Published:Updated:

"பார்த்தசாரதி கோயிலில் இருந்து கவியரசருக்கு அண்டாவில் பொங்கல் வரும்!" - ரேவதி சண்முகம் #Video

ரேவதி சண்முகம்
ரேவதி சண்முகம்

அப்பாவுக்கு மிகவும் இஷ்ட தெய்வம். எந்த மனக்கஷ்டம் வந்தாலும் அப்பா போய் முறையிடும் இடம் மலையரசி அம்மன் சந்நிதிதான். அவரோட கடைசி நிமிடம் வரைக்கும் எப்படி கிருஷ்ண ஜபம் செய்தாரோ அதேபோன்று 'மலையரசித் தாயே' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

தமிழ் வரலாற்றில் காலத்தால் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பெற்ற பெயர் கவியரசர் கண்ணதாசன். இவரின் அன்பு மகள் திருமதி ரேவதி சண்முகம். தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான சமையல் கலைஞர். உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் யூட்யூப் மூலம் தொடரும் பிரபலம். தனித்துவம் வாய்ந்த கலைஞரான அவரிடம் ஆன்மிகம் குறித்து உரையாடினோம். பல சுவாரஸ்யமான விஷயங்களை விகடன் வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொண்டார் ரேவதி சண்முகம். 'கவியரசரோடு சிறுவயதில் கோயில்களுக்குப் போன அனுபவம் உண்டா...' என்ற கேள்வியை முன்வைத்தோம். தன் குழந்தைப் பருவத்துக்கே போனதுபோன்ற மலரும் விழிகளோடு பேசினார்.

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்

"அப்பாகூடக் கோயில்களுக்குப் போயிருக்கிறோம். அடிக்கடிப் பிரயாணம் போகவில்லை என்றாலும் அவரோடு பயணித்த நினைவுகள் மனதில் பசுமையாக உள்ளன. எனக்குப் பத்துவயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்போ அப்பாவோட திருப்பதிக்குப் போனோம். அந்தக் காலத்தில் தற்போது உள்ளதுபோன்ற கூட்டம் எல்லாம் இல்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு தரிசனம் முடிந்து நாங்கள் சந்நிதியிலிருந்து வெளியே வந்தோம். அப்போ வெளியே வருகிற இடத்தில் பெரிய கூடைகளில் வைத்துப் பொங்கலைப் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தோம். அப்பாதான் எங்களை வற்புறுத்திப் பிரசாதம் வாங்கிக்கொள்ள வற்புறுத்தினார். நாங்கள் போய் பிரசாதத்தைக் கையில் வாங்கினோமோ இல்லையோ பிரசாத சூட்டில் தூக்கம் கலைந்துவிட்டது. அந்தக் குளிரில் பிரசாதம் தேவாம்ருதமாக இருந்தது. ரசித்து சாப்பிட்டோம். அப்பாவுக்கு இப்படிக் கோயில்களுக்குப் போய் இயல்பாக இருப்பது ரொம்பப் பிடிக்கும்.

அடிக்கடி அப்பாவோட போன கோயில் என்றால் சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன்தான். அப்பாவுக்கு மிகவும் இஷ்ட தெய்வம். எந்த மனக்கஷ்டம் வந்தாலும் அப்பா போய் முறையிடும் இடம் மலையரசி அம்மன் சந்நிதிதான். அவரோட கடைசி நிமிடம் வரைக்கும் எப்படி கிருஷ்ண ஜபம் செய்தாரோ அதேபோன்று 'மலையரசித் தாயே' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அப்பாகூட அந்தக் கோயிலுக்குப் போனபோது அவர் தன் இளமைக்கால அனுபவங்கள் பலவற்றையும் எங்களோடு பகிர்ந்துகொள்வார். யாரோடாவது மனஸ்தாபம் ஏற்பட்டாலோ 'கவிதை எழுதி வீணாகக் காலம் கழிக்கிறார்' என்று யாராவது திட்டினாலோ அப்பா அந்தக் கோயிலுக்கோ அல்லது அங்கிருக்கும் சுமைதாங்கிக் கல்லிலோ வந்து அமர்ந்துகொள்வாராம். அப்படிச் செய்யும் போது அவரின் மனம் தானாய் இலகுவாகிவிடும் என்று சொல்வார்.

அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள்
சென்னை - திருவல்லிக்கேணி
அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் சென்னை - திருவல்லிக்கேணி

அப்பாவோட பல பிறந்த நாள்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குப் போயிருக்கிறோம். அப்பாகூடப் போவது பெருமையாக இருக்கும். பின்னே நாடறிந்த கவிஞர் இல்லையா... அதை எல்லாம் ரொம்ப ரசிப்போம். அப்பா பிறந்த நாள் என்றால் பார்த்தசாரதி கோயிலில் இருந்து பெரிய அண்டாவில் வீட்டுக்கு வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என்று பிரசாதம் வரும். அதை எல்லாம் அம்மா சுற்றியிருக்கும் வீடுகளுக்கு விநியோகிப்பார். எங்களுக்கும் அந்தப் பிரசாதம் ரொம்பவே பிடிக்கும். இப்படி என் பால்யத்தின் பல சம்பவங்கள் என் மனதில் நிறைந்திருக்கின்றன" என்று சொன்னார்.

ரேவதி சண்முகம் பாபா பக்தை. முதல் முறை ஷீர்டி சென்ற அனுபவம், வீட்டில் பூஜை அறைப் பொக்கிஷங்களாகக் கருதும் விஷயங்கள், இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஆன்மிகம் என்றால் என்ன என்று உணர்கிறீர்கள் என்னும் பல கேள்விகளை முன்வைத்தோம். அவற்றுக்கான பல சுவாரஸ்யமான பதில்களைத் தந்தார் கவியரசரின் மகள். அந்த பதில்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு