வி.ஆர்.சுந்தரி

`சனி நீராடு’ எனும் சொல் வழக்கை அறிவோம். அதேபோல் `பனி நீராடு' எனும் சொல் வழக்கும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா.

மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலைப் பொழுது என்பதால், ஆங்காங்கே ஆலயங்களில் அதிகாலை அபிஷேக - ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் என கோலாகலமாக இருக்கும். மார்கழியின் அதிகாலை ஆலய தரிசனம் மிக அற்புத பலன்களைத் தரும் என்பார்கள்.

`பனி நீராடு' என்பது, மார்கழியில் அதிகாலையில் எழுந்து நீராடி இறை வழிபாடுகளில் கலந்துகொண்டு, அவற்றின்மூலம் கிடைக்கும் உன்னத அனுபவங்களை, அபரிமித மான பலன்களை அடையவேண்டும் என்பதை உணர்த்தும். மார்கழி நீராட்டம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல; உள்ளத்துக்கும் ஆரோக் கியத்தை அளிக்கக்கூடியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மார்கழி நீராட்டத்தின் மகிமையைச் சொல்லும் ஒரு திருக்கதை உண்டு.

கிருதயுகத்தில் நடந்த வரலாறு இது. தென் திருப்பூவனம் எனும் ஊரில், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஹரிசுவாமி எனும் முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார்.

பனி நீராடு
பனி நீராடு

ஒருநாள் தவத்தை முடித்து ஹரிசுவாமி அமர்ந்த நேரம். அவருடைய நண்பர் பானுஜித் என்பவர் வந்தார். அவரை வரவேற்று, தன்னிடமிருந்த வெள்ளரிப்பழத்தில் பாதியைக் கொடுத்து உபசரித்தார் ஹரிசுவாமி. வெள்ளரிப்பழத்தை உண்ட நண்பருக்கு மெய்சிலிர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஹரிசுவாமி! என்ன இனிமை! என்ன இனிமை! அமிர்தத்தைவிட இனிமையாக இருக்கிறது இக்கனி. இப்படிப்பட்ட கனியை நான், இதுவரை உண்டதில்லை. ஏது இது? சொல் நண்பா!”எனக் கேட்டார். ஹரிசுவாமி சொல்லத் தொடங்கினார்.

“நண்பா கேள்! அடியேனின் தவத்துக்காக இரங்கிய சிவபெருமான் கொடுத்த ஒரு வெள்ளரிக் கொடி இங்கு படர்ந்து இருக்கிறது. அது நாள்தோறும் ஒரே ஒரு வெள்ளரிப்பழத்தைத் தரும். அதை உண்பவர்களுக்கு நோயும் முதுமையும் உண்டாகாது”என்று உண்மையைச் சொன்னார்.

அதைக்கேட்ட பானுஜித் மகிழ்வதைப்போல காட்டிக்கொண்டாலும், அவர் மனம் ஒரு திட்டத் தைத் தீட்டியது. அதன்படியே மறுநாள் பானுஜித் புறப்படும்போது, ஹரிசுவாமிக்குத் தெரியாதவாறு, அன்று கிடைக்கக்கூடிய வெள்ளரிப் பழத்தைத் திருடிக்கொண்டு போய்விட்டார்.

நண்பரை வழியனுப்பிய ஹரிசுவாமி, அனுஷ்டானங்களை முடித்தபோது, நடுப்பகல் ஆகியது. பசி வயிற்றைக் கிள்ளியது. ஹரிசுவாமி போய் வெள்ளரிக்கொடியைப் பார்த்தார். ‘பகீர்’ என்றது. காரணம், வெள்ளரிக்கொடியில் அன்று இருக்கவேண்டிய வெள்ளரிப்பழம் இல்லை.

பனி நீராடு
பனி நீராடு

`என்ன இது... நம் ஆசிரமத்தில் இதுவரை இப்படிப்பட்ட களவு நடந்ததில்லை. இது புதுமையாய் இருக்கிறதே' என்று ஒரு விநாடி சிந்தித்த ஹரிசுவாமிக்கு நடந்த உண்மை புரிந்தது.

`வந்தவனுக்குப் பசிக்குப் பழம் கொடுத்தால், சிறிதளவுகூட நன்றியில்லாமல் களவில் ஈடுபட்டு விட்டானே... அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாமா... வெள்ளரிப்பழத்தைத் திருடிச்சென்ற அந்த பானுஜித், நரியாக மாறட்டும்' என சாபம் கொடுத்தார்.

நல்லவரின் சாபமல்லவா... அப்போதே பலித்தது. ஆம்! பழத்தைத் திருடிப்போன பானுஜித், நரியாக மாறி ஊளையிடத் தொடங்கினார்.

உண்மை புரிந்தது. `சீய்... என்ன மனிதன் நான்... நல்லவரான அந்த நண்பருக்குத் துரோகம் செய்துவிட்டேனே... தெய்வ அருளை வேண்டி தவத்தில் ஈடுபடவேண்டிய நான், திருட்டில் ஈடுபட்டுவிட்டேனே' என்று மனம் வருந்தினார் பானுஜித்.

வருந்தினால் சாபம் விலகிவிடுமா என்ன! நரியாக மாறி ஊளையிட்ட பானுஜித், ஓடிப் போய் ஹரிசுவாமியின் திருவடிகளில் விழுந்து, “நண்பா. மன்னித்துவிடு. உனக்குத் துரோகம் செய்து விட்டேன். மனிதப்பிறவி கிடைத்தும், முனிவனாக இருந்தும் வஞ்சனை செய்துவிட்டேன்; நரியாக மாறிவிட்டேன். இத்துயரம் தீர வழி சொல்” என அழுதார்.

நண்பனின் கண்ணீர் கண்டு, ஹரிசுவாமி மனம் இரங்கினார். “மார்கழி மாதம் முழுதும் இதோ இங்கே ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியில் நீராடி, பூவனேஸ்வரரை வழிபடு. நீ செய்த தீவினை தீரும்” என சாப விமோசனம் சொன்னார்.

நரியாக இருந்த பானுஜித்தும் அப்படியே வழிபடத் தொடங்கினார். மார்கழி மாதத்தில் நாள்தோறும் தாமிரபரணியில் நீராடி, பூவனேஸ் வரரை, பானுஜித் வழிபட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில், ஒரு நிகழ்ச்சி குறுக்கிட்டது.

பாண்டிய நாட்டு மன்னர், கள்வர்கள் சிலரைத் தாமிரபரணி ஆற்றின் கரையில் கழுவேற்றினார். உயிரற்ற அக்கள்வர்களின் உடல்களைக்கண்ட நரி (பானுஜித்) `ஆ... நமக்கு இன்று நல்ல ஊன் கிடைத்தது. நன்றாகத் தின்னலாம்' என நினைத்தது.

நரியாக இருந்து நினைத்தாலும், பானுஜித்தின் அறிவு உடனே மாறியது. `என்ன கேவலம் இது. நான் செய்த பாவம், நரியின் உடலைத் தந்ததோடு மனித உடலைத் தின்னும்படியான எண்ணத்தையும் தூண்டிவிட்டதே!' என நினைத்தார்.

அப்புறம் என்ன... தான்கொண்ட நரி வடிவத்துக்கேற்ப, இறந்துபோன கள்வர்களைப் பற்களால் கவ்வி எடுத்துப்போய், தாமிரபரணி ஆற்றில் போட்டார்; கள்வர்களும் நற்கதி பெற்றனர். பானுஜித்தும் நரி உடல் நீங்கி, நலம் பெற்றார். பிறவி நீங்கியபின் சிவகதியும் பெற்றார்.

யமதர்மன் சொன்ன இந்த வரலாறு, மார்கழி மாத நீராட்டத்தின் பலனை விரிவாகச் சொல்லி வழிகாட்டுகிறது.

புறம் தூய்மை நீரான் அமையும்; அகம்

தூய்மை வாய்மையால் காணப்படும்.

`வெளி உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; மனத்தூய்மை, அவன் கூறும் உண்மையால் காணப்படும்' எனும் வள்ளுவரின் வாக்குப்படி, பானுஜித்தின் உடல், நீராட்டத்தால் தூய்மை பெற்றது. உள்ளமோ, அவர் தான் செய்த தவற்றை, தானே ஒப்புக்கொண்ட உண்மையின் மூலம் தூய்மை பெற்றது.

`அதெல்லாம் சரி... மார்கழி மாதம் முழுவதும் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடும் ஊருக்குப்போய், அங்கேயே தங்கி நீராடி வழிபடுவதென்பது நடக்கக்கூடிய காரியமா' என்று எண்ணவேண்டாம்.

நமக்கு ‘கணக்கு’ இல்லாத வங்கியின் ஏ.டி.எம்மாக இருந்தாலும், கணக்குள்ள நம் வங்கியின் ஏ.டி.எம் அட்டை மூலம், ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிந்து பணம் பெறுகிறோம் அல்லவா! அதுபோல, நம்மால் தாமிரபரணி தீரத்துக்குச் சென்று நீராடி வழிபாடுசெய்ய முடியாவிட்டாலும், இயன்றவரை மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து வீட்டிலேயே நீராடி அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவோம்.

மார்கழியில் அதிகாலை ஆலய தரிசனமும் வழிபாட்டு வைபவங்களும் நம் மனத்துக்கு நிம்மதி அளிக்கும்; நம் செயல்கள் சிறக்க உறுதுணை புரிந்து வாழ்வை வளமாக்கும்.

- வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism