
சுவாமி ஐயப்பன்
தன் பக்திப் பாடல்களால் பக்தர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் சாஸ்தா தாசன். சந்தனம் தவழும் முகம், கழுத்தில் எப்போதும் துளசிமாலை, பேச்சைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் சொல்லும் `சாமி சரணம்'... என ஐயப்ப பக்தருக்கான இலக்கணத்தை எப்போதும் தாங்கியிருப்பவர்.

சென்னை, பல்லாவரத்தில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரின் ஆன்மிக அனுபவங்கள் சிலவற்றை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
``சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலைவாசன் கலியுகவரதன். கேட்பவர்களுக்குக் கேட்ட வரம் தருபவன். காலமெல்லாம் காக்கும் தெய்வம். அந்த ஐயப்பன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம் அலாதியானது. பலருக்கும் அவன் வேறு வேறு வடிவங்களில் வந்து காட்சி கொடுப்பான். அப்போது அது ஐயப்பன் என்று நமக்குத் தெரி யாது. ஆனால் வந்தது ஐயனே என்பதை அறியும்போது ஏற்படும் சிலிர்ப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது!
1970-ம் ஆண்டு என் குருசாமிக்கு நிகழ்ந்த அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். அந்தக் காலத்தில் பெரியபாதைப் பயணம் எளிது அல்ல. அதுவும் கரிமலை ஏற்றம் மிகவும் சவால்தான். இவரோடு வந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள். அவர்கள் எல்லோரும் வேகவேகமாக மலையேறிவிட, இவர் தனியாக மாட்டிக்கொண்டார்.
ஒருகட்டத்தில் மலைப் பாதை மிகப் பெரியதாகவும் கடினமாகவும் தோன் றியது. அது யானைகள் வரும் பாதை வேறு! என்ன செய்வது என்று தடுமாறினார். ஒருகணம் மனத்துக்குள், `ஐயனே, என்னை ஏற்றி விடப்பா' என்று வேண்டிக்கொண்டார். அடுத்தகணம், அவர்பின்னால் ஒரு சிறுபையன் ஓடிவந்தான்.
பார்க்க அந்தக் காட்டில் வாழும் பழங்குடி இனச் சிறுவன் போல இருந்தான்.
`என்ன சாமி கஷ்டமா இருக்கா, வாங்க நான் கைதாங்கலாக் கூட் டிட்டுப் போறேன்" என்று சொல்லி வழிகாட்டியிருக்கிறான். குருசாமி அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். மனதில் ஒரு தைரியம் பிறந்துவிட்டது. விறுவிறு என்று மலையேறிவிட்டார்.
மேலே சென்றதும் தன்னிட மிருந்த ஒரு துண்டு ஒன்றை அந்தப் பையனுக்கு அணிவித்து, `ரொம்ப நன்றிப்பா...' என்று நன்றி தெரிவித்தார். பிறகு உடன் வந்த மற்ற சாமிமார்களோடு சேர்ந்து கொண்டு, சிறு ஓய்வுக்குப் பின் சந்நிதானம் சென்று அந்த ஐயனை தரிசனம் செய்தார்.
தரிசித்த அந்தக் கணத்தில் மிகப் பெரிதாய் சிலிர்த்துப் போய் விட்டார். காரணம், அவர் மலையேற உதவிய சிறுவனுக்கு அணிவித்த அதே துண்டு ஐயனின் திருமேனியில் தவழ்ந்து கொண் டிருந்தது. குருசாமி `ஐயனே...' என்று கதறிவிட்டாராம்!
`என்ன ஆயிற்று' என்று தந்திரிகள் விசாரிக்கவும் நடந்த வற்றைப் பகிர்ந்துகொண்டார். `இது சகஜம்தான். ஐயப்பன் தன் பக்தர்களுக்கு உதவ இதுபோன்று அடிக்கடி காட்சிகொடுப்பார்' என்று சொல்லி மகிழ்ந்து, அவருக்கு உரிய மரியாதைகள் செய்து அனுப்பிவைத்தார்களாம்!
அன்று அவரை ஐயன் வழிநடத் தினார். அதன்பின் அவர்அருளால், எங்கள் குருசாமி பலரை ஐயனின் பாதையில் வழிநடத்தினார்.
சென்னையில் அன்பர் ஒருவர். முரட்டுப் பேர்வழி. அவரைக் கண்டாலே ஊரே நடுங்கும். அப்படிப்பட்டவர் ஒருநாள் எங்கள் குருசாமியை அவமானப்படுத்திவிட்டார். இதைப் பார்த்த அவரின் மனைவி குருசாமியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு குருசாமி, `அவர் சுய நினைவுல செய்யல. நீ அவரை மலைக்கு மாலை போடச் சொல்லேன். ஐயப்பனின் அருளால் சீக்கிரம் அவர் சரியாகி நல்வழிப்படுவார்' என்று சொன்னார்.
இதை மனதில் குறித்துக்கொண்ட அவரின் மனைவி, அந்த வருடம் கார்த்திகை மாதம் அடம்பிடித்து அந்த மனிதரை மாலைபோட வைத்தார். ஆரம்பத்தில் அதில் அக்கறை இல்லாமல் இருந்த அவர், சில நாள்களிலேயே ஐயப்பனின் மீது பக்தி செய்ய ஆரம்பித்தார். ஐயனின் அருள்பார்வை அவர்மேல் விழுந்தது. பத்து நாள்களிலேயே மலைக்குப் போய்வந்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், ஒரு மண்டல காலம் விரதம் இருந்து மலைக்குப் போய்வந்தார்.
பதினெட்டாம்படி மிதித்துவிட்டவர் வாழ்வில் தாழ்வு என்பதே கிடையாது அல்லவா?! அதன்பின் அவர் வாழ்க்கையே மாறிவிட்டது. மிகவும் சாந்தமாகிவிட்டார். ஐயனின் தாசனாகிவிட்டார். சில ஆண்டு களில் தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஐயப்பனுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினார். காலமெல்லாம் அந்தக் கோயிலில் சாதாரண ஊழியாராகச் சேவை செய்தார். இதெல்லாம் ஐயப்பனின் விரதத்தால் நிகழும் அற்புதங்கள் அல்லாமல் வேறென்ன!

நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாலை யிட்டு சபரிமலைக்குச் செல்கிறேன். 2021- ம் ஆண்டு கொரோனா காரணமாக மலைக்குச் செல்ல முடியவில்லை. அது பெரும் மனக்குறையாக இருந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பதிக்கு தேவநாதன் குருசாமி என்கிற நண்பரோடு சென்றேன். அப்போது அவர், `ஆகஸ்ட் மாதம் சபரிமலை செல்கிறேன். நீங்களும் உடன் வர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். `சரி ஐயன் அழைக்கிறான்' என்று ஆனந்தமாக இருந்தேன்.
ஆகஸ்ட் மாதம் என் தாயார் உடல் நிலை ரொம்ப மோசமானது. ஆனாலும் ஐயனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ஆகஸ்ட் 16 -ம் தேதி மலைக்குக் கிளம்பினேன்.
அருமையான தரிசனம். மாளிகைபுரத்திலும் மேல்சாந்தி பாடச் சொன்னார். சந்நிதானத் திலும் மேல்சாந்தி பாடச் சொன்னார். நான் உளம் நெகிழ்ந்து பாடினேன். அனைவருக்கும் பரம திருப்தி. அந்த உற்சாகத்தோடு திரும்பினேன். செப்டம்பர் மாதம் என் தாயார் காலமானார். அந்த ஆண்டு மாலை போட முடியாத சூழ்நிலை.
மலைக்கு போகமுடியாவிட்டாலும் விரதம் இருப்போம் என்று முடிவு செய்து கார்த்திகை ஒன்றாம் தேதி விரதத்தைத் தொடங்கினேன்.
கார்த்திகை முதல் வாரத்தில் சபரிமலையில் பட்டாபி குருசாமி, நிவாசன் குருசாமி ஆகியோர் தொடர்ந்து அழைத்தபடி இருந்தனர். எனக்குத் தர்மசங்கடம். அவர்கள் சந்நிதானத்தில் இருப்பவர்கள். அவர்களிடம் எப்படி என் வீட்டுத் துக்கத்தைச் சொல்வது என்று தயக்கம்.
ஆகவே, `இன்னும் திட்டமிட வில்லை' என்று சொல்லிவைத்தேன். அடுத்து சபரிமலையிலிருந்து பி.ஆர்.வோ போன் செய்துவிட்டார். `என்னைக்கு சாமி கச்சேரிக்கு டேட் போட்டுக்கட்டும்' என்று கேட்டார். இதற்கு மேலும் சொல்லாமல் இருப்பது முறையல்ல என்று விஷயத்தைச் சொன்னேன்! உடனே அவர் தீர்க்கமாகச் சொன்னார்.
`அட என்ன சாமி... மாலை போடலைன்னா பரவாயில்லை. கட்டு கட்டாம வாங்க. ஐயப்பன் உங்க பாட்டைக் கேக்கக் காத்திருக் கான். வந்து கச்சேரி மட்டும் பண்ணிட்டுப் போய்டுங்க' என்றார்.
எனக்கு அதைக் கேட்டதும் உடல் எல்லாம் நடுங்கிவிட்டது. ஐயப்பனே என்னை `வா' என்று அழைப்பதுபோல உணர்ந்தேன். அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டே. ஜனவரி மாதம் 7- ம் தேதி மலைக்குப் போனோம்.
அன்றைக்கு நடந்த கச்சேரியைப் போன்று ஒரு கச்சேரியை நான் என் வாழ்வில் செய்தது இல்லை. மாலை ஏழுமணிக்குத் தொடங்கினோம். இரவு 10.45க்குத்தான் முடிந்தது. தொடர்ந்து மூணே முக்கால் மணிநேரம் பாடினேன். பக்தர்களோ அங்கும் இங்கும் நகராமல் அப்படியே உட்கார்ந்து கேட்டார்கள்.
சந்நிதானத்திலிருந்து பம்பை வரை ஒலிபெருக்கி இணைப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்தது பேசிய பி.ஆர்.ஓ, `சாமி அற்புதமான கச்சேரி. பக்தர்கள் அனைவருக்கும் ரொம்ப சந்தோஷம். பம்பையில் கச்சேரியைக் கேட்டு பக்தர்கள் நடனம் ஆடினார்களாம். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்று நீங்கள் கச்சேரி செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். நான் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன்.
அப்போது ஒரு சிறுவன், எட்டு வயது இருக்கும். மேடைக்கு வந்தான். எனக்கு ஒரு மாலை போட்டான். பிறகு, `இன்னும் மூன்று வருடத்தில் உங்களுக்கு ஹரிவராசனம் விருது தேடி வரும்' என்று சொன்னான்.
அதைக்கேட்டு நாங்கள் எல்லோரும் வியப்பில் விதிர்விதிர்த்துப் போனோம். அதைச் சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் வேக வேகமாக இறங்கிப் போய் கூட்டத்தில் கலந்துவிட்டான். யார் அந்தச் சிறுவன்... ஏன் அப்படிச் சொன்னான்... புரியவில்லை.
`வந்தது அந்த ஐயப்பன்தான்' என்றார்கள் மற்ற குருசாமிகள். எனக்குக் கண்ணீர் பெருகி விட்டது. விருதை விடுங்கள். அது வரும்போது வரட்டும். ஆனால் ஐயனின் சந்நிதானத்தில் இப்படி ஒரு வார்த்தையும் அனுபவமும் கிடைக்கவே நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் அல்லவா...'' என்று உணர்வுப் பெருக்கோடு பேசினார் சாஸ்தா தாசன்.
சுவாமி ஐயப்பன் மீது பக்தி கொண்டு அவனைச் சரணடைந்துவிட்டால் அவன் எப்போதும் உடன் இருந்து காப்பான் என்பதற்கு சாஸ்தா தாசன் போன்ற பல பக்தர்கள் உதாரணமாய் வாழ்கிறார்கள்.
சிறுவன் உருவில் வந்து அவருக்கு அந்த ஐயப்பன் அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேறட்டும் என்று நாமும் ஸ்வாமி ஐயப்பனை மனதார வேண்டிக்கொண்டு புறப்பட்டோம்!