Published:Updated:

நாளை சரஸ்வதி ஆவாஹனம் செய்ய உகந்த நேரம் எது?

சரஸ்வதிதேவி
சரஸ்வதிதேவி

நவராத்திரியின் கடைசி மூன்று நாள்கள் ஆதி பராசக்தியை சரஸ்வதியாகப் பாவித்து வழிபடுவது வழக்கம். அப்படி சரஸ்வதியை வழிபட ஆவாஹனம் செய்ய வேண்டிய தினம் நாளை!

பொதுவாக சரஸ்வதி பூஜையை நவராத்திரியின் ஒன்பதாம் நாள் நவமி திதி அன்று கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடைசி மூன்று நாள்களுமே சரஸ்வதி பூஜையாக பாவித்துக் கொண்டாடும் வழக்கமும் உண்டு. சரஸ்வதி பூஜையைக் குறித்துச் சொல்லும்போது மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு என்று சொல்வார்கள். முற்காலத்தில் வட மாநிலங்களில் மூல நட்சத்திரநாளில் களிமண்ணில் சரஸ்வதி விக்ரகங்களைச் செய்து வழிபடத் தொடங்குவர். அவிட்ட நட்சத்திர நாளில் அந்த விக்ரகத்தைக் கரைத்துவிடும் வழக்கம் இருந்தது.

சரஸ்வதி
சரஸ்வதி

ஆனால், அந்த வழக்கம் தென் மாநிலங்களில் இல்லை. இன்றும் கொல்கத்தாவில் பிரமாண்ட துர்காதேவி சிலைகள் செய்யப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைக்கும் வழக்கம் உள்ளது. மூல நட்சத்திர நாள் பெரும்பாலும் நவராத்திரியின் ஆறு அல்லது ஏழாம் நாள் வரும். அப்படி மூல நட்சத்திர நாள் வரும் வேளையில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

நவராத்திரியில் அவசியம் தரிசிக்க வேண்டிய 9 அம்பிகையர்... சிறப்புகள் என்னென்ன?

சரஸ்வதி தேவியை புத்தகத்தில் அல்லது படம், விக்ரகம் ஆகியவற்றில் ஆவாஹனம் செய்யலாம். அப்படி ஒருமுறை புத்தகத்தை அடுக்கி அதில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்துவிட்டால் பிறகு தசமி திதியில் தான் அதை எடுத்துப் படிக்க வேண்டும் என்பது விதி. மேலும் சரஸ்வதியே மகா சரஸ்வதியாகத் தோன்றி அருள்பாலித்த நவமி திதி மிகவும் விசேஷமானதாகப் போற்றப்படுவதால் அந்த நாளில் சரஸ்வதி பூஜை செய்துவழிபடுகிறோம்.

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை
நாளைக் காலை சரஸ்வதி ஆவாஹனம் செய்து வழிபட விரும்புபவர்கள் காலை 7.30க்கு முன்பாக அதைச் செய்ய வேண்டும். அதன் பின் மூல நட்சத்திரம் இல்லை. எனவே அதிகாலையில் அன்னையை வழிபட்டு ஆவாஹனம் செய்து இந்த நவராத்திரியை சிறப்புறக் கொண்டாடுவோம்.
அடுத்த கட்டுரைக்கு