Published:Updated:

திருத்தொண்டர் - 5; அனைத்தையும் சிவமே செய்யும்!'

படங்கள்: ஆர்.சுரேஷ்குமார்

பிரீமியம் ஸ்டோரி

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் இருக்கிறது வல்லம் கிராமம். இந்தக் கிராமத்தில் இருக்கும் குடைவரைக்கோயிலின் அர்ச்சகர்தான் செல்லப்பா குருக்கள்.

அகன்ற நெற்றி, அதில் எப்போதும் துலங்கும் பளிச்சென்ற திருநீறு, பழம்போல் பழுத்த உடல், பேச்சில் ஒரு பவ்யம், ‘அனைத்தையும் சிவமே செய்கிறது’ என்னும் பணிவு... இதுதான் செல்லப்பா குருக்கள். அர்ச்சகர் என்று சாதாரணமாகச் சொல்லிமுடித்துவிட முடியாது. கோயில் சார்ந்த அனைத்துமே அவர்தான். தர்மகர்த்தா முதல் அந்தக் கோயிலைத் தூய்மை செய்யும் பணியாளர் வரை எல்லாமே அவர்தான்.

வல்லம் செல்லப்பா குருக்கள்
வல்லம் செல்லப்பா குருக்கள்

ங்கே மூன்று நிலைகளாய் இருக்கும் குடைவரைக் கோயில்களில் முதல் குடைவரையான உச்சியில் இருக்கும் வேதாந்தீஸ்வரர் கோயிலை மகேந்திரவர்மரின் அடியவரான வயந்தப்பிரியரசரின் மகன் கந்தசேனன் உருவாக்கினான். நடுவில் ஆவுடை இல்லா உயர்ந்த லிங்கத் திருமேனி இருக்கும் இரண்டாம் குடைவரையை லக்க சோமாசியரின் மகள் செதுக்கியிருக்கிறார்.

கீழே ஶ்ரீதேவி பூதேவித் தாயார் சமேதராக ஶ்ரீகரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் இருக்கும் மூன்றாம் குடைவரையை பல்லவப் பேரரசரின் மகள் கொம்மை உருவாக்கினாள் என்கின்றன கல்வெட்டுகள். மன்னர், மன்னர் மகள் மற்றும் சாதாரணக் குடிமகள் என மூவரும் இணைந்து உருவாக்கிய இந்த பிரமாண்டமான குடைவரைக் கோயில்களைத் தனி ஒருவராகப் பராமரித்து வருகிறார் செல்லப்பா குருக்கள்.

“இது எங்க பரம்பரைக் கோயில். தாத்தா, தாத்தாவோட தாத்தான்னு சேவகம் பண்ணின கோயில். சொல்லப்போனா இதுதான் என் உலகம். சின்ன வயசுல விளையாண்டதுலேர்ந்து கோயில் பணிகள் எல்லாம் கத்துக்கிட்டது வரை எல்லாமே இந்தக் கோயில்லதான். எங்க அப்பா முத்துக்குமாரசுவாமி குருக்கள்தான் என் முதல் ஆசான். அவர்தான் சுவாமிக்கு எப்படியெல்லாம் பூஜை செய்யணும்னு கத்துக்கொடுத்தார்.

சுவாமியை நம்பி இருந்தா அவர் நம்ம குறையை எல்லாம் போக்கிடு வார்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார். நமக்கு என்ன வேணும்னு சுவாமிகிட்ட சொல்லக்கூட வேண்டாம், அதை உடனே போக்கிடுவார்னு சொல்வார். அது சத்தியமான வார்த்தை.

இப்பவே ரொம்ப சிலர்தான் இந்தக் கோயிலுக்கு வர்றாங்க. நவநாகரிகமா கட்டுற கோயில்களுக்குப் பலரும் போயிடுறாங்க. வரலாற்று ஆர்வம் இருக்கிறவங்க சிலர் வருவாங்க. இப்பவே இப்படின்னா அந்தக் காலத்தில் சொல்லவே வேண்டாம். கார்த்திகை, பிரதோஷம், உற்சவம்னா ஊர்க்காரங்க பத்து இருபதுபேர் வருவாங்க. அப்படின்னா என்ன பெரிய வருமானம் வரும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. சம்பளம்னு ஒண்ணு இப்பவும் கிடையாது; அப்பவும் கிடையாது.

வல்லம் ஈஸ்வரன்
வல்லம் ஈஸ்வரன்

என் கூடப் பிறந்தவங்க 15 பேர். சுவாமி சத்தியமா சொல்றேன். வருமானம்னு ஒண்ணு வராதுதான். ஆனா ஒருநாள்கூட நாங்க 16 பேரும் பட்டினியா தூங்கினோம்னு சொல்லமுடியாது. சுவாமி இந்த லோகத்துக்கே படியளக்கிறவர். அப்படி இருக்கையில் எங்களை கைவிடுவாரா. நாங்க பசியில்லாமல்தான் வளர்ந்தோம். முடிஞ்ச அளவுக்குப் படிச்சோம்.

நான் படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்னு அப்பாவோட ஆசை. அதுக்காக என்னை ஆசிரியர் படிப்புக்குப் படிக்க வச்சார். அந்த ஈசன் அருளால அது சாத்தியமாச்சு. வேலையும் கிடைச்சது.

அதுதான் என் வாழ்வில் கிடைத்த பெரிய சப்போர்ட். காலைல பள்ளிக்கூடத்துக்குப் போகிறதுக்கு முன்னாடி பூஜை பண்ணிட்டுத் தான் போவேன். அதேபோல மாலைல ஸ்கூல் முடிஞ்சதும் ஓடி வந்துடுவேன்.

என்கூடப் பிறந்தவர்கள் வேற வேலைகள் கிடைச்சு வேற ஊர்களுக்குப் போய்ட்டாங்க. சிலர் கோயில்களிலும் சிலர் வேற வேலை களிலும் சேர்ந்துட்டாங்க. நான் மட்டும் இங்கேயே இருந்துட்டேன். காரணம், இந்த சுவாமியை விட்டுவிட்டு எங்கேயும் போயிடக் கூடாதுன்னு மனசுல தீர்மானம் பண்ணிக் கிட்டேன். அதுக்கு சுவாமியும் அனுக்கிரகம் பண்ணினார்.

கோயிலுக்குன்னு வருமானம் கிடையாது. அதனால் சம்பளத்தின் பெரும்பாதி கோயிலுக்குச் செலவாயிடும். என் சம்பளம்னு சொல்லமாட்டேன். ஏன்னா அதுவும் சிவன் கொடுத்ததுதானே... அதனால் அது அவருக்குப் போறதுதானே முறை?!

சாதாரண ஆசிரியரா சேர்ந்து ரிட்டையர்டு ஆகும்போது தலைமை ஆசிரியரா ரிட்டையர்டு ஆனேன். அப்போ கொஞ்சம் பணம் வந்தது. அதுமட்டும் எனக்கு சொந்தமா என்ன... அதையும் சிவனுக்கே அர்ப்பணம் செய்து சில திருப்பணிகளை முடிச்சேன்.

`சுவாமி தந்ததைக் கொண்டு சுவாமிக்கே திருப்பிச் செய்றது பாக்கியம். அந்தப் பாக்கியம் எனக்கு வாய்ச்சிருக்குன்னா, அதற்குக் காரணம் ஈசனின் திருவருளே!' என்கிறார் செல்லப்பா குருக்கள்.

அவரின் பணிவு, 29.4.21 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று புத்தெழில் பெற்றுத் திகழும் ஆலயத்தில் கம்பீரமாகத் தெரிந்தது.

“ஐயா, உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க...” என்று கேட்டோம்.

“எனக்கு இரண்டு பசங்க. ஒரு பொண்ணு. மூணு பேருக்குமே சுவாமியோட அனுக்கிரகத் தால நல்ல படிப்பு. மூத்த பையன் டிரிபிள் ஈ படிச்சிருக்கான். அவனுக்கு இன்னும் வேலை சரியா அமையலை. ஆனால், அவன்தான் இப்போ என்கூட இருந்து கோயில் பணிகளில் உதவி செய்யுறான்.

இரண்டாவது பையன் டபிள் எம். ஏ, பிஹெச். டி. திருப்பதி பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருக்கான். பொண்ணும் எம்.ஏ, பி.எட் படிச்சிருக்கா. கல்யாணம் ஆயிடுத்து. பெரிய வருமானம் இல்லாமலேயே இதெல்லாம் முடிஞ்சதுன்னா அதுக்குக் காரணம் அந்த வேதாந்தீஸ்வரர்தானே’’ என்றவர் ஒரு கணம் நிறுத்தி, பின்னர் தொடர்ந்து பேசினார்.

திருத்தொண்டர் - 5; அனைத்தையும் சிவமே செய்யும்!'

“முக்கியமான ஒருத்தரைப் பத்திச் சொல்லணும், அது என் மனைவி மனோரமா. அந்தக் காலத்துலேயே ஹோமியோபதி டாக்டருக்குப் படிச்சவள். ஆனா, கல்யாணம் ஆகி வந்து நான் சுவாமிக்காகக் கஷ்டப்படுறத பார்த்துட்டு அதுக்குத் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன்னு வேலைக்குக் கூடப் போகாம, என் திருப் பணிகளுக்கும் சிவப் பணிகளுக்கும் உதவி செய்றதுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவள்.

ஆதிசைவ சிவாசார்யர் சேவா சங்கம்னு ஒரு அமைப்பு. அதுல மகளிர் அணி உண்டு. அதுல என் மனைவி மாநிலத் தலைவர். என்னோட முயற்சிகள் அனைத்துக்கும் பின்னாடியிருந்து சப்போர்ட் பண்றது அவள்தான்.

சுவாமி எனக்குக் கொடுத்த பெரிய பலம் அவள். சிவப்பணி மட்டுமில்லை. சமூகப் பணி என்றாலும் அவள்தான் துணை நிற்பாள்” என்றார் கண்களில் நீர் ததும்ப.

சிவாசார்யர்கள் பலர் இணைந்து 3.6 லட்ச ரூபாய் வசூல் செய்து, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 360 குடும்பத்துக்கு தலா 1,000 கொடுக்கும் பணியை முன்னெடுத்து, அதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார் செல்லப்பா குருக்கள். அவர் வீட்டிலேயே ஒரு வேத பாட சாலையையும் நடத்தி வருகிறார்.

“பாடசாலைதான்... நிறைய எல்லாம் இல்லை. ஒரு பத்து பசங்க இப்போ வேதம் கத்துக்கிறாங்க. எல்லாம் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்துப் பசங்கதான். இதைப் பல ஆண்டுகளாக நடத்திக்கிட்டு வர்றேன். அவங்க தங்கும் இடம், வேதம் கத்துக்கொடுக்கிற ஆசிரிய ருக்குத் தங்க இடம், அவர் களுக்கான உணவு எல்லாம் இலவசம்தான்.

இப்போ பென்ஷன்லதான் காலத்தை ஓட்டுறதா இருக்காயில்லையா... அதனால் கொஞ்சம் கஷ்டம். என் பிள்ளைகளிடம் நான் பணம் எதுவும் வாங்கமாட்டேன். அந்த அளவுக்கு எந்தக் கஷ்டத்தையும் சுவாமி எனக்குக் கொடுக்கலை. இப்போ, என் பசங்க, ‘நாங்க பாட சாலைக்குப் பொறுப்பெடுத்துகிறோம்பா’ என்று கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டேன். இப்போ வேதபாடசாலைக்கான செலவுகளை அவங்கதான் பாத்துக்கிறாங்க” என்றார்.

சுவாமியை தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார். மலைப்படிகளில் அவர் ஏறும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னால் ஓட வேண்டியதாக இருந்தது. மலையேறி யதும், “ஐயா உங்கள் வயது என்ன” என்று கேட்டோம். சொன்னார், நம்பமுடியவில்லை. இந்தச் சுறுசுறுப்பும் அர்ப் பணிப்பும் சிவத்தின் திருவருள்தான் என்று புரிந்தது.

கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் லிங்கத் திருமேனி யராக அருள்பாலிக்கிறார் வேதாந்தீஸ்வரர். செல்லப்பா குருக்கள் தீபாராதனை காட்டிபின் ஞானாம்பிகை சந்நிதிக்கும் அழைத்துப்போய் தரிசனம் செய்துவைத்தார்.

இந்தத் திருக்கோயிலில் தினமும் சித்தர்கள் எழுவர் சூட்சும ரூபமாக வந்து வழிபாடு செய்வதாக ஐதிகம். சித்தர்கள் இந்தத் தலத்து அம்பிகைக்குச் செய்திருக்கும் பாதரசக் கொலுசு அன்னையின் பாதத்தை அலங்கரிக்கிறது.

சுவாமியையும் தேவியையும் தரிசனம் செய்து செல்லப்பா குருக்களுக்கும் நன்றி சொல்லி விடைபெற்றோம்.

நாம் கிளம்பி வந்தபின்னும் உள்ளேயிருந்து குருக்கள் பாடும் தேவாரம் நம் காதுகளில் விழுந்தது. ஏகாந்தமான பரவெளியில் தானும் தன் தொண்டருமாக ஈசன் ஆனந்தக் களிப்பில் இருப்பதுபோன்ற எண்ணம் மனத்தில் தோன்றி மறைந்தது.

- தொண்டர்கள் வருவார்கள்...

எண் வகை சிவலிங்கங்கள்!

அன்பர்களும் அடியார்களும் சிவபெருமானை கல், உலோகம், மரம் முதலானவற்றால் சிவலிங்கமாக செய்து வழிபடுகின்றனர்.

வெளியூர் செல்வோர் தன்னுடன் எடுத்துச் செல்ல வசதியாக உலோகத்தாலான லிங்கமும் வைத்திருப்பர். சிவலிங்கங்களை எட்டுவித உலோகங்ககளால் செய்து பூஜிக்கலாம் என பூசாநூல்கள் கூறுகின்றன. அவை:

பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், ஈயம், அரக்கு, துத்தநாகம்.

அஷ்ட பதாகைகள்!

திருக் கயிலையின் எட்டு திசைகளிலும் எண்மர் கொடி பிடித்து சிவனாரின் அளவற்ற வெற்றியைப் பறைசாற்றுவதாக ஞானநூல்கள் சொல்கின்றன. அவர்களை சிவபதாகைத் தேவர்கள் என்பார்கள். இவர்கள் ஏந்தியுள்ள கொடிகள் விவரம்:

பிரசாந்த பதாகை, பூதசஞ்சீவ பதாகை, சிசிர பதாகை, அமிர்தசஞ்ஜீவினி பதாகை, பர்ஜன்ய பதாகை, நாத பதாகை, ஜயந்த பதாகை, ஶ்ரீப்ரத பதாகை.

-வி.கணபதி, திருநெல்வேலி-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு