திருக்கதைகள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

காஞ்சியில் சித்ரகுப்தருக்கென்று தனிக்கோயில் உண்டு என்பதை நாம் அறிவோம். அதேபோல், வேறு ஏதேனும் ஊரில் சித்ரகுப்தர் கோயில் உள்ளதா? சித்ரகுப்தரை சித்ரா பெளர்ணமி அன்று மட்டும் தான் வழிபடவேண்டுமா, வீட்டில் வழிபடுவதற்கான துதிகள், நியதிகள் உண்டா? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

-கோ.லட்சுமணன், விருதுநகர்

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்

தீர்த்த மகிமைகள் குறித்து தகவல் திரட்டி வருகிறேன். குறிப்பாக சிவாலய தீர்த்தங்கள் மற்றும் தீர்த்த திருவிழாக்கள் குறித்து விவரங்கள் தேவை. இதுபற்றி புத்தகம் ஏதேனும் வெளிவந்துள்ளதா. எவரிடமேனும் இருப்பின் நகல் எடுத்து அனுப்பி வையுங்களேன். நூல் விலைக்குக் கிடைக்கும் எனில், கிடைக்கும் முகவரி விவரங்களைப் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- எச்.கோவிந்த், சென்னை-103

எனக்கு நவகிரக ஸ்தோத்திரங்களில் சூரிய கவசம் தமிழ் விளக்கத்துடன் தேவைப்படுகிறது. அதேபோல் `பிரச்நோத்தர ரத்ந மாலிகா’ விளக்க நூலும் தேவை. இந்தப் புத்தகங்கள் எங்கு கிடைக்கும், விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- க.வெங்கடேஷ், முசிறி

அம்பாசமுத்திரம் அருகில் உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் அறை முழுக்க அன்னம் படைத்து வழிபடுவது குறித்த விவரத்தைச் சக்தி விகடன் இதழில் படித்தேன். அதேபோல், வேறொரு தலத்தில் சிவபெருமானுக்கு ஆவிபறக்க சாதம் படைப்பது உண்டாமே... அது எந்தக் கோயில், எங்குள்ளது?

- பி.சங்கரி, திருநெல்வேலி

நந்திதேவர் திரும்பி அமர்ந்த சிவாலயம், விலகி நின்ற ஆலயம் என நந்திதேவரின் திருக்கதைகளோடு தொடர்புடைய ஆலயங்கள் பல உண்டு. மட்டுமன்றி நந்திதேவர் திருக்கதை, நந்தி வகைகள், வழிபாடு ஆகிய தகவல்கள் அடங்கிய தொகுப்புப் புத்தகம் எங்ஙேனும் கிடைக்குமா?

- சி.நடராஜன், ராதாபுரம்

குருவாயூரில் உதயாஸ்தமன பூஜை சிறப்பு வாய்ந்தது என்பார்கள். பக்தர்களும் இந்தப் பூஜைக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிந்தே. இதற்கான வழிமுறை என்ன, இந்தப் பூஜைக்கு அப்படியென்ன மகத்துவம், பூஜை நடைபெறும் காலவிவரங்கள் தேவை. அறிந்தவர்கள், விவரம் பகிர்ந்து உதவுங்களேன்.

- கோதை ராமன், சென்னை-45

உதவிக்கரம் நீட்டியோர்!

`செயங்கொண்டார் வழக்கம்’

சக்திவிகடன் கடந்த இதழில், `வாழிரவி சுதன் வலக்கையால் எடுத்துக் கொடுக்கும் முன்னே மனம் வேறாம்...’ எனத் தொடங்கும் வரிகளைக் குறிப்பிட்டு, இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது என்று விவரம் கேட்டிருந்தார், செங்கல்பட்டு வாசகி கே.அனுபமா.

`செயங்கொண்டார் வழக்கம்’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல் இது. இந்த நூலின் சிறப்பு குறித்த விவரங்கள் 18.2.2014 தேதியிட்ட இதழில் `ஞானப்பொக்கிஷம்’ பகுதியில் வெளியாகி இருந்தது. அந்த விவரம் இங்கே:

`வழிவழியாக, அனுபவத்தில் வந்த பழமொழி களை ஒவ்வொன்றாகச் சொல்லி, அதற்குண்டான கதைகளையும் சொல்லி, பாடல்களாகவே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவற்றில் பல கதைகள் புதுமையானவை.

அங்ஙனம், எட்டு வரிகள் கொண்ட பாடல்களில், 6 அல்லது 7 வரிகளில் கதையைச் சொல்லிவிட்டு, கடைசி வரியில் அதற்குரிய பழமொழியையும் சொல்லி, பசுமரத்தாணி போல் பதிய வைக்கும் நூறு பாடல்களைக் கொண்ட நூல்தான் - செயங்கொண்டார் வழக்கம். பெயரில் ‘வழக்கம்’ இருந்தாலும், இந்த நூல் வழக்கத்தில் இல்லாமல் வெகு காலம் ஓலைச்சுவடியாகவே இருந்தது.

1914-ம் ஆண்டுதான் இது அச்சு வாகனம் ஏறியது. அதன் பிறகு 45 ஆண்டுகள் கழித்து, அடுத்த பதிப்பு வெளியாயிற்று. அதுவும் இப்போது கிடைப்பதற்கு அரிதாக இருக்கிறது.

கொடையில் சிறந்தவனான கர்ணன், ஒருநாள் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தான். ‘வால் கிண்ணம்’ என்று, போன தலைமுறை வரை சொல்லப்பட்ட கிண்ணம்... அதுவும் தங்கக் கிண்ணத்தில் இருந்த எண்ணெயை இடது கையால் எடுத்து வலது கையில் ஊற்றி, உடம்பெங்கும் தேய்த்துத் தடவிக்கொண்டு இருந்தான். அந்தக் கிண்ணம் கர்ணனுக்கு இடது கைப்புறம் இருந்தது. அதை எடுத்துத் தன் வலது உள்ளங்கையில் கவிழ்த்து, கிண்ணத்தைக் காலியாக்கிக் கீழே வைத்தான்.

கையில் ஊற்றிய எண்ணெயை உடம்பில் தேய்த்துக்கொள்ள இருந்த நேரத்தில், ஏழை அந்தணர் ஒருவர் வந்து, தானம் கேட்டார். உடனே கர்ணன், இடதுகைப்புறம் இருந்த தங்கக் கிண்ணத்தை அப்படியே இடது கையால் எடுத்து, அந்தணரிடம் நீட்டினான்.

அதைப் பெற்றுக்கொண்ட அந்தணர், ‘`கர்ணா! இடது கையால் தானம் கொடுக்கக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? ஏன் இப்படிச் செய்தாய்?’’ எனக் கேட்டார்.

‘`ஸ்வாமி! இடது கைப் பக்கமாக இருக்கும் கிண்ணத்தை எடுத்து வலது கைக்கு மாற்றுவதற்குள், என் மனது மாறிவிட்டால்..? மேலும், வலது கைக்கு மாற்றுகிற நேரம்கூட நீங்கள் காத்திருக்கக்கூடாது என்பதற்காகவே அப்படிச் செய்தேன்’’ என்றான் கர்ணன்.

அந்தணர் வியந்துபோய் கர்ணனைப் பாராட்டிவிட்டு, தங்கக் கிண்ணத்துடன் சென்றார்.

வியாச பாரதத்திலோ, வில்லிபாரதத்திலோ இந்தத் தகவல் சொல்லப்படவில்லை. ஆனால், இக்கதை, சிலரிடம் பரவி இருக்கிறது. செயங்கொண்டார் வழக்கம் எனும் இந்நூலிலும் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

இதோ அந்தப் பாடல்....

வாழிரவி சுதன் வலக்கையால் எடுத்துக்

கொடுக்கும் முன்னே மனம் வேறாம் என்று

ஏழை மறையோற்கு இடக் கையாலே எண்

ணெய்க்கிண்ணம் ஈந்தான் அன்றோ?

ஆழிதனில் பள்ளி கொள்ளு மால் பணியும்

செயங்கொண்டார் அகன்ற நாட்டில்

நாளை என்பார் கொடை தனக்குச் சடுதியிலே

இல்லை என்றால் நலமதாமே

(செயங்கொண்டார் வழக்கம் - பாடல் 51)

தானம் கேட்பவர்களை ‘நாளைக்கு வா!’ என்று சொல்லி இழுத்தடிப்பதைவிட, இன்றே ‘இல்லை’ என்று சொல்லிவிடுவது நல்லது என்ற தகவலும் இப்பாடலில் உள்ளது. இதைச் சொல்லும் பழமொழியே, பாடலின் தலைப்பாக, ‘நாளை என்பார்க்கு இன்று இல்லை என்பார் நல்லவர்’ என இடம் பெற்றுள்ளது.

‘செயங்கொண்டார் வழக்கம்’ எனும் இந்த நூல், நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபைச் சேர்ந்த முத்தப்பச் செட்டியார் என்பவரால், 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. கதை சொல்லிகளுக்கும், எழுத்தாளர் களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூல் இது!

பஞ்சமுக அனுமன் தரிசனம்!

சென்ற இதழில் `ராகவேந்திரர் தியானத்தில் இருந்தபோது ஆஞ்சநேயர் ஸ்வாமி அவருக்கு பஞ்சமுகத்துடன் காட்சி கொடுத்த தாகத் தகவல் உண்டு. இந்த அருள் சம்பவம் நிகழ்ந்த இடம் எங்குள்ளது?’ என்று திருச்சி வாசகர் கி.வெங்கடேசன் கேட்டிருந்தார். அவருக்குச் சென்னை வாசகர் பா.பிரசன்னா கீழ்க்காணும் விவரத்தை அளித்துள்ளார்.

ராகவேந்திரர் மாஞ்சாலாவில் இருந்தபோது, அடிக்கடி கணதாளம் என்ற கிராமத்துக்குச் சென்று குறிப்பிட்ட குகையில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். குரு ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது, அங்குள்ள பாறையில் ஆஞ்சநேயர் ஐந்து முகங்களுடன் காட்சியளித்தாராம்.

அந்த இடம் பஞ்சமுகி என்று அழைக்கப்படுகிறது. அங்கு ஆஞ்சநேயருக்கான ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மந்திராலயம் செல்லும் பக்தர்கள், அந்த ஆலயத்துக்கும் சென்று வழிபட்டு வருகிறார்கள். பஞ்சமுகி அனுமன் ஆலயம், மந்திராலயத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அனுமன் இரவில் வலம் வந்து மக்களைக் காப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு!