Published:Updated:

மாலைபோட்டவர் சீட்டு விளையாடலாமா, தலைக்கு எண்ணெய்த் தேய்க்கலாமா... 4 கேள்விகள், குருசாமியின் பதில்கள்

"சபரிமலை விரதம் என்பது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவரும் விரதம் அல்ல. ஒரு மண்டலகாலம் அகத்தூய்மை புறத்தூய்மையோடு இருந்து மேற்கொள்ளும் விரதம். இறைவனைக் குறித்த சிந்தனை மட்டுமே மனதில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த விரதத்தின் தாத்பர்யம்."

குருசாமி
குருசாமி

சபரிமலை விரதம் ஒரு மண்டலகாலம் கடைப்பிடிக்க வேண்டியது. பெரியோர்கள் வகுத்த நியமங்களைக் கடைப்பிடித்து சபரிமலைக்கு யாத்திரை செல்ல வேண்டும். அங்கு ஐயன் ஐயப்ப சாமியைக் கண்டு தரிசனம் செய்ய வேண்டும். ஐயனின் தரிசனமே நம் விரதத்தின் உன்னதபலன். இப்படிப்பட்ட கடுமையான விரதத்தை மேற்கொள்ளும்போது பல சந்தேகங்கள் எழுவது இயற்கையே. அப்படி எழும் சந்தேகங்களை அவரவர்கள் தங்கள் குருசாமியிடம் கேட்டுத் தெளிவு பெறலாம். அப்படியும் பெறமுடியாத சந்தேகங்கள் இருந்தால் குருசாமியிடம் கேளுங்கள் பகுதியில் கேட்கும்படி அறிவித்திருந்தோம். அதில் தினமும் பல பக்தர்கள் ஆர்வமுடன் கேள்விகேட்டு வருகின்றனர். அப்படி வாசகர்கள் கேட்ட 4 கேள்விகளுக்கு குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம் பதிலளித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

சபரிமலைக்கு மாலையிட்ட பின் விரதகாலத்தில் சீட்டுவிளையாடலாமா? - சிவகுமார் சுப்பிரமணியம்

இந்தக் கேள்வி ஒரு மாதிரி துடுக்குத்தனமாகவும் வேடிக்கை நிறைந்ததாகவும் தெரிந்தாலும் இதில் நுட்பமாகப் பல விஷயங்கள் உள்ளன. சில பேர் இதுபோன்ற பல விஷயங்கள் குறித்துப் பேசும்போது சபரிமலை யாத்திரை நியமங்களில் இதுபோன்ற பல விஷயங்கள் சொல்லப்படவில்லையே, அதனால் இதைச் செய்தால் என்ன என்று கேட்கிறார்கள். பழங்காலத்து விரத நெறிமுறைகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதையே நம் குருமார்கள் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறார்கள். சில விஷயங்கள் எப்போதும் பொதுவானவை.

சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவை சொல்லப்படவில்லை என்றாலும் விரதம் என்றால் அவற்றையெல்லாம் உள்ளடக்கியவை என்பதை நாம் அறிவோம். சாஸ்திரங்கள் எழுதப்பட்ட காலத்தில் சிகரெட் கிடையாது. எனவே, சிகரெட் என்பது குறிப்பிடப்படவில்லையே என்று கேட்டால் அது குதர்க்கமானது. இதுபோலத்தான் சினிமா பார்ப்பது, சீரியல் பார்ப்பது அல்லது ஏதேனும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற விஷயங்களும். இவற்றில் சிலவற்றை செய்பவர்களும் அது தவறில்லை என்பவர்களும் பெருகிக்கொண்டே வருகிறார்கள்.

சபரிமலை விரதம் என்பது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவரும் விரதம் அல்ல. ஒரு மண்டலகாலம் அகத்தூய்மை புறத்தூய்மையோடு இருந்து மேற்கொள்ளும் விரதம். தினமும் இருமுறை குளித்து ஐயப்பனுக்கு பூஜைசெய்து தரையில் படுத்துறங்கி உணவுக் கட்டுப்பாடு இருந்து மேற்கொள்வது. இறைவனைக் குறித்த சிந்தனை மட்டுமே மனதில் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் தாத்பர்யம். வெறும்பட்டினி கிடப்பது அல்ல விரதம். பட்டினி என்பது உபவாசம். இறைவனுக்குப் பக்கத்தில் வாசம் செய்வது என்று பொருள். விரதம் என்பது எடுத்துக்கொண்ட விரதத்தில் உறுதியாக இருப்பேன் என்று உறுதிபூணுவது. எனவே, மனதை இறைச்சிந்தனையில் வைப்பதுவே விரதத்தின் நோக்கம்.

அப்படியில்லாமல் சீட்டுவிளையாடுவது, சினிமா பார்ப்பது போன்றவற்றில் ஈடுபடுவதன்மூலம் மனம் சலனம் அடையும். நாம் நம்மையும் அறியாமல் செய்யும் பிழைகளுக்குதான் தினமும் 'அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்...' என்று சமஸ்தாபராதம் கேட்கிறோம். தெரிந்தே செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டால் அதில் பொருள் இல்லை. விரதம்தான் கெட்டுப்போகும்.

லோக வீரம்... இந்தப் பாடலை எழுதியவர் யார்? - வீரமணி, பழநி

குருசாமியைக் கேளுங்கள்... கடன் வாங்கியாவது கட்டாயமாகக் கன்னிபூஜை செய்ய வேண்டுமா?

லோக வீரம் என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு பஞ்சரத்ன ஸ்தோத்திரம் என்று பெயர். இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. இது பன்னெடுங்காலமாகவே வழக்கத்தில் இருக்கிறது. மாலையிட்டிருக்கும் ஐயப்பமார்கள் இதைச் சொல்லும் வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் இதோடு பல ஸ்லோகங்கள் சேர்த்து சொல்லும் வழக்கம் உண்டாகிவிட்டது. இந்தப் பஞ்சரத்ன ஸ்லோகத்தை பரசுராமர் எழுதினார் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், அதற்கு ஆதாரம் இல்லை. இதற்கு நமஸ்கார ஸ்லோகங்கள் என்றும் பெயர். ஐந்து ஸ்லோகங்களைச் சொல்லி ஐந்து நமஸ்காரங்கள் செய்வது வழக்கம்.

பஞ்சரட்நாக்யம்யே தத்யோ... நித்யம் ஷுத படேன் நர

தஸ்ய பிரசன்னோ பகவான்... சாஸ்தா வசதி மானசே

சுவாமியே சரணம் ஐயப்பா!

இந்தப் பஞ்சரத்னங்களைத் தினமும் சொல்லிவந்தால் அவனுடைய மனதுக்குள் சாஸ்தா நித்யாவாசம் செய்வார் என்பது இந்தப் பலஸ்துதியின் பொருள். எனவே, இந்த ஐந்து ஸ்லோகங்களையும் தினமும் சொல்லி ஐயனின் அருளைப் பெறலாம்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலைக்கு முதல்முறையாக மாலை அணிய விரும்பும் ஐயப்ப பக்தர்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்? மாலை இடுவதற்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்தல் போன்றவை அத்தியாவசியமாகச் செய்ய வேண்டுமா சுவாமி? - பிரதாப், உதகை.

சபரிமலையாத்திரை என்பது புனிதமான ஒரு தவம். ஒருமண்டலகாலம் விரதமிருக்கும் புதிய வாழ்க்கை முறைக்குத் தயார் ஆகிறோம். அதுக்கு முன்பாக நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதென்பது மிகவும் முக்கியமாகும். அதிலும் முதல்முறையாக சபரிமலையாத்திரை மேற்கொள்பவர்கள் பலவிஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் தகுந்த குருசாமியைப் பார்த்து மாலையிட்டுக்கொள்வது. மாலையிட்டுக்கொள்ளும் நாள்முதல் அகத்தூய்மை புறத்தூய்மை இரண்டையும் கடைப்பிடிப்பது.

சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒரு மண்டல கால விரதம். விரத காலத்தில் அசைவம் சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவை கூடாது. எனவே, மாலையிடுவதற்கு முதல் தினம் இரவு வரை இவற்றைச் செய்து மறுநாள் காலை முதல் தூய்மையைக் கடைப்பிடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். அது சரியல்ல. முந்தைய நாள்வரை இஷ்டப்படி உண்டுவிட்டு மது அருந்திவிட்டு மறுநாள் சரியாகிவிடலாம் என்றால் அது முடியாது.

எனக்குத் தெரிந்த ஒரு குருசாமி ஒரு நடைமுறை வைத்திருக்கிறார். அவரிடம் மாலையிட விரும்பும் பக்தர்கள் 9 நாள்கள் முன்பாகவே தங்களைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள். அசைவம் தவிர்ப்பது, கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றை விட்டுவிடுகின்றனர். ஒன்பது நாள்களும் அருந்தும் நீரை துளசித் தீர்த்தமாகவே அருந்துகின்றனர். பின்பு மாலையிட்டு விரதத்தைத் தொடங்குகின்றனர். இப்படி ஒரு முறையை எல்லோருமே பின்பற்றினால் நன்றாக இருக்கும். இதன்மூலம் அகத்தூய்மை அமையும்.

குருசாமியைக் கேளுங்கள்... சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் பிற மலைக்கோயில்களுக்குச் செல்லலாமா?

வீட்டைத் தூய்மை செய்வது புறத்தூய்மைக்கு மிகவும் முக்கியம். வீட்டில் இதற்கு முன்பு புழங்கிய பொருள்களில் தீட்டுகள் இருக்கலாம். எனவே, சுத்தம் செய்வது அவசியம். நீர்விட்டு வீட்டைக் கழுவி விடுவது போன்ற வகையில் சுத்தம் செய்து விரதத்தைத் தொடங்குவது மிகவும் நல்லது.

எல்லாவற்றையும்விட முக்கியம் சுவாமியின் நாமத்தைச் சொல்லிக்கொண்டேயிருப்பது. இதுவே நம் அகத்தை முற்றிலும் தூய்மையாக வைத்திருக்கும்.

சபரிமலைக்கு மாலையிட்டிருக்கும் நாள்களில் தலைக்கு எண்ணெய் தடவி சீவலாமா? - ராகுல்

குருசாமியைக் கேளுங்கள்...! வீட்டில் குழந்தை பிறந்து எத்தனை நாள்கள் கழித்து சபரிமலைக்கு மாலை போடலாம்?

பொதுவாகவே விரதகாலத்துக்கு என்று சில நியமங்கள் உள்ளன. தரையில் படுத்துத் தூங்குவது, பிரம்மச்சர்யம் காப்பது போன்றவை பொதுவானவை. மற்ற விரதங்கள் எல்லாம் ஓரிரு நாள்களில் முடிந்துவிடுவதால் அதன் தாக்கம் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், ஐயப்ப விரதம் ஒரு மண்டல காலம் நீடிக்கும். எனவே, இதனால் நடைமுறைச் சிக்கல்கள் தெரிகின்றன.

தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது என்பது நியதி. ஆனால், எண்ணெய் வைக்காமல் இருப்பதால் பலருக்கு சிக்கல்கள் தோன்றுகின்றன என்கிறார்கள். சிலருக்குத் தலை பார்க்கப் பரட்டைபோல ஆகிவிடும். அப்படிப் பட்டவர்கள் நிர்பந்தத்தின் காரணமாக சிறிது எண்ணெய் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அலங்காரமாகக் கருதி அதைச் செய்யக் கூடாது. தலையைச் சீவிக்கொள்ளக் கூடாது என்று இல்லை. தலை சீவி ஒழுங்காக வைக்கலாம். ஆனால், மனம் அதில் ஈடுபட்டு கவனச் சிதறல் அடைந்துவிடக் கூடாது.

இதுபோன்ற சந்தேகங்கள் உங்களுக்கும் இருந்தால், கீழே உள்ள படிவத்தில் கேளுங்கள். ஆன்மிகப் பெரியவர்களிடம் கேட்டு உங்களுக்கான பதிலை பெற்றுத்தருகிறோம்.