
அருள் பெருகும் மாதம் ஆடி. மங்கல விழாக்களாலும் வழிபாடுகளாலும் சிறப்புற்றுத் திகழும் மாதம் இது.
சுந்தரர், சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளை யானையின்மீது ஆரோகணித்து, அந்த அரனாரை அடைந்ததும் ஆடி மாதத்தில்தான். அதாவது, ஆடிச் சுவாதி திருநாளன்றுதான் இந்த அற்புதம் நிகழ்ந்தது.
நாமும், இந்த ஆடி மாதத்தில் அருள்பொங்கும் சுந்தரரின் திருவரலாற்றில், ஒருசில சம்பவங்களை தரிசிக்கலாம்.
திருக்கயிலையில் சிவபெருமானின் அருகிலேயே இருப்பவர் சுந்தரர். ஒருமுறை, நந்தவனத்தில் மலர் பறிக்கச்சென்றார். அங்கே பார்வதிதேவியின் சேடியர் - தோழியரான கமலினி, அநிந்திதை ஆகியோரைப் பார்த்தார். விநாடி நேரம் அவர்களை விரும்பிப் பார்த்ததன் விளைவு... தன் அருகிலேயே இருந்த அவரை, பூலோகத்தில் அவதரிக்குமாறு அனுப்பினார் சிவபெருமான்.

அப்படி பூமியில் வந்து அவதரித்தவரே சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவர் ஏன் அவ்வாறு நடக்கவேண்டும்! இதற்கான காரணத்தைத் திருமுருக வாரியார் சுவாமிகள் மிகஅழகாக விவரிப்பார்:
“அனைவரும் சிவபெருமானைப் பாடினார்கள். எனில், அடியார் களைப் பாடுவது யார், எப்படி?!
தன் அருகிலேயே இருக்கும் சுந்தரரைக் கொண்டு, அடியார்களைப் பற்றிப் பாடவைக்க எண்ணினார் சிவபெருமான். அதற்காகவே சுந்தரரின் கருத்தை யும் கண்களையும் கமலினி - அநிந்திதை ஆகியோர்மீது செலுத்துவித்து அருளினார்.
“காமனை எரித்த சிவபெருமான் இருக்கும் இடத்தில், அதுவும் அவர் அருகிலேயே இருப்பவர்க்குக் காம எண்ணம் உண்டாகாதல்லவா! ஆக, நுட்பமாக உணரவேண்டியது இது” என்பார் வாரியார் சுவாமிகள். மேலும், “மாதவம் செய்த தென்திசை வாழவும் தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரவும், சிவபெருமான் அவ்வாறு அருள்புரிந்தார்” என்றும் விவரிப்பார்.
திருநாவலூரில், ஆதிசைவ வேதியராகிய சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் திருமைந்தராய் அவதரித் தவர் சுந்தரர். நன்கு வளர்ந்து, காலக்கிரமத்தில் சுந்தரருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. சடங்கவி சிவாசார்யரின் மகளை மணம் பேசியிருந்தார்கள். அரசர் உட்பட அனைவரும் கூடியிருந்து, திருமணச்சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் மணப்பந்தலில் நுழைந்தார்.

நரைத்தத் தலைமுடி, காதுகளில் தொங்கும் குழைகள், மார்பில் தவழும் பூணூல், தோளில் தவழும் உத்தரீயம் (மேலாடை), ஒரு குடை, தர்ப்பை முடித்த மூங்கில் தடி ஆகியவற்றோடு வந்த முதியவரைக் கண்டதும், அனைவர் உள்ளங்களும் அவர்களை அறியாமலே, சிவபெருமான் பக்கம் போய்விட்டன.
வந்த சிவபெருமானும் சும்மாயில்லை; “இந்தச் சுந்தரன் எனக்கு அடிமை” என்றார். சுந்தரர் உட்பட அனைவரும் திகைத்தார்கள். சிலர் ஏளனமாகச் சிரிக்கவும் செய் தார்கள். அவர்களின் அந்தச் செயல்களை லட்சியம் செய்யாத சிவபெருமானோ சுந்தரரை நெருங்கி, “இதோ! உன் தந்தையின் தந்தை எழுதிக்கொடுத்த அடிமை ஓலைச்சீட்டு” எனக் கூறினார். வாதம் வளர்ந்தது.
சிவபெருமான் காட்டிய ஆதார ஓலையைப் பிடுங்க முயன்றார் சுந்தரர்; முதியவர் வடிவில் வந்த சிவபெருமான் ஓட, சுந்தரரும் பின்தொடர்ந்து ஓடினார். பக்தரை நீண்டநேரம் ஓட விடவில்லை பரமன். அவரைப் பற்றிய சுந்தரர், அவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித்தார். அதையே ஆதாரமாகக்கொண்ட சிவபெருமான் கூக்குரல் இட்டவாறு, “ அனைவரும் கேளுங்கள்! இவன் என் கையில் இருந்த அடிமை ஓலையை, வலுவில் பிடுங்கிக் கிழித்ததன் மூலம், இவன் என் அடிமை என்பது உறுதியாயிற்று” என்று கூறினார்.
கூடியிருந்தவர்கள் மேலும் திகைத்து, ``சுவாமி! வழக்கல்லாத வழக்கத்தைச் சொல்லி வாதம் செய்கிறீர்களே! யார் நீங்கள், உங்கள் ஊர் எது” எனக்கேட்டார்கள். “இந்தச் சுந்தரனின் தலைவன் யான். திருவெண்ணெய்நல்லூர் எனது ஊர்” என வாதத்தைத் தொடர்ந்தார் சிவபெருமான்.

கடைசியில் ஒரு வழியாக, திருவெண்ணெய் நல்லூரிலேயே போய், ஊர்ப்பெரியவர்கள் சபையில் தீர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அனைவருமாகத் திருவெண்ணெய்நல்லூருக்குச் சென்றார்கள். அங்கே ஊர்ப்பெரியவர்கள் சபையில், நடந்ததை சிவபெருமான் விவரித்து முறையிட, சுந்தரர் மறுத்துப் பேசினார்.
சபையோர்கள், “ஐயா பெரியவரே! சுந்தரர் உங்கள் அடிமை என்பதை உறுதிப்படுத்துங்கள். உறுதிப்படுத்த மூன்று வழிகள் உள்ளன. அனுபவ பாத்தியதை, எழுத்து(பத்திரம்போல), சாட்சி எனும் மூன்றிலிருந்து, ஏதாவது ஒன்றைக்காட்டி உறுதிசெய்யுங்கள்” என்றார்கள்.
‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்’ (சேக்கிழார்).
முதியவராக வந்த சிவபெருமான் மும்முரமாகப் பேசினார்: “எழுத்து மூலமான சாட்சி உள்ளது என்னிடம். இவன் (சுந்தரர்) கிழித்தது மூல ஓலையல்ல. அது நகல். மூல ஓலை எம்மிடம் உள்ளது. முன்பு கிழித்ததைப்போல், மறுபடியும் இவன் கிழிக்காதவாறு நீங்கள் தடுப்பதாக இருந்தால், யாம் காட்டுவோம் அந்த ஓலையை” என்றார். அவையோர் ஒப்புக்கொண்டார்கள். சிவனார் மூல ஓலையை எடுத்துத் தர, அது அவையில் படிக்கப்பட்டது.
‘அருமறை நாவல் ஆதி சைவன்
ஆரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய்நல்லூர்ப்
பித்தனுக்கு யானும்
என்பால் வருமுறை மரபுளோரும்
வழித்தொண்டு செய்தற்கோலை
இருமையால் எழுதி நேர்ந்தேன்
இதற்கிவை என் எழுத்து’ - என்று தெளிவாக இருந்தது. அந்த ஓலையில் சாட்சிகளாகக் கையெழுத்திட்டிருந்தவர்கள் அங்கிருந்தனர். அவர்களும் அது தங்கள் கையெழுத்துதான் என ஒப்புக்கொண்டார்கள். சபைத் தலைவர்கள், “சுந்தரா! இது உன் பாட்டனார் கையெழுத்துதானா என்று பார்த்துச்சொல்” என்றார்கள்.
முதியவர் வடிவிலிருந்த சிவபெருமான் சிரித்தார். “பாட்டனையே பார்த்திருக்க மாட்டானே இவன்! இவனா பாட்டன் கையெழுத்தைச் சரிபார்க்கத் தகுந்தவன். இவன் பாட்டன் எழுதிய வேறு எழுத் தைக் கொண்டுவந்து, சரி பாருங்கள்” என்றார்.
அதன்படியே சுந்தரரின் பாட்டனார் எழுதிய வேறு சுவடிகளை ஆவணக்காப்பகத்திலிருந்து கொண்டுவந்து, சரி பார்த்தார்கள்; இரண்டும் ஒன்று போலவே இருந்தன. அப்புறம் என்ன? “சுந்தரா! இந்தப் பெரியவர் சொல்வதுதான் உண்மை. நீ இவருக்கு அடிமை. அவர் சொன்னபடி கேட்டு, அவருக்குப் பணிவிடை செய்” என்றார்கள் அவைத்தலைவர்கள். சுந்தரர் ஒப்புக்கொண்டார்.
அவைத்தலைவர்கள் சிவபெருமானை நோக்கி, “சுவாமி! நீங்கள் காட்டிய ஓலையில், உங்களை எங்கள் ஊர்க்காரர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், இதுவரை உங்களை நாங்கள் பார்த்ததே இல்லையே. உங்கள் வீடு எங்கே... காட்டுங்கள்” என்றார்கள்.

சிவபெருமான், ``வாருங்கள் என்னோடு... என் இருப்பிடத்தைக் காட்டுகிறேன்” என்றார்.
அனைவரும் பின்தொடர, முதியவர் வடிவில் வந்த சிவபெருமான் முன் நடந்தார். நடந்தவர், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள திருவருள்துறை எனும் ஆலயத்துக்குள் நுழைந்தார்; மறைந்தார். பின்தொடர்ந்தவர்கள் திகைத்தார்கள். சுந்தரரோ, மேலும் உள்ளேபோய், மிகுந்த அன்போடு அழைத்தார். அதன் பிறகும் வராமல் இருப்பாரா ஈசன்! அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தார்.
“முன்பு நீ நமக்குத் தொண்டனாக இருந்தாய். உன் மனதில் எழுந்த விருப்பத்தின் காரணமாக, நம் ஆணைப்படி பூமியில் வந்து பிறந்தாய். யாம் வந்து உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம். நீ நம்முடன் வன்சொற்களைப்பேசி வாது செய்ததால், ‘வன்தொண்டன்’ எனப்படுவாய். எம்மை நீ ‘பித்தன்’ என்றாய். பித்தன் என்றே பாடு” என அருள் புரிந்தார்.
“பித்தா பிறைசூடி” எனத்தொடங்கிப் பாடினார் சுந்தரர்.
வாசகர்களே! இதுவரை பார்த்த சுந்தரர் வரலாற்றை, தயவுசெய்து மற்றுமொருமுறை படித்து, நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு வாருங்கள்!
கயிலாயத்தில் தொடங்கி, நம் கண்களின் முன்னால் விரிந்த இது, ஏதோ கதையல்ல! தமிழகத்தில் நடந்த வரலாறு. சுந்தரரின் வாழ்க்கைச் சம்பவங்கள் நடந்த ஊர்கள் இன்றும் உள்ளன. கல்வெட்டுகளும் பழங்காலத் தமிழ் நூல்களும் சுந்தரரின் வாழ்வைப் பலவிதங்களிலும் பதிவு செய்து வைத்திருக்கின்றன.
ஆகவே, ‘சுந்தரருக்கு நடந்தது போல நடக்குமா’ என்ற எண்ணமே வேண்டாம். சுந்தரர் வாழ்வில் மட்டுமல்ல; இன்றும் பலர் வாழ்வில் நடந்துகொண்டுதான் இருக்கிறது!
சுந்தரர் வாழ்வில் நடந்த (இதுவரை பார்த்த) நிகழ்வு ஒவ்வொன்றையும் பாருங்கள். உண்மை விளங்கும்! சுந்தரரிடம் வந்து, அவரைத் தடுத்தாட் கொள்ள இறைவன் பேசுகிறார். ஆனால் ஏற்க மறுத்த சுந்தரர் வாது செய்கிறார். இதேபோலத்தான் இறைவன், ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து, தடுத்தாட்கொள்ளப் பேசுகிறார்!
‘தெய்வமாவது... வந்து பேசுவதாவது’ என்று நினைக்கவேண்டாம். சுந்தரர் வாழ்வில், தெய்வம் தன் வடிவிலேயே வரவில்லை. ‘தெய்வம் மனுஷ்ய
ரூபேண’ எனும் வாக்குக்கு இணங்க, தெய்வம் மனித வடிவில் வருகிறது; அதுவும் முதியவர் வடிவில். அறிவிலும், அனுபவத்திலும், ஞானத்திலும், வயதிலும் மூத்தவர் வடிவில், மனித வடிவில் வருகிறது; தடுத்தாட்கொள்ளப் பேசுகிறது.
ஆனால் நாமோ, ‘வந்துட்டார்யா சொல்றதுக்கு...போய்யா... வேலையைப் பார்த்துக்கிட்டு’ என்று வாதம் செய்கிறோம். அப்போதும் தெய்வம் விடுவதில்லை; சுந்தரருக்குக் காட்டியதைப்போல, ஆதாரத்தைக் காட்டுகிறது. நாமோ, சுந்தரர் செய்ததைப்போலவே, அந்த ஆதாரத்தை சிதைத்து விடுகிறோம்.
அப்படியும் நாம் ஏற்காதபோது, ஊர்ப்பொதுச் சபையில் சொல்கிறது தெய்வம்; அங்கும் நாம் வாதம் செய்யும்போது, ஆழமான ஆதாரத்தைக் காட்டுகிறது. இதைத்தான் ‘நகல்(ஜெராக்ஸ்), மூல ஓலை’ என்றெல்லாம் வரலாறு விவரிக்கிறது.கடைசியில் நாம் உண்மையை உணரும்போது, உயர்நிலையை - தெய்விக நிலையை அடைகிறோம், சுந்தரரைப்போல்!
அதன்பிறகு நமக்கென்ன கவலை? தாங்க வேண்டிய பொறுப்பு, தடுத்தாட்கொண்ட வருடையது அல்லவா! அதையும் சுந்தரர் வாழ்வு பதிவு செய்திருக்கிறது நமக்காக.
சுந்தரருக்குப் பரவையார் - சங்கிலியார் எனும் இருவருடன் திருமணம் நடந்தது. விரிவான வரலாறு அது. கமலினி, அநிந்திதை எனும் இருவரைக் கயிலாயத்தில் சுந்தரர் பார்த்ததாகப் படித்தோமல்லவா. அந்த இருவர்தான், பரவையார்- சங்கிலியார் எனும் பெயர்களில் வந்தார்கள்.
அவர்களுக்கும் சுந்தரருக்கும் திருமணம் நடந்தது. சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான், சுந்தரருடைய இல்லறத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதை விளக்கும் வரலாற்றுப்பதிவு இது.
குண்டையூர்க்கிழார் எனும் செல்வந்தர், சுந்தரரிடம் பேரன்பு பூண்டவர்; நெல் முதலானவற் றைப் பரவையார் மளிகைக்கு அவ்வப்போது அனுப்பும் அருந்தொண்டு செய்து வந்தார்.
ஒருமுறை, மழையில்லாத காரணத்தால் பயிர்கள் விளையவில்லை. குண்டையூர்க்கிழார் வருந்தினார். “உத்தமரான சுந்தரருக்கு, நாம் செய்துவரும் தொண்டுக்கு இடையூறு வந்து விட்டதே... சிவபெருமானே அருள்செய்” என வேண்டினார்.
அடியார் மனம் சலிக்க ஆண்டவன் விடுவாரா? மலைமகள் மணாளன், மலைமலையாகக் குவித்து விட்டார் நெல்லை.
தகவல் அறிந்து வந்த சுந்தரர், நெல் மலைகளைப் பார்த்தார்; அருகிலிருக்கும் ‘திருக்கோளிலி’ ஆலயத்துக்குச் சென்று, “எம்பெருமானே! இந்த நெல் அவ்வளவும், பரவையாரின் மனம் மகிழும் படியாக, அங்கே சென்று சேரவேண்டும். அருள் செய் இறைவா” என வேண்டிப் பாடினார்.
‘வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ’ எனத் திருமுறைகள் சொன்னது பொய்யாகுமா! சிவனருளால் அந்த நெல்மலைகள் அவ்வளவும் அப்படியே, திருவாரூரில் கொண்டு சேர்க்கப்பட்டன. திருவாரூரில் வீதிகள் எங்கும் நெல்மலைகள் காணப்பட்டன. பரவையார் மகிழ்ந்தார்.
அதுசரி, அந்த நெற்குவியல்களை எங்கு வைப்பது, எப்படிப் பங்கீடு செய்வது?
பரவையார் யோசிக்கவேயில்லை. “அவரவர் வீட்டின் முன்னால் உள்ளதை, அவரவர் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று முரசம் அறிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வு இது! குண்டையூர்க்கிழார் செல்வம் படைத்தவராக இருந்தும், தம் செல்வம் நல்லவர்க்கு உதவுவதற் காகவே என்று, சுந்தரருக்குப் பொருள்களை அளித்தார். அப்படிப்பட்டவர் கேட்கும்போது, சிவபெருமானே அருள் செய்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது!
குண்டையூர்க்கிழார் கேட்டபடி நெல்தந்த தெய்வம், சுந்தரர் கேட்டபடி அந்நெல்லைப் பரவையார் இருந்த ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்தது.
அளவில்லாத நெல்லைப்பெற்ற பரவையார், முழுவதையும் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல், மிகவும் எளிமையான முறையில் பங்கீடு செய்தது, பரவையாரின் தூய மனத்தை வெளிப்படுத்துகிறது.
‘இரப்பவர்க்கு ஈயவைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்’ எனும் அப்பர் சுவாமிகளின் வாக்குக்கு இணங்க, சுந்தரரையும் பரவையாரையும் தேடிவந்து தெய்வம் அருள் செய்த வரலாற்றை விளக்கும் இந்நிகழ்வு, தமிழ்மறை எனப் போற்றப்படும் திருக்குறளின் ஆழத்தையும் நமக்குக் காட்டுகின்றது.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’
- எனும் திருக்குறளுக்கு விளக்கமாகத் திகழ்வது, இந்த நெல் கதை. தான் பெற்றதை அனைவர்க்கும் வழங்கிய பரவையார், மிகவும் உயர்ந்தவர். அதனால்தான் பரவையாரைத் தேடித் தெய்வமே போனதாக, சேக்கிழார் சுவாமிகள் விவரித்தார்.
ஆடிச் சுவாதியன்று அரன் திருவடிகளை அடைந்த சுந்தரரின் திருக்கதையைப் படித்து, அவரைப் போற்றுவதுடன், அவருக்கு அருள் செய்ததைப் போலவே, நமக்கும் அருள்செய்யும்படி அந்தப் பரமனை வேண்டுவோம்!
தெய்வம் நிச்சயம் அருள் புரியும்!
- தொடரும்...