தொடர்கள்
Published:Updated:

இறைவனுக்கு நைவேத்யம் அவசியமா?

நைவேத்யம்
பிரீமியம் ஸ்டோரி
News
நைவேத்யம்

கேள்வி பதில்

? இறைவனுக்கு நைவேத்யம் படைப்பது ஏன்?

‘நைவேத்யம்’ என்ற சொல் ‘நிவேதனம்’ எனும் சொல்லில் இருந்து உருவானது. `நிவேதனம்’ என்பதற்கு அர்ப்பணித்தல், தெரிவித்தல், சமர்ப்பித்தல் என்று பொருள்கொள்ளலாம். ஆம், இந்த அன்னம் நமக்குக் கடவுள் அளித்தது. நன்றிக்கடனாக அந்தப் பரம்பொருளுக்கு அதை அர்ப்பணித்து, தெரிவித்து, சமர்ப்பித்துப் பிறகு நாம் அனை வரும் உண்ணுவது தர்மம் ஆகும்.

நைவேத்யம் படைப்பது ஏன்
நைவேத்யம் படைப்பது ஏன்


இங்ஙனம் தெய்வத்துக்குப் படைக்கப்படுவது நைவேத்யம். பொதுவாக `ஆத்ம நிவேதனம்’ என்று கூறுவார்கள். தன்னையே கடவுளிடம் சமர்ப்பித்து கடவுளிடம் தொடர்புகொள்வது என்பது தாத்பர்யம். ஆகவே, உள்ளன்போடும் பக்தியோடும் கடவுளுக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கவேண்டும். `அவர்தானே அனைத்துக்கும் காரணம். எனில், அவருக்கு நாம் உணவளிக்கத் தேவை இல்லையே’ என்றெல்லாம் எண்ணாமல், `சாஸ்திரங்கள் சொல்கிறபடி நாம் செய்ய வேண்டும்’ எனும் எண்ணத்துடன் செயல்படவேண்டும்.

ஓர் இடத்துக்குச் செல்ல முடிவெடுக்கிறோம் எனில், சரியான வழியில் சென்றால்தான் அந்த இடத்தை அடையமுடியும். `செல்ல வேண்டும்’ என்ற எண்ணம் மட்டும் போதாது; அதற்கான முயற்சி யும் வேண்டும் அல்லவா? எண்ணம், முயற்சி இரண்டும் இருந்தால் மட்டுமே செயல் நிறைவடைகிறது. அதுபோலவே, பூஜை நடை முறைகளிலும் நம் அணுகுமுறை இருக்கவேண்டும்.

நைவேத்தியம்
நைவேத்தியம்
lakshmiprasad S

? ஆலயங்களில் நைவேத்தியம் அவசியமா?

`பூஜைகளால் உலகுக்குப் பலன் உண்டு’ என்று ஆகமங்கள் கூறு கின்றன எனில்... நைவேத்யம் உள்பட அந்தப் பூஜையின் அங்கங்கள் என்னென்ன என்பதை உணர்ந்து, பக்தியுடன் உரிய பூஜா வழிபாடு களைச் செய்யவேண்டும். பூஜையின் அங்கமான நைவேத்யத்துக்கும் சிறப்பிடம் உண்டு. நாம் நிவேதனம் செய்யும் பொருளின் ரசம் - சக்தியானது கடவுளிடம் சேர்ந்திட, அவர் மூலம் உலகமெல்லாம் சுபிட்சம் அடைகிறது என்று ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் கோயிலுக்குச் செல்கிறீர்கள். அங்கே, உங்களுக்காக ஸ்வாமிக்குச் செய்யப்படும் அர்ச்சனை, நீங்கள் நினைத்தது நிறை வேறுவதற்காக - காம்ய பூஜையாகச் செய்யப்படுகிறது. ஆனால், ஆலயத்தில் நித்தியமும் நடைபெறும் பூஜைகள் அனைத்தும் உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்காகவும் நடைபெறுகின்றன. இதை உள்ளபடியே உணர்ந்தோமானால், ஆலயங்களில் வழிவழியாக நடைபெற்று வரும் வழிபாட்டு மரபுகளை மாற்றுவது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்வோம்.

கோயில்களுக்குப் பக்தர்கள் வருகிறார்களோ, இல்லையோ... உலகில் சூரிய-சந்திரர் இருக்கும் வரையிலும் சகல ஜீவராசிகளின் நன்மைக்காக கோயில்களில் பூஜைகள் நடைபெறவேண்டும் என்று ஆகமங்கள் விதித்துள்ளன. இதிலிருந்து ஆலய வழிபாடுகளின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ளலாம். அந்த வழிபாடுகளில் மிகவும் முக்கிய அம்சம் நைவேத்யம்.

?கோயில்களில் நைவேத்யம் தயாரிப்பது, சமர்ப்பிப்பது குறித்து ஆகமங்கள் கூறும் விதிமுறைகள் என்னென்ன?

சிவாலயங்களில் அவற்றைச் சமைக்கக்கூடியவர் அந்த ஆலயத் தின் ஆசார்யரால் சிவதீக்ஷை பெற்றிருக்க வேண்டும். விபூதி தரித்துக்கொண்டும், ருத்ராக்ஷம் அணிந்துகொண்டும், தூய ஆடை உடுத்திக்கொண்டும், கையில் பவித்ரம் தரித்துக்கொண்டும், சிவ மந்திரத்தைக் கூறியபடியே சமைக்கவேண்டும் என்று ஆகமங்கள் விளக்குகின்றன. இப்படியே வைணவ ஆலயங்களிலும் ஆகம நியமப்படியான முறைகள் உண்டு.

மட்டுமன்றி, எந்தெந்த தெய்வத்துக்கு என்னென்ன அளவில் நைவேத்யம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆகமங் கள் போதிக்கின்றன. ஆலயங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு ஏற்ப நிவேதனம் செய்யப்படவில்லை எனில் அந்த நாட்டிற்குக் கேடு விளையும் (நைவேத்ய ஹீநே துர்பிக்ஷம்) என்றும் ஆகமங்கள் எச்சரிக்கின்றன. இப்படியான தாத்பர்யங்களை அறிந்தே, நம் மன்னர்கள் ஆலயங்களில் பூஜைகள் சிறப்பாக தடை யின்றி நடைபெற வேண்டி பல தர்மக் கட்டளைகளை உருவாக்கி வைத்தனர்.

ஆலய வழிபாடுகளில் நிவேதனம்
ஆலய வழிபாடுகளில் நிவேதனம்

? ஆலய வழிபாடுகளில் நிவேதனம் செய்யப் படுவது குறித்து வேறு சிறப்பு வழிகாட்டல்கள் உண்டா?

உண்டு! இன்னின்ன காலத்துக்கு இன்னின்ன நிவேதனம் என்பதோடு, சிவபெருமானின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு நிவேதனம் எனும் பட்டியலும் ஆகமங்களில் உண்டு. அதேபோல் கணபதி பூஜை, புண்யாஹவாசனம், சிவாக்னி கார்யம், வாஸ்து சாந்தி என்று ஒவ்வொரு கிரியைக்கும் உரிய நிவேதனம் குறித்த விளக்கங்களும் உண்டு.

இந்த நிவேதனங்களை போஜ்யம், பக்ஷ்யம், காத்யம், சோஷ்யம், லேஹ்யம், பேயம் என்று அவற்றின் தன்மைக்கு ஏற்ப பிரித்தும் வைத்திருக் கிறார்கள்.

ஹவிஸ், பரமான்னம், ஷட்ரஸான்னம், சர்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், கதம்பசாதம், சம்பா சாதம், நெய் அன்னம், தேன் அன்னம், தேங்காய் அன்னம், எலுமிச்சை அன்னம், மஞ்சள் அன்னம், கற்கண்டு பொங்கல், பாலன்னம், எள்ளு சாதம், உளுந்து சாதம், பருப்பு அன்னம், கடுகு சாதம், கோதுமை சாதம், கொள்ளு சாதம், பாயஸான்னம், சுத்தான்னம், பருப்புமா புட்டு, கடலைச் சுண்டல், உருண்டை மோதகம், கொழுக்கட்டை... என்று தொடங்கி, மைசூர் பாகு அதிரசம், தேங்காய் பர்பி முதலான பதார்த்தங்கள் வரையிலுமாக ஆலய நித்ய பூஜைகள் மற்றும் சிறப்புப் பூஜை களுக்கான நிவேதன வகைகளைப் பட்டியலிடு கின்றன ஞானநூல்கள்.

இப்படியாக, ஆலயங்களில் சிறந்த முறையில் மடைப்பள்ளி அமைத்து, சிவதீக்ஷை பெற்ற சமையற்காரர் மூலம் தூய்மையான பாத்திரங்களில்-தூய்மையான மனதுடன் நைவேத்யம் தயார் செய்து கடவுளுக்கு அர்ப்பணித்தால், பூஜைகளின் பலன் எல்லோருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

? வீட்டுப் பூஜைகளில் நிவேதனம் செய்வதற்கான நியதிகள் என்னென்ன?

வீடுகளில் நாம் செய்யும் பூஜையை `ஆத்மார்த்த பூஜை’ என்பார் கள். அவரவர்க்கு இயன்றபடி உலர்ந்த திராட்சை போன்றவை, அன்னம் முதலான உணவு வகைகளைச் சமர்ப்பித்து வழிபடலாம். இடம், பொருள், மனம் அனைத்தும் தூய்மையாக இருத்தல் அவசியம்.

பூஜைக்கென்று தனியே பாத்திரங்கள் வைத்திருக்க வேண்டும். தினமும் நிவேதனம் - உணவைக் கடவுளுக்குச் சமர்ப்பித்த பிறகே நாம் உட்கொள்ள வேண்டும். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைகின்றன. அதேபோல், காலை செய்யும் உணவில் சிறிது பாகத்தைக் காக்கைக்கும், இரவு உணவில் சிறு பகுதியை நாய்க்கும் அளிப்பது சிறப்பு. முற்காலத்தில் விருந்தோம்பல் செய்வது வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் அதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஆகவே, தினமும் எவரேனும் ஏழைக்கு உணவளிப்பது மிகவும் விசேஷம். இப்படி அனுதினமும் கடைப்பிடிப்ப துடன் ஆலயங்களிலும் வழிபாடுகள் தடையின்றி நிகழ நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். அதன் பலனாக இறையருள் பரிபூரண மாக நமக்குக் கைகூடும்.

- பதில்கள் தொடரும்...