மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 76

திருவரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவரங்கம்

ஶ்ரீரங்கத்தின் சரிதம்

`தொண்டருக்குந் துணையடி வாழி
நின்றூ முறுவல்
கொண்ட முகம் வாழி வாழி
வியாக்கியா முத்திரைக்கை
வண்டிரு நாமும் வாழி
மணிவட முப்புரிநூல்
கொண்ட சீர் தூப்புற் குலமணியே
வாழி நின் வடிவே!’


பாரதம் முழுக்க தங்களின் வசமாக வேண்டும் என்கிற நோக்கில் சீற்றத்துடன் புறப்பட்டு வந்த அந்நியர்கள், தென்பகுதியைப் பாகம் பாகமாக தங்கள் வசப்படுத்தினர்.

இதனால், எங்கே நம் சமயமே முற்றாக அழிந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டபோதிலும், ஆசார்ய புருஷர்கள் துளியும் நம்பிக்கை இழக்காமல் எல்லோரையும் வழிநடத்தினர். அவர்களில், திருவரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் முக்கியமானவர். அவரை நோக்கியே மணப்பாக்கத்து நம்பியும் புறப்பட்டார்.

ஶ்ரீரங்கத்தில் காட்டழகிய சிங்கரின் சந்நிதி.

அங்குள்ள கல் மண்டபம் ஒன்றில் பிள்ளை லோகாசார்யர் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அங்கு சென்ற மணப்பாக்கத்து நம்பி, பாடம் நடக்கும்போது இடையிடக்கூடாது என்று காத்திருந்தார்.

அப்போது, பிள்ளை லோகாசார்யரின் பாட விளக்கம் நம்பியின் காதில் விழுந்தது.

“சீடர்களே! எம்பெருமான் குறித்து பக்தி செய்யவே நமக்கு இப்பிறப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பூமி மிகப் பெரியது. இதில் மலைகள், கடல்கள், நதிகள், அருவிகள், பாலைவனங்கள், பாழும் நிலங்கள் என்று பல இருப்பினும் மனிதன் வாழ்ந்து தெளிய உகந்த இடமாய் இருப்பது பாரதமும் அதன் க்ஷேத்திரங்களும்தான்!

அந்த க்ஷேத்திரங்களில் முதன்மையானதும் மிகுந்த பெருமைக்குரியதுமான தலம் நம் திருவரங்கம். பிரம்மா, தான் பூஜித்த மூர்த்தியையே நாம் பூஜிக்க இங்கே நமக்காகத் தந்துள்ளான்.

நாம் நம் பகுத்தறிவால் பக்தி பூண்டு, இந்தப் பிறப்பை வென்று முக்தி காணவேண்டும். உடல் இச்சைப்படி வாழ்ந்து மனம் போன போக்கில் போவது சரியான வாழ்வாகாது. அது இந்தச் சாகரத்தில் நம்மைத் திரும்பத் திரும்பப் பிறக்கவைக்கும். எனவே உடல் இச்சையைக் கட்டுப்படுத்தி, எம்பெருமான்மீது பக்திகொண்டு வாழ்ந்து அவன் திருவடிகளைச் சேர்வதையே நாம் நம் வாழ்வின் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.''

ஶ்ரீபிள்ளை லோகாசார்யரின் விளக்கவுரை மணப்பாக்கத்து நம்பியைச் சிலிர்க்கச் செய்தது. கூடவே `யாமே பிள்ளை லோகம் வடிவில் உள்ளோம்' என்று காஞ்சி வரதன் கனவில் வந்து கூறியதும் நினைவுக்கு வந்தது. ஆக, மணப்பாக்கத்து நம்பிக்குக் காஞ்சிப் பேரருளாளனாகவே தென் படத் தொடங்கினார் ஶ்ரீபிள்ளை லோகாசார்யர்.

அந்த நேரத்தில், காட்டழகியசிங்கர் ஆலயத்தை ஒட்டிய பகுதியில் குதிரைகளின் குளம்படிச் சத்தமும், கனைப்புச் சத்தமும் பெருமளவில் கேட்டன. ஆசார்யர் பேசுவதை நிறுத்திவிட்டுப் புறத்தே பார்த்தார். அவரின் பார்வையில் படும்படி ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்த மணப் பாக்கத்து நம்பியும் குதிரைகளின் சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பினார்.

நான்கு மிலேச்சர்கள் புரவிகளின் மீது அமர்ந்தபடி புறச்சாலையில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வருகையால், அக்கம்பக்கம் வசிப்போர் தங்களின் வீடுகளில் உள்ளடங்கிவிட, அதைக் கண்டுஅந்த நால்வர் முகங்களிலும் ஒருவித பெருமிதம்.

குறுந்தாடியும் தலையில் உலோகப் பாகையும் தரித்திருக்கும் நிலையில், அவர்கள் பார்வை பார்க்கும் படியாக இல்லை. வேட்டைச் சிறுத்தை உற்றுப் பார்ப்பது போல் இருந்தது; பார்க்க சகிக்கவில்லை. அவர்களில் ஒருவன் மணப் பாக்கத்து நம்பியைப் பார்த்துவிட்டான்.

கையால் சைகை காட்டி நம்பியை அருகில் அழைத்தான். நம்பி துளியும் அச்சமின்றி அவனை நெருங்கினார்.

``யார் நீ?'' என்று உருதுவிலும் பின் நெளிந்த தமிழிலும் கேட்டான்.

``பார்த்தால் தெரியவில்லையா... மனிதன்தான்!’’ - அச்சமின்றி பதிலளித்தார் நம்பி.

``என்ன திமிர் உனக்கு? என் கேள்விக்கு இதுவா பதில்?’’

``வேறு எது பதில்?’’

``நீ இங்கு என்ன செய்கிறாய்? உன் பெயர் என்ன? இந்த ஊரினைச் சேர்ந்தவன்தானா நீ? இப்படி நான் அறிய வேண்டியவை எவ்வளவோ உள்ளன.''

``இதையெல்லாம் கேட்டறிந்து நீ என்ன செய்யப் போகிறாய்? சொல்லப்போனால், இந்தக் கேள்விகளை எல்லாம் நான்தான் உன்னைப் பார்த்துக் கேட்கவேண்டும். ஏனென்றால் நீதான் இந்த மண்ணுக்குப் புதியவன். நானோ இந்த மண்ணில் பிறந்து இங்கேயே வாழ்பவன்.’’

``நீ தைரியமாகப் பேசுகிறாய். உனக்குச் சில உண்மைகள் தெரியவில்லை. இப்போது நான் தெரிவிக்கிறேன்... தெரிந்துகொள்... நான் தேவகிரி எனப்படும் தெளலதாபாத்தை ஆளும் சக்கரவர்த்தியின் படைக்காவலன்.

மதுரையில் இருந்துகொண்டு இந்தத் தென் பகுதியை வசப்படுத்தி ஆளப் போகிறவன். இனி இந்த மண் எங்கள் மண். உங்களை ஆண்ட மன்னர்கள், எங்களுக்குக் கட்டுப்பட்டு நாட்டை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓடிவிட்டனர். தெரியும்தானே?’’

``யாரும் ஓடவில்லை. ஓட நாங்கள் கோழைகள் இல்லை. தற்காலிகமாய்ப் பதுங்கி வேண்டுமானால் இருக்கலாம்.’’

``நீ அதிகம் பேசுகிறாய் உன் நாக்கைத் துண்டித்து விடுவேன்.’’

``இப்படி எத்தனைபேர் நாவினை அறுப்பாய்? அப்படி அறுப்பதால் நாங்கள் மாறிவிடுவோமா?’’

``மாறவேண்டும். மாறித்தான் ஆகவேண்டும். மாறாவிட்டால் மாற்றிக் காட்டுவோம்... கபர்தார்! போய் உன் மக்களிடம் இதைச் சொல். எங்கள் பேச்சைக் கேட்டு எங்கள் வழியைப் பின்பற்றினால் இம்மண்ணில் ஏகபோகமாக வாழலாம். இல்லாவிட்டால் சிரங்கள் வெட்டப்பட்டு முண்டங்களாகிச் சாவீர்கள்... போ... போய் சொல்...’’

ஶ்ரீரங்கம் கோயில்
ஶ்ரீரங்கம் கோயில்

வன் எச்சரித்துவிட்டு குதிரையின் தொடையை உதைத்துக் கிளப்பியபடி புறப்பட் டான். அவர்கள் விலகியதும் மணப்பாக்கத்து நம்பியை நாடி பிள்ளை லோகாசார்யரின் சீடர்கள் ஓடி வரலாயினர்.

வந்தவர்கள் வினவத் தொடங்கினர்.

``தாங்கள் யார்?’’

``என்னை மணப்பாக்கத்து நம்பி என்பர். நான் காஞ்சியிலிருந்து வருகிறேன்.’’

``அப்படியா? வாருங்கள்... வாருங்கள்...’’ என்றபடி அவரை ஶ்ரீபிள்ளைலோகாசார்யரிடம் அழைத்துச் சென்றனர். அருகில் சென்றதும் ஆசார்யரின் பாதங்களில் விழுந்துப் பணிந்தார் மணப்பாக்கத்து நம்பி. பின் எழுந்தார்.

``அன்பனே! அந்த மிலேச்சனிடம் நீ தீரமாய்ப் பேசியதைக் கேட்டேன். சில காலமாகவே இங்கு இதுதான் நிலை. ஒரு சோதனையான காலகட்டம் இது.’’

``உண்மைதான் சுவாமி. அதனாலேயே ஶ்ரீவேதாந்த தேசிகர் என்னை இங்கு செல்லப் பணித்தாரோ என்று கருதுகிறேன்.’’

``ஓ... நீ தேசிகரின் வழிகாட்டலில் வந்தவனா?’’

``அதுமட்டுமல்ல... காஞ்சிப் பேரருளாளன் சொப்பனத்தில் வந்து சொன்னதும் இதையே...''

``ஓ... நீ நம்மவனோ?’’

ஶ்ரீபிள்ளைலோகாசார்யர் அப்படிக் கேட்ட விதத்தில் ஒரு ஆழ்ந்த வாஞ்சை. அந்தக் காஞ்சி வரதனே பேசுவது போலவும் ஒரு பிரமிப்பு.

``சுவாமி! ஶ்ரீவைஷ்ணவ நிலைப்பாட்டை கசடறக் கற்பதும் பின் அதன் வழி நடப்பதும்தான் என் நோக்கம். அதற்காகவே தங்களை நாடி வந்திருக்கிறேன். ஆனால் நான் வந்திருக்கும் இவ்வேளை, ஒரு சோதனைக் காலமாய் இருக்கும் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை.’’

``சோதனைகள் வந்தால்தானே சாதனைகள் பிறக்கும்.’’

``அப்படியானால், தங்களுக்கு அச்சம் ஏதும் இல்லையா?’’

``எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.’’

``இங்கே இப்போது எம்பெருமானுக்கு அல்லவா சோதனை வந்திருக்கிறது?’’

``அவன் வரைவில் அது ஒரு விளையாட்டு.’’

``அப்படியானால் அசுரர்களை அழித்திட அவதாரம் எடுத்து வந்தது போல், இப்போதும் அவன் வந்து நம்மைல் காத்திடுவானோ?’’

``ஆனால், இப்போது நடப்பது கலியுகம். இந்த யுக தர்மப்படிதான் எதுவும் நடக்கும். இந்த யுகம் மற்ற யுகங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டது. இந்த யுகத்தில் ஆத்மார்த்த பக்தியும் தியானமுமே ஒருவரை கரைசேர்க்கும். ஆனால் பக்தியும் தியானமும் வசப்படுவது அவ்வளவு சுலபமாக இராது.’’

``தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்... எம்பெருமான் நம்மை ரட்சிப்பானா, மாட்டானா அதைச் சொல்லுங்கள்.’’

``அவனுக்கு ரட்சிக்க மட்டும்தான் தெரியும் நம்பி. எனவே மாற்றுக் கேள்விக்கு இடமேயில்லை. ஆனால் ரட்சிப்பைப் பெற்றிட, நாம் தகுதி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.’’

``எது அந்த தகுதி?’’

``எந்த நிலையிலும் மாறாத பக்தி. அசைக்க முடியாத பக்தி. மாயைக்கு இடம் தந்திடாத பக்தி. இதுவே அந்தத் தகுதி...’’

``எது மாயை?’’

``மிலேச்சனே ஒரு மாயைதான்... அவனுடைய நம்பிக்கைகள் வழிமுறைகள் என்று எல்லாமே மாயைதான்.’’

ஶ்ரீபிள்ளை லோகாசார்யர் இவ்வாறு நம்பிக்கு விளக்கமளித்தப்படி இருந்தபோது, சிலர் அங்கு மூச்சிரைக்க வந்து நின்றனர். பின் பேசினர்.

``சுவாமி! சிராப்பள்ளி மலைக்கோட்டை முழுவதும் மிலேச்சர் வசமாகிவிட்டதாம். உறையூரையும் அவர்கள் வளைக்கப் போகின் றனராம். அதுமட்டுமல்ல, நம் திருவரங்க ஆலயத்தை வசப்படுத்தி ஆலயத்தைத் தகர்ப்பதுதான் அவர்கள் திட்டமாம்!’’ என்றனர். தொடர்ந்து ``அவர்கள் இலக்கு இம்மண்ணில் மனிதர்கள் அல்ல; நம் ஆலயங்கள்தானாம். ஆனைக்காவில் உள்ள சிவாலயத்தையும் சின்னா பின்னமாக்குவது அவர்கள் இலக்காம்’’ என்றும் பகிர்ந்தனர்.

``இப்படி வழிபாட்டுத் தலங்களைத் தகர்ப்பது பெரும்பாவம் என்று அவர்களுக்குத் தெரியாதா? அவர்களின் வழிபாட்டு தலங்களை நாம் தகர்த்தால் ஏற்பார்களா?’’

``ஒருக்காலும் நாம் அதுபோல் நடக்கப்போவதில்லை. அவர்கள் இம்மண்ணில் பிறந்து நம் நெறிகளை அறியாது போனவர்கள். அவர்கள் வரையிலும் உருவ வழிபாடு தவறானது. எனவே, அவர்கள் நம் ஆலயத்தைச் சிதைப்பதைப் பாவமாய்க் கருதவில்லை. அடுத்து நம்மை ஒன்றிணைப்பது நமக்கு ஆதர்சமாக விளங்குவது நம் ஆலயங்களே. எனவேதான் ஆலயங்களைத் தகர்த்தால் நம்மை எளிதில் மாற்றிவிடலாம் என்று கருதுகின்றனர்.

நாம் அதற்கு ஒருக்காலும் இடம் தந்துவிடக் கூடாது. நம் உயிரைக் கொடுத்தாவது இந்தத் திட்டங்களை முறியடித்திட வேண்டும்.''

இப்படி, அங்கே ஒரு வாதப் பிரதிவாதம் தொடங்கிவிட்டது. இதன் நடுவே ஶ்ரீபிள்ளை லோகாசார்யர் மட்டும் `இப்போது நம்மோடு ஶ்ரீவேதாந்த தேசிகரும் இருந்தால், நமக்கு அது பெரும் பலமாயிருக்கும். எம்பெருமான் அதற்கு அருளட்டும்' என்று பிரார்த்தனை புரியலானார்.

ரங்க ராஜ்ஜியம் - 76

காஞ்சி மாநகர்!

இங்கேயும் மிலேச்சர்களின் புரவிகள் தெருக்களில் வலம் வரத் தொடங்கியிருந்தன. பல பாகங்கள் அவர்களின் வசப்பட்டுவிட்டிருந்தன. ஆனாலும் திருவரங்கம் போல பெரும்படையோ பாதிப்போ இல்லை.

ஆங்காங்கே புதிதாக சுங்க வரியும் வசூலிக்கப்பட்டது. காஞ்சியின் காவல் அதிகாரியாக விளங்கிய மகா வல்லபதேவன் என்பவன், ஒருபுறம் விஜயநகரப் பேரரசின் உதவியைக் கோரிக் கொண்டும் மறு புறம் மிலேச்சர்களின் வரி வசூலிப்புக்கு இடம் கொடுத்தபடியும் அவர்களைச் சமாளித்துக் கொண்டு இருந்தான்.

இந்த நிலையில் ஶ்ரீவேதாந்த தேசிகர் காஞ்சி வரதனை வணங்கி விட்டு, தனது பல்லக்கில் இல்லம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். உடன் அவரின் சீடர்கள் தொடர்ந்தனர்.

இல்லம் வந்து சேர்ந்த நிலையில் அவர்கள் மிகுந்த சோர்வுடன் பார்த்தனர்.

``உங்கள் பார்வை எனக்கு புரிகிறது கவலை வேண்டாம். எம்பெருமான் கைவிட மாட்டான்'' என்றார் தேசிகன்.

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 76

பூஜையும் பலகையும்!

பூஜை முதலான வைபவங்களின்போது பலகையில் அமர்ந்து பூஜிக்கலாம்.

அப்படிப் பலகையில் உட்காரும்போது கால்கள் தரையில் படலாமா என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம். கால்கள் தரையில் படலாம். பலகையில் கால் இருக்க வேண்டும் என்பதில்லை. பூமியோடு தொடர்பு வேண்டும். அதேநேரம், நம்மிடம் சேமிக்கும் தவம் குறையக் கூடாது.

பலகையில் உட்காரும்போது சேமித்த வலிமை பூமியில் இறங்காது. அதேநேரம் கால் பூமியில் இருப்பதால் அதன் தொடர்பும் கிடைத்துவிடும். இருக்கை திடமாகவும், சுகமாகவும் அமைய இந்த முறை சிறப்பாக இருக்கும்.

செய்யும் காரியத்தில் ஈடுபாடு சிதறாமல் இருக்க பலகை அவசியம். பண்டைய காலத்தில் ஆமை வடிவில் பலகை அமைந்திருக்கும். கால்களையும் சேர்த்து வைக்கும்படியான அகலம் அதில் தென்படாது.கலியுகத்தில் நன்மைகள் பெற...

கடுமையான தியானத்தால் கிருத யுகத்திலும், யாகங்களால் திரேதா யுகத்திலும், பூக்கள் கொண்டு செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலன், கலி யுகத்தில் இறைவனின் திரு நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே கிடைக்கும்.

நாம் யாருக்கு உதவினாலும் அது இறைவனுக்கு செய்யப்படும் உதவி என்ற மனோபாவம் வேண்டும்.

செயல்களில் பிரதிபலன் எதிர்பார்க்காத எண்ணம் வேண்டும். பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையும் இல்லறத்தாருக்குத் தேவை.

இந்த பூமியில் நாம் நிலையாக இருப்போம் என்று எண்ணித் தவறுகளைச் செய்யக் கூடாது. நல்லதைச் செய்வதில் சோம்பல் கூடாது. அகங்காரம் அணுவளவும் கூடாது.

இறைவனைப் பற்றிக் கேட்பது, இறை மகிமை யைப் பாடுவது, இறையை நினைப்பது, திருவடி சேவை, இறை வழிபாடு ஆகியவற்றோடு, ஆத்மாவை இறைவனுக்கே சமர்ப்பணம் செய்வதால், நமக்கு நன்மைகள் உண்டாகும்.


- சி.சரஸ்வதி, கடலூர்