திருக்கதைகள்
Published:Updated:

வீட்டில் விளக்குப் பூஜை அவசியமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

? வீட்டில் விளக்குப் பூஜை அவசியமா? திருவிளக்கு பூஜையின் மகத்துவம் என்ன?

சிறு வயது முதல் நம் வீட்டில் நமது தாயும் பெரியோர்களும் வழிபாடு செய்வதைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாம். வழிபாடுகளில் திருவிளக்கு பூஜையும் ஒன்று. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலோ பெளர்ணமி போன்ற முக்கிய தினங்களிலோ தனியாகவும் கூட்டாகவும் வழிபடுவது மட்டுமன்றி, நம் பெரியவர்கள் தினமும் திருவிளக்கை வழிபட்டு வளம்பெற்றார்கள்.

வீட்டில் விளக்குப் பூஜை அவசியமா?


‘ஞானத்தீ’ என்று திருநாவுக்கரசு சுவாமிகள் கூறுவார். ஆம், இந்தத் தீ நம்முடைய இருளைப் போக்கி ஒளியைத் தரக்கூடியது. ஏற்றப்படும் இடத்தில் மட்டுமல்ல, நம் அக இருளையும் போக்கும் சக்திகொண்டது தீபம் எனப் போற்றுகிறார் அவர்.

ஆம், தீப ஒளி நமக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், `நாம் நம் காரியங்களில் வெற்றி அடைவோம்’ எனும் மன உறுதியையும் அளிக்கவல்லது. இந்தச் சுடரொளியால் நாம் இறைவனின் பாதங் களைப் பார்ப்போம் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள் எனில், எவ்வளவு உயர்வான ஒரு பலனை எளிய வழியில் தரக் கூடியது இந்த வழிபாடு என்பதை நாம் உணர வேண்டும்.

தேவாரம் போன்ற புனித நூல்களும் வள்ளலார், அருணகிரியார் போன்ற பெருமக்களும் தீபவழிபாட்டின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கி அளித்துள்ளனர். வேதங்களிலும், ஆகமங்களிலும் அக்னி வழிபாடு முக்கியமானதாகக் கூறப்பட்டுள்ளது. எப்படி வேதியர்கள் உலக நன்மைக்காக அக்னியை வளர்த்து பூஜை செய்கிறார்களோ, அதுபோன்று நம் ஒவ்வொருவரும் தீப வழிபாடு அளிக்கப்பட்டிருக்கிறது.

? திருவிளக்குத் திருவுருவமும் வழிபாடும் சொல்லும் தத்துவ தாத்பர்யங்கள் என்னென்ன?

விளக்கின் அடிப்பாகத்தைப் பிரம்ம பாகமாகவும், நடுவில் தண்டு போன்று இருப்பதை விஷ்ணு பாகமாகவும், நெய்யைத் தாங்கும் பகுதியை ருத்ரபாகமாகவும் எண்ணுவது அவசியம். இங்ஙனம் ஒரு விளக்கையே, இவ்வுலகுக்கு மூலக் காரணமான சிவலிங்காகாரமாக உணர்ந்து வழிபடுவது நம் மரபு.

மட்டுமன்றி திருவிளக்கில் நெய் தாங்கும் பாகத்தில் ஐந்து பகுதிகள் இருக்கும். அவற்றை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களாக நினைத்து வணங்குவதும் வழக்கத்தில் உண்டு.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்குமாக ஐந்து திரிகள் ஏற்றி, எல்லாம்வல்ல பரமசிவனாரையும் அன்னை பராசக்தியையும் நினைத்து வழிபடும்போது, ஆற்றல் பெருகும். ஐம்பூதங்களால் ஆன நாமும், இயற்கையின் சக்தியைப் பெற்று பாதுகாக்கப்படுகிறோம்.

? விளக்கைத் தினமும் சுத்தம் செய்யவேண்டுமா? தீபம் ஏற்ற எந்த எண்ணெய், எவ்வகை திரிகளைப் பயன்படுத்தலாம்?

திருவிளக்கைத் தினமும் தூய்மைப்படுத்துதல் வேண்டும். எக்காரணம் கொண்டும் நம் உடம்பின் மீது படுவதுபோன்று விளக்கை வைத்துக்கொண்டு தூய்மைப்படுத்தக் கூடாது. மிகவும் மரியாதையுடனும் பக்தியுடனும் தூய்மைப்படுத்த வேண்டும்.

விளக்குக்குப் பயன்படுத்தப்படும் திரியானது பஞ்சு, பருத்தித் துணி, தாமரை போன்ற தூய்மையானப் பொருள்களால் ஆனதாக இருக்கவேண்டும். நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.

? விளக்கின் அனைத்து முகங்களிலும் தீபம் ஏற்றி வழிபடலாமா?

ஒரு முகம் அல்லது அதற்கு மேற்பட்ட முகங்கள் என தீபமேற்றி மனதுக்கு ஏற்றபடி வழிபடலாம். குழுவாக வழிபடும்போது, ஒரு விளக்கில் பலபேர் சேர்ந்தும் வழிபடலாம் அல்லது தனித் தனியாகவும் விளக்கு வைத்து வழிபடலாம்; அவரவர் வழக்கப்படி கடைப்பிடிக்கலாம்.

பூஜையில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது - தீப ஒளியை நோக்கும்போது, இந்த ஒளியே உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உள்ளிருந்தும் வழிகாட்டுகிறது என்று உணரவேண்டும். நாம் செய்யும் பூஜையின் பலன் நமக்கும், நம் குடும்பத்துக்கும், சுற்றத்தாருக்கும், நாட்டுக்கும், இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத் துடன் வழிபட வேண்டும். இதுவே நம் சனாதன தர்மத்தின் சிறப்பு. அனைவருக்காகவும் அனைத்துக் காலங்களிலும் வேண்டுவது எனும் சிறப்பை வேறெங்கும் காண முடியாது.

? திருவிளக்கை வணங்கும்போது, எந்தத் தெய்வத்தை நினைத்து வழிபட வேண்டும்?

தீப ஜோதியில் தாங்கள் எந்தக் கடவுளை நினைத்து வழிபட இருக்கிறீர்களோ அந்தக் கடவுளின் பெயரைக் கூறி ‘ஆவாஹயாமி’ என்று சொல்லி, `தாங்கள் இந்த ஜோதியில் எழுந்தருளி எங்களின் வழிபாடுகளை ஏற்று, எங்களுக்கு நன்மை அளித்திட வேண்டும்’ என்று நினைத்து வழிபடலாம்.

சிவபெருமானையோ, துர்கை, லக்ஷ்மீ, சரஸ்வதி ஆகியோர் இணைந்த வடிவான ராஜராஜேஸ்வரியையோ... எந்தத் தெய்வத்தை வழிபடுவதாக எண்ணினாலும், அந்தத் தெய்வம் அந்தத் தீப ஜோதியில் கலந்துவிளங்கும் என்பது பெரியோர்கள் காட்டிய வழி.

பொதுவாக நம் வீடுகளில் அனுதினமும் ஏற்றக்கூடிய தீபத்தில், தீபஜோதியை அனைத்து இறை சக்தியின் வடிவமாகக் கருதி, `என் குடும்பத்தாரை வழிநடத்துங்கள்’ என்று பிரார்த்தனை செய்து தீபமேற்றி நமஸ்கரிக்கலாம்.

? எப்போதெல்லாம் தீப வழிபாடு செய்யவேண்டும்? என்ன நிவேதனம் சமர்ப்பிக்கலாம்?

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றுவது நம் மரபு. விழாவையும்கூட விளக்கு ஏற்றியே தொடங்குவோம். மகனுக்குப் பெண் பார்க்கும் பெற்றோர், `வீட்டுக்கு விளக்கேற்ற மகாலக்ஷ்மீ வரவேண்டும்’ என்றே வேண்டிக் கொள்வார்கள். இங்ஙனம் அர்த்தமுள்ளதும் அற்புதம் நிறைந்ததுமான தீப வழிபாடு நம் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கக் கூடியது.

தினமும் மாலை வேளையில் வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து தீபலக்ஷ்மியை வழிபட்டால், அந்த வீட்டில் எல்லா காலங் களிலும் அமைதி நிலவும் என்பது அனுபவ உண்மை. எளிமையானதும், மிகப்பெரிய பயனைத் தரக்கூடியதுமான இந்தத் தீப வழிபாட்டை குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையேனும் செய்வது அவசியம். வீடுகளிலோ, ஆலயங்களில் பொதுவான இடங்களில் கூட்டு வழிபாடாகவோ தீபத்தைப் போற்றி வணங்கிட ஒற்றுமையும், நன்மையும் வளர்ந்தோங்கும். தீப வழிபாடு மனத் தெளிவை அளித்து, அக இருளையும் புற இருளையும் நீக்கும்; நம்மைக் காக்கும்.

நிவேதனமாக பழங்கள், அன்ன வகைகள், பாயஸம்... என உங்களால் இயன்றதைச் சமர்ப்பித்து வணங்கலாம். வழிபாட்டைப் பூர்த்தி செய்யும்போது புஷ்பத்தைச் சமர்ப்பித்து, தெய்விக சக்தியானது அந்த ஜோதியில் இருந்து நம்முள் வந்துவிட்டதாகக் கருதி, மானசீகமாக நம் ஹ்ருதயத்தில் சேர்த்துக்கொண்டு வணங்கிட, நமக்கு மிகப் பெரிய மாறுதல் உண்டாகும்.

? தீபம் ஏற்றும்போது கூற வேண்டிய மந்திரங்கள் என்ன?

சுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம் |

சத்ரு புத்தி வினாசாய தீப ஜ்யோதி நமோஸ்துதே ||

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே |

மங்களார்த்தம் மங்களேசி

மாங்கல்யம் தேஹிமே ஸதா ||

சுவர்ண வ்ருத்திம் குரு மே க்ருஹே :

சுதான்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே :|

கல்யாண வ்ருத்திம் குரு மே க்ருஹே :

விபூதி வ்ருத்திம் குரு மே க்ருஹே :||

இப்படித் தங்களுக்கு என்ன தோத்திரம் தெரிகிறதோ, அவற்றை தீபலக்ஷ்மீக்கு சமர்ப்பித்து, அர்ச்சனைகளும் பாராயணமும் செய்து பக்தியுடன் வழிபடலாம். தீப ஒளியின் அருள்கடாட்சத்தால், அனைத்து மங்கலங்களும் பெற்று நன்மையை பெற இறையருள் துணை நிற்கட்டும். தீப ஜ்யோதி நமோ நம: .

- பதில்கள் தொடரும்...