அலசல்
Published:Updated:

மதுரை to ரிஷிகேஷ் - குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை!

ரிஷிகேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷிகேஷ்

தமிழ்நாடு டூ டெல்லி அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும் – விஜயவாடா சாம்பார் வடை, ஜான்சி ஜிலேபி, பூரிமசால்; அஃரா பூசணி மிட்டாய், டெல்லி பஞ்சாபி தாலி…

சோறு இல்லாமக்கூட இருந்திடுவேன்; ஊரு சுத்தாம இருக்க முடியாது பாஸ். என்னுடைய ஜீன் அப்படி. இதற்குச் செமையான ஆப்பு அடிச்சு என்னை மூலையில உட்கார வைத்துவிட்டுப் போன லாக்டௌன், கொரோனா தடுப்பூசி, உள்ளாட்சித் தேர்தல்… உங்க எல்லாத்துக்கும் கோட்டான கோடி நன்றிகள்! (திரும்ப இந்தப் பக்கம் வந்துடாதீங்க, தேர்தலுக்கு மட்டும் விதிவிலக்கு!)

எல்லாம் அடங்கின பிறகு, ‘எங்கேயாச்சும் போயாகணுமே’னு மண்டைக்குள்ள ஒரே நமைச்சல்! ‘வீட்ல என்ன பொய் சொல்லிட்டு ஊர் சுத்தலாம்’ என்று எம்.ஆர்.ராதா பாணியில வில்லத்தனமா யோசிச்சிட்டிருந்த போதுதான், என் தோஸ்த்து பிரசன்னா அந்த ப்ளானுடன் பல்லிளித்தபடி வந்தான்.

மதுரை to ரிஷிகேஷ் - குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை!

‘‘மச்சி, கேதார்நாத் போலாமாடா?’’ என்று என் மைண்ட் வாய்ஸைக் கேட்ச் செய்ததுபோல் மட்டுமில்லாமல், ஒரு ஸ்கெட்ச்சோடே வந்து அவன் அப்ரோச் செய்தது வேற லெவல்.

கேதார்நாத்தோடு, ரிஷிகேஷ், பத்ரிநாத், ஹரித்துவார் என்று சில இடங்களை என் சார்பில் நான் பகிர்ந்து கொண்டேன். (நான்தான் டீம் லீடர்!) ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி மாதிரி பேப்பரில் வரைந்தெல்லாம் ப்ளான் போட்டேன். ‘தனி இருவர்களாய்’த் திட்டம் போட்டு, இந்த ஆபரேஷனுக்கு ஒரு பெயரும் வைத்தோம். ‘குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை’. (KPCY). சும்மா ஜாலிக்குத்தான். ஏதோ டிராவல்ஸ் பெயர் மாதிரி அமைந்ததில் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி! முதலில் பைக்கில் போவதாகத்தான் திட்டம். பொதுவாக, பயண நாட்களுக்கு முன்பு – அந்த இடங்களின் தட்பவெப்ப நிலை, அங்கு நிகழும் லோக்கல் விஷயங்கள், பிரச்னைகள், நிலச்சரிவு போன்ற விஷயங்களை கூகுள் செய்துவிட்டுத்தான் கிளம்புவோம். எதிர்பார்த்த மாதிரியே கூகுள், நிலச்சரிவு, இயற்கைச் சீற்றங்கள் என்று ரெட் மார்க் காட்டியது. சாதா ரோட்டில் வேண்டுமானால், நம் தாதா டிரைவிங் எடுபடும். ஊரு விட்டு ஊரு போய்… ‘புல்லட்டு பாண்டி’ கணக்காக… ‘ஏ புட்றா.. புட்றா’ என்று காமெடி சீன் ஆகிவிடக் கூடாது. அதனால், பைக் ப்ளான் டிராப்!

இதில் மறைமுகமாக எங்களுக்கு ஒரு நன்மையும் நடந்தது. கிட்டத்தட்ட இந்தப் பயணத்தில் 40% பணம் சேமிப்பு செய்யலாம் என்று எங்கள் ஐன்ஸ்டீன் மூளை கணக்குப் போட்டுச் சொல்லியது. ‘அப்போ நாங்களும் வர்றோம்’ என்று எக்ஸ்ட்ரா ஆறு ‘பட்ஜெட் பத்மநாப’ நண்பர்களும் சேர்ந்து கொண்டது, எங்கள் பட்ஜெட்டை இன்னும் குறைத்தது.

நாங்க மொத்தம் எட்டு பேர். மதுரையில் இருந்து இரவு ரிஷிகேஷ்க்கு வெற்றிகரமாக ரயில் ஏறினோம். இதில் பெரிய பிரசன்னா… சின்ன பிரசன்னா என்று எங்களுக்குள் காமெடி விஷயங்களெல்லாம் உண்டு. அதைப் போகப் போகப் பார்க்கலாம்.

மதுரை to ரிஷிகேஷ் - குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை!

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று நாட்கள் நெடுந்தூர ரயில் பயணம். அந்த மூன்று நாட்களும் தங்க, திங்க, அரட்டை அடிக்க என்று குதூகலங்களுக்குப் பஞ்சமில்லை.

தமிழ்நாடு டூ டெல்லி அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும் – விஜயவாடா சாம்பார் வடை, ஜான்சி ஜிலேபி, பூரிமசால்; அஃரா பூசணி மிட்டாய், டெல்லி பஞ்சாபி தாலி… அடடே, நினைக்கும்போதே வாயெல்லாம் ஈரம் கோர்த்துக்கொண்டது. அதுவும், ரயிலில் தருகிற உருப்படியான ஒரு விஷயம் என்னைப் பொருத்தவரை எது என்று கேட்டால்… அந்தத் தக்காளி சூப்தான். வேறு வழியில்லாமல், ரயில் கேன்டீனில் – பிரியாணி சொல் போர்த்திய புளி சாதத்தையோ… பெரிய பூமர் பபுள்கம் மாதிரி ஜவ்வாக இழுபடும் பரோட்டாவையோ… ‘வானத்த போல’ விஜயகாந்த் ஹோட்டல் மாதிரி கல் இட்லிகளையோ சுவைத்துக் கடுப்பானவர்களுக்கு… தக்காளி சூப்பை தைரியமாக ரெக்கமண்ட் செய்வேன்.

மறுநாள் விடிந்ததும் விஜயவாடா வரும் வரை சாம்பார் வடைக்காகச் சாப்பிடாமல் காத்திருந்தேன். சின்ன பிரசன்னா வேறு நச்சரித்தான். நான் பிறக்கும்போதே ‘மனிதன்’ படத்து ரஜினி மாதிரி ராசியில்லாதவன் என்று பெயரெடுத்தவன். விஜயவாடா என்னைப் போடா என்றது. சாம்பார் வடை கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், குட்டிப் பிரசன்னாவுக்குக் குட்டிக் குட்டி வாழைப்பழங்களை வாங்கிக் கொடுத்து… சமாளித்தேன். ஈ மொய்த்த முட்டை சாண்ட்விச்கள் எங்கள் பசியைப் போக்கின.

எங்களுக்கு இப்படி என்றால்… சாயங்காலம் விவேக் அண்ணாவுக்கும் பெரிய பிரசன்னாவுக்கும் ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான அனுபவம். மூக்கை மூடியபடி ஏதோ குடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து எங்களுக்குக் கோபமாக வந்தது. ‘அடப்பாவிங்களா… எங்களை விட்டுட்டுக் குடிக்கிறீங்களே’னு கோவித்துக் கொண்டோம். எங்களிடம் கப்பை நீட்டினார்கள் இருவரும். குடித்துப் பார்த்தேன். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ விஜய் சேதுபதி மாதிரி டீயையும் காபியையும் ஒரு சேரக் குடித்தது மாதிரி இருந்தது எனக்கு. ‘டீனு சொல்லிக் குடுத்தாங்கடா’ என்று எங்களைப் பாவமாகப் பார்த்தார் விவேக் அண்ணா.

இப்படிப் பல இடங்களில் சாப்பாடு சொதப்பியது. இதற்காகத்தான் நாங்கள் பயணம் போகும்போது தமிழர்களின் பாரம்பரிய உணவான புளியோதரையையும் இட்லியையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்திருந்தோம். புளியோதரையைப் பற்றி இலக்கியத்தில் கூட ஏதோ இருக்கிறதாமே! தெரிந்தவர்கள் இருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள்!

அன்றிரவு டெல்லி நண்பரிடம் சொல்லி, ‘பஞ்சாபி தாலி’ ஆர்டர் செய்து கொண்டு வரச் சொல்லியிருந்தோம். ஜம்மு தாவி ஸ்டேஷனில் ஸ்விகி டெலிவரி பாய் ஷார்ப்பாக வந்திருந்தார் நண்பர்!

மூன்றாம் நாள் மாலை… ‘ரிஷிகேஷ்’ ஹிந்தி போர்டு தெரிந்ததும் உற்சாகமானோம். இந்த நேரத்தில் ஒரு தமிழ்ப் பெண்மணியின் நட்பு எங்களுக்கு மலர்ந்தது பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர்தான் இந்தப் பயணத்தின் ஓப்பனிங் கார்டு! ரிஷிகேஷில் தனக்குத் தெரிந்த ஆசிரமம் ஒன்றில்தான் தங்குவேன் என்றும், கூடவே அந்த ஆசிரமத்தின் விலாசம் தொலைபேசி எண்ணையும் கொடுத்து எங்களையும் அங்கேயே தங்க ரெக்கமண்ட் செய்திருந்தார்.

கூடவே, ‘‘செப்டம்பர் மாசம் போறீங்களே… அங்க இப்போ பயங்கரமான மழைப்பொழிவு… நிலச்சரிவுன்னு இருக்கு… எப்படிச் சமாளிக்கப் போறீங்களோ’ என்று கேஷுவலாக பை சொல்லிவிட்டு, டெல்லியில் இறங்கி விட்டிருந்தார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்… ரிஷிகேஷ் ட்ரிப் அடிப்பவர்கள் செப்டம்பரைத் தவிர்க்க!

4 கி.மீ தொலைவில் இருந்தது அந்த ஆசிரமம். ‘கார்த்திகேயா ஆசிரமம்’ என்பது அதன் பெயர். நன்கு இருட்டிவிட்டது. முன்னதாகவே ஆசிரமத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தால், எங்களுக்காகக் காத்திருந்தனர். நன்கு பெரிய அறையாக இருந்தது. பத்துப் பேர் படுக்கலாம். அப்படியொரு கட்டில்! குளிருக்குக் கம்பளி! அன்றிரவு உணவு ஆசிரமத்தில்தான்!

புனித யாத்திரை வரும் யாரும் கார்த்திகேயாவில் தங்கலாம். மூன்று வேளை உணவும் இலவசம். நீங்கள் விருப்பப்பட்டால் நன்கொடை அளிக்கலாம். இது தமிழர்களால் நடத்தப்படும் டிரஸ்ட். ஆகையால், அங்குள்ள நிர்வாகிகள் அனைவரும் தமிழர்களாகவே இருந்தனர்.ஆசை ஆசையாக மதுரைத் தமிழிலேயே பேசி டிப்ஸ் வாங்கிக் கொண்டோம். டாக்ஸி தொடர்பும் கொடுத்தார்கள்.

பொதுவாக, சொந்த வாகனம் இல்லாமல் யாத்திரை செல்பவர்களின் பயணம், நல்ல டாக்ஸி டிரைவர்கள் கிடைத்தால்… மகிழ்ச்சியாக முடியும். நமக்கு ஆசிரமம் ரெக்கமண்டேஷனில் டாக்ஸி என்பதால், டாக்ஸி ஓனர் நல்ல பழக்கமானார். அவரிடம் ‘எதுக்கு வந்தோம்; எங்க போறோம்; எவ்ளோ பட்ஜெட்’ என்று எல்லா உண்மைகளையும் மறைக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள் பெரிய பிரசன்னாவும் வினோத் அண்ணனும்!

‘‘ஹம் லோக், கல் சுப பெஹலே நீலகண்ட மகாதேவ் மந்திர் மே ஜா சக்தே ஹேய்ன்!’’ என்று எங்களுக்கு டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தார் டிரைவர். அடுத்த நாள் காலை – எங்கள் KPCY-ன் முதல் பயணம் – நீலகண்ட மகாதேவ் ஆலயம்!