Published:Updated:

‘கோயில் கட்டுவதைவிட மக்கள் சேவையே முக்கியம்’ - சேவைக்கு இலக்கணம் வகுத்த விவேகானந்தர்!

மக்களுக்கு உதவுவது என்றால் வெறும் பேச்சினால் உதவுவது போதுமா... அவர்களுக்குத் தேவையான மருந்து, போஷாக்கான உணவு ஆகியன வழங்க வேண்டாமா... ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கப்பட்டு அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்தது. அதனால் அந்த அமைப்புக்கென்று கைவசம் பணம் ஏதுமில்லை. அப்போது விவேகானந்தர்...

பிளேக்கின் கொடுமை ரொம்ப...

காலரா பெருமோச ருமேனியா காய்ச்சல்களும்

அம்மைகள் வைசூரி இவைகளால் அவஸ்தைப் படுவோர்

வெகுபேருண்டு ஏனென்று கேட்பாரில்லை - சீக்கை

இதமாகப் பார்க்கவும் மனிதரில்லை செத்தாலும்

கேள்வியில்லை எங்களைத் திருமால் முருகன்தான் காக்கவேணும்

1929 -ம் ஆண்டு எழுதப்பட்ட ‘இந்தியா, பர்மா, மலாய்டாப்பு நொண்டிச்சிந்து’ என்னும் நூலில் நா.நா.கிருஷ்ணா என்பவர் எழுதிய பாடல் வரிகள்தாம் இவை.

விவேகானந்தர்
விவேகானந்தர்

பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டுகள்வரை கொள்ளை நோய்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்தன. ஏற்கெனவே போராலும் அந்நியர் ஆட்சியாலும் அடிமைப்பட்டுக்கிடந்த நாடு, கொள்ளைநோயாலும் பட்ட இன்னல்கள் அநேகம். நா.நா.கிருஷ்ணன் போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியம் படைத்த பலரும் இந்தக் கொள்ளை நோய்களைப் பற்றிய பதிவுகளைச் செய்தனர்.

ஆன்மிகவாதிகள் பலரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று களமிறங்கினர். அவர்களில் முக்கியமானவர்கள் சுவாமி விவேகானந்தரும் சகோதரி நிவேதிதா அம்மையாரும். 1899 - ம் ஆண்டின் முற்பகுதியில் கொல்கத்தாவை பிளேக் நோய் மிகக் கொடூரமாகப் பீடித்தது. சுகாதாரமின்மை, அறியாமை மற்றும் அரசின் அலட்சியம் ஆகியன நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தியது.

சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் சார்பாக அனைவரையும் களத்தில் இறங்கி சேவை செய்ய ஊக்குவித்தார். பிளேக் நோய் நிவாரணக் குழுவுக்கு நிவேதிதாவைத் தலைவியாக்கினார் சுவாமிஜி. நிவேதிதா அம்மையார் பிறப்பால் இந்தியர் அல்ல. அவர் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபல் என்பதாகும். ஆங்கிலோ ஐரீஸியப் பெண்ணான இவர் சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு சேவை செய்வதற்காக இந்தியா வந்தார். விவேகானந்தர் நிவேதிதா (கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுதல்) என்று பெயர் சூட்டி பிரம்மச்சர்ய தீட்சை அளித்தார். கல்விப் பணியில் ஈடுபட்டிருந்த சகோதரி நிவேதிதா, கொள்ளை நோய்க்கு எதிரான யுத்தத்திலும் தலைமை ஏற்று சேவை செய்தார்.

சகோதரி நிவேதிதா
சகோதரி நிவேதிதா

நோயிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகளில் நிவேதிதா தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிரிட்டிஷ் அதிகாரிகளைச் சந்தித்து மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தந்தார். அச்சமின்றி நோயாளிகளை அணுகி அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையைத் தானே முன்னின்று வழங்கினார். இவரைக் கண்டு அநேக மாணவர்களையும் பொதுமக்களையும் உத்வேகம் பெற்று சேவையில் ஈடுபடத் தொடங்கினர்.

முதற்பணியாக கொல்கத்தாவின் சாலைகளைத் தானே சுத்தம் செய்யத் தொடங்கினார். வெறும் காய்கறிகளையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி சகோதரி நிவேதிதா அல்லும் பகலும் பிளேக் நோயாளிகளுக்காகப் பாடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயிலா... மக்கள் சேவையா...

மக்களுக்கு உதவுவது என்றால் வெறும் பேச்சினால் உதவுவது போதுமா... அவர்களுக்குத் தேவையான மருந்து, போஷாக்கான உணவு ஆகியன வழங்க வேண்டாமா... ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கப்பட்டு அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்தது. அதனால் அந்த அமைப்புக்கென்று கைவசம் பணம் ஏதுமில்லை. மிஷன் சார்ந்த துறவிகள் எல்லாம் பணத்துக்காக என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த போது விவேகானந்தர் மிஷனுக்குச் சொந்தமாக பேலூர் என்னுமிடத்தில் இருந்த நிலத்தை விற்றுவிடலாம் என்றார். மிகவும் கஷ்டப்பட்டு நிதி சேர்த்து வாங்கிய நிலம் அது. அங்குதான் ராமகிருஷ்ணருக்குக் கோயிலும் மடமும் கட்டத் திட்டமிட்டிருந்தனர். விவேகானந்தரின் இந்த யோசனை மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருக்கும் நிலத்தை விற்றுவிட்டால் வருங்காலத்தில் கோயில் கட்டுவது எப்படி என்று கேள்வியெழுப்பினர். ஆனால் விவேகானந்தரோ, ‘நாளை அமையும் கோயிலைவிட இன்று மக்களுக்கு உதவுவதுதான் முக்கியம்’ என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட சிலர் தாமாக முன்வந்து நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி அளித்தனர். அதனால் அந்த நிலத்தை விற்கவேண்டிய தேவை இல்லாமல்போனது.

விவேகானந்தர் பொன்மொழி
விவேகானந்தர் பொன்மொழி

நோயின் பாதிப்பால் கொல்கத்தா நகரிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்கள். அப்போது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அந்தப் பகுதிக்கே சென்று அவர்களுடன் தங்கினார். நிவேதிதா அம்மையார் குடிசைப் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்று எடுத்துச் சொல்லி அவரே முன்னின்று சுத்தப்படுத்தினார்.

பீதியிலிருந்த மக்களை ஆறுதல் படுத்தவும் அவர்கள் செய்ய வேண்டிய செயல்களை எடுத்துச் சொல்லவும் விவேகானந்தர் ஓர் அறிக்கை தயார் செய்து வெளியிட்டார். அதில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தது சுற்றுப்புறத் தூய்மை பேணுவதையும், பயத்தை விட்டுவிடுவதையும்தான். கொள்ளை நோய்க்காலத்தில் வதந்திகள் வேகமாகப் பரவும். அப்போதும் அவ்வாறு வதந்திகள் பரவின. அவற்றையெல்லாம் நம்பவேண்டாம் என்றும் மருத்துவமனைகளை அணுகி அவசியமான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதில் இறுதியாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விவேகானந்தர் பொன்மொழி
விவேகானந்தர் பொன்மொழி

“நாங்கள் ஏழைகள். எனவே ஏழைகளின் மனவேதனை எங்களுக்குத் தெரியும். உதவியற்றவர்களின் ஒரேதுணை அன்னை பராசக்திதேவியே. ’பயம் வேண்டாம், பயம் வேண்டாம்’ என்று அவள் நமக்கு அபயம் அளிக்கிறாள். சகோதரா உனக்கு உதவ யாரும் இல்லை என்றால் பேலூர் மடத்தில் வாழ்கிற ராமகிருஷ்ணரின் சேவகர்களுக்கு உடனடியாகத் தகவல் அனுப்பவும். நாங்கள் எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம். தேவியின் அருளால் பண உதவியும் சாத்தியமே” என்று முடிக்கிறார்.

விவேகானந்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் நாம் மற்றுமொரு கொள்ளைநோயால் திகைத்து நிற்கிறோம். திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தானே துணை. ’பயம் வேண்டாம், பயம் வேண்டாம்’ என்று அபயமளிக்கும் அம்பிகையை வணங்கி நாம் ஒருவருக்கொருவர் உதவி இந்த மோசமான காலத்தைக் கடந்து வருவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு