Published:Updated:

சிலிர்க்க வைத்தது சரித்திர யாத்திரை!

பொன்னியின் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்!

சிலிர்க்க வைத்தது சரித்திர யாத்திரை!

பொன்னியின் செல்வன்!

Published:Updated:
பொன்னியின் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னியின் செல்வன்

`பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் வழியில் சரித்திர யாத்திரை’ விகடன் குழுமம் எங்களுக்கு வழங்கிய அற்புத வாய்ப்பு என்றே கருதுகிறோம். மூன்று நாள் யாத்திரையில் ஒவ்வொரு கணமும் சோழ சாம்ராஜ்ஜியத்தில் உலா வருவதாகவே உணர்ந்தோம்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்


முதல் நாள் அதாவது ஆகஸ்ட் 12 அன்று அதிகாலையில் விகடன் அலுவலகத்தில் குழும ஆரம்பித்தோம். புதுவித உற்சாகமும் பரபரப் பும் எங்களைத் தொற்றிக்கொண்டது என்றே சொல்லலாம். விகடன் வளாகத்தில் ஆனந்தவிநாயகரைப் பூஜித்தபிறகு எங்களின் பேருந்துப் புறப்பட்டது. வழியில் ஆங்காங்கே மேலும் சில நண்பர்களும் இணைந்து கொண்டார்கள்.

காலை 8:30 மணியளவில் மேல்மருவத்தூரைத் தாண்டி `ஹோட்டல் 99 கி.மீ.’-ல் பாரம்பரிய சிறுதானிய வகைக் காலை உணவு மிக அற்புதம். பின்னர் காட்டுமன்னார்கோவிலை நோக்கிப் பயணித்தோம். அந்த 5 மணி நேரம் கழிந்ததே தெரியவில்லை; வாசக நண்பர்களின் அறிமுக படலம் இனிதே நடந்தேறியது.

வயதால் இளையவர்கள், வயதான இளையவர்கள் என எத்தனை அனுபவங்கள், என்னென்ன சிந்தனைகள்... ஒவ்வொருவரும் வியக்க வைத்தார்கள். ஒரு குடும்பமாய் ஒன்றிணைந்தோம் என்றே சொல்ல வேண்டும். மதியம் ஒரு மணியளவில் காட்டுமன்னார் கோவிலில் அன்று நாங்கள் தங்க இருந்த லக்ஷ்மிவிலாஸ் விடுதியை அடைந்தோம். ராஜ மரியாதையோடு பெரும் வரவேற்பு எங்களுக்கு.

பொன்னியின் செல்வன் 4
பொன்னியின் செல்வன் 4


தொடர்ந்து மதிய உணவுக்குப் பிறகு சரித்திர யாத்திரை தொடங் கியது. முதலில் வீராணம் ஏரி. 74 மதகுகளோடு பிரமாண்டமான பரப்பளவில் சோழ இளவல் ராசாதித்தன் அமைத்த பிரமாண்ட ஏரி. கல்கி வர்ணித்திருப்பாரே... `சமுத்திரம் போன்றது’ என... உண்மை தான்; காணக் கண்கோடி வேண்டும் வீராணத்தின் அழகை அள்ளிப் பருக! தக்கோலம் போர் குறித்தும்... முன்னதாக தந்தை பராந்தகரின் ஆணைக்கிணங்க ராசாதித்தன் படை திரட்டிய கதையையும், போருக்கு முன் வீரநாராயண ஏரி வெட்டிய நிகழ்வையும் சரித்திர ஆர்வலர் பார்த்திபன் சொன்ன விவரங்களை வியப்புடன் சிந்தையில் ஏற்றிக்கொண்டோம்.

பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4
சிலிர்க்க வைத்தது சரித்திர யாத்திரை!


தொடர்ந்து மேலக் கடம்பூர்-கீழக் கடம்பூர் ஆலயங்கள். கடம்பூர் சம்புவராயர் மாளிகையும் அங்கு நடந்த சம்பவங்களும் நம் மனக் கண்ணில் தோன்றிமறைந்தன. சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான மேலக் கடம்பூர் கரக்கோயில், அங்குள்ள... ராஜேந்திரரின் கங்கைதீரத்துப் படையெடுப்பின் போது கொண்டுவரப்பட்ட தாண்டவ மூர்த்தி சிற்பமும் அற்புதப் பொக்கிஷங்களே. கீழக் கடம்பூரிலோ விதவிதமாய் ஓசை எழுப்பும் கற்சிலைகளும், மாப்பிள் ளைக் கோல சிவபெருமானும், அந்தச் சுரங்கமும் எளிதில் காணக் கிடைக்காத அற்புதங்கள்!

அடுத்த தரிசனம்... உடையார்குடி -வீரநாராயண சதுர்வேதி மங்கலம். ஆம்! இவ்வூரில் உள்ள அனந்தீஸ்வரர் ஆலயத்தில்தான் ஆதித்த கரிகாலனின் கொலைக்குக் காரணமானவர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை விவரங்களுக்குச் சாட்சியாகத் திகழும் கல்வெட்டுகளைக் காண முடிகிறது. அடுத்த நகர்வு வீரநாராயண பெருமாள் ஆலயம். நீங்கள் யூகிப்பது சரியே... வந்தியத் தேவன் ஆழ்வார்க்கடியானை முதலில் சந்திக்கும் அதே கோயில் தான்! அங்கே அற்புத தரிசனம் கிடைத்தது எங்களுக்கு.

பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4


இங்ஙனம் ஒருவழியாக முதல் நாள் யாத்திரை நிறைவடைந்து விடுதிக்குச் சென்றால், அருமையான பொம்மலாட்டம் காத்திருந்தது எங்களுக்கு. பாடல்கள், நாராயண மந்திரம் திருக்கதை என்று கலைமாமணி சோமசுந்தரம் குழுவினர் நடத்திய வைபவம் கண்ணுக்கும் சிந்தைக்கும் விருந்து.

இரண்டாம் நாளன்று முதல் தரிசனம், கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகிலுள்ள உடையாளூர் கைலாசநாதர் ஆலயம். காசிக்குச் சமமான தலம் இதுவாம். அருகிலுள்ள பால்குளத்தம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுத் தகவலைச் சுட்டிக்காட்டி, மாமன்னன் ராஜராஜன் தமது அந்திமக் காலத்தில் இங்குதான் தங்கியிருந்தார் என்கிறார்கள் சரித்தர ஆர்வலர்கள். இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவிலேயே சோழர் மாளிகை எனும் இடத்தில் மாமன்னர் ராஜராஜனின் பள்ளிப்படை அமைந்துள்ளது. குறுகலான வீதியில் சிலபல வீடுகளுக்கு மத்தியில் சிறியளவிலான இடத்தில் அமைதியாக துயில்கொள்கிறார் போலும் அந்தச் சோழச் சக்கரவர்த்தி!

தொடர்ந்து சோழர்களின் பழைய தலைநகரமான பழையாறையில் அமைந்திருக்கும் பிரமாண்டமான சோமேஸ்வரர் ஆலயம், கதைக் களமாகத் திகழும் நந்திபுரவிண்ணகரம் கோயில், ராஜராஜ சோழரின் மனைவியரில் ஒருத்தரான பஞ்சவன்மாதேவியாரின் பள்ளிப்படை ... என எங்களின் தரிசனம் நீண்டது. ஒவ்வோர் இடத்திலும் எங்களுக் குக் கிடைத்த தகவல்களும், சேகரித்த நினைவுகளும் காலத்தால் அழியாதவை!

இரண்டாம் நாள் மதிய உணவும் இரவு தங்கியதும் சுவாமி மலை அருகிலுள்ள ஹோட்டல் இண்டிகோவில். மாலையில் திருப்புறம் பியம் சென்றோம். பிற்காலச் சோழர்களின் எழுச்சிக்குக் காரணமான போர் நிகழ்ந்ததே... அதே இடம்தான். தற்போது அங்கு விஜயாலயர் மற்றும் கங்க மன்னன் பிருதிவிபதியின் பள்ளிப்படை உள்ளது. அற்புதமான அந்தச் சரித்திரக் களத்தில் சிறுமி வீரகுந்தவையின் பரத நாட்டியமும் பறையிசை நிகழ்வும்... அடடா வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வைபவங்கள். ஆடிப்பாடிக் களித்து, உற்சாகத்தின் உச்சிக்கே சென்று மீண்டோம்.

இரவு, விடுதியின் அரங்கத்தில் நிகழ்ந்த பொன்னியின் செல்வன் அனிமேஷன் மூவியின் குறிப்பிட்ட சில காட்சிகளைத் திரையில் கண்டு வியந்தோம்; அற்புதமான விஷுவல் ட்ரீட். அந்தக் குழுவின ருடனான கலந்துரையாடல் விசேஷ அனுபவம்.

மூன்றாம் நாள் காலையில் தஞ்சைப் பெரியகோயில் தரிசனம். காலங்கள் பல கடந்தாலும் என்றென்றும் பிரமிப்பைக் கொடுக்க தஞ்சை பெரியகோயிலால் மட்டுமே முடியும் என்பதை அப்போதும் உணர்ந்தோம். மிக அருகில் தஞ்சை பிரகதீஸ்வரரை தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பும், கல்வெட்டுத் தகவல்களால் கிடைத்த விவரங் களும் நாங்கள் பெற்ற வரம்!

மதிய உணவுக்குப் பிறகு கோடியக்கரை நோக்கிய பயணம். நீண்ட நெடிய கடற்கரையில் அலையோசைகளின் ஊடே பூங்குழலியை நினைவுகூர்ந்தோம்; அவளின் அந்தப் பாடலை நாங்களும் ஒன்றி ணைந்துப் பாடி மகிழ்ந்தோம். குழகர் கோயிலில் அவளைப் போன்றே பிரார்த்தித்தோம் பிரசாதம் பெற்றோம். யாத்திரையின் முத்தாய்ப்பாக வீர வாளையும் கேடயத்தையும் ஏந்தி `சோழம் சோழம்’ என்று நண்பர்கள் நாங்கள் முழக்கமிட்ட அந்தத் தருணம், வாழ்வில் மறக்கமுடியாதது.

மொத்தத்தில் மூன்று நாள்களும் ஒவ்வொரு கணமும் சிலிர்ப்பும் சிறப்புகாகக் கழிந்தது என்றே சொல்லலாம். அற்புதமாய் ஒரு சரித்திர அனுபவத்தைப் பரிசளித்த விகடனுக்கு நன்றி!