இறைவன்: ஸ்ரீரத்தினபுரீசுவரர் (ஸ்ரீமாணிக்கவண்ணர்)
இறைவி: ஸ்ரீமாமலர் மங்கை (ஸ்ரீரத்தினபுரீஸ்வரி)
நடராசப்பெருமானின் திருநடனத்டை தரிசிக்க ஆவல் கொண்ட தேவலோகத்து வெள்ளை யானையான ஐராவதம், இங்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி, மாவிலங்கை மரத்தடியில் இறைவனைப் பூசித்து வழிபட்டது. இறைவனும் மனம் உருகி இவ்வுலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு இங்கு திருநடனம் புரிந்தார். அதனால் திருநாட்டியத்தான் குடி என்ற பெயர் உருவானது. யானை வழிபட்டதால் ஈசனுக்கு கரிநாதேசுவரர் என்ற திருப்பெயரும் உண்டு.
இவ்வூரில் சிவபக்தியில் சிறந்த இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் சொத்துக்களைப் பிரிக்க நேரிட்டது. அதையொட்டி, மாணிக்கக் கற்களைப் பாகம் பிரிக்கும் போது பிரச்னை ஏற்பட்டதால், இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் ரத்தின வணிகராக வந்து பாகம் பிரித்தருளி மறைந்தார். ஆதலால் ஐயனுக்கு ரத்தினபுரீசுவரர், மாணிக்கவண்ணர் என்ற பெயர்கள் ஏற்பட்டன. தேவார மூவரில் சுந்தரர் இத்தல இறைவனைப் பாடும்போது, `இடர்களைக் களைந்திடவல்ல மணியே மாணிக்க வண்ணா' என்று பாடி, பாடலின் முடிவில் இறைவன்மீது அளவற்ற பக்தியின் காரணமாக ‘நாட்டியத்தான் நம்பி’ என விளிப்பார். அதுவும் ஈசனின் திருப்பெயர் ஆனது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
ஆடி கேட்டை அற்புத நடவு விழா: அறுபத்து மூவருள் கோட்புலி நாயனார் இவ்வூரைச் சேர்ந்தவர். சுந்தரர் மீது பற்று கொண்டவர். அதனால், நாட்டியத்தான்குடிக்கு வரும்படி சுந்தரரைக் கேட்டுக்கொண்டார். அதையேற்று சுந்தரர் இங்கு வந்தார். நாட்டியத்தான்குடி ஈசன் கோயிலுக்குச் சென்றவர், அங்கு இறைவன் இல்லாதிருக்கவே... வெளியே வந்து கோயிலுக்கு எதிரே உள்ள விநாயகரிடம் `இறைவன் எங்கே' எனக் கேட்டார். பிள்ளையாரும் வயல்வெளி பக்கம் கை காட்டினார். அதனால் அவருக்கு கை காட்டி விநாயகர், வழிகாட்டி விநாயகர் என்று திருப்பெயர்கள். சுந்தரரும் வயல்வெளி பக்கம் சென்று பார்க்க இறைவனும், இறைவியும் நாற்று நட்டுக்கொண்டிருந்தனர். உடனே சுந்தரர் பதிகம் பாட இறைவனும், இறைவியும் மறைந்து ஆலயத்துக்குள் சென்றனர் என்பது திருக்கதை.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆடி மாதத்தில் கேட்டை நட்சத்திர நாளில் இங்கு நடவு விழா நடைபெறும். அதைத்தொடர்ந்து சுந்தரரை நாகம் தடுத்த நிகழ்வும், கோட்புலியார் குரு பூஜையும் நடைபெறும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வருடம் 5.8.19 அன்று தொடங்கும் இந்தத் திருவிழா 16.8.19 வரை நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் - 9 அன்று நாற்று நடும் ஐதிக விழாவும்; 10-ம் தேதி கோட்புலி நாயனார் ஈசனோடு ஐக்கியமாகும் விழாவும் நடைபெறவுள்ளன. ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு ஈசனின் அருளைப் பெற்றுச் சிறக்கலாம் (தொடர்புக்கு: பாலாஜி - 80982 97016).