மயிலாடுதுறையில் திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன பரிபாலனத்தில் விளங்குகின்ற ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ மயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. அம்பிகை மயிலுரு தாங்கி சிவபூஜை செய்த புராண வரலாற்றுச் சிறப்பு கொண்ட தலமிது. பழம்பெருமை வாய்ந்த இவ்வாலயத்திலுள்ள குமரனின்கோட்டம் மட்டும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுர ஆதீனத்திற்கு உரியதாக 'குமரக்கட்டளை' என்ற பெயராலேயே வழங்கப்படுகிறது.
கோயில் ஓர் ஆதினத்திற்கும், அதிலுள்ள ஒரு சந்நிதி மட்டும் மற்றொரு ஆதீனத்திற்கும் உரியதாக அமைந்திருப்பது வியப்பான சிறப்பு. கந்த சஷ்டி உற்சவம் ஆறு நாள்களும் இங்கு வெகு விமர்சையாக நிகழும்.

குமரக்கட்டளை ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி எழுந்தருளியுள்ள இந்தத் திருக்கோயிலுக்கு எதிர்வரும் 24.3.2023 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இதற்கான திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேலும், பெருமானின் மூலஸ்தானத்திற்குரிய திருக்கதவிற்கு வெள்ளித் தகடுகள் பதித்து வேலைப்பாடுகள் செய்யவும் திருத்தருமையாதீன குருமணிகள் திருவுளம் பூண்டுள்ளார்கள்.
மிகுந்த பொருட்செலவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இத்திருப்பணிக்கு இன்னும் கூடுதலாக வெள்ளி தேவைப்படுகிறதாம். ஆகவே, பொருளுதவி செய்ய விழைவு உடைய அன்பர்கள் இந்த வெள்ளிக்கதவு அமைக்கும் திருப்பணியில் பங்கேற்கலாம் என்று தருமையாதீனத்தவரால் அறிவிப்பு செய்யப்பெற்றுள்ளது.
பொதுவாக வெள்ளி என்பது சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம். சகல யோகங்களையும் வாழ்வில் அருளுபவர் சுக்கிரன்.
சுக்கிரனின் அருளை எளிதில் பெறுவதற்கு அவருக்கு உகந்த வெள்ளியினை உபயோகிக்க வேண்டும். வெள்ளிப் பாத்திரங்கள் கொண்டு பூஜைகள் செய்வதற்கு பூர்வ ஜன்ம புண்ணியம் வேண்டும் என்பர். இல்லங்களில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்க வேண்டும் என்பதினாலேயே பெண்கள் வெள்ளிக் கொலுசு அணிவதை ஏற்படுத்தி வைத்தார்கள். வெள்ளியை இடையறாது உபயோகப்படுத்தினால் சுக்ரதேஜஸ் கூடிடும். வெள்ளியைப் பிறருக்குத் தானமாகவோ, ஆலயங்களுக்கு உபயமாகவோ அளிப்பதன் மூலம் முன்வினைகள் அழியும். மனக்கவலைகள் அகலும்.

தோஷங்கள் நீங்கி சகல விதமான நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதிகம். இத்தகு நன்மைகளை எளிதில் பெறுவதற்கு ஏதுவாக சுப்பிரமணிய பெருமானின் வெள்ளித் திருக்கதவுத் திருப்பணி நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அன்பர்கள் இயன்ற வகையில் குறைந்த அளவேனும் உபயம் செய்து குமரக் கட்டளைப் பெருமானின் திருவருளுக்கு உரியவர்களாகி மகிழ்ந்திடலாம்.
தொடர்புக்கு: சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், குமரக்கட்டளை, Ph: 88385 05249