
வி.ஆர்.சுந்தரி
‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி’ எனப் போற்றுகிறார் மாணிக்கவாசகர். ‘தீப மங்கள ஜோதி நமோ நம’ எனச் சிறப்பிக்கிறார் அருணகிரிநாதர்.
‘ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா, நம்முடைய புத்தி - சக்திகளைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைக்கிறவரான அந்த பகவானுடைய சிறந்த ‘ஜோதி’ வடிவத்தைத் தியானிப்போம்’ என்கிறது காயத்ரி மந்திரம். இவ்வாறு நம் ஞான நூல்கள் அனைத்தும் இறைவனை, ஒளிமயமாகவே குறிப்பிட்டிருக்கின்றன. அந்த ஒளிமயமான பரம்பொருளை மேலும் விவரித்து வர்ணிப்பார் வாரியார் சுவாமிகள்.
“சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திடமார் கணநாதன் செம்மை - படரொளியோ
கந்த வேளாகும் கருதுங்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு” - என்று சொல்லும் வாரியார் சுவாமிகள் மேலும் தொடர்வார்.
“சுடர் - ஜோதி தெரிகிறதல்லவா... அது ‘சிவபெருமான்’. சுடரைத் தொட்டால் சுடும்; அந்தச் சூடு ‘பராசக்தி’. ஜோதியிலிருந்து சிவப்பாக ஒரு வண்ணம் வெளிப்படுகிறதல்லவா... அந்தச் சிவப்பு வண்ணம் ‘கணபதி’. ஜோதியிலிருந்து ஒளி வெள்ளம் பரவுகிறதே; அந்த ஒளி வெள்ளம் ‘கந்தக்கடவுள்; என்னப்பன் முருகப்பெருமான். ஒரு ஜோதியிலேயே இவ்வாறு மங்கலங்களை அருளும் சிவ குடும்பத்தையே தரிசிக்கிறோம். ஞானசாரம் என்கிற நூல் சொல்கிறது இத்தகவலை” என்று தீப ஜோதியின் அடிப்படை சாரத்தை விளக்குவார் வாரியார் சுவாமிகள்.
இப்படிப்பட்ட ஜோதியைத்தான் ‘குன்றின் மேல் இட்ட ஜோதி’யாகத் திருவண்ணாமலையில் தரிசிக்கிறோம். கார்த்திகை தீபத் திருவிழா, அதாவது கார்த்திகை விளக்கிடும் விழா, சங்க காலத்திலிருந்தே நம் தமிழ்நாட்டில் வேரூன்றிய ஒன்று.
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
- என்று கார்த்திகை தீபத்தின் பெருமையை அகநானூறு சொல்கிறது. (அறுமீன்-கார்த்திகை நட்சத்திரம்) வேதங்களின் பக்கமும் போய்ப் பார்க்கலாம் வாருங்கள்.
வேதங்களில் முதலாவதாகச் சொல்லப்படும் ‘ரிக்’ வேதத்தில், நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது, ‘கார்த்திகை’ நட்சத்திரத்தையே முதலாவதாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
அதுமட்டுமல்ல... வேதத்தில் அதிக அளவில் பேசப்படுவது, விருத்திராசுரனை வெற்றிகண்ட வரலாறாகும். விருத்திராசுரன் இருள் வடிவம். இருள் வடிவான அவனை வென்றது, இருள் நீக்கத்தையும் ஒளியின் தோற்றத்தையும் உணர்த்தும். அதுவே கார்த்திகை மாதம்; இதை முன்னிட்டே ‘கார்த்திகை’ நட்சத்திரத்தை முதலாகக்கொண்டு, நட்சத்திரங்கள் கணக்கிடப் பட்டதாகவும் கருதலாம்.
ஆகவே, கார்த்திகை என்பது ஒளிமயமானது. ஒளி என்பது எந்த ஒரு நேரத்திலும், கீழ்மையான எண்ணங்களில், அதாவது கீழான நிலையில் இயங்காது. உதாரணமாக, ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து, அதைத் தலைகீழாகப் பிடித்தாலும் ஒளியானது மேல் நோக்கியே எரியும்.
அதுபோல, என்னதான் நம் மனம் கீழான செயல்களில் நம்மை இறக்கினாலும், நாம் அதை மேல் நோக்கிச் செலுத்தவேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாகவே, அக்னித் தலமான - அக்னி வடிவான திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையைப் பற்றி, மேலும் சில அடிப்படைத் தகவல்களை அறியலாம்!

கண், காது, மூக்கு, வாய், ஜலவாய், மலவாய் - என நம் உடம்பில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. அந்த ஒன்பதிலும் அக்னியின் தொழிலே மிகுதியாக உள்ளது. இதை உணர்த்துமுகமாகவே, அக்னித் தலமான திருவண்ணாமலையில் ஒன்பது கோபுரங்கள் - ஒன்பது விமானங்கள் என அமைந்துள்ளன. திருவண்ணாமலைக்குச் சாலை இணைப்புகள்கூட ஒன்பது என்ற தகவலும் உண்டு! இனி, அம்பிகையின் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தர் வாக்கைப் பார்க்கலாம்!
‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனும் புகழ்பெற்ற திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் எனும் சிவனடியாரின் மகளான பூம்பாவை என்பவள், பாம்பு தீண்ட இறந்துவிட்டாள். திருஞான சம்பந்தரிடம் அளவிலா பக்திகொண்ட சிவநேசர், மகளின் அஸ்தியை ஒரு குடத்தில் இட்டுவைத்திருந்தார்.
ஞானசம்பந்தர் திருமயிலைக்கு வருகை புரிந்தபோது, அவரிடம் தகவல்களை விவரித் தார் சிவநேசர். பிறகு ஞானசம்பந்தரின் உத்தரவுப்படி, பூம்பாவையின் அஸ்தி அடங்கிய குடம், ஞானசம்பந்தர் சொன்ன இடத்துக்குக் கொண்டுவரப்பட்டது. திருஞானசம்பந்தர் கபாலீச்சரரை வணங்கி, “பூம்பாவையே! ஆன்ம கோடிகள் உலகில் பிறந்ததன் பயன், சிவனடியார் களுக்கு அன்னம் இடுவதும்; சிவ பெருமானின் நல்விழாக்களைக் கண்டு நிறைவுபெறுவதுமே. இது உண்மை எனில், நீ இப்போது உலகத்தோர் முன் வருவாயாக” என்றார்.
மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தம்மை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்
உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்
இவ்வாறு அழைத்த ஞானசம்பந்தர், அத்துடன் நிறுத்தவில்லை; சிவாலயங்களில் நடைபெறும் விழாக்களைப் பட்டியலிட்டுப் பதிகம்பாடி, “இவற்றையெல்லாம் காணாமல் போகிறாயா பூம்பாவை?” என்று கேட்டார். பூம்பாவை உயிர்பெற்று எழுந்தாள். அனைவரும் வியந்தனர். மாண்ட உயிர் மீண்டு வரும்படியாகப் பாடப்பட்ட பாடலில், ‘கார்த்திகை நாள்... தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ என்றும் விவரித்திருக்கிறார்!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயங்களின் முன்னால் ‘சுட்கம் - பனை’ என்னும் சொக்கப்பானைக் கொளுத்தும் வழக்கமும் உண்டு. அது ஏன்?
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அரக்கர்கள் கடும் தவம் செய்து வரம் பெற்றார்கள். தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் அமைந்த கோட்டை களை இருப்பிடமாகக்கொண்ட அவர்கள், இந்திரன் உட்பட அனைவருக்கும் பெரும் தீங்கு இழைத்து வந்தார்கள். அந்த மூன்று கோட்டைகளையும் அழித்த சிவபெருமான், அரக்கர்களைத் திருத்தி அவர்களைத் தம் அடியார்களாகக் கொண்டு அருள்புரிந்தார். இதன் காரணமாகவே சிவபெருமான் ‘திரிபுர சங்காரி’, ‘முப்புரம் எரித்தவன்’ என்ற திருநாமங்களைப் பெற்றார். மிகவும் பிரபலமான கதை இது. சரி! இது எதைச் சொல்ல வருகிறது? விளக்கத்தைச் சொல்கிறார் திருமூலர்.
அப்பனி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் என்பது மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யாரறிவாரே - திருமந்திரம்
கருத்து: முப்புரம் என்பது ஆணவம் - கன்மம் - மாயை எனும் மூன்றினால் உண்டாகும் செயல்பாடுகள். அந்த மும்மலங்களையும் எரித்து - நீக்கி, சிவபெருமான் நம்மை ஆட்கொண்டு அருள்புரிகிறார்.
தீமைகளின் நீக்கமான இந்தத் திரிபுர சங்காரம் நிகழ்ந்தது, ‘கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று’. இதை நினைவுகூரும் விதமாகவே, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆலயங்கள் முன் ‘சொக்கப்பானை கொளுத்துதல்’ நடைபெறுகிறது. சொர்க்கத்திலிருந்த அரக்கர்களை எரித்த பாவனையே, ‘சொ(ர்)க்கப் பா(வ)னையாக மாறியது என்றும் கூறுவர்.

வழக்கப்படி நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்; ஜோதி வடிவாக எழுந்தருளிய சிவபெருமானின் அடி - முடி தேடி, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் முயற்சி செய்ய, அவர்களால் இயலவில்லை எனும் நிகழ்வு ஒன்று சொல்லப்படும். இதில் பொய்சொன்ன தாழம்பூ சாபம்பெற்ற கதையும் இடம்பெற்றிருக்கும். இக்கதை, செல்வத்தாலும் கல்வியாலும் இறைவனை அளந்து அறிய முடியாது; பொய் சொல்லக் கூடாது எனும் அடிப்படை உண்மைகளைக் கொண்டது.
ஆகையால் தீமைகளை நீக்கி நல்லவற்றை அருளும்படி, ஜோதிமயமான சிவபெருமா னிடம் வேண்டுவோம்; அவரின் பேரருளால் தீவினைகளைத் தாண்டுவோம்!
- வளரும்...