ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

பஞ்சவடி அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்றது. இதேபோல், தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் வேறு எந்த தலங்களில் எல்லாம் பஞ்சமுகங்களுடன் கூடிய அனுமனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்


-கே.கார்த்திகேயன், சேலம்

தேவகணங்களில் அச்வினி குமாரர்கள் குறித்த விரிவான தகவல்களும் புராணக் கதைகளும் தேவை. இவர்களை வழிபட பிரத்யேக ஸ்லோகங்கள் துதிப்பாடல்கள் உள்ளனவா, எந்த நாள்களில் அச்வினி தேவர்களை வழிபடலாம்?

- வி.கண்ணன், சென்னை-55

காஞ்சியை ஒட்டியாண பீடம் என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள். `ஐ’கார அட்சரம் தோன்றிய இடம் காஞ்சி என்றும் தகவல் உண்டு. இந்தப் பீடத்துக்கான நாயகியான காளிதேவிக்கு காஞ்சியில் தனிக்கோயில் உள்ளதாமே? காஞ்சியில் காமாக்ஷி அம்மன் அல்லவா பிரதான நாயகி. இதுபற்றி மேலான விவரம் அறிந்தவர்கள், விளக்கம் அளித்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

- அ.திருமலை, முசிறி

கேரளாவில் ஏதோ ஒரு ஆலயத்தில் `வலிய எண்ணெய்’ எனும் தைலப் பிரசாதம் கொடுப்பார்களாம். மூலிகை கலந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய், சருமம் மற்றும் வாத நோய்களுக்கு அருமருந்து என்றும் தகவல் சொல்கிறார் பெரியவர் ஒருவர். ஆனால் அவருக்கு அது எந்த ஊர்க் கோயில் என்பது மறந்துவிட்டதாம். இதுபற்றிய விவரம் எவருக்கேனும் தெரியும் என்றால், வழிகாட்டி உதவுங்களேன்.

- சி.ஜானகி, திருநெல்வேலி

சிவப்பணி செய்த அரசகுல மங்கையர் பற்றிய தகவல்களைத் திரட்டி வருகிறேன். கோச்செங்கண்ணனின் தாயார் கமலவதி, பாண்டியப் பேரரசியார் மங்கையர்க்கரசி ஆகியோரின் வரிசையில் செம்பியன்மாதேவியார் குறித்த தகவல்களும் தேவை. இந்தப் பேரரசியார், அவர் திருப்பணி கண்ட ஆலயங்கள் பற்றிய விவரங்கள் தனிப் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளனவா? செம்பியன் மாதேவியார் சரிதம் குறித்த நூல் எங்கு கிடைக்கும்?

- ஹ.கோவிந்தன், வள்ளியூர்

ஜோதிர்லிங்க தரிசனம் மிகவும் புண்ணியம் தருவதாகும். சோமநாதர், மல்லிகார்ஜுனர், காளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், வைத்திநாதர், நாகேஸ்வரர், கேதாரேஸ்வரர், திரியம்பகேஸ்வரர், ராமேஸ்வரர், பீமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கிருஷ்ணேஸ்வரர் ஆகிய திருப்பெயர்களில் ஈசன் ஜோதிர்லிங்கங்களாக அருளும் க்ஷேத்திரங்களே பன்னிரு ஜோதிர்லிங்க தலங்கள் ஆகும். இந்தத் தலத்தின் மூலவர்களைப் போற்றி வணங்கும் த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் துதிப்பாடல் தமிழ் விளக்கத்துடன் தேவை. கிடைக்கும் முகவரி அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன். எவரிடமேனும் இந்த ஸ்தோத்திரம் இருப்பின் நகல் எடுத்து அனுப்பினால் உதவியாக இருக்கும்.

- மு.வேலன், கடலூர்

அன்பார்ந்த வாசகர்களே...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவிக்கரம் நீட்டியோர்!

மனக்கோயிலில் எழுந்தருளிய ஈசன்!

இருதயாலீஸ்வரர் கோயில்
இருதயாலீஸ்வரர் கோயில்


`திருநின்றவூர் அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோயிலில் இதயம் சார்ந்த பிணிகளுக்குத் தீர்வு வேண்டி வழிபாடுகள் செய்வது உண்டு. அதற்கான நியதிகள் என்ன, எப்படி வழிபடுவது எனப்போன்ற விளக்கங்கள் தேவை’ என்று முக்கூடல் வாசகி வி.சந்திரமதி கேட்டிருந்தார். அவருக்குச் சென்னை - குரோம்பேட்டை வாசகர் ஆதித்யா கீழ்க்காணும் விவரங்களை அளித்துள்ளார்.

திருநின்றவூரில் அற்புதமாகத் திகழ்கிறது இருதயாலீஸ்வரர் கோயில். கருவறையில், விரும்பி அழைத்த பக்தனுக்காக அவரின் இதயத்தில் கோயில் கொண்ட ஈசன், லிங்கத் திருமேனியராக அருள்கிறார். கருவறையில் ஸ்வாமிக்கு இடப்புறம் பூசலார் நாயனாரும் உள்ளார். கருவறையின் மேற்கூரையில் இதய வடிவில் நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் செதுக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு என்பார்கள்.

இதய நோயால் வருந்தும் அன்பர்களுக்காக, இங்கு வந்து இறைவனை மனமுருகப் பிரார்த்திக்கலாம். இறைவனை தரிசித்து, அவரின் சந்நிதியில் திருநீறுப் பெற்றுக் கொள்ளலாம். இந்த விபூதியை அனுதினமும் நெற்றிக்கு இட்டுக்கொண்டு, மனமுருகப் பிரார்த்தித்து வந்தால், பிணிப் பாதிப்புகள் மெள்ள மெள்ள விலகும் என்பது நம்பிக்கை.

காயத்ரீதேவி ஆலயம்

காயத்ரிதேவி
காயத்ரிதேவி


`காயத்ரீ தேவிக்கு நம் தமிழகத்தில் எங்கேனும் தனிக் கோயில் உள்ளதா?’ என்று மரக்காணம் வாசகர் சி.ராமன் கேட்டிருந்தார். அவருக்கு செங்கல்பட்டு வாசகர், கதிரேசன் கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்.

சிதம்பரத்தில் காயத்ரிதேவிக்கு தனிக்கோயில் ஒன்று உண்டு. சோழ மன்னன் ஒருவன் தனக்கு ஏற்பட்டிருந்த ஸ்திரீஹத்தி தோஷம் நீங்க தல யாத்திரை மேற்கொண்டான். அந்தப் பயணத்தில் ஏழை அந்தணர் ஒருவர், காயத்ரீ மந்திர உபாசனையால் தனக்குக் கிடைத்த புண்ணியத்தை அந்த மன்னனுக்குக் கொடுத்து அவனுடைய தோஷம் நீங்க வழி செய்தாராம். மன்னன் மகிழ்ந்தான். அந்தணருக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினான். ஆனால் அந்தணரோ ``உன் ஆளுகை எல்லைக்குள் காயத்ரீதேவிக்கு ஓர் ஆலயம் எழுப்பு’’ என்று கேட்டுக்கொண்டார்.

அதன்படி சிற்றரசன் எழுப்பியதே சிதம்பரத்தில் உள்ள காயத்ரீ தேவி திருக்கோயில். இந்த அம்பிகையை தாமரை மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம் என்பார்கள்.