Published:Updated:

காரியத்தைத் தொடங்கு எல்லாம் தானாக நடக்கும்!

சடையாண்டி சித்தர் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சடையாண்டி சித்தர் தரிசனம்

சித்தர் கொடுத்த உத்தரவு மு.ஆதவன்

சித்த ரகசியம் தேவ ரகசியம், சித்தன் போக்கு சிவன் போக்கு என்றெல்லாம் சொல்லிவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். சித்தர்கள் என்றதுமே பதினெண் சித்தர்களும் அவர்களின் மகிமைகளுமே நம் மனக்கண்ணில் விரியும். அவர்கள் மட்டுமன்றி பலரும் அறிந்திராத சித்த புருஷர்களும் இந்த மண்ணில் அருளாட்சி செய்திருக்கிறார்கள்.

சடையாண்டி சித்தர் கோயில்
சடையாண்டி சித்தர் கோயில்

மகாலத்திலும் சதுரகிரி, திருவண்ணாமலை, பொதிகை, அத்ரி மலை முதலான க்ஷேத்திரங்களில் சித்தர்கள் வசிப்பதாகவும் இறை வழிபாடு செய்வதாகவும் நம்பிக்கை உண்டு. அவ்வகையில், பல நூற்றாண்டுகளுக்கு முன் சித்தபுருஷர் ஒருவர் குடிகொண்ட இடம்தான் சின்னமனூர்.

தேனி மாவட்டத்தில் உள் ள சின்னமனூரைப் பக்தி இலக்கியங்கள் அரிகேசநல்லூர் எனப் போற்றுகின்றன. இந்த ஊரில் முல்லைப் பெரியாற்றின் கரையில், மாணிக்க வாசகரை மூலவராகக் கொண்ட தனிக்கோயில் ஒன்றும் பூலாநந்தீஸ்வரர் ஆலயமும் உள்ளன.

சடையாண்டி சித்தர் ஆலயம்
சடையாண்டி சித்தர் ஆலயம்


மிக அற்புதமான இந்த க்ஷேத்திரத்துக்கு மேலும் புனிதம் சேர்க்கும் விதம் வந்து சேர்ந்தார் சடையாண்டி சித்தர். இவர் 1548 - ம் ஆண்டு இத்தலத்திலேயே ஐக்கியமானார். ஏறக்குறைய 5 நூற்றாண்டுகளாக இவருக்கு உருவ வழிபாடு இல்லை; பீடம் மட்டுமே வழிபாட்டில் இருந்தது. சமீபத்தில்தான் சடையாண்டி சித்தருக்குச் சிலாரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்தை ஒருவருக்கு சடையாண்டி சித்தரே உத்தரவிட்டதாகக் கூறும் கோயில் அர்ச்சகர்கள், அந்த சம்பவத்தையும் சிலிர்ப்புடன் விவரித்தனர்.

சடையாண்டி சித்தர்
சடையாண்டி சித்தர்

சடையாண்டி சித்தரைப் பற்றி எதுவும் தெரியாத பெண்மணி ஒருவர் சகோதரியுடன் இந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டிற்குச் சென்றதும்தான் ஏதேதோ உணர்வுகள் தன்னை ஆட்கொண்டிருப்பதை அறிந்தார். தன்னுள் ஏதோ மாற்றம் தெரிவதை உணர்ந்தாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பயணக் களைப்பால் சோர்வும் இப்படியான நிலை யும் ஏற்பட்டிருக்கிறது என்று கருதியவர் திண்ணையில் படுத்தார்.

சற்று நேரத்தில் பேரொளியுடன் முதியவர் காட்சி தந்தாராம். அவர் அந்தப் பெண்ணிடம் தன் கதையைச் சொல்லியுள்ளார். மட்டுமன்றி, ``இதுவரை எம்மை மனதால் வணங்கியவர்கள் இனி உருவத்தையும் வழிபடட்டும். ஒரு சிலையை வடித்து வை’’ என்று உத்தரவிட்டாராம்.

தட்சிணாமுர்த்தி
தட்சிணாமுர்த்தி
அனுமன்
அனுமன்

முதலில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், பின்னர் காட்சி தருவது சித்தபுருஷர் என்பதைக் கண்டுகொண்டு சிலிர்த்தார். `சிலை வடித்து வை’ என்று அவர் உத்தரவிட்டதும், `என்னால் எப்படி அந்தக் காரியத்தைச் செய்யமுடியும்?’ எனக் கேட்டார்.

அதற்குச் சித்தபிரான் `காரியத்தைத் தொடங்கு எல்லாம் தானாக நடக்கும்’ என்று அருள்பாலித்தாராம். வியப்பும் திகைப்புமாக அந்தப் பெண், அருகில் கோயில் இருப்பதை அறிந்து ஓடோடி வந்து நடந்ததை விவரித்தாராம். முதியவர் சொன்னதாக அந்தப் பெண் சொன்ன வரலாறு, தங்களின் முன்னோர் கூறிய விவரங்களின்படியே இருப்பதை அறிந்து கோயிலில் இருந்தவர்கள் வியந்துபோனார்கள்.

சடையாண்டிச் சித்தர்
சடையாண்டிச் சித்தர்
துர்கை அம்மன்
துர்கை அம்மன்


மட்டுமன்றி இந்த விவரங்களைத் தன் கணவரிடமும் தெரிவித்தாராம். அவர் ஓர் ஓவியர். ஆகவே சித்தபுருஷரின் திருவுருவத்தைப் படமாக வரைந்து தரும்படியும் கணவரிடம் கேட்டாராம் அந்தப் பெண்மணி. ஆனால் சித்தர் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத அவரின் கணவர், ஓவியம் வரைய மறுத்துவிட்டார். ஒருசில தினங்களில் அடுத்த அற்புதம் நிகழ்ந்தது.

பூஜையறைக்குள் சென்ற பக்தையின் கணவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! முதியவர் ஒருவர் அங்கு நிற்பது போன்ற காட்சியைக் கண்டார். தான் தரிசித்த உருவத்தைக் காகிதத்தில் வரைந்து மனைவியிடம் காட்டினார். அவரே நான் தரிசித்த சித்த புருஷர் என்று பக்தை உறுதிப்படுத்தினார். பின்னர் அந்தத் தம்பதி அந்த உருவப் படத்தை எடுத்துச் சென்று சித்தர் கோயிலில் காட்டினார்களாம். அவர்களும் மறுக்கவில்லை. அந்தப் படமே கோயிலில் வழிபாட்டில் வைக்கப்பட்டு, தற்போது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்கின்றன.

‘வேண்டாமலேயே’ நடக்கும்!

தன் சிலையைப் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவிட்ட சடையாண்டிச் சித்தர் இந்தப் பகுதியில் பல சித்துக்களை நிகழ்த்தியதாகச் சொல்லி வியக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். மட்டுமன்றி இந்தக் கோயிலில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திருப்பணி செய்த பலரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்களாம். ரவிக்குமார் என்ற பக்தர் நம்மிடம் பேசினார்.

“கோயிலுக்கு அருகிலேயே என் வீடு இருந்தாலும் கோயிலுக்கு அதிகம் வந்ததில்லை; சித்தர் மீதும் அவ்வளவாக ஈர்ப்பு இருந்ததில்லை. சில மாதங்களுக்கு முன், சூழல் காரணமாக பெரிய பிரச்னை ஒன்றில் சிக்கிக் கொண்டேன். அதிலிருந்து மீளவே முடியாது என்ற நிலை. பெருங்குழப்பத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி என்னையும் அறியாமல் இந்தக் கோயிலுக்குள் வந்துவிட்டேன்.

வன்னி மரத்தடியில் சித்தர் பீடத்தின் அருகே அமர்ந்து, ‘பிரச்னை தீரவே தீராதோ?’ என்று குழம்பித் தவித்தேன். அப்போதும் தீர்வு வேண்டுமென பிரார்த்திக்கத் தோணவில்லை. ஆனால் வியப்பிலும் வியப்பாக... மறுநாளே அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. என்னாலேயே அதை நம்பமுடியவில்லை. இந்தக் கோயிலுக்கு வந்ததாலேயே இப்படியொரு தீர்வு கிடைத்தது என்பதையும் தாமதமாகவே உணர்ந்தேன். இப்போது தீவிர பக்தியுடன் வழிபட்டு வருகிறேன். இங்கு வந்தாலே போதும்... நாம் வேண்டாமலேயே நம் பிரச்னைகள் நீங்கும்; சித்தர்பிரான் தாமாகவே நம் குறைகளைத் தீர்த்துவைப்பார்’’ என்றார் நெகிழ்ச்சியாக.

சடையாண்டி சித்தர்
சடையாண்டி சித்தர்

கிணற்றில் ஐக்கியம்!

டையாண்டிச் சித்தர், மதுரை அருகே வைகைக் கரையில் தோன்றியதாகச் சொல்கிறார்கள். சடாமுடி தரித்திருந்ததால், இவருக்கு இப்பெயர் வந்திருக்கக் கூடும் என்கிறார்கள் பக்தர்கள்.

வான சாஸ்திரம், மந்திரம், தியானம், ஜோதிடம், மருத்துவம் எனப் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த இவர், சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தார். பாண்டிய மன்னரின் அரசவைப் பணியில் இருந்தவர், மன்னரின் ஆளுகையில் இருந்த இப்பகுதிக்கு வந்திருக்கிறார்.

இந்தத் தலத்தின் சூழலில் தன்னையும் அறியாமல் ஈர்க்கப்பட்டவர், இங்கேயே தங்கி தியானத்தில் அமர்ந்துவிட்டார். தற்போது கோயில் இருக்கும் இடத்தில் கிணறு ஒன்று இருந்துள்ளது. சில காலம் இங்கேயே தங்கியிருந்த சடையாண்டிச் சித்தர், ஒரு தை மாதம் பூசம் நட்சத்திரத்தன்று கிணற்றுக்குள்ளேயே ஐக்கியம் ஆனாராம்.

பிற்காலத்தில், ‘தோழியப்பர்’ என்ற சித்தர் இங்கு வந்தார். அவர் இத்தலத்தின் மகிமையை அறிந்து, கிணற்றுக்கு அருகிலேயே விநாயகருக்குச் சந்நிதி எழுப்பி, சித்தரையும் மானசீகமாக வணங்கி வந்தாராம். பிற்காலத்தில், சிவன், அம்பிகை மற்றும் பெருமாளுக்கும் சந்நிதிகள் எழுப்பப்பட்டன. தற்போது கிணறு மூடப்பட்டு, அங்கு சித்தர் பீடம் மட்டும் உள்ளது.

வள்ளி தெய்வானையுடன் முருகன்
வள்ளி தெய்வானையுடன் முருகன்
வரதராஜப் பெருமாள்
வரதராஜப் பெருமாள்

பிள்ளை வரம் தரும் வளைகாப்பு வைபவம்!

சித்தர் பீடத்துக்கு அருகிலேயே வன்னி மரம் உள்ளது. முன்புறத்தில் ராஜயோக நாயகியுடன் அருளும் ராஜயோக லிங்கேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. இருவரும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது சிறப்பான அமைப்பு. கோயில் வளாகத்தில் உழவாரப் பணியின்போது கிடைத்த சிறுலிங்கம் ஒன்று சிவன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கம் வந்த பிறகே கோயிலில் பிரதோஷ பூஜைகள் தொடங்கின என்கிறார்கள்.

கல்யாணம் நடந்து பலவருடங்களாகியும் பிள்ளைப் பேறு இல்லா மல் தவிக்கும் பெண்கள் பலர் உண்டு. கரு தரித்தாலும் கரு தங்காமல் கலைந்துபோக அதனால் வருந்தித் தவிக்கும் பெண்மணிகளும் உண்டு. இதுபோன்ற பிரச்னைகளால் பாதிப்புற்ற தம்பதியர் இந்தக் கோயிலுக்கு வந்து, பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு தரிசிக்கிறார்கள். பூஜை முடிந்ததும் வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவை பிரசாதமாகத் தரப்படுகின்றன. இவற்றைக் கோயிலில் சொல்லும் முறைப்படி சாப்பிட்டுவர, விரைவில் பிரச்னை தீரும்; கரு தங்காமல் தவித்தவர்களுக்கு வயிற்றில் கரு தங்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ஆடிப்பூரத்தன்று நடக்கும் வளைக்காப்பு வைபவம் விசேஷம். திருமணம் ஆகி வெகுநாட்களாக பிள்ளை வரம் வாய்க்காத பெண்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். அம்பிகை சந்நிதிக்குமுன் அவர்களுக்கு வளைகாப்பு செய்யும் சடங்கு நடக்கிறது. முளைகட்டிய கம்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட தானியங்கள் பிரசாதமாகத் தரப்படுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.

கர்ம வினைகள் தீர...

கோயிலின் வளாகத்தில் ஶ்ரீதேவி, பூதேவியருடன் ஶ்ரீதோழியப்ப வரதராஜப் பெருமாள், ஶ்ரீஐஸ்வர்ய லட்சுமி, ஶ்ரீதுர்கை, ஶ்ரீதட்சிணாமுர்த்தி, ஶ்ரீகால பைரவர், வள்ளி தெய்வானையுடன் ஶ்ரீமுருகன் மற்றும் ஆஞ்சநேயரின் சந்நிதிகள் உள்ளன. மேலும் தோழியப்ப சித்தர், கோபால் சித்தர் பீடங்களும் உண்டு. திருமணத்தடை உள்ளோர் வன்னி மரத்தில் தாலி கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். கடன், நோய், கர்ம வினைகள் தீரவும் இங்கு வந்து வழிபடலாம்.

விநாயகர் சந்நிதி
விநாயகர் சந்நிதி


அமாவாசைதோறும் சுவாமிக்கும், சித்தருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காய்கறிகள், அப்பளம், பாயசத்துடன் அன்று சித்தருக்கு விருந்து படைக்கிறார்கள். இந்தப் பிரசாதத்தைப் பெறுவதில் குழந்தை இல்லாத தம்பதிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற நாள்களில் வெல்லம் சேர்த்த அவல் பிரசாதமாகத் தரப்படுகிறது.

ஆவணியில் பால்குடம், முளைப்பாரி, காவடியுடன் திருவிழா களைகட்டும். பௌர்ணமி தோறும் விளக்கு பூஜை, சித்திரையில் திருக்கல்யாணம், சிவராத்திரி, கார்த்திகையில் சங்காபிஷேகம், வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகம் ஆகிய வைபவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது? : தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்திலிருந்து மேக மலைக்குப் பிரியும் சாலையில், சுமார் அரை கி.மீ. தூரம் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. காலை காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலையில் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.