திருக்கதைகள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

ஐயப்பமார்களின் விரத காலத் தொடக்கமான கார்த்திகை மாதம் வரப்போகிறது. மாலை அணிந்து விரதம் இருக்கும் சாமிமார்கள் நாள்தோறும் தவறாமல் உச்சரிக்கும் துதிப்பாடல் ஹரிவராசனம். இதன் தமிழ் விளக்கம் எவரிடமேனும் இருந்தால் பகிருங்களேன். எல்லோரும் படித்து வழிபட பயனுள்ளதாக இருக்கும்.

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்


- கே.ராஜன், கோவை-3

`வேதங்களில் நான் காயத்ரீயாய் இருக்கிறேன்’ என்பது பகவான் கிருஷ்ணரின் திருவாக்கு. `காயத்ரீயே வேதங்கள் அனைத்துக்கும் பிறப்பிடம்’ என்கிறது கூர்மபுராணம். வேறுசில ஞானநூல்கள் `காயத்ரீ வேதங்களின் தாய்’ என்று போற்றுகின்றன. இத்தகு சிறப்புகள் கொண்ட காயத்ரீ தேவிக்கு நம் தமிழகத்தில் எங்கேனும் தனிக் கோயில் உள்ளதா? விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் பகிருங்களேன்.

-சி.ராமன், மரக்காணம்

சென்னைக்கு அருகிலுள்ள திருத்தலம் திருநின்றவூர். மகா லட்சுமியால் பிரசித்திபெற்ற புண்ணியபூமி. அருள்மிகு இருதயா லீஸ்வரர் கோயில் கொண்டிருப்பதும் இங்குதான். பூசலார் நாயனார் பாவனையில் எழுப்பிய ஆலயம், பல்லவன் ராஜசிம்மன் மூலம் நிஜத்தில் எழும்பியது என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்தில் இதயம் சார்ந்த பிணிகளுக்குத் தீர்வு வேண்டு வழிபாடுகள் செய்வது உண்டு என்று அறிந்தேன். ஆனால் அதற்கான நியதிகள் என்ன, எப்படி வழிபடுவது எனப்போன்ற விளக்கங்கள் தேவை.

-வி.சந்திரமதி, முக்கூடல்

மனித வாழ்க்கை ஐந்து பருவங்களாகப் பிரித்துச் சொல்லி விளக்குகின்றன சாஸ்திரங்கள். அந்த வகையில் சுவாமி ஐயப்பனின் அவதாரத்தை ஐந்தாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தலத்தையும் குறிப்பிட்டுச் சொல்வார் என் பாட்டனார். அவர் கூறிய விவரம் இப்போது மறந்துவிட்டது. எவருக்கேனும் இதுபற்றிய தகவல் தெரிந்திருந்தால் பகிர்ந்து உதவுங்களேன்.

- எல்.கார்த்திகேயன், சென்னை-4

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள பல்லிகள் சிற்பம் குறித்தும், வழிபாடுகள் குறித்தும் தகவல்கள் உண்டு. அதேபோல் சிவாலயம் ஒன்றில் தேள் சிற்பம் உண்டு. அங்கு வழிபட்டால் விஷக்கடி பாதிப்புகள் நீங்கும் என்பார்கள். அது எந்த ஊர் சிவாலயம்?

- தி.சுப்புராஜ், புதுக்கோட்டை

`ஒரே ஆலயத்தில் ஒன்பது பெருமாள்கள் அருளும் திருத்தலம் ஒன்று உண்டாமே, அது எங்குள்ளது?’ என்று சென்னை வாசகி பத்மப்ரியா. அவருக்குக் கீழ்க்காணும் விவரங்களை காஞ்சிபுரம் வாசகர், வி.ரவி பகிர்ந்துள்ளார்.

சென்னையிலிருந்து தென்மேற்கே சுமார் 85 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள ஊர் உத்திரமேரூர். கல்வெட்டுகளால் பிரசித்திபெற்ற இந்த ஊரில் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 9 பெருமாள்களை தரிசிக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் எங்கு வசிக்கிறார்களோ, அங்கே நவமூர்த்திகள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது மரீசி சம்ஹிதை எனும் ஞான நூல். அந்த வகையில் ஒன்பது பெருமாள்களுடன் அமைந்த கோயில் இது. ஆகவே, நவநாராயணர் கோயில் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.

இந்தக் கோயிலில் மூன்று தளங்களுடன் திகழ்கிறது. அதாவது ஒன்றின் மீது ஒன்றாக மூன்று கருவறைகள். கீழ்த் தளத்தில் கிழக்கு நோக்கி சுந்தர வரதர் அருள்பாலிக்கிறார். அதே தளத்தில் பிராகாரத்தில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி முறையே அச்சுத வரதர், அநிருத்த வரதர், கல்யாண வரதர் அருள்கிறார்கள். ஆக கீழ்த் தளத்தில் 4 பெருமாள்கள்.

முதல் தளத்தில் நடுநாயகமாக கிழக்கு நோக்கி வைகுண்ட நாதர் அருள்கிறார். பிராகாரச் சுற்றில் தெற்கு நோக்கி கண்ணன், மேற்கு நோக்கி நரசிம்மர், வடக்கு நோக்கிப் பூவராகர் என இங்கும் 4 பெருமாள்கள். மேல்தளத்தில் அனந்தசயனப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

இந்தக் கோயிலுக்குச் சென்று நவநாராயணரையும் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும் சந்தோஷம் பெருகும் என்பது நம்பிக்கை.