Published:Updated:

விநாயகர் சதுர்த்தி: பேதமே இல்லாத பெருங்கடவுளின் வலது தந்தம் உடைந்தது எப்படி? பிள்ளையார் பெருமைகள்!

ராமாயணத்தில் விநாயகர் வழிபாடும் வருகிறது. ஸ்ரீராமபிரான் சீதாதேவியை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் உப்பூர் வெயிலுக்கு உகந்த விநாயகரை வணங்கிச் சென்றார் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஈசனின் திருமகனாகவும் முருகப்பெருமானின் அண்ணனாகவும் அன்னை சக்தியின் செல்லப் பிள்ளையாகவும் சைவம், கௌமாரம், சாக்தம் என மூன்றிலும் கொண்டாடப்படும் விநாயக மூர்த்தி வைணவ சம்பிரதாயத்திலும் வெகுவாகக் கொண்டாடப்படுகிறார்.
விநாயக மூர்த்தி
விநாயக மூர்த்தி

வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்று விஷ்ணுவின் சேனை முதலிகளில் ஒருவராக வழிபடும் வழக்கம் பல விஷ்ணு ஆலயங்களில் இருந்து வருகிறது. கஜானனர் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் திருமாலின் தங்கையான பார்வதியின் மூத்தப் பிள்ளை என்பதால் கணபதி மருமகன் என்ற உறவோடும் திருமாலோடு இணைத்துக் கொண்டாடப்படுகிறார்.

மேலும் வைணவர்களின் முக்கிய காவியமான மஹாபாரதத்தை வியாசர் சொல்ல தடைபடாமல் எழுதியவர் விநாயகர். எழுதும்போதே எழுத்தாணி உடைந்ததால், தனது வலது தந்தத்தையே உடைத்து எழுதி ஏகதந்தர் என்ற திருநாமமும் கொண்டார் கணபதி.

கணபதி
கணபதி

விபீஷணன் இலங்கைக்குக் கொண்டு சென்ற விஷ்ணு மூர்த்தத்தை திருவரங்கத்திலேயே தங்கிவிட உதவியதும் கணபதிதான். ஆம், திருவரங்கத்தில் பள்ளி கொள்ள விரும்பிய ரங்கநாதர் கணபதியைக் கொண்டே எழுந்தருளினார். இன்று திருவரங்கம் ஆலயம் காவிரி தீரத்தில் அமைந்து இருக்கவும் கணபதியே காரணம் எனலாம்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகப்பெருமானின் அறுபடை வீடுகள் எவை தெரியுமா?
ராமாயணத்தில் விநாயகர் வழிபாடும் வருகிறது. ஸ்ரீராமபிரான் சீதாதேவியை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் உப்பூர் வெயிலுக்கு உகந்த விநாயகரை வணங்கிச் சென்றார் என்று கூறப்படுகிறது. ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும் காரணம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

திருமாலின் அவதாரங்களில் ஒருவரான பரசுராமரை எதிர்த்த வரலாறும் விநாயகருக்கு உண்டு. கயிலாயத்தில் ஈசனைத் தரிசிக்க வந்த பரசுராமரை கணபதி தடுத்து நிறுத்துகிறார். இதனால் கோபம் கொண்ட பரசுராமர் ஈசனிடமிருந்து தான் பெற்ற கோடரியை கணபதி மீது வீசுகிறார். தன் தந்தையின் சக்தி கொண்ட அந்த கோடரியைத் தடுக்காமல் அதை தனது தந்ததில் ஏற்றுக்கொண்டபோது தந்தம் உடைந்துபோனது என்ற புராணத் தகவலும் உண்டு.

ஸ்ரீஆத்யந்த பிரபு
ஸ்ரீஆத்யந்த பிரபு

கம்ப நாட்டாழ்வான் பிறந்த தலம் தேரழுந்தூர். இன்றும் விநாயகர் சதுர்த்தி அன்று தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் இருந்து பட்டாச்சாரியார் நைவேத்தியம், புனித தீர்த்தம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு தேரெழுந்தூரில் உள்ள கம்பர் வழிபட்ட கணபதி கோயிலுக்குச் செல்வார். அங்கு அவரே அபிஷேகம் செய்து, நைவேத்யம் சமர்ப்பிப்பார். இந்த நடைமுறை பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் ஒரு சம்பிரதாயம் என்கிறார்கள் மக்கள். 'பிறிதென் சிலதனி ஐங்கர கரியும் கொலை அஞ்சுதல்...' என்று கம்பனும் போர்க்கள காட்சியில் கணபதியை நினைவு கூறுவது சிறப்பு. அனுமனும் கணபதியும் இணைந்த ஸ்ரீஆத்யந்த பிரபு வடிவமும் வைணவமும் கணபதியும் இணைந்ததன் குறியீடு தானே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிள்ளைகளோடு கொண்டாடுவோம் பிள்ளையாரை... விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பரிசுப்போட்டி!
கிருத யுகத்தில் காஸ்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிள்ளையாக அவதரித்த மகாகடர். திரேதா யுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக அவதரித்த மயூரேசர். துவாபர யுகத்தில் கஜானனாக அவதரித்தவர். இந்த கலியுக தொடக்கத்தில் ஈசனுக்கும் அம்பிகைக்கும் பிள்ளையாக அவதரித்து அருள் செய்யும் விநாயகர். மேற்கண்ட நால்வரும் ஒரே பிரம்மமான விநாயகர் என்று கணேச புராணம் குறிப்பிடுகிறது. இவரே பிரம்மா, விஷ்ணு, ருத்திரனை படைத்தார் என்றும் கூறுகிறது.
கணேச புராணம்
கணேச புராணம்

கஜமுகாசுரனின் பக்தியில் அகப்பட்டுக் கொண்ட சிவபெருமானை மீட்டெடுக்க கணபதி நந்தி மற்றும் திருமால் துணையை நாடினார். அவர்களும் கஜமுகாசுரனின் முன்பு நாட்டியமாடி விநாயகருக்கு துணை புரிந்தனர் என புராணங்கள் கூறுகின்றன. மேலும் திருமாலின் புகழ்பாடும் புராணங்களும் கணபதியைத் தொழுகின்றது.

திருவரங்கத்தில் விக்னபதி, திருவல்லிக்கேணியில் வெண்ணெய் விநாயகர், அழகர் கோயிலில் தும்பிக்கை ஆழ்வார் என தமிழகம் மட்டுமின்றி இந்த தேசம் முழுக்க சைவ, வைணவம் என்ற எந்த பாகுபாடும் இன்றி வணங்கப்படுபவர் விநாயகப் பெருமான். எளியோர்க்கு எளியோனான இந்த வேழமுகத்தானை வணங்கி நலங்கள் யாவும் பெறுவோம்!

"ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்

நால்வாய் ஐங்கரத்தன் ஆறு

தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன்

தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்

உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே

இரவு பகல் உணர்வோர் சிந்தைத்

திருகோட்டு அயன் திருமால் செல்வமும்

ஒன்றோ என்னச் செய்யும் தேவே!"

- அருணந்திசிவம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு