்களிலும் நீராடி மங்களாசாசனம் செய்துவிட்டு, நைமிசாரண்யம் வந்து சேர்ந்தார். அங்கே வன ரூபமாய் எழுந் தருளியுள்ள எம்பெருமானை வணங்கிய பிறகு, அயோத்திக்குச் சென்றார்.

சக்கரவர்த்தி திருமகனான ராமபிரான் அவதரித்த அந்த மண்ணில் மூன்று தினங்கள் தங்கியிருந்து வணங்கினார். பின்னர் மிதிலை, காசி, பூரி ஜகந்நாதர் ஆலயம் ஆகிய தலங்களுக்கும் சென்று சில நாள்கள் தங்கியிருந்தார். தொடர்ந்து கூர்மம், காகுளம் சிம்மா சலம் - அஹோபிலம் ஆகிய திவ்யதேசங்களையும் சேவித்தார். பின்னர் திருப்பதி திருமலைக்கு மீண்டும் எழுந்தருளி, திருவேங்கடமுடையானை தரிசித்தார்.

அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூர், அத்திகிரி, திருவெஃகா, நீரகம், திருக்கடல்மல்லை, திருவிடந்தை ஆகிய தலங்களுக்கும் சென்று மங்களாசாஸனம் புரிந்தருளினார். இப்படியே இடைவெளியின்றி அவரின் யாத்திரை தொடர்ந்தது. மதுராந்தகம், திருக்கோவிலூர், திருவஹீந்திரபுரம், திருச்சித்திரக்கூடம், திருவிண்ணகரம், திருவாலி திருநகரி, மங்கைமடம், திருக்காவளம்பாடி, திருமணிக்கூடம், திருப்பார்த்தன்பள்ளி, மணிமாடக் கோயில், வண்புருஷோத்தமம், செம்பொன்செய் கோவில், திருத்தெற்றியம்பலம், அரிமேயவிண்ணகரம், திருநாங்கூர் என எங்கெல்லாம் எம்பெருமான் நித்யமாகக் கோயில் கொண்டிருந்தாரோ, அங்கெல்லாம் சென்று சேவித்தார் ராமாநுஜர். அத்துடன், அங்கு வாழ்ந்த வைஷ்ணவர்களுக்கு சமாஸ்ரயணம் போன்ற வைதீகக் கடமைகளை செய்வித்து, சளைக்காமல் ஒரு பெரும் தொண்டாற்றினர் ராமாநுஜர்.

ஜெகந்நாத பெருமாள்
ஜெகந்நாத பெருமாள்

இந்த 108 திவ்ய தேச வரிசை மேலும் தொடர்ந் தது. தலைச்சங்க நாண்மதியம், சிறுபுலியூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணங்குடி, திருநாகை என்று சோழநாட்டு திவ்ய தேசங்களை தரிசித்து முடித்து, அப்படியே கிழக்குக் கடற்கரை ஓரமாகச் சென்று திருக்கோட்டியூர், திருப்புல்லாணி-ஆதி ஜெகந்நாத பெருமாள் கோயிலைச் சேவித்தார். அங்கிருந்து மீண்டும் அவர் திருவரங்கம் வந்து சேர்ந்த போது 25 ஆண்டுகள் ஆகியிருந்தன.

ராமாநுஜரின் இந்த யாத்திரை விவரங்களுடன், அவர் திருவரங்கம் திரும்பிய தகவலையும் பராசர பட்டரின் ரங்கநாத ஸ்தோத்திரம் குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்த யாத்திரை `ராமநுஜரின் பூப்பிரதட்சணம்' எனப்பட்டது.

திருவரங்கம் திரும்பிய ராமானுஜரிடம் அரங்கனும் யாத்திரை குறித்து வினவியதாய் குறிப்புகள் கிடைக்கின்றன. ``யாத்திரை நன்கு முடிந்ததா... குறையேதும் இல்லையே’’ என்ற அரங்கனின் கேள்விக்கு ``நீ என் மனத்துள் இருக்க குறைகளுக்குத்தான் குறையேயன்றி எனக்கு ஏதுமில்லை'' என்று ராமாநுஜர் கூறினாராம்.

இந்த 25 ஆண்டுகளும் முதலியாண்டானே திருவரங்க ஆலயத் திருப்பணியைச் செய்து வந்தார். திருவரங்கம் திரும்பிய நிலையில் ராமாநுஜர் முதலில் செய்தது, பாஷ்யம் இயற்றியதுதான். அதைப் பட்டோலையாகச் செய்து அரங்கன் திருவடிகளில் சமர்ப்பித்தார்.

பின்னர் நடாதூர் அம்மாள் கையில் அந்த பாஷ்ய பட்டோலைகளைக் கொடுத்து, அதை சாரதா பீடத்திற்கு அனுப்பிடப் பணித்தார். நடாதூர் அம்மாளும் அதை ஒரு பேழையில் வைத்து, சிரம் மேல் வைத்து எடுத்துச்சென்று சாரதா பீடத்தில் சமர்ப்பித்தார்.

சரஸ்வதிதேவியும் அந்த நொடியே ராமாநுஜரை `பாஷ்யக்காரர்' என்று கொண்டாடி மகிழ்ந்தாள். அதேபோல் சத்யத்ரயத்தை நம்பெருமான் திருமுன் விண்ணப்பிக்கும் கைங்கர்யத்தை முதலியாண்டானுக்கு அளித்தருளினார்.

இந்தக் காலகட்டத்தில், கல்தச்சன் ஒருவனைப் பற்றிய அழகான சம்பவமும் கோயிலொழுகுவில் காணக் கிடைக்கிறது.

அந்தக் கல்தச்சன் ஒரு பெரும் கோசாலையைக் கட்டிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு கல்லை உளி கொண்டு அவன் உடைக்கும்போது, உள்ளே தேரைக் குஞ்சு ஒன்றும் அதன் தேவைக்கென நீரும் இருப்பதைக் கண்டான். அந்தக் காட்சி கல்தச்சனை பலவாறு எண்ணச் செய்துவிட்டது.

`அரங்கன்தான் எவ்வளவு கருணை கொண்டவன். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் அதற்குரிய நீரைத் தந்து ரட்சித்துள்ளானே. அப்படியிருக்க, நானோ அவனை நினையாமல் இப்படி ஏதேதோ செய்துகொண்டிருக்கிறேனே...' என்று சிந்தித்தவன், அங்கேயே உளியையும் சுத்தியலையும் கீழே போட்டுவிட்டு ஆலயத்துக்கு ஓடினான்.

திருவரங்கப் பெருமாளை தரிசித்து வழிபட்டவன், பின்னர் தன்னை பரண்யாசம் செய்து கொண்டவ னாகக் கருதி, காவிரியின் வடகைரையில் ஒரு மரத்தடியில் `ரங்கா ரங்கா' என்றபடி அமர்ந்து விட்டான். அதனால் அவன் குடும்பம் உண்ண உணவின்றித் தவிக்கத் தொடங்கியது. தச்சனோ, அவர்களின் நிலையைப் பற்றியெல்லாம் எண்ணிச் சிரமப்படத் தயார் இல்லை. அவன் மனம் `சகலத்தையும் அரங்கன் பார்த்துக்கொள்வான்' என்று திடமாக நம்பியது.

அவன் நம்பிக்கை மெய்யானதே என்று உலகுக்குக் காட்ட திருவுளம் கொண்டார் திருவரங்கன். தினமும் தனக்கு நிவேதிக்கப்படும் அரவணை சாதத்தை, தாமே தலையில் சுமந்து எடுத்துச் சென்று, அந்தக் கல்தச்சனுக்கும் அவன் குடும்பத்துக்கும் அளிக்கத் தொடங்கினார்.

விதிவசத்தால் கல்தச்சன் ஒருநாள் இறந்துபோனான். அவன் குடும்பத்தவர் கதறிக் கண்ணீர் விட்டனர். இந்தச் செய்தி ராமாநுஜரை அடைந்தது. அவர் கல்தச்சனின் குடும்பத்தைச் சந்தித்தார். அப்போது தச்சனின் மனைவி ``இதுநாள் வரையிலும் சந்நிதிப் பிரசாதத்தை என் குடும்பத்துக்காக எடுத்துவந்து கொடுத்து அனுக்கிரகம் செய்தீர்கள். அதனால் நாங்கள் பசியாறினோம். இப்போது என் கணவர் இறந்துவிட்டபடியால், அந்த வழக்கத்தை நிறுத்தி விடாதீர்கள்'' என்றாள் ராமாநுஜரிடம்.

ராமாநுஜர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். அவர் அவ்விதம் ஏதும் செய்யவில்லை. தன் சீடர்களுக்கும் அப்படியான எவ்வித கட்டளையும் தரவில்லை. பின்னர் இது எப்படி நிகழ்ந்தது என்று சிந்தனையில் ஆழ்ந்தார். தொடர்ந்து அவர், பிரசாதப் பாத்திரத்தைப் பார்க்கவும்தான் ஓர் உண்மை புலப்பட்டது. அழகிய மணவாளனாக அந்த அரங்கனே வந்து இவர்களின் பசியாற்றி இருக்கிறார் என்பதை அறிந்து சிலிர்த்தார் ராமாநுஜர்.

அந்த நொடியே `இனியும் அரங்கனே பணி செய்யும்படி விடக்கூடாது' என்கிற முடிவிற்கு வந்த ராமாநுஜர், இனி தனது மடம் அக்காரியத்தைச் செய்யும் என்றார். அதன் பின்னர் கோயிலின் பண்டாரத்திலிருந்து கல்தச்சனின் குடும்பத்திற்கு ராமாநுஜரின் சீடர்களால் பிரசாத உணவு கொண்டுசென்று வழங்கப்பட்டது.

இதேபோல், அழகிய மணவாளனின் பெரும் கருணை வெளிப்படும் வேறொரு சம்பவம் கூரத்தாழ்வானுக்காகவும் நிகழ்ந்தது!

உடையவராகிய ராமாநுஜரின் அத்யந்த சீடர்களில் ஒருவரான கூரத்தாழ்வான், உடையவர் வழியை அடியொற்றித் திருவரங்க வீதிகளில் உள்ள அந்தணர் வீடுகளில் பிக்ஷை பெற்று, அதில் கிடைக்கும் அரிசியைக் கொண்டே ஜீவிப்பது என்று சங்கல்பம் செய்துகொண்டிருந்தார்.

ராமாநுஜரின் திருமடத்தில் தினமும் தளிகைப் பிரசாதம் எல்லோருக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கூரத்தாழ்வார் நினைத்திருந்தால் திரு மடத்தின் உள்ளேயே தானும் இருந்துகொண்டு ஜீவனத்தைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், உடையவரின் வழியொற்றி நடக்க விரும்பும் ஒருவருக்கு அது ஏற்புடையதல்ல என்று தீர்மானித்த கூரத்தாழ்வான் பிக்ஷா ஜீவனத்தைத் தனக்கும் தன் குடும்பத்துக்குமான உபாயமாகக் கொண்டிருந்தார். இதை அறிந்த ராமாநுஜர், கூரத்தாழ்வானின் ஜீவ சங்கல்பம் குறையின்றி நடந்திட ஆசீர்வதித்தார்.

பிக்ஷா ஜீவனம் என்பது ஒருவனின் வைராக் கியத்தை வளர்ப்பது. இதுபோல் ஜீவிப்பவர்க்கு, இருக்கும் நாள்தான் கணக்கு. நாளை என்ற ஒன்று விடிந்தால்தான் உண்டு. ஆகவே, நாளைக்கு என்று எதையும் சேமித்துவைத்துக்கொள்ள தோன்றாது. வழிபாட்டுக் கடமைகளையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட மனம் விழையாது.

`எதையும் நன்றே செய், அதையும் இன்றே செய்’ என்கிற முனைப்புதான் தோன்றும். அதற்காக `நாளை என்கிற ஒன்று கிடையவே கிடையாது' என்று பொருளல்ல; `இன்று கழிந்தது போலவே நாளை என ஒன்று வரும் பட்சத்தில், அதுவும் கழிந்திடும்' என்பதே இதன் கருத்தாகும்!

- தொடரும்...

இன்பச் சுவைகள் இரண்டு!

சுவைகள்
சுவைகள்
undefined undefined


தினசரி உணவில் அறுசுவைகளையும் சேர்த்து உண்பது, பண்டைய மரபு. ஆனால், தற்காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலும் இரண்டு சுவைகளை மட்டும் அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை. கசப்பும் துவர்ப்பும்தான் அவை. இவற்றை நீக்கி உண்பதாலேயே உடலுக்குக் கெடுதி உண்டாகிறது.

ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவில் இந்தச் சுவைகள் இரண்டையும் எப்படி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது ஆசாரக் கோவை எனும் ஞானநூல்.

`கைப்பன எல்லாம்

கடைதலை தித்திப்ப

மெச்சும் வகையால் ஒழிந்த

இடையாகத் துய்க்கமுறை

வகையால் ஊண்'

அதாவது, முதலில் இனிப்பையும் முடிவில் கசப்புச் சுவையையும் சாப்பிடும் படி நம் உணவு அமைய வேண்டும் என்கிறது, ஆசாரக்கோவை.

-கே.ரமா, திருச்சி-3

பசிப் பிணி போக்கினால்...


`நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்தால் என்னவாகுமோ, அப்படியான துன்பத்தைத் தருவது பசி வேதனை' என்கிறார் வடலூர் வள்ளலார் சுவாமிகள்.

பசிப்பிணி நீக்குவதால் உண்டாகும் புண்ணியம் குறித்தும் அவர் விளக்குகிறார்.

பசி அகன்றால் உள்ளம் குளிரும்; சித்தம் தெளியும், உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும். தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் கண்டால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, பசியால் துன்புறுவோர் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். ஆக, பிற உயிர்களின் பசியாற்றி, அவர்களுக்கு ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள், பெரும் புண்ணியர்கள். அவர்கள் தெய்வத்தின் அம்சமாவார்கள்!

- ஆர்.ராஜா, வள்ளியூர்