Published:Updated:

வீட்டில் முளைப்பாலிகை வளர்க்கலாமா?

கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்கள்

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

வீட்டில் முளைப்பாலிகை வளர்க்கலாமா?

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

Published:Updated:
கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்கள்

? அம்பாள் பஞ்சாக்ஷரி. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பெளர்ணமி தினங்களில் அம்பாளை ஐந்து முறை வலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பு என்று புத்தகம் ஒன்றில் படித்தேன். அம்பாளை ஏன் பஞ்சாக்ஷரி என்கிறோம். குறிப்பிட்ட தினங்களில் அம்பாளை ஐந்துமுறை வலம் வர வேண்டுமா?

- எம்.ரேணுகா, சேலம்-2

முளைப்பாலிகை
முளைப்பாலிகை


`சக்தி பஞ்சாக்ஷரி’ என்பது அம்பாளின் பீஜ எழுத்தை இணைத்து, பஞ்சாக்ஷர மந்திரத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்று ஜபிப்பது. எனினும் இதையொட்டி குறிப்பிட்ட தினங்களில் ஐந்துமுறை வலம் வருதல் என்பதற்கு எவ்வித சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

பஞ்சமி, பஞ்ச பூதேசி என்று லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளைப் போற்றுகிறது. பஞ்சபூதங்களின் உள்ளிருந்து இயக்கக் கூடிய சக்தியாகவும் பஞ்சமி திதியில் சிறப்பாக வழிபடக்கூடிய தேவியாகவும் அம்பாள் போற்றப்படுகிறாள். எனினும் பஞ்சாக்ஷரி என்று அவள் கூறப்படுவதாகத் தெரியவில்லை. அனைத்து தினங்களிலும் எந்த ஆலயத்துக்குச் சென்றும் இறையை தரிசித்து வலம் வந்து வழிபடலாம். அது புண்ணியம் சேர்க்கும் செயல். பெளர்ணமி போன்ற சிறப்புத் தினங்களில் வலம் வருவது மேலும் பலம் தரும்.

ஆக, அம்பாளை எல்லா நாள்களிலும் வலம் வந்து வழிபட்டு வரம் பெறலாம். நம் பாவங்களை மிக எளிதில் களைவதற்கு அருமையான உபாயம் ஆலய வலம் வருதல் ஆகும்.

? மங்கல நிகழ்வுகளில் முளைப்பாலிகை வளர்ப்பதும் அதை வழிபடுவதும் எதற்காக? நண்பர் ஒருவர், விசேஷ தினங்கள் மட்டுமன்றி சாதாரண நாள்களிலும் முளைப்பாலிகை வளர்ப்பது உண்டு. இதுகுறித்து விளக்குங்களேன்.

- ராதா ராமன், கரூர்

ஆகமங்களில் பாலிகை பூஜை மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அனைத்து யாகங்களிலும் ரோகிணி, கிருத்திகாவுடன் சந்திரனையும், அவரைச் சுற்றிலும் பாலிகைகளில் 12 சூரியரையும் வளர்ச்சியின் அடையாளமாக வழிபடுவது மரபு.

திருமணம் முதல் அனைத்து சுபகாரியங்களிலும் வளர்ச்சியின் குறியீடாக முளைப்பாலிகை வைத்து அவரவர் மரபுப்படி பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. நாம் நன்றாக இருக்கவேண்டும்; ஆரம்பித்த காரியம் நன்றாக முடியவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். காரியம் நல்லபடியே நிறைவுபெற்றதும் பாலிகையை கரைத்துவிடுவது வழக்கம்.

செடிகளாக வளர்ப்பது வேறு; பூஜையின் பொருட்டு பாலிகைகளில் வளர்ப்பது வேறு. செடிகளாக வளர்ப்பதால் சூழலுக்கு அழகு சேர்க்கும்; சுற்றுப்புறம் சிறப்படையும். அதேநேரம் பூஜைகளில் பாலிகை ஒரு குறிக்கோளுடன் இடம்பெறுகிறது. மங்கல நிகழ்வுகளில் மட்டுமே பாலிகை தான்யங்களை முளைக்கச் செய்வது மரபு.

உங்களின் நண்பர் சாதாரணமான நாட்களில் வளர்க்கிறார் எனில், சாதாரணமாக நாம் செடிகள் வளர்ப்பது போன்றதுதான் என்று அறியவும்; தவறில்லை.

தீர்த்தம்
தீர்த்தம்
garytog


? காசிக்குச் சமமான க்ஷேத்திரம், திருப்பதிக்குச் சமமான திருத்தலம் என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். எனில், காசி திருப்பதி போன்ற தலங்களில் செய்யவேண்டிய பரிகாரங்களை அவற்றுக்குச் சமமாகச் சொல்லப்படும் தலங்களில் செய்தால் பூரணமான பலன் உண்டா?

- எ.செந்தில்குமார், திண்டிவனம்

ஒருவரைக் குறிப்பிட்டு அவர் இன்னாருக்குச் சமம் என்று வேறோருவருடன் ஒப்பிட்டுச் சொல்வோம். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் அல்ல என்பது நமக்குத் தெரியும். இருவரிடமும் சில இயல்புகள் - குணங்கள் ஒன்றுபோல் இருக்கலாம். மற்றபடி இருவரும் வேறுவேறு என்பதைப் புரிந்துகொள்வோம்.

அப்படித்தான் இதுவும். ஒரு தலம்-கோயில் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சமமாக இருக்கிறது என்று கூறினால்... தன்மைகள் ஒரே மாதிரியானவை என்றாலோ, ரிஷிகளோ அவதாரப் புருஷர்களோ அதுபற்றி கூறியிருந்தாலோ நாம் ஏற்கலாம். நாமாகவே `இப்படி இருக்கலாம்’ என்று தவறாக வழிகாட்டக் கூடாது.

எனவே, இயன்றவரையிலும் குறிப்பிட்ட புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு நேரில் சென்று வழிபாடுகளைச் செய்வதே சிறப்பானது. இயலாத சூழல் எனில் அருகிலுள்ள நீங்கள் குறிப்பிடுவதுபோன ஆலயங்களுக்குச் சென்று பரிகாரங்களைச் செய்யலாம்.

? சிவபெருமானுக்கு வீட்டில் வில்வத்தால் அர்ச்சனை செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன?

- அ.ராஜேஷ், சாத்தூர்

சிவபெருமானுக்குப் பிரியமான வில்வத்தை அர்ச்சனையின் போது சமர்ப்பித்து மகிழலாம்.

'த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரி நேத்ரம் ச த்ரியாயுதம்

த்ரீஜன்ம பாப சம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்'

பில்வாஷ்டகத்தின் முதல் துதியான இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம். மூன்று தளங்கள், மூன்று குணங்கள், முச்சூலம் - வில்வம். முற்பிறவி - இப்பிறவி - வரக்கூடிய பிறவிகளின் பாவங்களைப் பொசுக்குவது வில்வம். இந்த வில்வ இலைகளை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் சிவபெருமானுக்கு அளித்து சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

இயன்றவர்கள் இந்த அஷ்டகத்தின் அனைத்து துதிகளையும் சொல்லி வழிபடலாம். அதேபோல் சிவநாமங்களைச் சொல்லியும் தூய்மையான வில்வத்தைச் சமர்ப்பித்து தூய மனதைப் பெற சிவபெருமானைப் போற்றி வணங்கலாம்.

? கோயிலில் தரிசனத்தின்போது மூன்று முறை தீர்த்தம் வாங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் கூட்டத்தின் காரணமாக ஒருமுறை தீர்த்தம் பெற்றுக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம். இது சரியா?

- தி.வேணுகோபால், திருச்சி

ஆலயங்களில் தரப்படும் தீர்த்தத்தை ஒருமுறை பெற்றுக் கொண்டால் போதுமானது. ஆசமனம் என்று... நீரை மந்திரம் ஜபித்து மூன்று முறை உட்கொண்டு, பூஜைகளை ஆரம்பிப்பது மரபு. பூஜைகளில் ஸ்வாமிக்கு அளிக்கும் பாத்ய, ஆசமன, அர்க்யாதிகள் பிறகு பிரசாதமாக அளிக்கப்படுவதால்... ஒருமுறை பெற்றுக் கொள்வது சிறப்பு. மூன்றுமுறை உட்கொள்ள வேண்டியதில்லை.

- பதில்கள் தொடரும்...