Published:Updated:

அரியவராம் பெரியவராம்

வாசகர் ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் ஆன்மிகம்

வாசகர் ஆன்மிகம் -மு. வடிவுக்கரசி, பரமக்குடி

அரியவராம் பெரியவராம்

வாசகர் ஆன்மிகம் -மு. வடிவுக்கரசி, பரமக்குடி

Published:Updated:
வாசகர் ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் ஆன்மிகம்

ராமநாதபுரம், சிவகங்கை வட்டாரங்களில் துடியான தெய்வமாக விளங்குபவர் ஸ்ரீஅரியவர் சாமி. இவர்தான் எங்கள் குலசாமி.பெரும் பாலும் வெட்டவெளியில் பீடமாகவே அருள்பாலிக்கும் தெய்வம். பரமக்குடிக்கு அருகில் சாலைகிராமம் எனும் ஊரில் இருக்கிறது எங்கள் குலசாமியின் கோயில்.

மனதார வேண்டிக்கொண்டால், அந்த வேண்டுதலை தாமதமின்றி நிறை வேற்றித் தரும் ஸ்ரீஅரியவரின் மகிமையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பகுதியில் பெரும்பாலும் சைவர்கள் குடும்பத்தில் `அரி’ என்றும் அந்தப் பெயரை சற்று மாற்றி `ஹரி’ என்றும் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்திருப்பார்கள். இந்தப் பெயர்கள் ஸ்ரீஅரியவரின் நினைவாகவே வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பிரசித்தமானவர் இவர். கும்பிட்ட கை இறங்கும் முன்னே குறைகளைத் தீர்த்துவிடும் எங்கள் அரியவர் சாமி, மனிதராகப் பிறந்து சித்த நிலையை அடைந்து தெய்வமானவர் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள்.

பரமகுடியில் வசிக்கும் எனக்கு ஓர் ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். திடீரென எனக்கும் என் மகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. போதாகுறைக்கு என் மகனுக்கும் கால் பெருவிரல் நகத்தில் அடிபட்டு, வெகுநாள்கள் காயம் ஆறாமல் வீட்டில் படுத்துக்கிடந்தான்.

வீட்டில் மூவருமே மாற்றி மாற்றி மருத்துவமனைக்குச் சென்று வரும் நிலை. மன நிம்மதியே இல்லாமல் தவித்தோம். மருந்துகள் தற்காலிக நிவாரணம் தந்தாலும் பூரணக் குணம் என்பது கிடைக்காமல் போனது. ‘என்னடா வாழ்க்கை இது’ என்று மனத்தில் சலிப்பு!

ஸ்ரீஅரியவர் சாமி
ஸ்ரீஅரியவர் சாமி


சுற்றியிருப்பவர்கள் எல்லாம் `கண் திருஷ்டி’ என்றார்கள். நாங்களும் அதற்கான பரிகாரங்களைச் செய்தோம். அப்போதும் சரியாக வில்லை. நானும் எத்தனையோ இஷ்டதெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டேன். கோயில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாத காலம் என்பதால், வீட்டிலேயே விளக்கேற்றி வணங்கி வந்தேன். பணம் முடிந்து வைத்தும் நேர்ந்துகொண்டேன்.

இந்த நிலையில்தான் எங்கள் குடும்பத்துப் பெரியவர் ஒருவர், எங்கள் குலசாமியை நினைவுபடுத்தினார்.

‘`ஊரெல்லாம் சாமி இருந்தாலும், கஷ்டம்னு கை எடுத்து கும்பிட்டா ஓடிவர்றது குலசாமிதான். அரியவர் சந்நிதிக்குப் போய் விழுந்து கும்பிட்டு வா’’ என்றார். வெட்டவெளியில் காத்திருக்கும் சாமி என்பதாலும் அவருக்கென எந்தப் பூசாரியும் இல்லை என்பதாலும், நினைத்தவுடன் அவரை கும்பிட முடியும் என்பதாலும் மறுநாளே கிளம்பிவிட்டோம்.

கோயிலில் எங்கள் அரியவரைப் பார்த்ததுமே தைரியமும் இனம்புரியாத உற்சாகமும் எங்களுக்குள் பொங்கி வர, அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, பொங்கல்வைத்து பூசை போட்டு வணங்கினோம்.

‘அக்னியில் பிறந்தவராம், அரனாருக்குப் பிறந்தவராம்

அரியவராம், பெரியவராம் ஆனை மேலே போறவராம்...’ என்று எங்கள் குலசாமியை பெரியோர்கள் பாடி வைத்த வரிகள் நினைவில் எழ, பாடித் தொழுதோம்

`‘ஐயா! அரியவர் சாமியே... எங்கள் குலம் காக்கும் மூத்தவரே காப்பாத்தும்’’ என்றும் அழுதும் தொழுதும் வணங்கினோம். அப்போது அரியவரின் தலையிலிருந்து பூ ஒன்று உதிர்ந்து தரையில் விழுந்தது. நல்ல சகுனம் காட்டிவிட்டார் அரியவர் என்று எங்களுக்கு மகிழ்ச்சி; அங்கேயே கஷ்டம் எல்லாம் தீர்ந்ததுபோல பாவித்து நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தோம்.

விரைவில் எங்கள் வேண்டுதல் பலித்தது. `பூ வாக்கு’ கொடுத்தது போலவே அரியவரும் சொன்ன சொல்லை நிறைவேற்றினார். ஆம்! இப்போது எந்த உடல் நோயும் மன வலியும் இல்லாமல் இருக்கிறோம். இதுதான் குலதெய்வத்தின் பெருமை.

அரியவரே என்றென்றும்

எம்மை ஆளும் ஐயா!